Saturday, November 9, 2019

படைப்பும் அறிவியலும்-ஆற்றல்

படைப்பும் அறிவியலும்-ஆற்றல்  


இவ்வுலகம்,அதாவது இப்பிரபஞ்சம் முழுவதும்,எப்படி படைக்கப்பட்டது என்பதை கடந்த நான்கு பாகங்களில் விளக்கப்பட்டு விட்டது.அறிவியலில் கற்றுத்தேர்ந்த ஒருவர் இன்று திருமறையை படித்தால்,அவரால் "படைப்பின் கதையை" ஒத்துக்கொள்ள முடியாது.நடுநிலைமையோடு படிக்கும் எவராலும் ஒத்துக்கொள்ள முடியாது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மைதான்.இதற்கு காரணங்கள் உண்டு.அவையாவன,
  • பூமியைப் பற்றி இன்று அறிவியல் கூறும் கருத்துக்கள் பெரும்பாலும் உறுதிசெய்யப்பட்டுவிட்டன.உதாரணமாக,பூமி உருண்டை வடிவம் கொண்டது என்ற கருத்து.
  • ஆனால் அனைத்தும் உறுதிசெய்யயப்படவில்லை என்பதையும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  • இரவு-பகல் வருவது எப்படி போன்ற தகவல்கள் அனைவராலும் அறிந்துகொள்ளப்பட்டுவிட்டது.
  • ஒருவருடைய "வார்த்தை" எப்படி அனைத்தையும் உருவாக்கும்? என்ற கேள்வி.
  • திருமறையின் முதலாம் நூல் கூறுவது அறிவியல் பூர்வமாக நம்பத்தகுந்ததாக இல்லை.
  • இன்றைய அறிவியல் கருத்துப்படி "வானம்" என்ற ஒன்று இல்லை.அது "Space" அல்லது "வெளி" என்று அழைக்கப்படுகிறது.
  • வானங்களில் "தண்ணீர்" என்ற ஒன்று இல்லை.பூமியில் இருந்துதான் தண்ணீர் ஆவியாகி செல்கிறது.

மேற்கூறிய காரணங்கள் மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் ஒருவரால் "கடவுளின் படைப்பை" நம்ப முடியாமல் போகலாம்.எனவே அறிவியலில் ஈடுபாடுள்ள ஒருவரால் திருமறை கூறும் "படைப்பின் கதையை" நம்ப இயலாது.இக்கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிதான் உள்ளது.


அப்படியென்றால் இவ்வுலகம் எப்படி தோன்றியிருக்கக்கூடும்? என்ற கேள்வியை குறித்து பலவிதமான தர்க்கங்கள் அறிவியலாளர்களிடையே இன்று நிலவி வருகிறது.உறுதியான முடிவு ஒன்று இன்னும் எட்டப்படவில்லை.ஆனால் ஓரளவுக்கு,பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து "பெரு வெடிப்புக்கொள்கை(Big Bang Theory)" ஆகும்.

இப்பிரபஞ்சமானது பெருவெடிப்பின் மூலமாக உருவானது என்று கூறும் அறிவியலாளர்கள்,உயிரினங்கலின் தோற்றத்திற்கு சரியான பதிலை இன்னும் கூறவில்லை.பலவிதமான கருத்துக்கள் இதற்காக கூறப்பட்டாலும் தெளிவான பதில் இன்னும் இல்லை."டார்வின் பரிணாமக் கொள்கைப்படி" உயிரினங்கள் தோன்றின என்று கூறும் இவர்கள் அக்கருத்தை நூறு சதவீதம் உறுதிப்படுத்த இயலவில்லை.கீழ்க்கண்ட கேள்விகள் அதற்கு சிறு உதாரணம்.
  • முதலில் "ஒரு செல் உயிரினம்" என்று ஒன்று தோன்றியிருக்க வேண்டும் என்றால் அச்செல்லுக்கு "உயிர்" என்ற ஒன்று எப்படி வந்தது?
  • குரங்கில் இருந்துதான் படிப்படியாக மனிதன் உருவானான் என்றால் இன்னும் குரங்குகள் இருப்பது எப்படி?
  • "வலியதே வாழும்" என்ற டார்வினின் கூற்று உண்மையே! ஆனால் அது "நடந்து கொண்டிருக்கும் ஒரு செயலைப் பற்றிய அறிவு அவ்வளவுதான்.அப்படித்தான் அச்செயல் நடைபெற வேண்டும் என்பதை யார் நிர்ணயித்தது?

