நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்
மத்தேயு எழுதிய நற்செய்தி புத்தகத்தில் மேற்கூறப்பட்ட சொற்றோடர் வருகிறது.மத்தேயு புத்தகம் சுமார் கி.பி 70-ம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.அதாவது இயேசு இறந்து 40 வருடங்கள் கழித்து மத்தேயு இப்புத்தகத்தை எழுதி இருக்கிறார்.தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி இதுதான் நிலைமை.
மத்தேயூக்கு முன்னரே மாற்கு தன்னுடைய நற்செய்தி புத்தகத்தை எழுதிவிட்டார் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.எனவே நான்கு நற்செய்தி புத்தகங்களிலும் முதலில் எழுதப்பட்டது மாற்குவின் புத்தகமே.இப்போது மேற்கூறிய வசனத்திற்கு வரலாம்.
முதலில் RC தமிழ் திருமறை இவ்வசனத்தை எப்படி மொழிபெயர்த்திருக்கிறது என்று பார்க்கலாம்.
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.[மத் 2:11]
புரொட்டஸ்டண்டுகள் எவ்வாறு இவ்வசனத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.முதலில் ஒன்றை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது என்னவென்றால்,புரொட்டஸ்டன்ட்டுகளின் மொழிபெயர்ப்பு தமிழே அல்ல! தமிழுடன் சமஸ்கிருதத்தை கலந்து மொழிபெயர்த்து குழப்பப் பட்ட ஒன்றுதான் இது.எண்ணற்ற இடங்களில் தவறான பொருளைத் தரக்கூடியதாக புரொட்டஸ்டண்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.சம்ஸ்கிருத கலப்பே இதற்கு காரணம்."பேழைகள்" அல்லது "பெட்டிகள்" என்று பொருள் தரக்கூடிய வார்த்தையானது "பொக்கிஷம்"என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு "பொக்கிஷம்" என்ற வார்த்தை சரியான பொருளைத் தராது."பெட்டிகள்" என்று பொருள் கொள்வதற்கு பதிலாக "மிகவும் போற்றி பாதுகாத்த பொருள் அல்லது புதையல்" என்றே மனதில் தோன்றும்.
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.[மத் 2:11]பின்னணி என்ன?
எந்த பின்னணியில் இவ்வசனம் எழுதப்பட்டுள்ளது என்று நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.குழந்தையாகிய இயேசு பெத்லகேமில் பிறந்துள்ளார்.அவர்தான் யூதர்களை அவர்கள் துன்பங்களில் இருந்து காப்பாற்ற போகிறவர்,அதாவது "மேசியா" என்று "கிழக்கிலிருந்து வந்து குழந்தையை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிந்து கொண்டவர்கள்" நம்புகின்றனர்.இதன் காரணமாகவே அவர்கள் கிழக்கிலிருந்து வந்திருந்தனர்.
ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.[மத் :1,2]
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.[மத் 2:1,2]
இந்த ஞானிகள் யார்? "கிழக்கு" என்பது எதை குறிக்கிறது? இதற்கான பதில் நமக்கு வேண்டுமென்றால் பெத்லகேம் எங்குள்ளது என்று நமக்கு தெரிய வேண்டும்.பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படத்தை பாருங்கள்.பெத்லகேமுக்கு கிழக்குப்பகுதி கொடு ஒன்றால் காண்பிக்கப்பட்டுள்ளது.எனவே "கிழக்கு" என்பது பாபிலோனை குறிக்கிறது.இந்த முடிவுக்கு மேலும் சில காரணங்கள் உள்ளன.அவைகள்,
- இயேசு பிறந்த காலகட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு யூதர்கள் பாபிலோன் நாட்டில் இருந்தனர்.
- பாபிலோன் நாட்டிற்கு யூதர்கள் சிதறடிக்கப்பட்டபோது அவர்களில் பெரும்பாலோனோர் நெகேமியா மூலம் திரும்பவும் யூதாவிற்கு வந்துவிட்டனர்.
- ஆனாலும் பெரும்பாலோனோர் அங்கேயே தங்கி விட்டனர்.சிதறடிக்கப்பட்டு காலகட்டத்தில் இருந்து இயேசுவின் காலம் வரை அவர்கள் அங்கேயே இருந்தனர்.
