Saturday, March 28, 2020

திருப்பாடல்கள்(சங்கீதம்) 2:12 - பொருள் என்ன?

திருப்பாடல்கள்(சங்கீதம்) 2:12 - பொருள் என்ன?

ஒரு தனிமனிதனுடைய கவித்திறமையை திருப்பாடல்கள் புத்தகம் நமக்கு விளக்குகிறது.தாவீது என்ற அந்த தனிமனிதன் தன எண்ணங்களை எல்லாம் கவிதை நடையில் பதிவு செய்திருக்கிறான்.ஆடுகள் மேய்க்கும் ஒரு சிறுவனாக இருந்தபோதிலிருந்தே தன எண்ணங்களை பதிவு செய்திருக்கிறான்.தான் நம்பும் கடவுளைப்பற்றி தன்னுடைய எண்ணங்களை எழுதி, இசையமைத்து நமக்கு தந்திருக்கிறான்.இந்த தாவீது எழுதிய திருப்பாடல்களில் இரண்டாம் திருப்பாடல் ஏறத்தாழ ஓர் இறைவாக்கு என்று கூறப்படுகிறது.ஒருவருக்கு எப்பொழுது கவித்திறமை வெளிப்படும்? எப்பொழுது மற்ற செயல்கள் அவருடைய கவனத்தை ஈர்க்காமல் தான் விரும்பும் செயல்கள் மீது அதிக ஈர்ப்பு உடையவராக மாறுகிறாரோ அப்பொழுது அவருக்குள் இருக்கும் கவித்திறமை வெளிப்பட ஆரம்பிக்கும்.தான் நினைக்கும் எண்ணங்களை எழுத்தில் அப்படியே கொண்டு வருவர்.

அவ்வாறு தாவீது எழுதிய இரண்டாம் திருப்பாடலை நாம் கவனித்தோமானால் அவர் ஒரு அரசனைப்பற்றியும் தன்னுடைய கடவுளாகிய கர்த்தரைப் பற்றியும் எழுதியிருப்பார்.தன்னுடைய கடவுள் தன்னிடம் பேசுவது போன்று எழுதி பின்னர் அதனை நமக்கு கூறுவது போன்று அத்திருப்பாடல் இருக்கும்.இதனை நாம் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னர்,இத்திருப்பாடலை எழுதியது தாவீது இல்லை என்று கற்பனை செய்து கொள்வோம்.யாரோ ஒருவர் எழுதியுள்ளார் என்றே கொள்வோம்.கவித்திறமை மிக்க ஒருவர் எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்வோம். 1-4 வாக்கியங்கள் மூலமாக நமக்கு என்ன கூறுகிறார்?

மண்ணுலகின் அரசர்கள் அனைவரும் கர்த்தருக்கு எதிராக செயல்கள் செய்கின்றனர் என்று கூறுகிறார்.அப்படி என்ன செயல்கள் செய்து விட்டனர்? கர்த்தர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை மண்ணுலகின் அரசனாக்கியிருக்கிறார்,அந்த அரசனுக்கு எதிராக எண்ணங்கள் கொள்கின்றனர்.அப்படி எண்ணங்கள் கொள்வதன் மூலம் அவர்கள் கர்த்தருக்கே எதிரான எண்ணங்கள் கொள்கின்றனர் என்று நமக்கு இத்திருப்பாடலை எழுதியவர் கூறுகிறார்.6-வது வாக்கியத்தின் மூலம் நமக்கு அவர் மேலும் சிலவற்றை கூறுகிறார்.
6. நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
6 ‘என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.’ 
கர்த்தர் கூறுவதை இத்திருப்பாடலை எழுதியவர் நேரடியாக கேட்டது போன்று நமக்கு கூறுகிறார்.அதாவது கர்த்தர் இவரிடமோ அல்லது பொதுவாகவோ கூறுகிறார்,அதனை இவர் கேட்டிருக்கிறார்,பிறகு நமக்கு அப்படியே எழுதி தருகிறார்.மண்ணுலகின் அரசர்களின் செயலை பார்த்து கர்த்தர் நகைத்து ,"நான் என்னுடைய திருமலையாகிய சீயோனில் ஓர் அரசனை தேர்ந்தெடுத்து அவனை ஆட்சி புரிய வைத்திருக்கிறேன்" என்கிறார்.ஆனால் அடுத்த வசனம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.அதாவது,கர்த்தர் இப்பொழுது நேரடியாகவே இத்திருப்பாடலை எழுதியவரிடம் பேசுகிறார் போன்று உள்ளது.அதனை பார்க்கலாம்.
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன்  கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.’ 
இத்திருப்பாடலை எழுதியவரை நோக்கி,"நீ என்னுடைய மகன்,இன்று உன்னை உருவாக்கினேன்,இம்மண்ணுலகை உனக்கு தந்தேன்,நீ ஆட்சி செய்" என்று கூறுகிறார்.இதை நமக்கு இத்திருப்பாடலை எழுதியவர் நமக்கு அப்படியே தந்திருக்கிறார்.

