திருப்பாடல்கள்(சங்கீதம்) 2:12 - பொருள் என்ன?
ஒரு தனிமனிதனுடைய கவித்திறமையை திருப்பாடல்கள் புத்தகம் நமக்கு விளக்குகிறது.தாவீது என்ற அந்த தனிமனிதன் தன எண்ணங்களை எல்லாம் கவிதை நடையில் பதிவு செய்திருக்கிறான்.ஆடுகள் மேய்க்கும் ஒரு சிறுவனாக இருந்தபோதிலிருந்தே தன எண்ணங்களை பதிவு செய்திருக்கிறான்.தான் நம்பும் கடவுளைப்பற்றி தன்னுடைய எண்ணங்களை எழுதி, இசையமைத்து நமக்கு தந்திருக்கிறான்.இந்த தாவீது எழுதிய திருப்பாடல்களில் இரண்டாம் திருப்பாடல் ஏறத்தாழ ஓர் இறைவாக்கு என்று கூறப்படுகிறது.ஒருவருக்கு எப்பொழுது கவித்திறமை வெளிப்படும்? எப்பொழுது மற்ற செயல்கள் அவருடைய கவனத்தை ஈர்க்காமல் தான் விரும்பும் செயல்கள் மீது அதிக ஈர்ப்பு உடையவராக மாறுகிறாரோ அப்பொழுது அவருக்குள் இருக்கும் கவித்திறமை வெளிப்பட ஆரம்பிக்கும்.தான் நினைக்கும் எண்ணங்களை எழுத்தில் அப்படியே கொண்டு வருவர்.
அவ்வாறு தாவீது எழுதிய இரண்டாம் திருப்பாடலை நாம் கவனித்தோமானால் அவர் ஒரு அரசனைப்பற்றியும் தன்னுடைய கடவுளாகிய கர்த்தரைப் பற்றியும் எழுதியிருப்பார்.தன்னுடைய கடவுள் தன்னிடம் பேசுவது போன்று எழுதி பின்னர் அதனை நமக்கு கூறுவது போன்று அத்திருப்பாடல் இருக்கும்.இதனை நாம் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னர்,இத்திருப்பாடலை எழுதியது தாவீது இல்லை என்று கற்பனை செய்து கொள்வோம்.யாரோ ஒருவர் எழுதியுள்ளார் என்றே கொள்வோம்.கவித்திறமை மிக்க ஒருவர் எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்வோம். 1-4 வாக்கியங்கள் மூலமாக நமக்கு என்ன கூறுகிறார்?
மண்ணுலகின் அரசர்கள் அனைவரும் கர்த்தருக்கு எதிராக செயல்கள் செய்கின்றனர் என்று கூறுகிறார்.அப்படி என்ன செயல்கள் செய்து விட்டனர்? கர்த்தர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை மண்ணுலகின் அரசனாக்கியிருக்கிறார்,அந்த அரசனுக்கு எதிராக எண்ணங்கள் கொள்கின்றனர்.அப்படி எண்ணங்கள் கொள்வதன் மூலம் அவர்கள் கர்த்தருக்கே எதிரான எண்ணங்கள் கொள்கின்றனர் என்று நமக்கு இத்திருப்பாடலை எழுதியவர் கூறுகிறார்.6-வது வாக்கியத்தின் மூலம் நமக்கு அவர் மேலும் சிலவற்றை கூறுகிறார்.
6. நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
6 ‘என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.’
கர்த்தர் கூறுவதை இத்திருப்பாடலை எழுதியவர் நேரடியாக கேட்டது போன்று நமக்கு கூறுகிறார்.அதாவது கர்த்தர் இவரிடமோ அல்லது பொதுவாகவோ கூறுகிறார்,அதனை இவர் கேட்டிருக்கிறார்,பிறகு நமக்கு அப்படியே எழுதி தருகிறார்.மண்ணுலகின் அரசர்களின் செயலை பார்த்து கர்த்தர் நகைத்து ,"நான் என்னுடைய திருமலையாகிய சீயோனில் ஓர் அரசனை தேர்ந்தெடுத்து அவனை ஆட்சி புரிய வைத்திருக்கிறேன்" என்கிறார்.ஆனால் அடுத்த வசனம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.அதாவது,கர்த்தர் இப்பொழுது நேரடியாகவே இத்திருப்பாடலை எழுதியவரிடம் பேசுகிறார் போன்று உள்ளது.அதனை பார்க்கலாம்.
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.’
இத்திருப்பாடலை எழுதியவரை நோக்கி,"நீ என்னுடைய மகன்,இன்று உன்னை உருவாக்கினேன்,இம்மண்ணுலகை உனக்கு தந்தேன்,நீ ஆட்சி செய்" என்று கூறுகிறார்.இதை நமக்கு இத்திருப்பாடலை எழுதியவர் நமக்கு அப்படியே தந்திருக்கிறார்.
