Saturday, February 22, 2020

ஏசாயா 42-ம் அதிகாரம்:விளக்கம்

ஏசாயா 42-ம் அதிகாரம்:விளக்கம் 


அத்தனையும் இனிப்பு 
ஏசாயா என்ற இறைவாக்காளர் எசேக்கியா என்ற அரசன் ஆட்சிபுரிந்த காலத்தில் வாழ்ந்தவர் ஆவார்.அவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு பிறகே தன புத்தகத்தை எழுத ஆரம்பிக்கிறார். புதிய ஏற்பாட்டில் முதல் நான்கு நற்செய்தி புத்தகங்களை எழுதியவர்கள் இம்முறையை பின்பற்ற வில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இதன் மூலம் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டவர் யார் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.இவரின் எழுத்துநடை படிப்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.42-ம் அதிகாரத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்க இருக்கிறோம்.தொடர்ந்து செல்லும் முன் நாம் அறிந்து கொண்டிருக்க மற்றும் கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களை கீழ் தந்துள்ளேன்.
  • ஏசாயா தன்னுடைய எழுத்துக்களை எபிரேய மொழியில் எழுதியுள்ளார்.
  • யூத மற்றும் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய இறைவனின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவர் எழுதியுள்ளார்.
  • அம்மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தன்னுடைய எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளார்.
  • யூத மக்கள் அல்லாதோர்க்கு இவர் எழுதவில்லை.நமக்கு எழுதியுள்ளார் என்பது போன்று பார்க்கக் கூடாது.
தற்போது இந்த அதிகாரத்தை படிக்க ஆரம்பிக்கலாம்.தமிழுக்கும் எபிரேய மொழிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அதில் ஒன்று,வார்த்தைகள் அல்லது எழுத்துக்கள் மூலம் ஒருவருக்குரிய மரியாதையையும் சேர்த்து தெரிவிப்பது."அவன்" என்ற சொல்லுக்கும் "அவர்" என்ற சொல்லுக்கும் பொருள் ஒன்றுதான் என்றாலும் கூட சுட்டிக்காட்டப்படுபவரின் மரியாதை அதில் அடங்கியுள்ளது.

பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்யப்படும் பொழுது,மொழிபெயர்ப்பு செய்பவர் பிற மொழியில் உள்ள பாத்திரங்கள் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருக்கிறார் என்பது அவருடைய மொழிபெயர்ப்பிலிருந்து வெளிப்படும்.எனவே மொழிபெயர்ப்பவரின் எண்ணங்களே தமிழில் படிப்பவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்.உண்மையில் அப்பாத்திரங்கள் அப்படிப்பட்ட மரியாதைக்குரியவைகளா என்பது மூல மொழியில் புலமை பெற்றிருந்தால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட முடியும் அல்லது மூல மொழியினை தாய்மொழியாக கொண்டிருப்பவர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

ஏசாயா புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்டது என்பதை முன்னரே தெரிவித்திருந்தேன்.42-ம் அதிகாரத்தில் முதல் ஏழு சொற்றொடர்கள்(வசனங்கள்) ஒரு குறிப்பிட்ட ஒருவரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.இவர் யார் என்று நமக்கு தெரிய வேண்டும்.இந்த வாக்கியங்களை கூறுபவர் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்நேரத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால் ப்ரோட்டஸ்டன்ட்டுகளின் தமிழ் திருமறையைவிட (CSI,பெந்தேகோஸ்து சபைகள் போன்றவை) கத்தோலிக்க திருமறை மிகவும் நன்றாக மொழிபெயர்ப்பு செய்ய பட்டிருக்கிறது.அருமையான தமிழ் வார்த்தைகள் சரியான மொழிபெயர்ப்பை தரும் வகையில் இருக்கிறது.ப்ரோட்டஸ்டண்டுகளின் திருமறையை தமிழை தாய்மொழியாக கொண்டிராத ஒருவர் மொழிபெயர்த்தத்தின் விளைவே இதற்க்கே காரணம்.எண்ணிலடங்கா தவறுகள் மற்றும் பொருத்தமற்ற வார்த்தைகள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் விளைவு தவறான பொருள் கொள்ளப்படுதல் ஆகும்.எனவே இங்கு இரண்டு மொழிபெயர்ப்புகளை தரவிருக்கிறேன்.இந்த அடிப்படைகளை மனதில் நிறுத்திக் கொண்டு வாக்கியங்களை பார்க்கலாம்.
1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.
2 அவர் கூக்குரலிடமாட்டார்; தம்குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்;டார்.
3 நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.

