ஆல்பா ஒமேகா யார்?
ஆல்பா(Alpha) மற்றும் ஒமேகா(Omega) என்பது கிரேக்க மொழியின் முறையே முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் ஆகும். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் இவ் வெழுத்துக்களை குறிப்பிட்டு ஒரு வாக்கியம் உண்டு. அதிகமாக பயன்படுத்தப் படும் வாக்கியங்களில் இதுவும் ஒன்று ஆகும். இப்புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாக்கியத்தின் மூலம் நமக்கு வெளிப்படுத்த நினைக்கும் கருத்து என்னவென்றால்,இவ்வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை பேசுபவர் எவரோ அவரே "முதலும் கடைசியுமாக இருக்கிறார்" என்பதே ஆகும்.இப்புத்தகம் யாரால் எழுதப்பட்டது என்பது இன்னும் முடிவாக வில்லை.ஆனால் கி.பி 100-களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அக்காலகட்டங்களில் கிறித்தவம் ஓரளவுக்கு வேரூன்ற ஆரம்பித்து விட்டிருந்தது.மேலும் இப்புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஆனால் தற்போதைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்தே வந்தவைகள் ஆகும்.
இவ்வாக்கியம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ள முதலில் அவ்வாக்கியம் எவ்வாறு தமிழில் உள்ளது என்பதை காணலாம்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
8 “அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
இந்த வாக்கியம் பல கேள்விகளை எழுப்புகிறது. இப்புத்தகத்தை எழுதியவர் உள்நோக்கத்தோடு,தம்முடைய கருத்துக்களை அல்லது தான் சார்ந்துள்ள கருத்துக்களை கூறுவதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளார் என தோன்றுகிறது.தன்னுடைய கருத்துக்கள் யூதர்களுக்கும் கற்றறிந்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்காது என்ற அச்சத்தில் தன்னுடைய கருத்துக்கள் வெளிப்படையாக தெரியாதவாறு எழுதியுள்ளார்.முதல் வரிகளில் உள்ள கருத்து ஒன்றாகவும் அடுத்த வரியில் உள்ள கருத்து முதல் அவருக்கு முரணானதாகவும் இருக்கிறது.இரண்டையும் ஒரு சேர எழுதியுள்ள காரணத்தினால் இவர் மீது குற்றம் சாட்டுவது கடினம்.தன மீது குற்றம் சாட்ட வழி இல்லாதவாறு,"இப்படிக் கேட்டால் அப்படியும் அப்படிக் கேட்டால் இப்படியும்" கூறி தப்பித்து கொள்ளும் அளவிற்கு எழுதியுள்ளார்.கீழ்கண்ட கேள்விகளை கவனித்தால் அது புரியும்.
- இவ்வாக்கியத்தை கூறுபவர் "எல்லாம் வல்லவர் " என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குழப்பம் இல்லாதவாறு "கர்த்தர்" அல்லது "ஆண்டவர்" என்று உள்ளது.எனவே இதைக் கூறுபவர் "இயேசு" என்று கூற முடியாது.
- "எல்லாம் வல்ல ஆண்டவரை அதாவது கர்த்தரை" எப்படி "இருந்தவர்" என்று கூற இயலும்? "இருக்கின்றவராகவே இருக்கிறேன்" என்று கூறிய ஒருவரை "இருந்தவர்" என்று கூறியது எப்படி?
- "இருந்தவர்" என்றால், இருந்து, பின்னர் இல்லாமல் போன ஒருவரைத்தானே குறிக்கும்? "எல்லாம் வல்லவர்" எப்படி "இல்லாமல்" போனார்?
- "எல்லாம் வல்லவர்தான் பிதா" என்றால் அவர் இறந்ததாக இவ்வாசிரியர் கூறுகிறாரா?
- இல்லை,இவ்வார்த்தைகளை கூறுபவர் "இயேசுதான்" என்றால்,இயேசு எல்லாம் வல்லவரா? எல்லாம் வல்லவர் என்றால் ஏன் அடி வாங்கினார்?
- மேலும் இயேசு தன்னை "ஆல்பா ஒமேகா" என்று கூறுகிறாரா?அப்படித்தான் என்றால் ஏசா:41:4 யாரைக் குறிக்கிறது?
- 4 இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!
- 4. அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
மேற்கண்ட வார்த்தைகளை கூறியவர் யார்?யாரைக் குறித்து அவர் கூறுகிறார்? இயேசுதான் கடவுள்,பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுள் அவர்தான் என்று தன்னுடைய எழுத்துக்கள் மூலம் கூற விரும்பியுள்ளது போன்று தோன்றுகிறது.யூதர்கள் இக்கருத்தினை கண்டு நகைப்பது மட்டுமல்லாது தன்னை கொன்று போடுவார்கள் என்று இவர் அஞ்சியிருக்கலாம்.அதன் விளைவாக "வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது" போன்று எழுதியுள்ளார்."இது இயேசுவா" என்றால் இல்லை கடவுள் என்பதும்,இது கடவுளா என்றால், இல்லை இயேசு என்பதும் இதன் மூலம் சாத்தியமாகிறது.
இயேசுவை கடவுளாக ஆக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருப்பது நன்றாக தெரிகிறது.இதனை சற்று புரிந்து கொண்டு படித்தால் உண்மை விளங்கும்.வெளிப்படுத்தல் புத்தகத்தில் வருகின்ற அக்குறிப்பிட்ட வாக்கியம் புதிதாக கிறித்தவத்தில் இனைந்த ஒருவருக்கு மிகவும் குழப்பம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1CneHTVEnlJMPJwUWgIdh8bCHX2Nsovcv/view?usp=sharing
https://drive.google.com/file/d/1CneHTVEnlJMPJwUWgIdh8bCHX2Nsovcv/view?usp=sharing
No comments:
Post a Comment