யோவான் 1:1
இந்த வசனம் நம் எல்லோருக்கும் நன்றாக தெரிந்த வசனம்தான்.இருந்தாலும் இந்த வசனம்தான் புரிவதற்கு மிகக்கடினமான வசனமாகும்.மிக சரியாக கூற வேண்டுமென்றால்,முதல் ஐந்து வசனங்கள் இவ்வகையான ஒன்றுதான்.இந்த வசனங்களை முதலில் பார்த்து விடுவோம்.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
சரி,இதில் இதில் புரிந்து கொள்ள கடினம் என்று என்ன உள்ளது?திருமறையை படிப்பவர்கள் அதை ஆழ்ந்து படிக்க வேண்டும்.கடவுளை பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கின்றோம்,எனவே ஆழ்ந்து படிக்க வேண்டும்.அவ்வாறு நாம் படிக்கும் பொழுது நமக்குள் கேள்விகள் எழும்.அக்கேள்விகளுக்கு விடை அங்கேயே கிடைக்கும்.பதில் கிடைக்க வில்லை என்றால்,நீங்கள் தேடுதலை விட்டு விட்டீர்கள் என்று பொருளாகும்.
இப்பொழுது முதல் வசனத்தை பார்ப்போம்.இவ்வசனத்தை படித்தவுடன் உங்கள் மனதில் ஒரு பொரி பறக்க வேண்டும்.இதே மாதிரியான வசனத்தை எங்கோ பார்த்திருக்கின்றோமே என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்.அது ஆதி 1:1 ஆகும்.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
இங்கே தேவன் தன்னுடன் யாரும் இருந்ததாக கூற வில்லை.அப்படி யாரும் இருந்ததாக கூறப்படவில்லை என்பதால் ஒருவரும் இருந்ததில்லை என்று நாம் எப்படி கொள்ளமுடியும்? ஆதி 2:1-ஐ பார்ப்போம்.
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
அனைத்துமே அப்பொழுதுதான் உண்டாக்கப்பட்டிருக்கிறது. கடவுள்தான் அனைத்தையும் உருவாக்கி இருக்கிறார். ஆனால் அடுத்த கேள்வி நம் மனதினுள் தோன்றுகிறது.ஆதி 1:26
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
இங்கே கடவுள் யாரிடமோ பேசுவது போல் உள்ளது.யாரிடம் பேசினார் என்று நமக்கு தெரிய வில்லை.ஆனால் உறுதியாக அவர் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார் என்று மட்டும் வசனத்திலிருந்து தெரிகிறது.யார் அவர் அல்லது அவர்கள்?அப்படியென்றால் அவர்கள் படைப்பிற்கு முன்னரே அங்கு இருந்திருக்க வேண்டும்.யார் அவர்கள்? இதற்கான பதில் யோபுவில் உள்ளது.யோபு 38-ம் அதிகாரம் தெளிவான பதிலைக் கொடுக்கின்றது.
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.[யோபு 38:4-7]
7-ம் வசனத்தை பார்த்தால் நமக்கு புரிகின்றது.எனவே படைப்பின் பொது தேவ புத்திரர்கள் அங்கே இருந்திருக்கின்றனர்.அவர்கள் உறுதியாக மனிதர்கள் அல்ல.எனவே அவர்கள் தூதர்கள் என்றும் கடவுளின் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவர் கட்டளையிடும் செயல்களை நிறைவேற்றுபவர்கள் என்றும் நாம் நினைத்து கொள்ளலாம்.
எனவே ஆதியிலே தேவனோடு கூட தேவ புத்திரர்கள் இருந்திருக்கின்றனர்.அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிபவர்கள்.இந்த தேவ புத்திரர்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்தனரா?இல்லை.தேவன்தான் படைத்தார்.
சரி இப்பொழுது யோ 1:2-ம் வசனத்தை காண்போம்.
"அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்".