4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
5 விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;
6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.
7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.[கத்தோலிக்க திருமறையில் இருந்து]
1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான்  தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.
5. வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். [ப்ரோட்டஸ்டாண்டுகளின் திருமறை]
முன்னரே கூறியுள்ளபடி மேற்கண்ட வாக்கியங்கள் ஒரு குறிப்பிட்ட ஒருவரை குறிக்கிறது.அவர் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாக்கியங்களை கூறுபவர் "கர்த்தர்" ப்ரோட்டஸ்டண்டுகளாலும் "ஆண்டவர்" என்று கத்தோலிக்கர்களாலும் அழைக்கப்படுகின்ற இஸ்ரயேலின் இறைவன் ஆவார்.அவர் இறைவன் என்றால் அவர் இன்னொருவரை மரியாதை கொடுத்து அழைக்க வேண்டியது இல்லை.காரணம் அவர் இறைவன்,எனவே அனைத்தும் அவருக்கு கீழ்.இஸ்ரயேல் மக்களின் இறைவன் கூறுவதாக ஏசாயா நமக்கு குறிப்பிடுவது என்னவென்றால் ஒருவரை அவர் எழுப்ப இருக்கிறார்,அவர் குறிப்பிட்ட செயல்களை செய்ய போகிறார், என்பதே ஆகும்.

அவர் எழுப்ப இருக்க ஒருவருக்கு அவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள "அவர்" என்பது "அவன்" என்றும் மொழிபெயர்க்க படலாம்.பின் எப்படி "அவர்" என்று மோயில்பெயர்க்கப்பட்டது? தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த "அவர்",அதாவது எழுப்பப்படப்போகும் ஒருவர், மரியாதைக்குரியவாறாக தோன்றியிருக்கலாம்.அதன் காரணமாக "அவன்" என்று கூறுவதற்கு பதிலாக "அவர்" என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவர் செய்யும் செயல்கள் அளப்பரிய செயல்களாக இருக்கிற காரணத்தினால் இவர் "இயேசுவாகத்தான்" இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் "அவர்" என்ற சொல்லுக்கு காரணம்.உண்மையில் இவ்வாக்கியங்கள் இயேசுவைத்தான் குறிக்கிறதா என்று நாம் கடைசியில் காண இருக்கிறோம்.

இஸ்ரயேல் மக்களுக்கு இது போன்ற அளப்பரிய செயல் ஒன்றை செய்ய போகும் மற்றொரு மனிதனைப் பற்றியும் ஏசாயா கூறியிருக்கிறார்.அங்கு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர் என்பதையும் நாம் பார்க்கலாம்.
28. கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.[ஏசா 44:28]
 28 சைரசு மன்னனைப்பற்றி, “அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, “அது கட்டியெழுப்பப்படும்” என்றும் திருக்கோவிலைப்பற்றி, “உனக்கு அடித்தளம் இடப்படும்” என்றும் கூறுவதும் நானே.[எசா 44:28]
இஸ்ரயேலின் இறைவனுடைய எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றப் போகும் ஒருவனைப் பற்றி ஏசாயா இங்கு குறிப்பிடுகிறார்.அம்மனிதனை இங்கு "அவன்" என்று மொழிபெயர்த்துள்ளனர்.இவ்வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மனிதன் வேறு யாருமல்ல,அவன் "மீதியா -பெர்சியா" தேசங்களின் அரசன் கோரேசு(Cyrus) ஆவான்.இத்தனைக்கும் இது ஒரு நிறைவேறிய இறைவாக்கு ஆகும்.இங்கு இம்மன்னனை "அவன்" என்று மொழிபெயதுள்ளனர்.இங்கும் கூட இஸ்ரயேலின் இறைவன் கூறுவது போன்றுதான் வாக்கியம் உள்ளது.முன்னர் குறிப்பிட்ட பகுதியிலும் அவ்வாறுதான் உள்ளது.ஆனால் ஓரிடத்தில் "அவர்" என்றும் மற்றொரு இடத்தில "அவன்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஏன்? மொழிபெயர்ப்பாளர்கள் மன நிலையே இதற்கு காரணம்.தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை பொறுத்த வரையில் கோரேசு மன்னன் முக்கியமானவன் கிடையாது.ஆனால் அவன் இஸ்ரயேல்  கடவுளால் அழைக்கப்பட்ட ஒருவன் ஆவான்.அவனைப்பற்றி கூறியுள்ளவைகள் நிறைவேறி உள்ளன.ஆனால் 42-ம் அதிகாரத்தில் கூறியுள்ளவைகள் இன்னும் நிறைவேறி உள்ளனவா என்று ஆராய வேண்டி உள்ளது.

