நாசரேத்து எனும் ஊரிலே வந்து வாசம் பண்ணினான்,நசரேயன் எனப்படுவார் [மத் 2:23]
மத்தேயு இரண்டாம் அதிகாரம் கடைசி வசனம் இது.மாற்கு தன்னுடைய புத்தகத்தை எழுதிய பின்னர்தான் மத்தேயு தன்னுடைய இந்த புத்தகத்தை எழுதுகிறார்.மத்தேயு நற்செய்தி புத்தகம் மற்ற மூன்று நற்செய்தி புத்தகங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட செய்தியில் வேறுபடுகிறது.மற்ற நற்செய்தி புத்தகங்கள் இயேசுவின் வாழ்க்கையை பல்வேறு விதமாக சித்தரித்துக் காட்டியிருந்தாலும்,பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன வசனங்கள் மூலம் இயேசுவின் வாழ்க்கையை மத்தேயு விளக்கியிருப்பார்.மற்ற எழுத்தாளர்கள் இவற்றை கையாளவில்லை.இறைவாக்காளர்கள் பலர் நமக்கு இருக்கின்றனர்.ஏசாயா, எரேமியா போன்றோர் பெரும் இறைவாக்கினர் ஆவர்.இவர்களுடைய வாக்குகள் பெரும்பாலானவைகளை இயேசு நிறைவேற்றி இருக்கிறார் என்று நமக்கு மத்தேயு கூறியிருக்கிறார்.அதன் காரணமாக இயேசுவே வரவேண்டிய "மேசியா" என்று மத்தேயு நிரூபிக்க முயன்றிருப்பார்.அவ்வாறான ஒரு வாக்குதான் மேற்கூறிய வசனம்.இந்த வசனத்தை நாம் முதலில் பார்த்துவிடலாம்.
23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்கு குடியிருந்தார். இவ்வாறு, ‘நசரேயன்’ என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.[மத் 2:23]
23. நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.[மத் 2:23]
பழைய ஏற்பாட்டில் இருக்கின்ற எண்ணற்ற இறைவாக்குகளை இயேசு நிறைவேற்றி உள்ளார்,அவ்வாறான ஒன்றுதான் மேற்கூறிய வாக்கியம் என்று மத்தேயு கூறுகிறார் என்பதை மேற்கூறிய வாக்கியத்தின் கடைசி வரிகளில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.மேலே குறிப்பிடப்பட்ட அக்குறிப்பிட்ட வாக்கியத்தில் நாம் ஒரு சில தகவல்களை ஆராய இருக்கிறோம்.
முதல் தவறு:
மத்தேயுவின் பல தவறுகளில் இதுவும் ஒன்று.இங்கே அவர் இரண்டு தவறுகளை செய்திருக்கிறார்.ஒன்று,அவர் சுட்டிக்காட்டிய பழைய ஏற்பாட்டு இறைவாக்கு பழைய ஏற்பாட்டில் இல்லை.இரண்டாவது,"நசரேயன்" என்ற வார்த்தையை தவறாக புரிந்து கொண்டது.
முதலில் மத்தேயுவால் குறிப்பிடப்பட்டுள்ள அக்குறிப்பிட்ட இறைவாக்கு எங்குள்ளது?எவ்வளவு தேடினாலும் அது கிடைக்காது.அப்படி ஒரு இறைவாக்கு பழையஏற்பாட்டில் இல்லவேயில்லை.அப்படியென்றால்,
- இல்லாத இறைவாக்கை மத்தேயு மேற்கோள் காட்டினாரா?இல்லாத ஒன்றை எப்படி மத்தேயு மேற்கோள் காட்டுவார்?அது சாத்தியமா?அவ்வாறு அவர் செய்திருந்தால் அது எவ்வளவு பெரிய தவறு?
- ஒருவேளை மத்தேயு ஏதோ ஒரு இறைவாக்கை மேற்கோள் காட்டியதை மொழிபெயர்த்தவர்கள் தவறாக மொழிபெயர்த்துவிட்டதன காரணமாக நாம் தேடியும் கிடைக்கவில்லையா?
- இரண்டில் எது தவறு?
அக்குறிப்பிட்ட இறைவாக்கை அனைத்து இறைவாக்கினர் புத்தகங்களிலும் தேடிப்பார்த்தாயிற்று.ஆனாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.அப்படியென்றால் எங்கிருந்துதான் இவ்வாக்கியத்தை மத்தேயு நமக்கு கொடுத்திருக்கிறார்?இதற்க்கு பதில்,தெரியவில்லை.வரலாற்று ஆய்வாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.ஏன் மத்தேயு இப்படி செய்தார் என்பதற்கும் காரணம் தெரியவில்லை.