எனவே படைப்பைப்பற்றிய குழப்பங்கள் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.இந்நிலையில், அறிவியலையும் திருமறையையும் அறிந்த ஒருவர் என்ன முடிவெடுப்பார்?அறிவியலையும் ஒருதலைப்பட்சமாக ஆதரித்து விடக்கூடாது அவ்வாறே திருமறையையும் ஆதரித்து விடக்கூடாது.



எது ஒன்றும் தானாகவே நடக்காது என்பதை அறிவியல் கூறுகிறது.எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு ஒரு வினை(தூண்டுதல்) தேவைப்படுகிறது.எதுவாக இருந்தாலும்!அறிவியல் இதைத்தான் கூறுகிறது.



எடுத்துக்காட்டுக்காக,நாம் ஓட வேண்டும்  என்று நினைத்துக்கொள்ளுங்கள்.இச்செயல் எப்படி நடக்கிறது? முதலில் நம் ஓட நினைக்க வேண்டும்.பின்னர் தேவைப்படும் ஆற்றலை நாம் நம் உடம்பில் இருந்து பெற்றுக்கொண்டு ஓடுகிறோம்.



  • நம் உடம்பிற்கு ஆற்றலைக் கொடுத்தது யார்? உணவு.
  • அப்படியென்றால் உணவில் ஆற்றல்தான் உள்ளதா? ஆம்!
  • ஆற்றலைத்தான் நாம் உட்கொள்கிறோமா? ஆம்!
  • இவ்வுணவிற்க்கு ஆற்றலை யார் கொடுத்தது? மண்ணிலிருந்து எடுத்துக்கொள்கிறது.
  • மண்ணிலும் ஆற்றல் உள்ளதா? ஆம் உள்ளது.
  • மண்ணிற்கு யார் கொடுத்தது? அதற்குத்தான் இக்கட்டுரை.
ஆற்றலே அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது.அறிவு வேறு ஆற்றல் வேறு.அறிவைக்கொண்டு சிந்திப்பதற்கும் கூட ஆற்றல் தேவைதான்.எனவே ஆற்றலே அடிப்படை.பெருவெடிப்புக் கொள்கைக்கும் ஆற்றலே அடிப்படை.இந்த ஆற்றல் என்றால் என்ன? இதன் பங்கு என்ன என்று நாம் பார்த்துவிட்டு பெருவெடிப்புக் கொள்கைக்குள் செல்லலாம்.


அழிவின்மை விதி:

ஆற்றல் பற்றிய அறிவியலின் கூற்று, "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மட்டுமே மாற்ற இயலும்", என்பதாகும். இதன் பொருள் ஆற்றல் என்பது காலங்காலமாக இருக்கின்ற ஒன்று.நாம் அதனை உருவாக்க வில்லை.அது எப்பொழுதுமே இருக்கிறது.நம்மால் அதனை பயன்படுத்திக்கொள்ள மட்டுமே முடியும்.

நாம் நிற்பதற்கு,நடப்பதற்கு,உறங்குவதற்கு என அனைத்திற்கும் ஆற்றல் தேவை.இந்த ஆற்றலை மனிதர்கள் உருவாக்கிக் கொள்ள வில்லை என்பதுதான் நாம் நினைவில் கொள்ள வேண்டியது.அப்படியென்றால் ஆற்றலை யார் உருவாக்கியது?பெருவெடிப்பு நடப்பதற்கு முன்னும் ஆற்றல் இருந்திருக்க வேண்டும்.யார் அதை கொண்டிருந்தார்?

ஆற்றல் பற்றிய மற்றொரு தகவலையும் நாம் பார்த்து விட வேண்டும்.அனைத்து செயல் பாடுகளுக்கும் ஆற்றல் அவசியம் என நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்க வேண்டும்.மேலும் சில தகவல்களை நாம் பார்க்கலாம்.

  • ஒரு ஆணுக்கு ஒரு நாளுக்கு 2000-த்திலிருந்து 3000 கலோரிகள் வரை ஆற்றல் தேவைப்படுகிறது.
  • ஒரு பெண்ணுக்கு 1600-லிருந்து 2400-வரை கலோரிகள் தேவைப்படுகிறது.
  • கலோரி என்பது ஆற்றலை அளவிடும் ஒரு அளவீடு.