எனவே மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது.யாரை உயர்த்த வேண்டும் யாரை தாழ்த்த வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணங்களின் அடிப்படையிலேயே உள்ளது.இஸ்ரயேலின் இறைவன் உயர்ந்தவர் என்பதினாலும் அவர் யாரையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்ல என்ற காரணத்தினாலும்,குறிப்பிடப்பட்டவர் யார் என்று இன்னும் தெரியாததினாலும்  மேற்கண்ட வாக்கியங்களை கீழ்வருமாறு எழுதலாம்.
1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவனே; என் ஆவியை அவன் மேல் அமரப்பண்ணினேன்; அவன் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவான்.
1 இதோ! என் ஊழியன் ! அவனுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவன் அவன்; அவனால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவனுள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவன் மக்களினங்களுக்கு நீதி வழங்குவான்.
யார் இந்த ஊழியன் என்று  தெரிந்து கொள்ள 16-ம் வாக்கியத்தை பார்க்க வேண்டும்.அதில் குருடன் என்று ஒருவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.
16. குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
16 பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்; அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்; அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்; கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்; இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன; நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன். 
16-ம் வாக்கியத்திற்கு முன்பு வரை தன்னை யார் என்றும் எப்படிப்பட்டவர் என்றும்  இஸ்ரயேலின் இறைவன் கூறியுள்ளார்.அதன் பிறகு இந்த வாக்கியத்தை கூறுகிறார்.இதில் குருடர் என்று குறிப்பிடப்படுவது யார்? குருடன் என்று ஒருமையில் உள்ளதா அல்லது பன்மையில் உள்ளதா என்று கவனித்தால்,இது பன்மையில் உள்ளது.எனவே "இக்குருடன்"ஒரு தனிப்பட்ட மனிதன் கிடையாது.குருடரான இம்மக்களுக்கு நன்மையை செய்ய போவதாக கூறுகிறார்.தொடர்ந்து என்ன கூறப்பட்டுள்ளது என்று கவனியுங்கள்.இந்த குருடர் யார் என்று 19-ம் வசனத்தில் உள்ளது.அதைப்படித்து பாருங்கள்.

18. செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.
19. என் தாசனையல்லாமால் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?
18 செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.
19 குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?
அதாவது தன்னுடைய ஊழியனை(தாசன்) குருடன் என்று இஸ்ரேலின் இறைவன்  குறிப்பிடுகிறார்.மேலும் அவனை செவிடன் என்றும் குறிப்பிடுகிறார்.ஏன் அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று அவரே காரணம் கூறுகிறார்.
20. நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.
20 பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.
பல செயல்களை அவனுக்கு முன்பு(தாசன் ,ஊழியன்)   இஸ்ரயேலின் இறைவன் நடத்திக் காட்டியிருந்தாலும் அவன் அவற்றின் மூலம் எதையும் காண வில்லை,அவரை புரிந்து கொள்ளவும் இல்லை.எனவே அவனை குருடன் என்று கூறுகிறார்.குருடர்களாக இந்த இஸ்ரேலின் மக்களுக்குத்தான் தான் நல்ல செயல்கள் பல செய்யவிருப்பதாக 16-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார். 