இதன் பிறகு அவர்,அதாவது இத்திருப்பாடலை எழுதியவர்,நமக்கு கூறுகிறார்,"இதோ கர்த்தரே என்னை தன்னுடைய மகன் என்று கூறிவிட்டார்,எனக்கு ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் தந்து விட்டார்,அதனால் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்",மேலும் அவருடைய மகனாகிய என்னை உங்களுடைய செயல்கள் மூலம் கோபம் கொள்ள செய்யாதீர்கள்,என்னை முத்தமிட்டு என்னுடன் இணக்கமாயிருங்கள்,இல்லையென்றால் என்னுடைய கோபத்தை தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்",இதுதான் இத்திருப்பாடலை எழுதியவர் நமக்கு கூறியவை.இப்பொழுது நாம் சில கேள்விகளை முன் வைக்கலாம்.
  • யார் இந்த திருப்பாடலை எழுதியவர்? அவர் யார் என்று தெரிந்தால் அவர்தான் பூவுலகின் அரசன்.மேலும் அவர்தான் கர்த்தரால் தேர்ந்துடுக்கப்பட்டவர்.
  • கர்த்தர் அவருடன் நேரடியாக பேசியிருக்கிறார்.அப்பேச்சின் விபரங்களை நமக்கு தந்திருப்பதால் அவர் மிக முக்கியமானவர்.
  • உண்மையில் இத்திருப்பாடலை எழுதியவர் கர்த்தர் பேசியதை நேரடியாக பார்த்தாரா? அப்படி பார்த்தால் அவர் உயிருடன் இருக்க முடியாதே?
  • தன்னை "மகன் என்றும் ,இன்று பெற்றெடுத்ததாகவும் கூறியிருந்தால் உண்மையில் இவர்தான்,அதாவது இத்திருப்பாடலை எழுதியவர்தான் "கர்த்தரின் மகன்" ஆவார்.
  • எனவே யார் இப்பாடலை எழுதியது? இதற்கு விடை கிடைத்தால் மேற்கூறிய கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.

இப்பாடலை எழுதியவர் யார் என்று தெரியாமல்,இன்னாரைத்தான் குறிக்கிறது என்று நாம் எவரையும் கூற இயலாது.காரணம்,கர்த்தர் தன்னிடம்தான் பேசியதாக அவரே கூறியிருக்கிறார்.ஆனால் நமக்கு ஒரு துருப்பு சீட்டு உள்ளது.இப்பாடலை எழுதும் பொது இவர் மன்னனாக இருந்திருக்கிறார்.இம்மன்னனை கர்த்தரே தேர்ந்தெடுத்திருக்கிறார்.
13 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.[1 சாமு 16:13]
13. அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். [1 சாமு 16:13]
எனவே கர்த்தர் தாவீதைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று உறுதியாகிறது.சவுலையும் கர்த்தர்தானே தேர்ந்தெடுத்தார் என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் சவுலுக்கு பாடல்கள் பாடும் திறன் கிடையாது.எனவே தாவீதை குறிப்பதற்கே அதிக வாய்ப்பு நமக்குள்ளது.