- பாபிலோனில் தங்கியிருந்த யூதர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறந்தனர்.வேதத்தை மறந்தனர்.தங்கள் மொழியை மறந்தனர்.
- ஆனாலும் மறக்காத யூதர்களும் இருந்தனர்.ஹீப்ரு மொழியில் எண்ணற்ற இலக்கியங்கள் பாபிலோனில் வைத்துதான் உருவாகின.
- அவ்வாறு உருவாக்கிய இலக்கியங்களில் பாபிலோனின் தாக்கம் இருந்தது.
- தங்களுக்கென்று பள்ளிக்கூடங்களையும்(Yeshiva),தொழுகைக் கூடங்களையும்,இன்னபிற வசதிகளையும் அங்கெ அவர்கள் உருவாக்கிக்கொண்டனர்.
- பாபிலோன் நாடு, "கல்தெயேர்" நாடு என்றும் அழைக்கப்பட்டது.காரணம்,வானவியலில் அவர்கள் தேர்ந்து இருந்தனர்.
- கோள்களையும்,நட்சத்திரங்களையும் கொண்டு "நாள்பார்த்தலில்" மிகவும் தேர்ந்து இருந்தனர் இந்த பாபிலோனியர்கள்.
இப்போது,இயேசுவின் காலத்திற்கு வருவோம்.இயேசுவின் காலத்திலும் குறிப்பிட்ட அளவு யூதர்கள் பாபிலோனில் இருந்தனர்.இவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் மொழியை மறந்து,ஏறக்குறைய பாபிலோன் நாட்டவர்களாகவே மாறிவிட்டிருந்தனர்.இயேசு பிறந்தபொழுது ஏரோது மன்னன் ரோமர்களின் கட்டுப்பாட்டில் யூதர்களை ஆண்டுவந்தான்.
மொத்தத்தில்,இயேசுவின் காலத்தில் யூத நாடு ரோமர்களால் ஆளப்பட்டு வந்தது.இந்த ரோமர்கள் மிக்க கடுமையாக யூதர்களை நடத்தினர்.சுமாராக,ஒரு நாளைக்கு 500 யூதர்கள் மரத்தில் கழுவேற்றப்பட்டு கொல்லப்பட்டு வந்தனர்.இந்த அளவிற்கு கடுமையாக யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.
தங்களுக்கென்று உறுதியளிக்கப்பட்ட "மேசியா" எப்பொழுது வருவார் என்று ஏங்கிக்கொண்டிருந்தனர்.மேசியா தங்களை எப்படியாவது காப்பாற்றிவிடமாட்டாரா என்று தினந்தோறும் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் இயேசு பிறந்திருக்கிறார்.இவர்தான் "வரப்போகும் மேசியா" என்று நமக்கு மத்தேயு உணர்த்த முயற்சிக்கிறார்.ஆனால் கதை விளக்கப்பட்ட விதம்தான் நம்மை சில கேள்விகளை எழுப்பச் செய்கிறது.யூதாவில் இன்னும் தீவிரமான யூதர்கள் இருக்கத்தான் செய்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.அதாவது பல பிரிவுகளால் அவர்கள் பிளவு பட்டிருந்தாலும்,ஒன்றில் அவர்கள் ஒருமைப்பட்டிருந்தனர்.அது "தங்கள் கடவுள் யார்?" என்பதில்தான்.
தங்களின் கடவுளை எவ்வாறு வழிபட வேண்டும் என்று அவர்களுடைய மறைநூல் அவர்களுக்கு தெளிவாகக் கூறுகிறது.அதன்படியே அவர்கள் வழிபட்டனர்.வழிபாடும் முறைகளில் சில வேறுபாடுகளை கொண்டிருந்தனர்.சதுசேயர்,பரிசேயர் போன்ற பிரிவுகள் இவ்வாறு தோன்றியதே!
யார் இந்த ஞானிகள்?
இந்த ஞானிகள் கிழக்கிலிருந்து வந்தனர் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.அவர்கள் கிழக்கிலிருந்த யூதர்களா அல்லது வேறு இனத்தவர்களா என்பதை நமக்கு மத்தேயு கூறவில்லை.நட்சத்திரங்களை கண்டு தங்கள் வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.நட்சத்திரங்களை கொண்டு நாள் கணிப்பதை கடவுள் அருவருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.