இதையெல்லாம் கூறியும் இன்னும் கூட அவ்வாறுதான் தங்களுடைய பழைய வழிகளில்தான் நடக்கிறார்கள் என்று 23-ம் வசனத்திலிருந்து கூறுகிறார்.

முடிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னவென்றால்,
  • இங்கு கூறப்பட்டுள்ள தாசன் அல்லது ஊழியன் வேறு யாருமல்ல "இஸ்ரயேல் மக்கள்தான்" அவர்கள்.
  • இஸ்ரயேல் மக்களை தன்னுடைய ஊழியன் என்றும் தாசன் என்றும் இன்னும் பல இடங்களில் இஸ்ரயேலின் இறைவன் கூறியுள்ளார்.
  • ஏசா:44:1-ல் "என் ஊழியன்(தாசன்) யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் ஏசா 43:8-ல் "கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.இஸ்ரயேல்  மக்களைத்தான் குருடர்கள் என்றும் தாசன் என்றும் குறிப்பிடுகிறார் என்று இதன் மூலம் விளங்கும்.
அப்படியென்றால் இந்த அதிகாரத்தின் முதல் ஏழு வாக்கியங்களும் ஒரு தனிப்பட்ட ஒருவனைப் பற்றி குறிப்பிடவில்லையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.இஸ்ரயேல்  மக்களை ஒரு தனி மனிதனைப் போன்று உருவகப் படுத்தி பேசியுள்ளது போன்றுதான் தோன்றுகிறது.

இல்லை அவ்வாறு ஒரு தனி மனிதனை இவ்வாக்கியங்கள் குறிப்பிட வில்லை என்றால் இது இயேசுவையும் குறிக்காது.அந்த தாசன் செய்யப்போகும் செயல்கள் இன்னும் நடைபெற வில்லை.
4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். 
உலகில் நீதியை நிலைநாட்டி விட்டுத்தான் இயேசு இறந்தாரா? இல்லை. உலகம் இன்னும் அநியாயத்துக்குள்தான் உள்ளது. எங்கும் அநியாயம்.
6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
சிறையில் உள்ளோர் என குறிப்பிடப்பட்டவர்கள் யார்? சிறைகளில் இருந்த மற்றும் சிதறடிக்கப்பட்டிருந்த இஸ்ரயேல்  மக்களைத்தான் இது குறிப்பிடுகிறது.ஏனெனில் இப்புத்தகம் அவர்களுக்குத்தான் எழுதப்பட்டது.அவ்வாறு இருந்த அனைவரையும் இயேசு விடுவித்த பின்தான் இறந்தாரா? இல்லை.

எனவே இது இயேசுவும் இல்லை என்றால் யார்? ஒரு வழிதான் உள்ளது,அது அவர் இன்னும் வரப்போகிற ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது இஸ்ரயேல்  மக்கள் யாரும் சிறைகளில் இல்லையே! எனவே எப்படிப்பார்த்தாலும் 1-7 வாக்கியங்கள் குறிப்பிடுபவன இஸ்ரயேல்  மக்களையே என்பதுதான் சரியாக இருக்க வாய்ப்புள்ளது.

இரா.இருதயராஜ்
Download Here↓ 

Friday, February 21, 2020

ஆல்பா ஒமேகா யார்?

ஆல்பா ஒமேகா யார்?


ஆல்பா(Alpha) மற்றும் ஒமேகா(Omega) என்பது கிரேக்க மொழியின் முறையே முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் ஆகும். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் இவ் வெழுத்துக்களை குறிப்பிட்டு ஒரு வாக்கியம் உண்டு. அதிகமாக பயன்படுத்தப் படும் வாக்கியங்களில் இதுவும் ஒன்று ஆகும். இப்புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாக்கியத்தின் மூலம் நமக்கு வெளிப்படுத்த நினைக்கும் கருத்து என்னவென்றால்,இவ்வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை பேசுபவர் எவரோ அவரே "முதலும் கடைசியுமாக இருக்கிறார்" என்பதே ஆகும்.இப்புத்தகம் யாரால் எழுதப்பட்டது என்பது இன்னும் முடிவாக வில்லை.ஆனால் கி.பி 100-களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அக்காலகட்டங்களில் கிறித்தவம் ஓரளவுக்கு வேரூன்ற ஆரம்பித்து விட்டிருந்தது.மேலும் இப்புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஆனால் தற்போதைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்தே வந்தவைகள் ஆகும்.