அப்படியென்றால் சாலமோனை குறிப்பதற்கு வாய்ப்பில்லையா?அவனையும்தான் கர்த்தர் "தன்னுடைய மகன்" என்று கூறியிருக்கிறார்.அவனும்தான் நல்ல பாடல்களை எழுதியிருக்கிறான்.சாலமோன் திறமைசாலிதான்,பாடல்கள் பாடும் திறன் கொண்டவன்தான்,ஆனால் அவனையும் குறிக்கவில்லை என்பதற்கு நமக்கு ஓர் சான்று இப்பாடலில் உள்ளது. சாலமோன் காலத்தில் அவனுடைய நாடெங்கும் அமைதி நிலவியது.ஆனால் இப்பாடலை பாடிய மன்னனின் காலத்தில் இவனுக்கெதிராக மற்ற அரசர்கள் செயல் பட்டிருக்கின்றன என்று இப்பாடலை எழுதியவரே குறிப்பிடுகிறார்.எனவே மறுபடியும் இது தாவீதை குறிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக இருக்கிறது.காரணம்,தாவீதிற்கு எதிராக பல பகைஞர்கள் அவனுடைய காலத்தில் இருந்தனர்.

முடிவாக இப்பாடலை எழுதியது தாவீதுதான் என்றும்,இப்பாடலில் அவன் தன்னை "கடவுளின் மகன்" என்றும் அறிவிக்கிறான்.கடவுளின் மகனாகிய தன்னை கோபப்படுத்தாமல் தன்னிடம் அணைத்து மன்னர்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவன் இப்பாடல் மூலமாக அறிவிக்கிறான் என்றும் ஏறத்தாழ உறுதியாகிறது.

இரா.இருதயராஜ்.

To Download this Essay:
https://drive.google.com/file/d/14YUk000-WlwN3snEwAcNfoC3yVdztRYY/view?usp=sharing

Saturday, March 21, 2020

உவமைகள் பேரழகு - ஏசாயா 47-ம் அதிகாரம்

உவமைகள் பேரழகு - ஏசாயா 47-ம் அதிகாரம் 

உவமைகளை கையாள்வது என்பது ஒரு கலை.தமிழ் மொழியில் உவமைகள் பயன்பாடு மிக அதிகம்.பெண்ணை நிலவுக்கு ஒப்பிட்டு,நிலவை புகழ்வது போன்று பெண்ணை வர்ணிப்பது என்பது தமிழ் கவிஞர்களுக்கு காய் வந்த கலை.அது போன்று ஹீப்ரு மொழியிலும் உவமைகளை மிக அருமையாக கையாண்டு இருப்பர்.குறிப்பாக இறைவாக்காளர் ஏசாயா மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பார்.

பாபிலோன் நாடு செல்வ செழிப்புடன் இருந்த காலம்.யூத மக்களை அடிமைகளாக பிடித்து செல்வதை பற்றியும்,யூத நாடு அடிமைப்பட்டு போவதை பற்றியும் ஏசாயா முன்னறிவித்து இருப்பார்.இதன் காரணமாக இந்நாட்டைப் பற்றி கோபம் கொண்டு அது எவ்வாறு தன்னுடைய இடத்தை இழக்க போகிறது என்று தன்னுடைய புத்தகத்தில் கூறியிருப்பார்.அவ்வாறு கூறும் பொழுது பாபிலோன் நாட்டை ஒரு இளம்பெண்ணுக்கு சமமாக்கி வர்ணித்து இருப்பார்.இப்பொழுது அவர் கூறுவதை கவனியுங்கள்.
1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; “மெல்லியலாள் “, “இனியவள்” என்று இனி நீ அழைக்கப்படாய்.
2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை; உன் முக்காடுதனை அகற்றிவிடு; உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.
3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்; உன் மானக்கேடு வெளிப்படும்; நான் பழி வாங்குவேன்; எந்த ஆளையும் விட்டுவையேன்.[ஏசா 47:1-3]
இந்த அதிகாரம் முழுவதும் இவ்வாறே இருக்கும்.ஒரு "கன்னி பெண்" எவ்வாறு பாதுகாக்கப்படுவாள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.அப்படிப்பட்ட பாதுகாப்பையும் பாசத்தையும் அவள் இனி எதிர்பார்க்க முடியாது என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

