Saturday, July 27, 2019

எவ்வாறு வெளிப்படுத்துதல் புத்தகம் கடவுளை அவமதிக்கிறது?

எவ்வாறு வெளிப்படுத்துதல் புத்தகம் கடவுளை அவமதிக்கிறது?

முன்னுரை:

வெளிப்படுத்தல் புத்தகம் புதிய ஏற்பாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம் ஆகும்.இந்த புத்தகத்தை எழுதியது யார் என்று எத்தனை கிறித்தவர்களுக்குத் தெரியும்? இப்புத்தகத்தை எழுதியது நான்காவது நற்செய்தி புத்தகத்தை எழுதியவரான "இயேசுவுக்கு அன்பான சீடனாகிய யோவான்" என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் அது உண்மை அல்ல.அப்படி என்றால் யார் எழுதியது?இப்புத்தகம் இயேசு இறந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னர் எழுதப்பட்டது என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

இதை எழுதியது மற்றொரு "யோவான்" ஆகும். இவரும்  "இயேசுவுக்கு அன்பான சீடனாகிய யோவான்" வாழ்ந்த கால கட்டங்களில் வாழ்ந்திருக்கிறார்.தமிழில் இப்புத்தகத்தின் ஆசிரியரை "திவ்ய வாசகனாகிய யோவான்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஆங்கிலத்தில் "John The Divine" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.எனவே "தெய்வீக தன்மை கொண்ட யோவான்" என்று நாம் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

கடவுளுக்குரிய அடைமொழிகள்:

சரி,நாம் இப்பொழுது எதைப்பற்றி பார்க்க இருக்கிறோம்? பழைய ஏற்பாட்டில் உண்மையான கடவுள் யார் என்று மிகத்தெளிவாக கொடுக்கப் பட்டுள்ளது.அந்த கடவுளுக்கென்று பல அடைமொழிகள் உள்ளன.அவைகள் பழைய ஏற்பாட்டில் உள்ளன.கடவுளுக்கு வழங்கப்படும் அடை மொழிகளை வேறு யாருக்கும் நாம் பயன்படுத்த இயலாது.எடுத்துக்காட்டாக,"சர்வ வல்லவர்" [El Shaddai].இதை நாம் வேறு ஒருவருக்கு பயன்படுத்த கூடாது,முடியவும் முடியாது.

ஆனால் "வெளிப்படுத்துதல்" புத்தகத்தின் ஆசிரியர் கடவுளுக்குரிய அடைமொழிகளை இயேசுவுக்கு பயன் படுத்துகிறார்.எப்படி என்று பாருங்கள்.முதலில் நாம் திணித்து கொள்ள வேண்டியது, இந்த யோவான் இப்புத்தகத்தை மிக குழப்பமாக எழுதி இருப்பார்.யாரை குறிப்பிடுகிறார் என்று நமக்கு புரியாத அளவிற்கு எழுதி இருப்பார்.ஒரு வேளை,வேண்டுமென்றே அப்படி எழுதி இருந்தாரா என்றும் நாம் சந்தேகம் கொள்ள செய்கிறது.

வெளி 1:4-6:

யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
மேற்கண்ட வசனத்தில், "இருக்கிறவரும்,இருந்தவரும்,வருகிறவருமான" என்ற வார்த்தை யாரை குறிக்கிறது? "இருந்தவர்" என்ற வார்த்தையானது கடந்த கால சொல் ஆகும்.சர்வ வல்ல இறைவனுக்கு இந்த அடைமொழியை பயன் படுத்த இயலாது.அவர் "எப்பொழுதுமே இருக்கிறவர்".அவருக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது.
நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?[ஏசா 43:13].
இப்படி இருக்கும் பொழுது இந்த யோவான் ஏன் இப்படிப்பட்ட அடைமொழியை பயன்படுத்தினார். ஏற்கனவே இயேசுவை, "கடவுள் கூடவே எப்பொழுதும் இருந்தவர்" என்று கூறப்பட்டாயிற்று.அதை உறுதி படுத்துவதற்காகவும்,இயேசுவை மேலும் உயிர்த்துவதற்காகவும் உணர்ச்சி பூர்வமாக தயார் ஆனது இவருடைய எழுத்துக்களில் இருந்தே தெரிகிறது.மேலும் "வருகிறவருமாகிய" என்ற வார்த்தையும் கடவுளுக்குரியது அல்ல.இயேசு இறந்த பிறகு உடனே திரும்பி வருவார் என்று அவருடைய சீடர்கள் நினைத்து கொண்டிருந்தனர்.