இவ்வாக்கியம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ள முதலில் அவ்வாக்கியம் எவ்வாறு தமிழில் உள்ளது என்பதை காணலாம்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
8 “அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. 
இந்த வாக்கியம்  பல கேள்விகளை எழுப்புகிறது. இப்புத்தகத்தை எழுதியவர் உள்நோக்கத்தோடு,தம்முடைய கருத்துக்களை அல்லது தான் சார்ந்துள்ள கருத்துக்களை கூறுவதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளார் என தோன்றுகிறது.தன்னுடைய கருத்துக்கள் யூதர்களுக்கும் கற்றறிந்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்காது என்ற அச்சத்தில் தன்னுடைய கருத்துக்கள் வெளிப்படையாக தெரியாதவாறு எழுதியுள்ளார்.முதல் வரிகளில் உள்ள கருத்து ஒன்றாகவும் அடுத்த வரியில் உள்ள கருத்து முதல் அவருக்கு முரணானதாகவும் இருக்கிறது.இரண்டையும் ஒரு சேர எழுதியுள்ள காரணத்தினால் இவர் மீது குற்றம் சாட்டுவது கடினம்.தன மீது குற்றம் சாட்ட வழி இல்லாதவாறு,"இப்படிக் கேட்டால் அப்படியும் அப்படிக் கேட்டால் இப்படியும்" கூறி தப்பித்து கொள்ளும் அளவிற்கு எழுதியுள்ளார்.கீழ்கண்ட கேள்விகளை கவனித்தால் அது புரியும்.
  • இவ்வாக்கியத்தை கூறுபவர் "எல்லாம் வல்லவர் " என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குழப்பம் இல்லாதவாறு "கர்த்தர்" அல்லது "ஆண்டவர்" என்று  உள்ளது.எனவே இதைக் கூறுபவர் "இயேசு" என்று கூற முடியாது.
  • "எல்லாம் வல்ல ஆண்டவரை அதாவது கர்த்தரை" எப்படி "இருந்தவர்" என்று கூற இயலும்? "இருக்கின்றவராகவே இருக்கிறேன்" என்று கூறிய ஒருவரை "இருந்தவர்" என்று கூறியது எப்படி?
  • "இருந்தவர்" என்றால், இருந்து, பின்னர் இல்லாமல் போன ஒருவரைத்தானே  குறிக்கும்? "எல்லாம் வல்லவர்" எப்படி "இல்லாமல்" போனார்?
  • "எல்லாம் வல்லவர்தான் பிதா" என்றால் அவர் இறந்ததாக இவ்வாசிரியர் கூறுகிறாரா?
  • இல்லை,இவ்வார்த்தைகளை கூறுபவர் "இயேசுதான்" என்றால்,இயேசு எல்லாம் வல்லவரா? எல்லாம் வல்லவர் என்றால் ஏன் அடி வாங்கினார்?
  • மேலும் இயேசு தன்னை "ஆல்பா ஒமேகா" என்று கூறுகிறாரா?அப்படித்தான் என்றால் ஏசா:41:4 யாரைக் குறிக்கிறது?
  • 4 இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!
  •   4. அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
 மேற்கண்ட வார்த்தைகளை கூறியவர் யார்?யாரைக் குறித்து அவர் கூறுகிறார்? இயேசுதான் கடவுள்,பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுள் அவர்தான் என்று தன்னுடைய எழுத்துக்கள் மூலம் கூற விரும்பியுள்ளது போன்று தோன்றுகிறது.யூதர்கள் இக்கருத்தினை கண்டு நகைப்பது மட்டுமல்லாது தன்னை கொன்று போடுவார்கள் என்று இவர் அஞ்சியிருக்கலாம்.அதன் விளைவாக "வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது" போன்று எழுதியுள்ளார்."இது இயேசுவா" என்றால் இல்லை கடவுள் என்பதும்,இது கடவுளா என்றால், இல்லை இயேசு என்பதும் இதன் மூலம் சாத்தியமாகிறது.