மத்தேயுவின் புத்தகம் முழுவதும் இப்படிப்பட்ட இறைவாக்குகள் நிறைவேற்றப்பட்ட தகவல்கள் நிரம்பியுள்ளன.ஆர்வமிகுதியின் காரணமாக அத்தவறை மத்தேயு இளைத்துவிட்டாரா என்றும் தெரியவில்லை.எப்படியாயினும், அக்குறிப்பிட்ட வாக்கியம் படிப்பவர்களை ஏமாற்றுகிறது என்பது எனது கருத்து.
இரண்டாவது தவறு:
இல்லாத இறைவாக்கை மத்தேயு கொடுத்துவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்தாலும்,அடுத்த தவறு முதல் தவறை விட மோசமாக உள்ளது.இறைவவாக்கினர்களின் காலம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது.அவர்களின் புத்தகங்கள் பல கண்டுபிடிக்கப்படாமல் கூட இருக்கலாம்.அல்லது மத்தேயு மேற்கோள் காட்டிய இறைவாக்கு அடங்கிய புத்தகம் அவரின் காலகட்டத்தில் இருந்திருந்து, பின்னர் காணாமல் போயிருக்கலாம் அல்லது அழிந்து கூட போயிருக்கலாம்.அதன் காரணமாகவே அந்த இறைவாக்கை நாம் தேடிப்பார்த்தும் நம்மால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று முடிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அக்குறிப்பிட்ட இறைவாக்கில் இருக்கும் ஒரு வார்த்தைதான் மத்தேயு மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.அக்குறிப்பிட்ட வார்த்தை "நசரேயன்" ஆகும்.நசரேயன் என்றால் என்னவென்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இதைப்பற்றி தெரிந்து கொள்ள எண்ணாகமம் புத்தகத்தை படிக்க வேண்டும்.எண் 6:1-21 வாக்கியங்கள் "நசரேயன்" என்பவன் யார் என்று நமக்கு கூறுகிறது.
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது;2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்; ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர் பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்சைப்பழச் சாற்றைக் குடிக்கக் கூடாது. திராட்சைப் பழங்களையோ, வற்றலையோ உண்ணவும் கூடாது.[எண் 6:1-21]
1. கர்த்தர் மோசேயை நோக்கி:
2. நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,
3. அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,
4. தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.[எண் 6:1-4]
இக்கட்டுரையைப் படிப்பவர்கள் எண் 6-ம் அதிகாரம் முழுவதையும் படித்துப்பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட வாக்கியங்கள் நமக்கு கூறுவது என்னவென்றால்,கடவுளுக்கு தன்னை "அர்ப்பணித்து" கொண்டவர்களைத்தான் "நசரேயன்" என்கிறோம்.அவ்வாறு அழைக்கப்படுவதற்கு அந்த "நசரேயன்" குறிப்பிட்ட வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.அது சற்று கடினமானதும் கூட.
இந்த "அர்பணிப்புக்கென்று" இருக்கும் சட்டதிட்டங்களை கடைப்பிடித்து வாழ்பவரே "நசரேயன்".இயேசுவும் தன்னை கடவுளுக்கென்று அர்ப்பணித்து கொண்டவர்தான் என்று காட்டுவதற்காக மத்தேயு முயன்றிருக்கிறார்.இதற்கு கீழ்வருமாறு உதாரணம் கூறலாம்.
இன்றைய காலகட்டங்களில் நம்முடைய அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்வோம். குறிப்பாக மறைந்த ஜெயலலிதாவை எடுத்துக் கொள்வோம்.அவர் அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியின் தலைவர்.அக்கட்சியின் உறுப்பினர்கள் ஜெயலலிதாவை ஈர்ப்பதற்காகவும்,அவரின் கவனத்தை பெறுவதற்காகவும் செய்யும் செயல்கள் நகைப்பை உண்டு செய்யும் அளவுக்கு இருக்கும்.அவரின் கவனத்தை ஈர்ப்பதற்கு என்ன வேண்டுமானாலும் அத்தொண்டர்கள் செய்வர்.இது நமக்கு நன்றாக தெரிந்த செய்தி."ஆர்வத்தின் அளவு"தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.அவ்வாறான ஆர்வத்தின் மிகுதியால்தான் மத்தேயுவும் செயல்பட்டுள்ளார் என்பது எனது கருத்து.அவர் செய்த தவறின் அளவு அவருக்கு அக்காலகட்டத்தில் தெரியவில்லை.எப்படியாவது இயேசுதான் "மேசியா" என்று நிரூபித்தாக வேண்டும் என்ற ஆர்வத்தின் மிகுதியால் வந்த விளைவுதான் இரண்டாவது தவறு.
நசரேயன் என்பவர் "கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர்".குறிப்பிட்ட சட்டதிட்டங்களை கடைப்பிடித்து வாழவேண்டியவர்.பிணங்களை தொடக்கூடாது.இயேசு இறந்து போன லாசருவை சென்று பார்த்திருக்கிறார்.இங்கு என்னதான் தவறு நிகழ்ந்துள்ளது?