நீண்ட காலம் சென்ற பிறகு அதை ஒரு நம்பிக்கையாக மாற்றி விட்டனர்.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல இவர் இந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்.கடவுளை குறிப்பது போன்று இயேசுவை குறிப்பிட்டுள்ளார்.இவ்வசனங்களை புரிந்து கொள்ள மிகவும் கடினம்.ஆங்கில மொழிபெயர்ப்பும் அவ்வாறே உள்ளது.

John,
To the seven churches in the province of Asia:
Grace and peace to you from him who is, and who was, and who is to come, and from the seven spirits[a] before his throne, and from Jesus Christ, who is the faithful witness,the firstborn from the dead, and the ruler of the kings of the earth.
To him who loves us and has freed us from our sins by his blood, and has made us to be a kingdom and priests to serve his God and Father—to him be glory and power for ever and ever! Amen.
"to him be glory and power for ever and ever! Amen" என்ற சொற்றொடர் யாரை குறிக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள்.தமிழில் தெளிவாக, இயேசுவையே இச்சொற்றொடர் குறிக்கிறது என்பது தெரிகிறது.அப்படி என்றால் இயேசுவுக்கு,கணம்,மகிமை எல்லாம் சதாகாலங்களிலும் இருக்க வேண்டும் என்று இந்த யோவான் கூறுகிறார்.கடவுளுக்கு தவிர யாருக்கு இந்த சொற்றொடர் பொருந்தும்? இயேசுவை கடவுளாகும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

வெளி 1:17


நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
இது மிக கண்டிக்கத்தக்க அளவில் உள்ளது.ஏன் இது கண்டிக்க  தக்க அளவில் உள்ளது? "முந்தினவரும்,பிந்தினவரும்" என்ற வார்த்தை இதற்க்கு முன்னர் கடவுளை குறிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது.எங்கு?
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.[ஏசா 44:6]
மேற்கூறிய வார்த்தை கடவுளுடையது.அவரே ஏசாயா தீர்க்க தரிசி மூலமாக தன்னைப்பற்றி குறிப்பிடுகிறார்.தமிழில் மிக சரியாக இந்த  "முந்தினவரும்,பிந்தினவரும்" என்ற வார்த்தையை எப்படி மொழி பெயர்க்கலாம்? அதற்கு நாம் மேற்கூறிய வசனத்தின் ஹீப்ரு மொழிபெயர்ப்பின் அடிப்படையில் உருவான ஆங்கில மொழியாக்கத்தை பார்க்க வேண்டும்.
“This is what the Lord says—

    Israel’s King and Redeemer, the Lord Almighty:

I am the first and I am the last;
    apart from me there is no God.
"கர்த்தர் இவ்வாறாக கூறுகிறார்-
இஸ்ரேலின் அரசனும் மீட்பாருமான சர்வவல்ல கர்த்தர் கூறுகிறார்:
நானே முதலாமானவர்,நானே கடைசியுமானவர்;என்னை தவிர வேறு கடவுள் கிடையாது."[ஏசா 44:6].

இப்பொழுது நம் மனசாட்சியை கேட்போம் இவ்வசனம் யாரை குறிக்கிறது?சர்வ வல்ல கடவுளை தவிர யாரை குறிக்க முடியும்? ஏனென்றால் இவ்வார்த்தைகளை கூறியவரே அவர்தானே!