சில பேர் மாரத்தான் ஓட்டம் ஓடுகிறார்கள் எனக்கொள்வோம்.10 கி.மீ. தூரம் ஓட வேண்டும்.இந்த 10 கி.மீ. தூரத்தை கடக்க ஒரே அளவு வேலையைத்தான் இருவரும் செய்ய வேண்டும்.ஓட வேண்டும் அவ்வளவுதான்.ஆனால் முதலாமானவர் 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார் எனக்கொள்வோம்.இரண்டாவதாக வந்தவர் 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார் எனக்கொள்வோம்.இதிலிருந்து என்ன தெரிகிறது என பார்க்கலாம்.

  • இரண்டு பெரும் ஒரே அளவாகத்தான் வேலை செய்திருக்கிறார்கள்.
  • ஆனால் முதலாவதாக வந்தவர் தன்னிடமிருந்த ஆற்றலை செலவழித்த விதம்தான் அவரை முதலில் கொண்டு வந்தது.
  • அதாவது முதலாவதாக வந்தவர் ஒவ்வொரு நிமிடமும் 100 கலோரியை செலவழிக்கிறார்.
  • இரண்டாவதாக வந்தவர் ஒவ்வொரு நிமிடமும் 90 கலோரிகளை செலவளித்திருக்கிறார்.
  • இரண்டு பேரிடமும் ஒரே அளவு ஆற்றல் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலுமிருக்கலாம். .ஆனால் அதை செலவழித்த விதம்தான் முதலாமானவர்,இரண்டாமானவர் என பிரிக்கிறது.
  • முதலாவதாக வந்தவர் ஒவ்வொரு நிமிடமும் அதிகமான அளவு ஆற்றலை செலவழித்தார் எனில் அவர் அவர் ஆற்றலை அதிகமாக தன்னிடத்தில் கொண்டிருந்திருக்க வேண்டும்.
  • அதற்கு அவர் பல வழிமுறைகளை பின்பற்றி இருக்கலாம்.அதாவது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டிருக்கலாம்.
  • எனவே முதலாமானவரிடம் அதிக ஆற்றல் இருந்தது என நாம் கூறலாம்.
  • அவர் தனக்குரிய ஆற்றலை தான் எடுக்கும் உணவில் இருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆற்றல் எங்கும் நிறைந்திருக்கிறது.மண்ணில்,சூரிய ஒளியில்,என எங்கும் கிடைக்கிறது.எங்கும் நிறைந்திருக்கும் இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது?நம் உதாரணங்களை சற்று விரிவு படுத்தலாம்.

ஆகாய வெளி:

இரவில் வானத்தை பாருங்கள்.அதன் அழகை கண்டு வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.தாவீது கூட அப்படி வியந்திருக்கிறான்.
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.[சங் 19:1]
மேற்கண்ட வசனத்தை RC தமிழ் திருமறை மிக அழகாக தமிழ்ப்படுத்தியிருக்கிறது.
வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.[திருப்பாடல்கள் 19:1]
இந்த ஆகாயமானது நம் கற்பனைக்கு எட்டாத இயக்கங்களைக் தன்னிடத்தே கொண்டுள்ளது.கதிரவன் இல்லையென்றால் எதுவும் இல்லை.கதிரவனிடமிருந்து நாம் பெறுகின்ற ஆற்றலே நம்மை இயங்க செய்து கொண்டிருக்கிறது.பூமி மற்றும் பல கோள்கள் அனைத்தும் கதிரவனை சுற்றி வருகின்றன.கதிரவன் மற்றும் இக்கோள்கள் அடங்கிய தொகுப்பை நாம் "கதிரவ குடும்பம்" என்று அழைக்கிறோம்.இவை அனைத்தும் இயங்கி கொண்டிருக்கின்றன என்பதை முதலில் தெளிவாக நம் எண்ணங்களில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த இயக்கங்களுக்கு தேவையான ஆற்றல் எங்கிருந்து வந்தது?ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு நாளுக்கு 3000 கலோரிகள் தேவைப்படுகிறது என்றால் மாபெரும் சூரியன் எங்கிருந்து இந்த ஆற்றலை பெறுகிறது.கதிரவணைப் பற்றிய சில தகவல்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • பூமியை போன்று 109 மடங்கு பெரியது.
  • இதன் நிறை பூமியை போன்று 330,000 மடங்கு ஆகும்.
  • இதன் மேற்பரப்பு வெப்பம் 5505 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • அணுக்கரு இனைவு என்ற முறைப்படி தன்னுடைய ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
  • இவ்வாறு அணுக்கரு இணைவு மூலம்தான் கதிரவன் இயங்க வேண்டும் என்று நிர்ணயித்தது யார்?
பால்வெளித்திரள்:

அடுத்த அதிசயம் பால்வெளித் திரள் ஆகும். கதிரவன் தனக்கென்று ஒரு குடும்பத்தை கொண்டிருப்பதைப் போன்று பல கோடி கோடி கதிரவக்  குடும்பங்கள் உள்ளன.பல ஆயிரக்கணக்கான இக்குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பிற்கு பெயர் "பால்வெளி திரள்(Galaxy)" ஆகும்.பக்கத்தில் நீங்கள் பார்க்கும் படத்தில் காணப்படும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு "கதிரவ குடும்பம்" ஆகும்.அப்படியென்றால் "பால்வெளித் திரள்" எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

பால்வெளித்திரளே இவ்வளவு பெரியது என்றால் இத்திரள் போன்று பல கோடிக்கணக்கான திரள்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன.இத்திரள்களை உள்ளடக்கியதுதான் பிரபஞ்சம்.இப்பொழுது பிரபஞ்சமானது எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இவைகள் அனைத்தும் இயக்கங்களில் இருக்கின்றன என்பதுதான் ஆச்சரியமான தகவல்.இயக்கத்திற்கு தேவையான ஆற்றல் எப்படி பெறப்படுகிறது?கோள்கள் கதிரவனை சுற்றுகின்றன.கதிரவன் தன்னுடைய குடும்பத்துடனும் மற்ற சூரிய குடும்பங்களுடனும் இணைந்து பால்வெளித்திரளை சுற்றுகின்றன.

பெருவெடிப்புக் கொள்கை:

இப்பொழுது நாம் பெருவெடிப்பு கொள்கைக்கு வருவோம்.இந்த பிரபஞ்சமானது எப்படி படைக்கப்பட்டது என்பதை அறிவியல் இவ்வாறு விளக்குகிறது.இக்கொள்கை கூறுவது என்ன? "இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒரு வெடிப்பின் மூலமாகத்தான் உருவாகியிருக்க வேண்டும்".இதைத்தான் இக்கொள்கை கூறுகிறது.

ஒரு கடுகு அளவுள்ள பந்திற்குள் எவ்வளவு பொருட்களை உங்களால் அடைக்க முடியும்?உங்கள் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் அடைக்க வேண்டும் என்று கூறினால் என்ன செய்வீர்கள்?அனைத்தையும் அடைக்க முயல்கிறீர்கள் என்று கொள்வோம்.என்ன நடக்கும்?
  • மிகப்பெரும் அளவுக்கு "வேலை" செய்ய வேண்டியிருக்கும்.
  • இந்த "வேலை" க்கு பெரும் அளவில் உங்களுக்கு "ஆற்றல்" தேவைப்படலாம்.
  • ஒரு வேளை தேவைப்படும் அளவு ஆற்றலை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று நாம் கற்பனை செய்து கொள்வோம். அவ்வாறு பெற்று அனைத்தையும் உள்ளே அடைகிறீர்கள் என்றும் கொள்வோம்.
  • நீங்கள் செலவழிக்கும் அனைத்து ஆற்றலும் அப்பந்திற்குள் சேமிக்கப்படும்.
  • அப்பந்தின் வெளிப்புற சுவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தையே தாங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • நீங்கள் முயன்று கொண்டிருக்கும் இந்நிலையில் சிறிது நேரம் கழித்து என்ன நடக்கும்?
  • பந்தின் வெளிப்புற சுவர்கள் தன உறுதியை இழந்து கிழிந்து விடும்.அதாவது வெடித்து விடும்.
  • இதைத்தான் "பெருவெடிப்புக் கொள்கை" கூறுகிறது.

இப்பிரபஞ்சம் தன்னுடைய தொடக்க நிலையில் ஒரு கடுகளவு பந்தாகத்தான் இருந்தது.இன்று இப்பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் இக்கடுகளவு புள்ளிக்குள் அடைக்கப்பட்டிருந்தன.அப்படியென்றால் அதற்குள் எப்படிப்பட்ட "அழுத்தம்" இருந்திருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட இந்த சிறு "கடுகு புள்ளி" திடீரென வெடித்து சிதறியது.இந்த சிதறல்தான் இன்றைய பிரபஞ்சம்.வெடிப்பு நடந்த அந்த "மணித்துளிதான்" இப்பிரபஞ்சத்தின் ஆரம்பம்.அதற்கு "முன்" என்ற கேள்வியும் இல்லை.ஏனென்றால் "காலம்(Time)" என்ற ஒன்றும் அப்பொழுதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.அந்த வெடிப்பில் இருந்து இப்பொழுது நாம் இருக்கும் இந்த காலம் வரை சுமார் 15 பில்லியன் வருடங்கள் ஆகி இருக்கலாம் என்பது கணிப்பு,அதாவது 150,00,00,00,000 வருடங்கள்.