இதன் பிறகு அவர்,அதாவது இத்திருப்பாடலை எழுதியவர்,நமக்கு கூறுகிறார்,"இதோ கர்த்தரே என்னை தன்னுடைய மகன் என்று கூறிவிட்டார்,எனக்கு ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் தந்து விட்டார்,அதனால் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்",மேலும் அவருடைய மகனாகிய என்னை உங்களுடைய செயல்கள் மூலம் கோபம் கொள்ள செய்யாதீர்கள்,என்னை முத்தமிட்டு என்னுடன் இணக்கமாயிருங்கள்,இல்லையென்றால் என்னுடைய கோபத்தை தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்",இதுதான் இத்திருப்பாடலை எழுதியவர் நமக்கு கூறியவை.இப்பொழுது நாம் சில கேள்விகளை முன் வைக்கலாம்.
- யார் இந்த திருப்பாடலை எழுதியவர்? அவர் யார் என்று தெரிந்தால் அவர்தான் பூவுலகின் அரசன்.மேலும் அவர்தான் கர்த்தரால் தேர்ந்துடுக்கப்பட்டவர்.
- கர்த்தர் அவருடன் நேரடியாக பேசியிருக்கிறார்.அப்பேச்சின் விபரங்களை நமக்கு தந்திருப்பதால் அவர் மிக முக்கியமானவர்.
- உண்மையில் இத்திருப்பாடலை எழுதியவர் கர்த்தர் பேசியதை நேரடியாக பார்த்தாரா? அப்படி பார்த்தால் அவர் உயிருடன் இருக்க முடியாதே?
- தன்னை "மகன் என்றும் ,இன்று பெற்றெடுத்ததாகவும் கூறியிருந்தால் உண்மையில் இவர்தான்,அதாவது இத்திருப்பாடலை எழுதியவர்தான் "கர்த்தரின் மகன்" ஆவார்.
- எனவே யார் இப்பாடலை எழுதியது? இதற்கு விடை கிடைத்தால் மேற்கூறிய கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.
இப்பாடலை எழுதியவர் யார் என்று தெரியாமல்,இன்னாரைத்தான் குறிக்கிறது என்று நாம் எவரையும் கூற இயலாது.காரணம்,கர்த்தர் தன்னிடம்தான் பேசியதாக அவரே கூறியிருக்கிறார்.ஆனால் நமக்கு ஒரு துருப்பு சீட்டு உள்ளது.இப்பாடலை எழுதும் பொது இவர் மன்னனாக இருந்திருக்கிறார்.இம்மன்னனை கர்த்தரே தேர்ந்தெடுத்திருக்கிறார்.
13 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.[1 சாமு 16:13]
13. அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். [1 சாமு 16:13]
எனவே கர்த்தர் தாவீதைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று உறுதியாகிறது.சவுலையும் கர்த்தர்தானே தேர்ந்தெடுத்தார் என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் சவுலுக்கு பாடல்கள் பாடும் திறன் கிடையாது.எனவே தாவீதை குறிப்பதற்கே அதிக வாய்ப்பு நமக்குள்ளது.
அப்படியென்றால் சாலமோனை குறிப்பதற்கு வாய்ப்பில்லையா?அவனையும்தான் கர்த்தர் "தன்னுடைய மகன்" என்று கூறியிருக்கிறார்.அவனும்தான் நல்ல பாடல்களை எழுதியிருக்கிறான்.சாலமோன் திறமைசாலிதான்,பாடல்கள் பாடும் திறன் கொண்டவன்தான்,ஆனால் அவனையும் குறிக்கவில்லை என்பதற்கு நமக்கு ஓர் சான்று இப்பாடலில் உள்ளது. சாலமோன் காலத்தில் அவனுடைய நாடெங்கும் அமைதி நிலவியது.ஆனால் இப்பாடலை பாடிய மன்னனின் காலத்தில் இவனுக்கெதிராக மற்ற அரசர்கள் செயல் பட்டிருக்கின்றன என்று இப்பாடலை எழுதியவரே குறிப்பிடுகிறார்.எனவே மறுபடியும் இது தாவீதை குறிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக இருக்கிறது.காரணம்,தாவீதிற்கு எதிராக பல பகைஞர்கள் அவனுடைய காலத்தில் இருந்தனர்.
முடிவாக இப்பாடலை எழுதியது தாவீதுதான் என்றும்,இப்பாடலில் அவன் தன்னை "கடவுளின் மகன்" என்றும் அறிவிக்கிறான்.கடவுளின் மகனாகிய தன்னை கோபப்படுத்தாமல் தன்னிடம் அணைத்து மன்னர்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவன் இப்பாடல் மூலமாக அறிவிக்கிறான் என்றும் ஏறத்தாழ உறுதியாகிறது.
இரா.இருதயராஜ்.
https://drive.google.com/file/d/14YUk000-WlwN3snEwAcNfoC3yVdztRYY/view?usp=sharing
No comments:
Post a Comment