கிறித்தவ உலகில் பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளின் விளக்கங்கள்
புதிதாக கிறித்தவ மாதத்தில் இனைபவர்கள் எதிர்கொள்ளும் சில குழப்பங்களில் ஒன்று அங்கு பயன் படுத்தப்படும் வார்த்தைகளின் பொருள் ஆகும்."பிஷப்" என்றால் என்ன பொருள்? அது எந்த மொழியை சேர்ந்தது? என்பது போன்ற விவரங்கள் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவ்வாறான சில வார்த்தைகள் சிலவற்றை நாம் பார்க்க இருக்கிறோம்.
1.பிஷப்(Bishop):
இவ்வார்த்தையின் பொருள்:"தனிப்பெரும் தலைவர்","தனிப்பெரும் மேற்பார்வையாளர்" போன்றவை ஆகும். இவ்வார்த்தை கிரேக்க மொழியினை சேர்ந்தது ஆகும்.அம்மொழியில் இவ்வார்த்தை "episkopos" என்று அழைக்கப்படுகிறது.கிறித்தவத்தின் முதல் பிஷப் இக்னசிஸ்(Ignatius) ஆவார்.அக்காலத்தில் சிரியாவில், அந்தியோக்(Antioch) என்ற நகரத்திலிருந்த சபையின் தலைவர் இவர் ஆவார்.
2.கத்தோலிக்(Catholic):
இவ்வார்த்தையின் பொருள்: "அனைத்து", அனைத்தும் உள்ளடங்கிய", பொதுவான, போன்றவை ஆகும்.இவ்வார்த்தை கிரேக்க மொழியினை சேர்ந்தது ஆகும்.அம்மொழியில் இவ்வார்த்தை "katholikos/ē" ஆகும்.பிரிந்து கிடந்த ஆரம்ப கால கிறித்தவ பிரிவினரை இணைப்பதற்கு இவ்வார்த்தை பயன் பட்டது.இவ்வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் அந்தியோக்கை(Antioch) சேர்ந்த "பிஷப் இக்னசிஸ்(Ignatius) ஆவார்.
3.மூப்பர்கள்(Elders):
Presbyteroi என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து Priest என்ற ஆங்கில வார்த்தை வந்தது.யூத மார்க்கத்தில் "ஆசாரியர்கள்" எவ்வளவு முக்கியத்துவத்தை பெற்றிருந்தனரோ அவ்வாறான ஒரு பொறுப்பைக் குறிப்பதற்கு இவ்வார்த்தை பயன்பட்டது. இயேசு இறந்த பிறகு அப்போஸ்தலர்களுக்கு தலைமை ஏற்பது யார் என்ற குழப்பம் ஏற்பட்டது.அப்பொழுது எருசலேம் சபையின் இருந்த ஒரே தலைமை இயேசுவின் சகோதரரான "James"(இவர் பெயர் உண்மையில் James என்பது கிடையாது.காரணம்,James என்பது ஹீப்ரு வார்த்தை அல்ல,அது ஆங்கில வார்த்தை.இவர் பெயர் உண்மையில் "யாக்கோபு".எப்படி இவர் பெயர் மாற்றப்பட்டது என்பது தனி வரலாறு).இவரின் தலைமையில் இருந்த அப்போஸ்தலர்கள் மற்றும் பிற மூப்பர்கள் Presbyteroi என்ற கிரேக்க வார்த்தை மூலம் அழைக்கப்பட்டனர்.எனவே இவ்வார்த்தையின் பொருள் "மூப்பர்கள்" ஆகும்.
4.வேலைக்காரர்கள்(Deacon):
இவ்வார்த்தையின் பொருள் "உதவியாளர்கள்","வேலைக்காரர்கள்". இது கிரேக்க வார்த்தையான "diakonos" என்பதிலிருந்து வந்தது. மூப்பர்களுக்கு உதவி செய்தவர்களை குறிக்க இவ்வார்த்தை அக்காலத்தில் பயன்பட்டது.
5.அப்பம் உண்ணுதல்(Eucharist):
இதன் பொருள் "நன்றி நிறைந்த" என்பதாகும்.இது eukharistos என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது.யூதர்கள் சனிக்கிழமைகளில் தங்கள் ஓய்வு நாளை கடைபிடித்தனர்.இதற்க்கு போட்டியாக கிறித்தவர்கள் தங்கள் தலைவர் இயேசு உயிர்த்தெழுந்த நாளை சிறப்பு நாளாக கடைபிடிக்க ஆரம்பித்தனர்.பழைய ரோமர்கள் தங்கள் சூரிய கடவுளுக்குரிய நாளாக ஒரு நாளை கொண்டிருந்தனர்.அந்த நாளை "Sunday" என்று அழைத்தனர்.அது யூதர்களின் ஓய்வு நாளான சனிக்கிழமைக்கு அடுத்ததாக வந்தது.யூதர்களுக்கு போட்டியாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதலின் காரணமாக இந்த "Sunday"வை அவர்கள் சிறப்பு நாளாக கடைபிடிக்க ஆரம்பித்தனர்.இந்நாளில் சிறப்பு விருந்து நடந்தது.இயேசுவின் உயிர்தெழுதலைக் குறிக்கும்படியாக அப்பாத்தையும் திராட்சை இரசத்தையும் உண்ணும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.முதல் பிஷப்பாகிய அந்தியோக்(Antioch)-ஐ சேர்ந்த இக்னசிஸ்(Ignatius) இதனை முதன்முதலில் "Eucharist" என்று அழைத்தார்.