பாபிலோன் நாட்டை "ஒரு கன்னி பெண்" என்று வர்ணித்து எழுதுவது என்பது நமக்கு இரு செய்திகளை தருகிறது."கன்னி பெண்ணை" பழங்கால சமூகங்கள் எப்படி போற்றி பாதுகாத்தன என்பதையும்,பாபிலோன் நாடு கன்னிப்பெண்ணுக்கு சமமாக்க பட்டதால் அந்நாடு எவ்வகையான செழிப்பை கொண்டிருந்தது என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.கன்னிப்பெண் என்பவள் அழகு நிறைந்தவள்.அது போன்று இந்நாடும் அழகு மிகுந்தது என்று கூறுகிறார்.ஆனால் அந்த அழகு இனிமேல் இருக்காது என்று இறைவாக்கு உரைக்கிறார்.

Saturday, March 14, 2020

பிறவிக்குணம் - யார் காரணம்?

பிறவிக்குணம் - யார் காரணம்?

அனைவருக்கும் பிறவிக்குணம் என்று ஒன்று இருக்கும்.இன்னாருடைய மகன் அல்லது மகள் இவ்வகையான குணத்தைக் கொண்டிருப்பர் என்று கணிக்கும் மனிதர்களை நாம் கண்டிருப்போம். நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகள் என்று அனைவரின் பிறவிக் குணத்தைப் பற்றி நமக்கு சில எண்ணங்கள் இருக்கலாம்.அதை நாம் அவர்களிடம் கூறியிருக்கலாம் அல்லது கூறாமல் நமக்குள்ளேயே வைத்திருக்கலாம்.அதுபோன்றே நமக்கும் சில பிறவிக்குணங்கள் இருக்கலாம்.பிறவிக்குணங்களில் நல்லவைகளும் இருக்கலாம் கெட்டவைகளும் இருக்கலாம்.நம்முடைய நண்பர்களில் சிலபேருடைய குணங்களை கூர்ந்து கவனித்து இருப்பீர்கள்."இவன் அல்லது இவள் மிகவும் அமைதியாக இருக்கிறானே அல்லது இருக்கிறாளே,எப்படி?,இவள் மிகவும் அமைதியாக பேசுகிறாள்,கோபம் கொள்ளாமல் அமைதியாக பதில் கூறுகிறாள்,எப்படி?" என்று நாம் வியந்திருக்கலாம்.பொதுவாக பிறவிக்குணம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்படலாம்.
  • நம்மை அறியாமலேயே நாம் ஒரு குறிப்பிட்ட விதமாக செயல்படுவது.
  • நம்மை அறியாமலேயே நாம் சிலவற்றை விரும்புவது.
நம்முடைய பள்ளிக் காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் நமக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களைப் பற்றி  நமக்கு பலவித எண்ணங்கள் இருந்திருக்கும்.ஒரு சிறு தவறுக்கும் கடுமையாக கோபம் கொள்ளும் ஆசிரியரையும்,பெரும் தவறு செய்திருந்தாலும் கடுமை காட்டாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் பேசும் ஆசிரியர்களையும் நாம் கண்டிருப்போம்.அவ்விரு வகையான ஆசிரியர்களைப் பற்றி நாம் வியந்திருப்போம்.அவ்விருவரும் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன?ஒரு சிறு தவறு ஒருவருக்கு பெரும் தவறு போலவும், ஒரு பெரும் தவறு மற்றவருக்கு சிறு தவறு போலவும் இருக்க காரணம் என்ன?