இப்படிப்பட்ட அடைமொழிகளை எடுத்துக்கொண்டு வந்து இயேசுவை குறிப்பிடுகிறார் இந்த யோவான். இயேசுவின் பாதத்தில் இந்த யோவான் விழுவதாக வசனத்தின் முதலில் உள்ளது.இதிலிருந்தே இந்த யோவானின் தகுதி வெளிப்படுகிறது.கடவுளை தவிர யார் காலிலும் விழக்கூடாது என்பது யூதனாகிய இந்த யோவானுக்கு தெரியாதா?இயேசுவும் அதை தடை செய்ய வில்லை பாருங்கள்!

எனவே இயேசுவை கடவுளாகும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று இப்படிப்பட்ட வசனங்களின் மூலம் "இயேசுவும் கடவுள்தான்" என்று கூற முற்பட்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.

வெளி 1:18

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
சதா காலங்களிலும் உயிரோடிருப்பவர் யார்? கடவுளை தவிர யார் இருக்க முடியும்?இயேசுவும் கடவுள்தான் என்பதற்கான அடுத்த முயற்சி இது.இயேசுதான் ஒரு முறை இறந்து விட்டாரே பின் எப்படி அவர் சதா காலங்களிலும் உயிரோடு இருக்க முடியும்?என்ன ஒரு முரண்பாடு? எதற்காக இந்த வார்த்தை பயன்படுகிறது?

சதா காலங்களிலும் உயிரோடு இருப்பவர் கடவுள் மட்டுமே.இந்த வார்த்தையை இயேசுவுக்கு பயன்படுத்த முடியாது என்பது அவர் பிறப்பிலிருந்தும்,இறப்பிலிருந்தும் நமக்கு தெரிகிறது.எனவே இயேசுவை மென்மேலும் உயர்த்துவதற்கே அன்றி வேறு எதற்கு?இயேசு மீது இருந்த பற்றின் காரணமாகவோ அல்லது வேறு எதன் காரணமாகவோ இவ்வாறு இந்த யோவான் எழுதி உள்ளார் என்றே நான் கருதுகிறேன்.எப்படி இருந்தாலும் கடவுளுக்கு கீழ்தான் அனைத்தும் அடங்கும்.இயேசுவையும் கடவுளையும் ஒன்றாக்கும் முயற்சி இதில் வெளிப்படுகிறது என்றும் நான் சந்தேகிக்கிறன்.

வெளி 5:13

அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
ஒரு சிங்காசனம் உள்ளது.அதில் ஒருவர் வீற்றிருக்கிறார்.அவர் பெயர் ஆட்டுக்குட்டியானவர்.அவருக்கு சதா காலங்களிலும் கணமும் மகிமையும் உண்டாவதாக! இப்படி பொருள் கொள்வது தவறு இல்லை என்று நான் நினைக்கிறேன்.இதனுடைய ஆங்கில NIV மொழிபெயர்ப்பை காணலாம்.
Then I heard every creature in heaven and on earth and under the earth and on the sea, and all that is in them, saying:
“To him who sits on the throne and to the Lamb

    be praise and honor and glory and power,
for ever and ever!”
தவறாக புரிந்து கொள்வதற்கு எப்படி மேற்கூறிய வசனம் உதவி புரிகிறது என்பதை பாருங்கள்.இருப்பது ஒரு ஆசனம் மட்டுமே! ஆனால் குறிப்பிடப்படுபவர் இரண்டு பேர்.ஒருவர் ஒருவர் ஆசனத்தில் உட்கார்ந்து இருப்பவர்.மற்றொருவர் ஆட்டுக்குட்டியானவர்.கணமும் மகிமையும் யாருக்கு செலுத்தப்படவேண்டும்? உட்கார்ந்து இருப்பவருக்கா இல்லை ஆட்டுக்குட்டியானவருக்கா?தமிழ் மொழிபெயர்ப்பை மறுபடி ஒருமுறை படித்து பாருங்கள்.ஒரு எடுத்துக்காட்டை நாம் பார்த்து விடுவோம்.