ஒரு பெரும் மாற்றம் இந்த வசனத்தில் உள்ளது.முதல் வசனம் "ஆதியிலே வார்த்தை இருந்தது" என்று கூறுகிறது.அதாவது "இருந்தார்" என்று கூறாமல் "இருந்தது" என்று கூறுகிறது.அந்த "வார்த்தையை" உயிரற்ற ஒன்றாக நமக்கு அந்த வசனம் அறிமுகப்படுத்துகிறது.ஆனால் அடுத்த வசனத்தில் "வார்த்தை" உயிருள்ள ஒன்றாக மாறுகிறது.ஏன்? இதற்கான பதில் நமக்கு தெரிய வேண்டுமென்றால் "GNOSTICISM" என்ற ஒரு கருத்தை பற்றி நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.அதைப்பற்றி தனி ஒரு கட்டுரையில் பார்ப்போம்.
இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஒரு புதுமையான "கருத்து" இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கருத்து பழைய ஏற்பாட்டில் எங்கும் கிடையாது."வார்த்தை" என்ற ஒருவர்,அவரும்ஒரு கடவுள்.இந்த "வார்த்தை என்ற கடவுள்" பழைய ஏற்பாட்டில் போற்றப்படும் சர்வ வல்ல கடவுளாகிய "ஆபிரகாமின் கடவுளோடு" கூட இருந்தார் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
இது மிகப்பெரும் குழப்பம்.கிரேக்க தத்துவங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்தான் இந்த "வார்த்தை-கடவுள்" என்ற கருத்துக்களை ஆதரிப்பவர்கள்.யோவான் வாழ்ந்த கால கட்டங்களில் இந்த கருத்துக்கள் மேலோங்கி இருந்தன.நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,யோவானின் இந்த வசனம்,ஈடு இணையில்லாத கடவுளுக்கு இணை கற்பிக்க முயலுகிறது.
அடுத்த வசனம்தான் நமக்கு அதிக கேள்விகளை தருகிறது.அக்கேள்விகளில் இருந்து யோவான் எவ்வகையான மன நிலைமையில் இருந்தார் என்று நமக்கு தெரிய வரும்.அந்த வசனத்தை காண்போம்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அதாவது அந்த "வார்த்தை என்பவர் மூலமாக" கடவுள் அனைத்தயும் உண்டாக்கினார்.அந்த "வார்த்தை" மட்டும் இல்லாதிருந்ததானால் கடவுளால் ஒன்றையும் உருவாக்கி இருக்க முடியாது.இதைத்தான் யோவான் நமக்கு கூறுகிறார்.ஆனால் இது சரிதானா?இல்லை என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.மேலே நாம் கண்ட யோபுவின் 38-ம் அதிகாரம் முழுவதையும் படித்து பாருங்கள்.மேலும் சில வசனங்களை ஏசாயா மூலமாக கடவுள் நமக்கு தருகிறார்.
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.[ஏசா 44:6,8].
அடுத்த வசனத்தை பாருங்கள்.
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.
நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
இதை விட வேறு என்ன சாட்சிகள் வேண்டும்? யோவான் ஒரு புது கருத்தை திணிப்பதற்கு முயற்சி செய்கிறார்.இயேசுவை கடவுளாக்கும் முயற்சி இங்குதான் ஆரம்பமாகிறது.ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு போன்றவர்கள் வணங்கிய கடவுள்தான் உண்மையான கடவுள்.அவருக்கு ஈடு இனை கிடையாது.கிரேக்க கருத்துக்களுக்கு அடிமையாகி அவைகளை கொண்டு இயேசுவை கடவுளாக்கி உள்ளார் இந்த யோவான்.
யோவான் கூறியது தவறு என்று பழைய ஏற்பாட்டு வசனங்களே நமக்கு தெரிவிக்கிறது.ஏமாறாமல் இருப்போமாக!
இரா.இருதயராஜ்.
No comments:
Post a Comment