சிறு வயதில்,பெரும்பாலும்,நம்முடைய பெற்றோர் நம்மை நற்பண்புகளை சொல்லிக் கொடுத்தே வளர்ப்பர்.ஆனாலும் சிலருக்கு திருடும் எண்ணம் வரக் காரணம் என்ன? தேவையான அனைத்தும் கிடைத்திருந்தாலும் திருடும் பழக்கம் சிலருக்கு இருக்கும் அதற்கு காரணம் என்ன? ஆண்,பெண் உறவுகள் ஒரு குறிப்பிட்ட வரைமுறையில்தான் இருக்க வேண்டும் என்று உள்ளது,ஆனாலும் இப்பொழுது நடைமுறையில் அவ்வாறு இல்லை.காரணம் என்ன? வரைமுறை மாறி நடப்போர் கூறும் காரணம் என்னவென்றால்,"நான் என்ன செய்வேன்,நான் அவ்வாறு செய்ய விரும்பா விட்டாலும் எனக்குள் அந்த எண்ணங்கள் உள்ளனவே,எப்படி?",இதற்கு என்ன காரணம்?

பதின்ம வயதில் ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளது.சில குறிப்பிட்ட சிறுவர்கள் மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டிருப்போம்.அவர்களுடைய செயல்கள் பெரும்பாலும் பெண்களுடைய செயல்களை ஒத்திருக்கும்.நாம் அவர்களை பகடி செய்து விளையாடியிருக்கலாம்.பிறகு அவர்களை வெறுத்திருக்கலாம்.இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணம் என்ன என்று எப்பொழுதாவது சிந்தித்திருந்தோமானால் அவர்களை நாம் கண்ணியத்தோடு நடத்தியிருப்போம்.தொலைக்காட்சிகளில் அப்படிப்பட்ட சில ஆண்களையும் பெண்களையும் பேட்டிக்கண்டு ஒளிபரப்பியதை நான் பார்த்திருக்கிறேன்."நான் என்னுடைய செயல்களில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்ணாக உணர்ந்தேன்", என்று அவர்கள் கூறுவதை கண்டிருக்கிறேன்.

இப்படிப் பட்டவர்கள் திருநங்கைகள் என்று இன்று அழைக்கிறோம்.இவர்கள் இவ்வாறு இருக்க விரும்பிடுகின்றனரா?இல்லை.அவர்களுடைய பதின்ம வயதிற்கு பின்னர் அவர்களுடைய பாலின உணர்வுகள் அவர்களை அவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளுகிறது."நான் என்ன செய்வேன்,என் எண்ணங்கள் இவ்வாறுதான் உள்ளது", என்பது அவர்களுடைய பதிலாக இருக்கிறது.இவ்வகையான இயல்பிற்கு யார் காரணம்? அவர்களுக்குள் மறைந்திருந்த அந்த இயல்பை அவர்களுக்கு கொடுத்தது அவர்களை படைத்த கடவுள் என்றால் அதை எப்படி நாம் புரிந்து கொள்ள முடியும்.

பிறப்பில் நான் ஆணாக இருந்தாலும் என்னுடைய செயல்கள் பெண் போன்று உள்ளனவே,யார் காரணம்? அது தவறு என்றும் அறிந்திருந்தாலும் எனக்குள் அந்த எண்ணங்கள் தீயாய் எறிகின்றதே  ஏன்? மற்றவருக்கு அது இல்லையே ஏன்? இந்த எண்ணங்களின் விளைவாக நான் தவறு செய்தால்( நான் விரும்பவில்லை ஆனாலும்) யார் பொறுப்பு? இந்த எண்ணங்கள் எனக்குள் வர யார் காரணம்? 