நமது தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் தலைவர் ஜெயலலிதா.அவர்தான் முதல்வரும் கூட.ஒரு செய்தியில் அவரை எப்படி குறிப்பிடுகிறார் என்று பாருங்கள்.

"அ.இ.அ.தி.மு.க. கட்சியின் தலைவரும் முதல்வருமாகிய ஜெயலலிதா அவர்கள் இன்று மதுரை வருகிறார்".

இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? அக்கட்சியின் தலைவரும் முதல்வரும் ஜெயலலிதாதான்.அவர் மதுரை வருகிறார்.அவ்வளவுதான்.இப்பொழுது  வெளி 5:13-ஐ படித்து பாருங்கள்.

சிங்காசனத்தில் வீற்றிருப்பவரும் ஆட்டுக்குட்டியானவரும் ஒருவர்தான்.அவருக்கு சதாகாலங்களிலும் கணமும் மகிமையும் உண்டாக விடும்!எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை!கடவுளுக்கு தவிர வேறு யாருக்கு கணமும் மகிமையும் கிடைக்க வேண்டும்?அதுவும் சதாகாலங்களிலும்? யாரை குறை சொல்வது?இந்த யோவானையா அல்லது தமிழ் மொழிபெயர்ப்பையா?

ஆங்கில மொழிபெயர்ப்பு "இருவருக்கும் கிடைக்க வேண்டும்" என்பது போல் உள்ளது.அதுவும் தவறுதான்.அதாவது கடவுளுக்கு இணையாக இயேசுவை கொண்டு வருவதன் முயற்சிதான் இது.

வசனம் வெளி 22:1 மற்றும் வெளி 7:10 கூட இவ்வாறுதான் உள்ளது.அதாவது இயேசுவை கடவுளுக்கு இணையாக்குதல் இந்த மூன்று இடங்களிலும் நடந்து உள்ளது.

வெளி 13:8

உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.
 நம்முடைய கடவுளாகிய இஸ்ரயேலின் கடவுளுக்கென்று ஒரு புத்தகம் உள்ளதாக மல் 3:16-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கே இயேசுவும் தனக்கென்று ஒரு ஜீவ புத்தகம் கொண்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.இதை என்னவென்று கூறுவது?இயேசுவும் ஒரு கடவுள்தான்,அவருக்கும் அதிகாரம் உள்ளது என்பதை சுட்டி காட்ட இந்த யோவான் முயன்றிருக்கிறார்.

வெளி 19:16

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
இந்த மாதிரி அடைமொழிகளை கடவுளை தவிர யாருக்கு கொடுக்க முடியும்? இயேசுவை மிகவும் உயர்த்தி இருக்கிறார் இந்த யோவான்.

முடிவுரை:

கிரேக்க கருத்துக்கள் மிகவும் வித்தியாசமானவைகள்.அவைகள் இயேசு வாழ்ந்த கால கட்டங்களில் சமூகத்தில் படித்தவர்கள் மத்தியில் நன்றாக ஊடுருவி இருந்தது.இக்கருத்துக்கள் படி கடவுள் "வார்த்தை" மூலமாக வெளிப்படுகிறார்.இந்த வார்த்தைதான் இயேசு.எனவே அவர் தெய்வீக தன்மை உடையவர்.அவர் கடவுளின் மகன்.அவர்தான் கடவுளை வெளிப்படுத்துவார்.இவ்வகையான கருத்துக்கள்,இறைவன் ஒருவன்,அவருக்கு ஒரு மகன் போன்ற கிரேக்க கருத்துக்களுக்கு நம்மை இட்டு சென்று விட்டன.பழைய ஏற்பாட்டில் இவை போன்ற எதையும் நாம் காண இயலாது.மிகவும் தெளிவாக தம்மை பற்றி அங்கே கூறி உள்ளார்.

மற்ற புறஜாதிகளை சேர்க்காதே,நீயும் அவர்களுடன் சேராதே என்று கடவுள் ஏற்கனவே கூறி இருக்கிறார். சேர்த்ததன் விளைவு இன்று ஒரு மனிதனை கடவுளுக்கு இணையாகி அதற்க்கு பல கற்பனை விளக்கங்கள் கொடுத்து நம்ப செய்து விட்டனர்.