"நாசரேத்து" ஏன்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினால் "நசரேயன்" என்று அழைக்கப்படுவார்,என்பதாக மத்தேயு நமக்கு எழுதியுள்ளார்.இதுதான் தவறு.உதாரணமாக,அமெரிக்கா(America) என்னும் நாட்டில் வாழ்பவர்களை "அமெரிக்கன்(American)" என்று கூறுவார்கள்.அதுபோன்று நம் நாட்டில் வாழ்பவர்களை "Indian" என்று எழுதுவார்கள்.அதுபோன்றுதான் "நாசரேத்(Nazareth)" என்னும் ஊரில் வாழ்பவர்களை "நசரேயன்" என்று தமிழிலும்,"Nazrene" என்று ஆங்கிலத்திலும் கூறுவார்கள்.ஆனால் இந்த "நசரேயன்(Nazrene)" ஆனவர் கடவுளுக்கு தன்னை அர்பணித்துக்கொண்ட "நசரேயன்" அல்ல.
நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்த காரணத்தினாலேயே ஒருவர் "கடவுளுக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட நசரேயன்" ஆகி முடியாது.எண்ணாகமம் 6-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று வாழ்பவர்தான் உண்மையான "நசரேயன்".இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை நான்கு நற்செய்தியாளர்களும் நமக்கு தந்துள்ளபடி நாம் படித்தோமானால்,அவர் அவ்வாறு வாழ்ந்தாரா என்பது சந்தேகமே!
ஆர்வமிகுதியின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது காரணமாகவோ மத்தேயு மற்றுமொரு தவறான தகவலை நமக்கு தந்திருக்கிறார்.எனவே மத் 2:23-ல் மேற்கோள் காட்டப்பட்ட இறைவாக்கு உண்மையில் இருக்கிறது என்று நாம் எடுத்துக்கொண்டாலும் இவ்வசனத்தின் அடுத்த தவறு மத்தேயுவின் நோக்கத்தை நமக்கு வெளிப்படுத்தி விடுகிறது.உண்மையில் நசரேயன் என்பவர் யார் என்பது மத்தேயுவுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது அவர் நமக்கு தந்துள்ள வாக்கியம் மூலமாகவே உணர்த்திவிடுகிறார்.
திருமறையில் உண்மையான நசரேயென்கள் சிம்சோன் மற்றும் சாமுவேல் ஆவர்.
முடிவு:
இதன் மூலம் மத்தேயு தனக்கென்று ஒரு நோக்கத்தை கொண்டிருந்தார் என்பது திண்ணமாகிறது.இயேசுதான் "மேசியா" என்று நிரூபிப்பதுவே அந்த நோக்கம் என்று கருத வேண்டியுள்ளது.இயேசுதான் "மேசியா" என்றால் அதை ஒருவர் நிரூபிக்க வேண்டிய அவசிமே இல்லை.அவரின் செயல்களே அவரை நிரூபித்து விடும்.
ஏசாயா 11-ம் அதிகாரம் முழுவதையும் ஒருமுறை கூர்ந்து வாசித்துப்பார்த்தால் ஈசாயின் மகன்,அதாவது தாவீதின் வம்சத்தில் வரும் ஒருவர்,செய்யும் செயல்கள் விளக்கப்பட்டிருக்கும். அவைகள் இப்பொழுது நிறைவேறி இருக்கிறதா? நிறைவேறி இருந்தால் இயேசுதான் "மேசியா".இல்லை என்றால் அவர் இனிதான் வருவார்.அவர் செய்யப்போகும் செயல்களில் ஒன்றை மட்டும் கீழே தந்துள்ளேன்.மீதியை நீங்கள் படித்துப்பாருங்கள். இதைப்படிப்பவர்கள் இந்த வசனம் கூறும் கருத்தை மனதில் ஆசை போட்டு பாருங்கள்.அது எவ்வளவு அழகான காலம் என்பதை உணர முயற்சி செய்யுங்கள்.அப்படிப்பட்ட அழகான காலத்தை கடவுளின் பெயரால் மெசியாவானவர் நமக்கு தருவார் என ஏசாயா கூறுகிறார்.
6 அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும்.[எசா 11:6]
6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.[ஏசா 11:6]
மேற்கூறிய வாக்கியம் கூறுவது என்ன?ஒரு குழந்தை இப்படிப்பட்ட காரியம் செய்கிறது என்றால் அப்படிப்பட்ட சூழ்நிலை அங்கு நிலவும்? இவ்வாறான அமைதியான,ரம்மியமான,ஆரோக்கியமான சூழ்நிலையா இங்கு நிலவுகிறது?இயேசுவால் இக்காரியங்கள் நடைபெறவில்லை.எனவே இயேசு "மேசியா" அல்ல.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1V20d9RrOB79KjMcYmRDJYge8Jmc-Tzcb/view?usp=sharing
https://drive.google.com/file/d/1V20d9RrOB79KjMcYmRDJYge8Jmc-Tzcb/view?usp=sharing
No comments:
Post a Comment