இயேசுவை கடவுளாக ஆக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருப்பது நன்றாக தெரிகிறது.இதனை சற்று புரிந்து கொண்டு படித்தால் உண்மை விளங்கும்.வெளிப்படுத்தல் புத்தகத்தில் வருகின்ற அக்குறிப்பிட்ட வாக்கியம் புதிதாக கிறித்தவத்தில் இனைந்த ஒருவருக்கு மிகவும் குழப்பம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1CneHTVEnlJMPJwUWgIdh8bCHX2Nsovcv/view?usp=sharing

Friday, February 7, 2020

இயற்கையை வெல்லுமா செயற்கை?

இயற்கையை வெல்லுமா செயற்கை?


இயற்கை 
மனுக்குலம் எதையெல்லாம் படைக்கவில்லையோ அல்லது படைக்க முடியவில்லையோ அவையெல்லாம் இயற்கை என்று நாம் வரையறுக்கலாம். கடல் இயற்கை, காடு இயற்கை, வானம் இயற்கை,மரம் இயற்கை, மாடு இயற்கை, மனிதன் இயற்கை, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.கார் செயற்கை,  கப்பல் செயற்கை, வானூர்தி செயற்கை, தொலைகாட்சி செயற்கை என்று அடுக்கிக்கொண்டு செல்லலாம்.அறிவியல் மனிதனின் வாழ்க்கையை செழுமைப் படித்தியிருக்கிறதா அல்லது மழுங்கடித்திருக்கிறதா என்று சிந்தித்தோமானால் என்ன பதில் கிடைக்கும் என்பதுதான் இக்கட்டுரை.

கார்களின் கண்டுபிடிப்பு மனுக்குலத்தின் மகத்தான செயல் என்று நாம் நினைக்கிறோம்.நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடிகிறது,எனவே இது ஒரு மகத்தான கண்டுபிடிப்புதான்.நோய்வாய் பட்ட நேரத்தில் மிகவும் பயனுடையது.ஆனால் உடல் உழைப்பை சிறிது சிறிதாக கார்கள் நம்மைவிட்டு அகற்றிக் கொண்டிருக்கின்றன.உழைப்பு என்பது உடலின் இயக்கம்.


ஊர்திகள் கண்டுபிடிக்கப் படாமல் இருந்திருந்தால் மனிதனின் உடல் இயக்கம் இப்பொழுது இருப்பதை விட மிக அதிகமாக இருந்திருக்கும். இயக்கத்தோடு தொடர்புடையது உணவு.எனவே உணவு பழக்க வழக்கங்கள் மாற்றம் கொண்டிருந்திருக்கும். உணவின் சக்தி வீணடிக்கப்படாமல் ஆற்றலாக மாற்றப்பட்டிருக்கும்.மனிதனுக்கு அது பெரும் பயனுடையதாக இருந்திருக்கும்.இயக்கம் குறைந்ததின் காரணமாக தன உடலில் தேவையில்லாத கொழுப்புக்களை சேமித்து வைக்கிறான்.அது அவனுக்கு தீங்காக முடிகிறது.உணவிற்காக ஆடுமாடுகளையும் தன் உதவிக்காக குதிரை,கழுதை போன்ற விலங்குகளையும் தன் கூடவே வளர்த்திருப்பான்.சக்தி வீணடிக்கப்பட்டிருக்காது.ஆனால் தற்போது தன்னுடைய ஊர்திகளுக்காக மண்ணையும் கூட விடாமல் தோண்டி எரிபொருளை எடுக்கிறான்.எரிபொருட்கள் எறிவதன் மூலமாக தனக்கு தீங்கை தானே வரவழைத்துக் கொள்கிறான்.

இது எல்லாம் தெரியாமலா இறைவன் இவ்வுலகை படைத்திருப்பார்?தன் கண்டுபிடிப்புகள் அபாரமானவைகள் என்று இன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.இன்று இயற்கையே பெரியது என்று உணர்ந்து கொண்டோம்.இயற்கையை, செயற்கையாக உருவாக்க இயலாது.படைத்தவைகளில் சிறந்தது கடவுளின் படைப்பாகிய இயற்கையாக உள்ளவைகள் மட்டுமே.

இரா.இருதயராஜ்.

My Posts