இரா.இருதயராஜ்.

Saturday, July 20, 2019

ஆதியிலே வார்த்தை இருந்தது

யோவான் 1:1

இந்த வசனம் நம் எல்லோருக்கும் நன்றாக தெரிந்த வசனம்தான்.இருந்தாலும் இந்த வசனம்தான் புரிவதற்கு மிகக்கடினமான வசனமாகும்.மிக சரியாக கூற வேண்டுமென்றால்,முதல் ஐந்து வசனங்கள் இவ்வகையான ஒன்றுதான்.இந்த வசனங்களை முதலில் பார்த்து விடுவோம்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

சரி,இதில்  இதில் புரிந்து கொள்ள கடினம் என்று என்ன உள்ளது?திருமறையை படிப்பவர்கள் அதை ஆழ்ந்து படிக்க வேண்டும்.கடவுளை பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம்,எனவே ஆழ்ந்து படிக்க வேண்டும்.அவ்வாறு நாம் படிக்கும் பொழுது நமக்குள் கேள்விகள் எழும்.அக்கேள்விகளுக்கு விடை அங்கேயே கிடைக்கும்.பதில் கிடைக்க வில்லை என்றால்,நீங்கள் தேடுதலை விட்டு விட்டீர்கள் என்று பொருளாகும்.

இப்பொழுது முதல் வசனத்தை பார்ப்போம்.இவ்வசனத்தை படித்தவுடன் உங்கள் மனதில் ஒரு பொரி பறக்க வேண்டும்.இதே மாதிரியான வசனத்தை எங்கோ பார்த்திருக்கின்றோமே என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்.அது ஆதி 1:1 ஆகும்.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
இங்கே தேவன் தன்னுடன் யாரும் இருந்ததாக கூற வில்லை.அப்படி யாரும் இருந்ததாக கூறப்படவில்லை என்பதால் ஒருவரும் இருந்ததில்லை என்று நாம் எப்படி கொள்ளமுடியும்? ஆதி 2:1-ஐ பார்ப்போம்.
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
அனைத்துமே அப்பொழுதுதான் உண்டாக்கப்பட்டிருக்கிறது. கடவுள்தான் அனைத்தையும் உருவாக்கி இருக்கிறார். ஆனால் அடுத்த கேள்வி நம் மனதினுள் தோன்றுகிறது.ஆதி 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
இங்கே கடவுள் யாரிடமோ பேசுவது போல் உள்ளது.யாரிடம் பேசினார் என்று நமக்கு தெரிய வில்லை.ஆனால் உறுதியாக அவர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் என்று மட்டும் வசனத்திலிருந்து தெரிகிறது.யார் அவர் அல்லது அவர்கள்?அப்படியென்றால் அவர்கள் படைப்பிற்கு முன்னரே அங்கு இருந்திருக்க வேண்டும்.யார் அவர்கள்? இதற்கான பதில் யோபுவில் உள்ளது.யோபு 38-ம் அதிகாரம் தெளிவான பதிலைக் கொடுக்கின்றது.

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?

அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.[யோபு 38:4-7]
 7-ம் வசனத்தை பார்த்தால் நமக்கு புரிகின்றது.எனவே படைப்பின் பொது தேவ புத்திரர்கள் அங்கே இருந்திருக்கின்றனர்.அவர்கள் உறுதியாக மனிதர்கள் அல்ல.எனவே அவர்கள் தூதர்கள் என்றும் கடவுளின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவர் கட்டளையிடும் செயல்களை நிறைவேற்றுபவர்கள் என்றும் நாம் நினைத்து கொள்ளலாம்.

எனவே ஆதியிலே தேவனோடு கூட தேவ புத்திரர்கள் இருந்திருக்கின்றனர்.அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிபவர்கள்.இந்த தேவ புத்திரர்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்தனரா?இல்லை.தேவன்தான் படைத்தார்.