இந்த ஞானிகள் யூதர்களாக இருக்குமாயின் அவர்கள் நட்சத்திரங்களைக் கண்டு,மெசியாவாகிய இயேசு பிறக்கும் நாளை கண்டு அறிந்திருக்க மாட்டார்கள்.யூதர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.அப்படியென்றால் இந்த ஞானிகள் வேறு இனத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.நட்சத்திரங்களைக் கொண்டு நாள் பார்ப்பதில் தேர்ந்தவர்கள் பாபிலோனியர்களே ஆவர்.எனவே இவர்கள் பாபிலோன் நாட்டை சேர்ந்த ஞானிகள் ஆவர்.
ஆனால் பாபிலோன் நாட்டை சேர்ந்த இந்த ஞானிகளுக்கு யூதர்கள் மீது என்ன அக்கறை?இவர்கள் எப்படி யூதர்கள் மீது கவலை கொண்டு அவர்களை காக்க வரும் "மேசியா"வை தேடி வந்தனர்?குழப்பம் நிறைந்த இக்கேள்விகளுக்கு விடையில்லை.
நட்சத்திரங்களைக்கொண்டு நாள் கணித்து இயேசுவை தேடி வந்ததால் இவர்கள் யூத ஞானிகள் அல்ல என்பது உறுதி.ஆனால் யூதர்கள் அல்லாத இந்த ஞானிகளுக்கு யூதர்களைப்பற்றி என்ன கவலை?திருமறையை(பழைய ஏற்பாட்டை) மீறிய ஒரு செயலை அவர்கள் செய்கின்றனர்.அவ்வாறு செய்யும் பொழுது,அதாவது நட்சத்திரங்களைக் கண்டு வந்தோம் என்று அவர்கள் கூறியதை ஏன் ஏரோது எதிர்க்க வில்லை? பதிலாக ஏரோது அதை நம்பி இரண்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொல்வதற்கு உத்தரவிடுகிறான்.முரண்பாடுகள் நிறைந்ததாக இக்கதை உள்ளது.
அடுத்த குழப்பம்:
ஒரு குழப்பத்திற்கு அடுத்து மற்றொன்று வருகிறது.வந்தவர்கள் யூத ஞானிகள் அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்று.அவர்களின் வார்த்தையை கவனித்து பார்த்தல் இது விளங்கும்.
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.[மத 2:2]
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.[மத் 2:2]
வந்தவர்கள் யூத ஞானிகள் என்றால் அவர்கள் "பணிந்து" அல்லது "வணங்க" என்று கூற மாட்டார்கள்.ஏனென்றால் "தங்கள் கடவுளைத் தவிர வேறு யாரையும் அவர்கள் வணங்கக் கூடாது" என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும்.அவர்கள் ஞானிகள்,அதனால் இது கூட தெரியாமல் இருந்திருக்க மாட்டார்கள்.சாதாரண குடிமக்களாக இருந்திருந்தால் நாம் இதனை ஒரு கவனிக்க வேண்டிய செயலாக பார்த்திருக்க வேண்டாம்.அவர்கள் ஞானிகள் என்பதால்தான் நாம் உற்று கவனிக்க வேண்டியுள்ளது.
வந்தவர்கள் "யூத ஞானிகள்" அல்ல என்பதற்கு இதுவும் நமக்கு உதவி செய்கிறது.யூத ஞானிகள் அல்லாதவர்களை மத்தேயு எப்படி நம்பினார்? நாள் பார்க்கிறவர்களை மத்தேயு நம்பியுள்ளார்.அவர் எழுதியுள்ளவைகளில் இருந்துதான் நாம் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
மேலும் வந்தவர்கள் குழந்தையை "நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிந்துள்ளனர்".யூதர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு செயல் இது.மத்தேயு எப்படி ஏற்றுக்கொண்டார்? மத்தேயுவின் வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்தால்,"விழுந்து பணிந்து கொண்ட செயலை" அவர் நமக்கு ஆதாரமாக தர முயற்சி செய்கிறார்.எதற்கு ஆதாரமாக தருகிறார்? இயேசுதான் "மேசியா",அதனால்தான் அவர் பணிந்து கொள்ளப்பட்டார், என்று நமக்கு கூற முயற்சி செய்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.