நீங்கள் பக்கத்தில் பார்த்த படத்தில் "பெரு வெடிப்பு இங்கே" என்று அம்பு குறியீட்டின் மூலம் காட்டப்பட்டிருக்கும் இடத்தில்தான் "காலம்" ஆரம்பமாகியது.அப்படியே "மேல் நோக்கி" சென்றால் பிரபஞ்சத்திற்குள் நாம் பயணிக்கிறோம்.விரிந்திருக்கும் பகுதிதான் இன்றைய நிலைமை.பிரபஞ்சமானது தொடர்ந்து விரிந்து கொண்டுதான் இருக்கிறது.இது மேலும் ஆச்சரியமான தகவலாக  உள்ளது.தொடர்ந்து விரிந்து கொண்டுதான் உள்ளது என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டு விட்டது.ஆனால் முக்கியமான கேள்வி ஒன்று எஞ்சியிருக்கிறது.
  • இந்த "விரிவாக்கத்திற்கு" ஆற்றல் அவசியம்.ஏனென்றால் இது ஒரு இயக்கம்.
  • இந்த விரிவாக்கத்திற்கான ஆற்றல் எங்கிருந்து வருகிறது?
  • வெடிப்பின் மூலம் வெளிப்பட்ட ஆற்றல்தான் இன்னும் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்றால் "அவ்வளவு" ஆற்றலை அந்த கடுகளவு புள்ளிக்குள் அடக்கியது எப்படி ? யார்?
  • இதுதான் இன்றைய "இன்னும் விடை கிடைக்காத பெரும் கேள்வி".பிரபஞ்ச விரிவுக்கு காரணம் எந்த ஆற்றல்?
  • இன்னும் ஏன் தன்னுடைய இயக்கத்தை அது நிறுத்தாமல் விரிவடைந்து கொண்டே உள்ளது?
வெடிப்பின் விளக்கம்:

ஒரு குண்டு ஒன்று வெடிக்கிறது என்று கொள்ளுங்கள்.இந்த வெடிப்பின் மூலம் நாம் என்னவெல்லாம் தெரிந்து கொள்கிறோம்?அதாவது 
  • வெடிபொருளானது வேதியல் தன்மை கொண்டது.
  • ஆற்றல் என்பது வேதியியல் வடிவத்தில் உள்ளது.
  • வெடித்தவுடன் இந்த வேதியியல் ஆற்றல் வெளியேற்றப்படுகிறது.
  • வெளியேறும் ஆற்றல் தன்னுடைய பாதையில் உள்ள அனைத்தையும் சிதற செய்கிறது[இயங்கச் செய்கிறது].
  • வெடிப்பதற்கு முன்பு அதனுடைய அளவு மிக சிறியதாக இருந்திருக்கலாம்.
  • அச்சிறிய அளவுக்குள் பெரும் ஆற்றல் மறைந்து இருக்கிறது.
  • ஆற்றலை தன்னுள்ளே கொண்ட வேதிப்பொருள் ஒன்று இதற்காக தேவைப்படுகிறது.
  • இந்த வெடிபொருளை செய்வதற்கு ஒருவர் தேவை படுகிறார்.எப்படி வெடிக்க வேண்டும்,வெடித்த பின் என்ன நிகழ வேண்டும் என்பது போன்ற செயல்களுக்கு இவர்தான் தீர்வு தருகிறார்.
  • அதற்க்கு தகுந்தாற்போன்று அவர் பொருட்களை சேர்க்கிறார்.இது போன்றுதான் "பெருவெடிப்பும்".
அனைத்தும் ஆற்றலே:

பெருவெடிப்புக் கொள்கை "உண்மைதான்" என்று தற்போது நாம் எடுத்துக் கொள்வோம்.வெடிப்பு நடக்கும் அந்த கணத்துக்கு "முன்பு" வரை கடுகளவு புள்ளியைத்தவிர வேறு எதுவும் இல்லை.அப்புள்ளிக்குள் இப்பொழுதுள்ள பிரபஞ்சத்திற்கு தேவையான அனைத்தும்[அதாவது இப்பிரபஞ்சத்திற்கு தேவையான ஆற்றல் அனைத்தும்] அடைக்கப்பட்டிருந்தன.அவ்வாறு செய்வது கற்பனைக்கெட்டாத ஒரு செயல் என்று நமக்கு தெரியும்.ஆனால் நடந்திருக்கிறது.யார் அதனை செய்தார் என்று இப்பொழுது நாம் கேட்க வேண்டாம்.பின்னர் இக்கேள்விக்கான பதிலை தேடலாம்.

ஆற்றல் என்பது ஏற்கனவே இருந்திருந்தால் மட்டுமே அதனை அப்புள்ளிக்குள் அடைக்கமுடியும்.அவ்வாறு அடைக்கப்பட்டிருக்கும் ஆற்றலின் அளவு நம் கற்பனைக்கெட்டாதவாறு மிகப்பெரும் அளவாக உள்ளது.காரணம் ஒரு புள்ளி அளவு இடத்திற்குள் இப்பிரபஞ்சத்தை அடைக்க வேண்டும் இது மாபெரும் வேலை.வேலைக்கு ஆற்றல் தேவை.எனவே வெடிப்பு நிகழ்வதற்கு முன்னரே ஆற்றல் இருந்திருக்க வேண்டும்.இந்த ஆற்றலை யார் வைத்திருந்தது என்பதுதான் கேள்வி.

ஒரு சிறு புள்ளிக்குள் இவ்வளவு ஆற்றல் உண்மையில் இருக்குமா? அதற்கு வாய்ப்புண்டா?இதற்கு பதில் ஆம் என்பதே.அனைத்து பொருட்களும் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.ஒரு அணுவுக்குள் மூன்று முக்கியமான துகள்கள் உள்ளன.அவையாவன எலெக்ட்ரான்,புரோட்டான்,நியூட்ரான் ஆகும்.இம்மூன்று துகள்களும் ஒன்றுக்கொன்று இணைப்பிலுள்ளன.



இது எப்படி என்றால், பக்கத்திலுள்ள படத்தை பாருங்கள்.அக்குழந்தைகளை இனைத்திருப்பது எது? அக்கயிறுதான் என்பதில் சந்தேகமே இல்லை.அது போன்றுதான் அணுக்களும்.அனுவின் உள்ளே இருக்கும் அத்துகள்களை இணைப்பதற்கு ஒரு கயிறு வேண்டும்.அதுதான் ஆற்றல்.இத்துகள்களை இணைத்திருக்கும் இந்த ஆற்றல் மிகப்பெரும் அளவாகும்.ஒரு குண்டூசியின் நுனியில் கோடி கோடி அணுக்கள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அப்படி என்றால் மொத்த ஆற்றல் எவ்வளவு இருக்கும்? ஒரு அணுவுக்குள் இத்தகைய ஆற்றல் இருக்குமென்று இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியலாளர்கள் நம்பவில்லை.ஆனால் இருக்குமென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்திக்காட்டியும் விட்டார்கள்.



அணுகுண்டு என்றால் என்ன என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.அணுக்களுக்குள் மறைந்து கிடைக்கும் இந்த பெரும் ஆற்றலை வெளியே கொண்டு வருவதே அணுகுண்டு.இது இன்று பல நாடுகளில் உள்ளது.படத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு அணுவுக்குள் இப்படிப்பட்ட ஆற்றல் மறைந்து கிடைக்குமானால் அணுக்களால் ஆக்கப்பட்ட பொருட்களில் எவ்வளவு ஆற்றல் மறைந்து கிடைக்கும்? இதைத்தான் ஐன்ஸ்டின் தன்னுடைய E=mc2 என்ற சமன்பாட்டின் மூலம் விளக்கினார்.அதாவது பொருட்களுக்குள் அளவற்ற ஆற்றல் மறைந்து கிடக்கிறது என்பதே இதன் பொருள்.அப்படி என்றால் இப்பிரபஞ்சத்திற்குள் மரணித்து கிடைக்கும் ஆற்றல்?பெருவெடிப்பிற்கு முன் அப்புள்ளியில்தானே இந்த ஆற்றல் அனைத்தும் இருந்திருக்க வேண்டும்? அதை அவ்விடத்தில் கொண்டு வைத்தது யார்?மனிதனால் இது முடியுமா?அணுகுண்டிலிருந்து கிடைக்கும் ஆற்றலையே நம்மால் தாங்க  இயலவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெருவெடிப்பு எப்படி இருந்தது?:


வெடிப்பு நிகழ்வதற்கு முன் சிறிய கடுகு அளவு புள்ளிக்குள் அனைத்தும் திணிக்கப்பட்டிருந்தன.வெடிப்பு நிகழ்ந்தவுடன் கீழ்கண்ட நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.இவை அனைத்தும் நூறு சதவீதம் உறுதிப்படுத்தப் படவில்லை என்றாலும் ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் முதலில் அடிப்படைத் துகள்கள்  தோன்றியிருக்கக்கூடும்.பின்னர் வெளிச்சம் தோன்றியிருக்கக்கூடும்.வெடிப்பின் மூலம் பரவிய வெப்பம் படிப்படியாக குறைந்து பல்வேறு "பால்வெளித்திரள்கள்" உருவாக்கி இருக்கும்.பின்னர் "பல கதிரவ குடும்பங்கள்" உருவாக்கி இருக்கலாம்.

ஒன்றுமில்லாத நிலையில் இருந்து இவை அனைத்தும் உருவாகி இருக்கின்றன.முதலில் "இருள்" மட்டுமே பரவி இருந்தது.இருளில் இருந்துதான் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.திருமறைக்கு இது ஒத்துப்போகிறது.

திருமறை என்ன கூறுகிறது?:

எங்கு சுற்றினாலும் கடைசியில் ஆற்றலில் வந்துதான் நிற்க வேண்டி உள்ளது.திருமறைக்கும் பெருவெடிப்பிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று ஆராய்ந்தோமானால் சில தெளிவுகள் நமக்கு கிடைக்கின்றன.
நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?[ஏசா 43:13]
நானே இறைவன்; எந்நாளும் இருப்பவரும் நானே; என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை; நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?[எசா 43:13]
என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது; என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது. நான் அழைக்கும்;போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.[எசா 48:13]
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.[ஏசா 48:13]
மேற்கூறிய வார்த்தைகள்  சாட்சியிடுகின்றன.இவ்வுலகை படைத்தது யார் என்று அவ்வார்த்தைகள் நமக்கு கூறுகின்றன.இவ்வார்த்தைகளை கூறியவர் எவரோ அவரே கடவுள்.

முடிவுரை:

ஆற்றல் என்பது அடிப்படை.இதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.காலங்காலமாக இருந்து கொண்டிருக்கும் ஆற்றலைத்தான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.இந்த ஆற்றலை நம்மால் உருவாக்க முடியாது என்றால் இதை கொண்டிருப்பவர் எவ்வளவு பெரியவர்.ஆற்றல் முன் எவராலும் நிற்க இயலாது.மின்சாரம் ஒரு ஆற்றல்.அது நம் உடம்பில் பாய்ந்தால் என்ன நடக்கும் என்பது தெரிந்ததே!

தண்ணீரை தேக்கி வைக்கும் அணைக்கட்டு ஒன்று பார்வைக்கு மிக அழகாக தெரிகிறது.ஆனால் அத்தண்ணீர் திறந்து விடப்படும் பொழுது வெளியேறும் குழாய்க்கு முன்னால் எவராலும் நிற்க இயலுமா?அதுதான் ஆற்றல்.ஆற்றல் இவ்வளவு வலிமை மிக்க ஒன்றாக இருந்தால் அதைக் கொண்டிருப்பவர் எவ்வளவு வலிமை கொண்டவராக இருப்பார்?தானாகவே அது உள்ளது என்பது முட்டாள்தனம் என்றே கருத வேண்டியுள்ளது.

அனைத்தும் இயங்குகின்றன.அதற்கு ஆற்றலே ஆதாரமாக உள்ளது.இப்பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றலைப்பற்றி ஓரளவுக்கு அறிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறன்.

  • இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்,அது  உருவாவதற்கு தேவையான ஆற்றலைக் கொண்டிருந்தவர் யார்? அதுவாகவே இருக்கிறது என்றால், பிரபஞ்சம் இப்படித்தான் இயங்க வேண்டும் என்று ஒரு முறை உள்ளதே அது எப்படி?
  • கோள்கள் அனைத்தும் கதிரவனை முறையாக சுற்றி வருகின்றனவே அது எப்படி?இப்படித்தான் இயங்க வேண்டும் என்று எப்படி நிர்ணயிக்கப்பட்டது? யார் செய்தது?
  • ஆற்றலின் வலிமை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இருக்கிறதென்றால்,அவ்வாற்றலை கொண்டிருப்பவரை நாம் எப்படி கற்பனை செய்ய இயலும்?
  • அவர் இப்படித்தான் இருப்பார் என்று அவருக்கென்று ஒரு உருவம் எப்படி கொடுக்க இயலும்?அவர் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்.
  • மனிதன் எப்படி அவருக்கு உருவம் கொடுக்க இயலும்.ஒரு சாதாரண வெடிகுண்டிலிருந்து வெளிவரும் ஆற்றலை தாங்க இயலாத மனிதனுக்கு இப்பிரபஞ்சத்திற்குரிய ஆற்றலை கொண்டிருப்பவரை எப்படி தாங்க முடியும்?
  • அப்படிப்பட்ட அளவில்லா ஆற்றல் உடையவராய் இருக்கும் அவரை பார்க்க முடியுமா? பார்த்தால்தானே உருவம் கொடுக்க முடியும்?
எனவே இறைவன் இப்படிப்பட்டவரே.அனைத்தும் அவர் சொல்லுக்கு கட்டுப்படுகின்றன காரணம் அவரே அனைத்தையும் உருவாக்கினார்.இவரை நாம் நெருங்க இயலாது.இவரிடம் பணிவதை தவிர வேறு வழி கிடையாது.



பக்கத்தில் இருக்கும் படம் என்ன? ஒரு சாதாரண அணுகுண்டு வெடிப்பு. இதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் இவ்வுலகத்தை அழிக்கும் திறன் கொண்டதாயிருக்கிறது. அதனால் அணுகுண்டு என்றால் பயம்.அதனை வைத்திருக்கும் நாடுகள் மீது பயம் இயற்கையாகவே ஏற்பட்டுவிடுகிறது.

ஒரு 5 கிலோ புளூட்டோனியம் மாபெரும் நகரத்தை அழிக்கும் ஆற்றலை  வெளிப்படுத்துகிறது.இந்த 5 கிலோ புளுட்டோனியத்திற்குள் இவ்வளவு ஆற்றல் இருந்ததால்தானே அதனை வெளியே எடுக்க முடிந்தது! அப்படியென்றால் இப்பிரபஞ்சத்திற்குள் நம் கற்பனைக்கெட்டாத அளவிற்கு ஆற்றலை வைத்தவர் எப்படிப்பட்டவர்?

அவரை யாரும் அடிக்க முடியுமா? அவர் மீது எச்சில் உமிழ முடியுமா? அவர் இறக்க முடியுமா? அவர் இறந்துதான் இவ்வுலகத்தை மீட்க வேண்டுமா?இவ்வுலகம் அழிந்து போனால் வேறு ஒரு உலகக்த்தை அவரால் படைக்க முடியாதா?அவரைப்பற்றிய கற்பனை இவ்வளவுதானா?அணுகுண்டுக்கு மிரளும் நாம் அதைவிட பன்மடங்கு ஆற்றல் கொண்டிருப்பவரிடத்தில் எவ்வளவு பயம் வேண்டும்?

அவருக்கு மனைவிகள்,குழந்தைகள் இருக்க முடியுமா? இருக்கத்தான் வேண்டுமா?அவருக்கு துணை செய்ய "துணைக் கடவுளர்கள்" வேண்டுமா? படைப்புக்கு ஒருவர்,காப்பதற்கு மற்றொருவர்,அழிப்பதற்கு இன்னொருவர் என்று தனித்தனி துறைகள் அவருக்கு வேண்டுமா? அவர் பிறக்க வேண்டுமா? அவருக்கு தாய்,தந்தை வேண்டுமா?

மேற்கூறிய இலக்கணங்கள் யாருக்கு பொருந்தாதோ  அவரே இறைவன்.அனைத்தையும் படைத்த இறைவன் இவர் ஒருவரே!இவருக்கு இணை என்று யாரும் இல்லை. இவர் தனி ஒருவரே!இவரையே அனைவரும் பணிய வேண்டும்.இவருக்கு உதவி தேவை இல்லை,பெற்றோர் தேவை இல்லை.பதிலாக,அவர்தான் நம் அனைவருக்கும் தந்தை.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

No comments:

Post a Comment

My Posts