சரி இப்பொழுது யோ 1:2-ம் வசனத்தை காண்போம்.
"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்".
ஒரு பெரும் மாற்றம் இந்த வசனத்தில் உள்ளது.முதல் வசனம் "ஆதியிலே வார்த்தை இருந்தது" என்று கூறுகிறது.அதாவது "இருந்தார்" என்று கூறாமல் "இருந்தது" என்று கூறுகிறது.அந்த "வார்த்தையை" உயிரற்ற ஒன்றாக நமக்கு அந்த வசனம் அறிமுகப்படுத்துகிறது.ஆனால் அடுத்த வசனத்தில் "வார்த்தை" உயிருள்ள ஒன்றாக மாறுகிறது.ஏன்? இதற்கான பதில் நமக்கு தெரிய வேண்டுமென்றால் "GNOSTICISM" என்ற ஒரு கருத்தை பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.அதைப்பற்றி தனி ஒரு கட்டுரையில் பார்ப்போம்.

இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஒரு புதுமையான "கருத்து" இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கருத்து பழைய ஏற்பாட்டில் எங்கும் கிடையாது."வார்த்தை" என்ற ஒருவர்,அவரும்ஒரு கடவுள்.இந்த "வார்த்தை என்ற கடவுள்" பழைய ஏற்பாட்டில் போற்றப்படும் சர்வ வல்ல கடவுளாகிய "ஆபிரகாமின் கடவுளோடு" கூட இருந்தார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.

இது மிகப்பெரும் குழப்பம்.கிரேக்க தத்துவங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்தான் இந்த "வார்த்தை-கடவுள்" என்ற கருத்துக்களை ஆதரிப்பவர்கள்.யோவான் வாழ்ந்த கால கட்டங்களில் இந்த கருத்துக்கள் மேலோங்கி இருந்தன.நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,யோவானின் இந்த வசனம்,ஈடு இணையில்லாத கடவுளுக்கு இணை கற்பிக்க முயலுகிறது.

அடுத்த வசனம்தான் நமக்கு அதிக கேள்விகளை தருகிறது.அக்கேள்விகளில் இருந்து யோவான் எவ்வகையான மன நிலைமையில் இருந்தார் என்று நமக்கு தெரிய வரும்.அந்த வசனத்தை காண்போம்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அதாவது அந்த "வார்த்தை என்பவர் மூலமாக" கடவுள் அனைத்தயும் உண்டாக்கினார்.அந்த "வார்த்தை" மட்டும் இல்லாதிருந்ததானால் கடவுளால் ஒன்றையும் உருவாக்கி இருக்க முடியாது.இதைத்தான் யோவான் நமக்கு கூறுகிறார்.ஆனால் இது சரிதானா?இல்லை என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.மேலே நாம் கண்ட யோபுவின் 38-ம் அதிகாரம் முழுவதையும் படித்து பாருங்கள்.மேலும் சில வசனங்களை ஏசாயா மூலமாக கடவுள் நமக்கு தருகிறார்.
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். 
நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.[ஏசா 44:6,8].
அடுத்த வசனத்தை பாருங்கள்.
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். 

நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.

இதை விட வேறு என்ன சாட்சிகள் வேண்டும்? யோவான் ஒரு புது கருத்தை திணிப்பதற்கு முயற்சி செய்கிறார்.இயேசுவை கடவுளாக்கும் முயற்சி இங்குதான் ஆரம்பமாகிறது.ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு போன்றவர்கள் வணங்கிய கடவுள்தான் உண்மையான கடவுள்.அவருக்கு ஈடு இனை கிடையாது.கிரேக்க கருத்துக்களுக்கு அடிமையாகி அவைகளை கொண்டு இயேசுவை கடவுளாக்கி உள்ளார் இந்த யோவான்.

யோவான் கூறியது தவறு என்று பழைய ஏற்பாட்டு வசனங்களே நமக்கு தெரிவிக்கிறது.ஏமாறாமல் இருப்போமாக!

இரா.இருதயராஜ்.

My Posts