6.கடிதம்(epistolē):
இது கிரேக்க வார்த்தையான "epistolē" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதன் பொருள் "கடிதங்கள்" என்பது ஆகும். குறிப்பாக அப்போஸ்தலன் பவுலின் கடிதங்களை குறிப்பதற்கு இவ்வார்த்தை பயன்பட்டது. இக்கடிதங்கள் "அன்றாட வாழ்வில் பேசும் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.அழகு தமிழுக்கும் அன்றாட தமிழுக்கும் வேறுபாடு உள்ளது போன்று அன்றாட கிரேக்க மொழிக்கும் அலுவல் கிரேக்க மொழிக்கும் வேறுபாடுகள் உண்டு.
7.சேகரம்(Diocese):
இவ்வார்த்தைக்கு ஆச்சரியமான ஒரு சிறப்பு உண்டு.இவ்வார்த்தையானது,கிறித்தவர்களை அதிகமாக துன்புறுத்திய ரோம மன்னனான "டையோக்ளேசின்(Diocletian)" என்பவன் பயன்படுத்திய வார்த்தையில் இருந்து வந்தது.இவ்வார்த்தையானது கிரேக்க வார்த்தையான "dioikein" என்ற வார்த்தையில் இருந்து உருவானது.பின்னர் லத்தீன் மொழிக்கு மாறியது. மேற்குறிப்பிடப்பட்ட மன்னன் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை 12 பகுதிகளாக பிரித்திருந்தான். அப்பிரிவுகளுக்கு பெயர் "Diocese".அதுதான் பின் வந்த கிறித்தவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு "பிஷப்பின்" ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை Diocese என்கிறோம்.
7.கதீட்ரல்(Cathedral):
இவ்வார்த்தையானது லத்தின் மொழியை சேர்ந்தது.லத்தின் மொழி ஏறத்தாழ கிரேக்க மொழியை சார்ந்தே இருக்கும்.இவ்வார்த்தையின் பொருள் "பிஷப்பின் இருக்கை" ஆகும்.அதாவது,ஒரு நகரத்தில் எந்த சபையில் பிஷப்பின் இருக்கை உள்ளதோ அதுவே கதீட்ரல் ஆகும்.பிஷப் இங்குதான் அமர்ந்திருப்பார்."Cathedra" என்ற லத்தின் வார்த்தையின் பொருள் "இருக்கை(Chair)" ஆகும்.கிறித்தவத்தை ரோம அரசர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபொழுது, பிஷப்புகள் பெரும் அதிகாரம் பெற்றனர்.கிட்டத்தட்ட அவர்கள் மன்னனுக்கு சமமானவர்கள் ஆயினர்.தங்களுடைய இருக்கைகளில் அவர்கள் அமர்ந்திருக்கும் விதம் காலப்போக்கில் மன்னர்கள் அமர்த்திருக்கும் விதத்தை போலானது.மக்களுடைய அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளுக்கு இந்த இருக்கைகளில் அமர்ந்திருந்து தீர்ப்பு வழங்கினர்.இதற்கும் முன்னர் கல்விக்கூடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இவ்வார்த்தையை கிறித்தவம் தனக்கு எடுத்துக்கொண்டது.
8.சேப்பல்(Chapel):
இவ்வார்த்தை இலத்தீன் மொழியை சேர்ந்தது ஆகும்.இதன் பொருள் "சிறு சபை(small Church)".இந்த வார்த்தை "capella" என்ற இலத்தீன் வார்த்தையின் பொருள் "சிறு மேலங்கி" என்பது ஆகும்.கி.பி 400-களில் வாழ்ந்த கிறித்தவ மத துறவியாகிய மார்ட்டின் என்பவரால் இவ்வார்த்தை கிறித்தவத்திற்கு வந்தது.இவர் துறவி ஆவதற்கு முன்னர் போர்வீரனாக இருந்தார்.இவரைப்பற்றிய ஒரு கதை உள்ளது.இவர் போர் வீரனாக இருந்த போது,ஒரு முறை தன்னுடை மேலங்கியை கிழித்து ஒரு ஏழைக்கு வழங்கினார்.பின்னர் பார்த்தால் ,அந்த ஏழை வேறு யாரும் அல்ல இயேசுதான் என்று அறிந்து கொண்டதாக அந்த கதை உள்ளது.பின் வந்த பிராங்கிஸ்(Frankish) என்ற காட்டுமிராண்டிகள் இந்த கிழிந்த மேலங்கியை மிகவும் போற்றினர்.இந்த மேலங்கியை போற்றி பாதுகாத்து கொண்டிருந்த சபைகள் அனைத்தும் "Capellae" என்று அழைக்கப்பட்டன.இதுவே மேற்கத்திய கிறித்தவர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சொல்லாக இன்று மாறிவிட்டது.நாளடைவில் மேற்கத்திய கிறித்தவர்கள்,"தனியார்களால் நடத்தப்படும் சிறு சபைகளை" குறிப்பதற்கு இச்சொல்லை பயன்படுத்தினர்.
இரா.இருதயராஜ்.
Ref :
1.a history of christianity :By Diarmaid MacCulloch
No comments:
Post a Comment