யூதர்கள் படிப்பறிவுள்ளவர்கள்.மத்தேயுவின் இக்கூற்றை பார்த்தவுடன் அவர்கள் ஒதுக்கி தள்ளியிருப்பார்கள்.இக்காரணத்தினால்,மத்தேயு இப்புத்தகத்தை யூதர்களுக்கு எழுதியதாக கருத முடிய வில்லை.அவர்களை ஏமாற்ற முடியாது.எனவே மத்தேயு ஒரு குறிப்பிட்ட மக்களை நோக்கியே தன்னுடைய புத்தகத்தை எழுதியுள்ளார்.அதாவது யூதரல்லாதவர்களை நோக்கி! காரணம் "கடவுளை தவிர மற்றொருவரை விழுந்து வணங்கும்" செயலை புற இனத்தவர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும்.யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
முடிவுரை:
மத்தேயு யூதரல்லாத ஞானிகளை மேற்கோள் காட்டி தன்னுடைய நற்செய்தி புத்தகத்தை எழுதி உள்ளார்.கிழக்கில் இருந்து வந்தவர்கள் யூத ஞானிகள் அல்ல என்பதை நிறுவியுள்ளோம்.இதன்மூலம், மத்தேயு பழைய ஏற்பாட்டு கற்பனைகளுக்கு விரோதமான கருத்துக்களைக் கூறியுள்ளார் எனலாம்.
கடவுளைத் தவிர வேறு எவரையும் வணக்க கூடாது என்பதை இயேசுவே வலியுறுத்தி உள்ளார்.ஆனால் தன்னுடைய புத்தகத்தில் இயேசு குழந்தையாக இருக்கும் பொழுது அவர் வணங்கப்பட்டார் என்று எழுதியுள்ளார். இது முரண்பாடு. குழந்தை வணங்கப்பட்டதன் காரணமாக அக்குழந்தை "ஒரு தெய்வீகக் குழந்தை" என்று கூற முற்பட்டிருக்கிறார்.
இதன்மூலம் அவர்தான் "மேசியா" என்று வலியுறுத்த முயன்றிருக்கிறார்.யூதர்கள் தற்போதிருக்கும் மோசமான நிலைமையில் இருந்து காப்பாற்றவே இக்குழந்தை அவதரித்திருக்கிறது என்று நமக்கு கூறுகிறார்.ஆனால் இப்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கித்தான் "மெசியாவை" மரியாதை செய்ய வேண்டும் என்று மத்தேயூக்கு யார் கூறியது?
தவறான,முரண்பாடுகள் நிறைந்தது மத்தேயு இரண்டாம் அதிகாரம்.நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கப்பட வேண்டியவர் கடவுள் ஒருவரே.இதை இயேசுவே நமக்கு கூறியுள்ளார்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1YUeqTtJiquEUGH9JPgeijZt7XhszmVpr/view?usp=sharing
இதன்மூலம் அவர்தான் "மேசியா" என்று வலியுறுத்த முயன்றிருக்கிறார்.யூதர்கள் தற்போதிருக்கும் மோசமான நிலைமையில் இருந்து காப்பாற்றவே இக்குழந்தை அவதரித்திருக்கிறது என்று நமக்கு கூறுகிறார்.ஆனால் இப்படி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கித்தான் "மெசியாவை" மரியாதை செய்ய வேண்டும் என்று மத்தேயூக்கு யார் கூறியது?
தவறான,முரண்பாடுகள் நிறைந்தது மத்தேயு இரண்டாம் அதிகாரம்.நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கப்பட வேண்டியவர் கடவுள் ஒருவரே.இதை இயேசுவே நமக்கு கூறியுள்ளார்.
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.[மத் 4:9,10]
அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது.
அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே,’உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.[மத் 4:9,10]இயேசு கூறிய கருத்துக்களுக்கு முரணாக மத்தேயுவின் கருத்து உள்ளது.பழைய ஏற்பாட்டுக்கு முரணாகவும் இருக்கிறது.
இரா.இருதயராஜ்
https://drive.google.com/file/d/1YUeqTtJiquEUGH9JPgeijZt7XhszmVpr/view?usp=sharing
No comments:
Post a Comment