நான் ஒரு பெண்ணாக பிறந்திருந்தாலும் என்னுடைய செயல்கள் ஆண் போலவே உள்ளனவே ஏன்?அதை நான் விரும்பாவிட்டாலும் அவ்வாறான  எண்ணங்கள் எனக்குள் இருந்தது எப்படி? என்னை விட்டு அகல மாட்டேன் என்கிறதே எப்படி?எப்படி எனக்குள் வந்தது? ஒரு பெண்ணாக நான் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க விரும்புகிறேன் அனால் முடியவில்லையே ஏன்? பெண்ணின் குணம் "அமைதி" என்றால் என்னுடைய இந்த தீவிர பேச்சுக்கு யார் காரணம்?

மேற்கூறியவைகளுக்கு யார் காரணம் என்று இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நினைக்கிறீர்கள்?இது போன்று எண்ணற்ற குணங்கள் உள்ளன.அனைத்தையும் விவரிக்க இயலாது.நாம் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் " என்னை படைத்தது கடவுள்" என்று நீங்கள் உறுதியாக நம்புவீர்கள்,குறிப்பாக கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்.உங்களை படைத்தது உங்கள் இறைவன் என்றால் உங்களுக்குள் இருக்கும் "மேற்கூறிய எண்ணங்களுக்கும்" அவர்தான் காரணம் அல்லவா?உங்களைப் படைத்த இறைவன் "உங்களை தற்போது நீங்கள் உள்ளவாறு படைத்திருக்கிறார் அல்லவா"? நீங்கள் உங்களை உண்மையாக சுய பரிசோதனை செய்து கொண்டால் உங்களுக்குள் இருக்கும் "தீய" எண்ணங்களை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்.அப்படியென்றால் உங்களுக்கு இருக்கும் இந்த "தீய" எண்ணங்களுக்கு காரணமும் கடவுளே!,அல்லவா? உங்களை படைத்தது அவர்தானே?

உங்களை தீய எண்ணங்கள் கொண்டவராக படைத்து விட்டு உங்களுக்கு தண்டனையும் கொடுத்தால் எப்படி நியாயமாகும்? உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட இயல்பை வைத்து விட்டு,அந்த இயல்பின் காரணமாக நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு தண்டனை எப்படி வழங்க இயலும்? பிறக்கும் ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்றால் அந்த ஒவ்வொருவரின் இயல்புக்கும் அவரே காரணம் அல்லவா?ஒரு பிராமண குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவர்தான் படைக்கிறார் என்றால் அக்குழந்தையை "சிலைகளை வணங்கும்படி" படைத்தது எதனால்? படைத்த தன்னையே வணக்கும் படி அவர் படைத்திருக்கலாமே?சிலைகளை அல்லது பிறவற்றை வணங்கும்படி கடவுள் அவர்களை படைத்தது விட்டு அவர்களை தண்டிப்பது எப்படி நியாயம்?அப்படிப்பட்டவர்களுக்கு சந்ததிகளை வழங்காமல் இருந்திருக்கலாமே?

எனவே தற்பொழுது "படைப்பு" பற்றிய நம் எண்ணங்களை மாற்றி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.நம்முடைய படைப்பிற்கு கடவுள்தான் காரணம் என்றால் நம்முடைய இயல்பிற்கும் அவரே காரணம் அல்லவா? அப்படியென்றால் கடவுள் மிக மோசமான செயலை செய்கிறார் என்றே பொருளாகும்.தவறு செய்யும் பய் நமக்கு இயல்பை கொடுத்து விட்டு பின்னர் தண்டிப்பது என்பது கடவுளின் செயல் என்று நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இவ்வுலகைப் படைத்த இறைவன் அவ்வாறு அல்ல.இறைவன் அல்லது கடவுள் என்பவர் அப்படிபட்டவராக இருக்க முடியாது.

இறைவன் இரக்கமுள்ளவராக இருக்கிறார்.இரக்கம் என்றால் எவ்வாறு என்றால் நீங்கள் அவருக்கு முன்பாக தவறு செய்தாலும் அவர் உங்களை வெறுக்காமல் பொறுமையுடன் காத்திருக்கிறார்.நீங்கள் அவரை வணங்காமல் வேறு எதை வணங்கினாலும் பொறுமையுடன் இருக்கிறார்.மேலும் மனிதர்களை அவர் படைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.என் படைப்பிற்கு காரணம் என் தாய் மற்றும் தந்தையே.ஒருவருடைய தாய் தந்தை வழியாக அவர்  படைக்கப்பட வேண்டும் என்பதுதான் இறைவனுடைய செயலே அன்றி இறைவன் நேரடியாக நம்மை படைக்கிறார் என்பது மேற்கண்ட முரண்பாடுகளுக்கு நம்மை இட்டு செல்லும்.என் படைப்பிற்கு என் இயல்பிற்கும் காரணம் இறைவன் அல்ல,பதிலாக என் தாய் தந்தையரே!!

அப்படியென்றால் என் இயல்பிற்கு நானும் காரணம் அல்ல இறைவனும் காரணம் அல்ல,பதிலாக பெற்றோரே காரணம்.பிறப்பு அல்லது "பல்கி பெருகுதல்" என்பது பெற்றோர் வழியாக நடக்க வேண்டும் என்பதே இறைவனின் படைப்பு.உங்களையும் என்னையும் படைத்தது பெற்றோரே அன்றி இறைவன் அல்ல,ஆனால் இறைவன் வகுத்து தந்த வழிமுறையில் நம்மை படைத்துள்ளனர்.எனவே நம் தவறுகளுக்கு காரணம் நாமே அன்றி இறைவன் அல்ல.ஆனால் உலகில் உள்ள அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.அவரின் மேற்பார்வையில் அனைத்தும் இயங்குகிறது.வழிமுறைகளை நமக்கு தந்தவரே இறைவன்.முதன் முதலில் மனிதர்களை அவர் படைத்து பின்னர் அவர்களை பல்கி பெறுக செய்திருக்க்கிறார்.பல்கி பெருகுதல் என்பது "ஆண்  பெண் இணைப்பின்" வழியாக நடைபெறுகிறது. 

அவ்வாறு ஒரு ஆணும் பெண்ணும் இணையும் பொழுது அவர்களுடைய இயல்புகளை பிறக்கும் சந்ததிகள் பெறுகின்றனர்.இதுவே இறைவனின் நடைமுறை.ஆண் ,பெண் இணைப்பு அவரின் வழிமுறை.இதற்கு மாறாக நடக்கும் அனைத்தும் இறைவன் விரும்பாதவைகளாக இருக்க வேண்டும்.

முடிவாக ஒவ்வொருவருடைய இயல்பிற்கும் காரணம் அவர்களுடைய பெற்றோரே.உங்களுடைய இயல்பும் உங்கள் மனைவியின்  இயல்பும் பிறக்கும் குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது.இப்பொழுது உங்களுடைய இயல்பில் எது தவறானது என்று நீங்கள் அறிவீர்கள்.அதனை முளையிலேயே கிள்ளி ஏறிய முயல வேண்டும்.நற்பண்புகளை சிறு வயதிலேயே ஊட்டி வளர்க்கும் குழந்தைகள் அவர்களுடைய சந்திதிக்கு நல்ல இயல்புகளை கொடுக்க வாய்ப்புள்ளது.அப்படியென்றால் நம்முடைய கெட்ட இயல்புகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? தெரிய வில்லை.அதற்கு இறைவன் ஏதாவது வழிமுறைகளை கொடுத்துள்ளாரா என்று தெரியவில்லை.ஆனாலும் அவரை நாம் வழிபட்டு அவரிடம் வேண்டுதல் செய்யலாம்!

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:🔻
https://drive.google.com/file/d/167o8brJ5ri0eF6SC4hzrk_PRVr791kaA/view?usp=sharing

My Posts