Friday, December 13, 2019

யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு பகுதி 1

யோவேல் 2-ம் அதிகாரமும் அப்போஸ்தலர்(திருத்தூதர்) 2-ம் அதிகாரமும் - ஒரு ஒப்பீடு - பகுதி 1

இயேசு இறந்த பிறகு அவருடைய சீடர்கள் அனைவரும் எருசலேமில் இருக்கிறார்கள்.பெந்தேகோஸ்து என்னும் நாளில் சீடர்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். தொடர்ந்து செல்வதற்கு முன்னர், "பெந்தேகோஸ்து" என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,இந்த வார்த்தை ஹீப்ரு மொழியை சேர்ந்தது அல்ல.இது கிரேக்க மொழியை சேர்ந்தது.இவ்வார்த்தையின் பொருள் "ஐம்பது" ஆகும்.இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளையிடப்பட்ட பண்டிகைகளில் ஒன்று "வாரப்பண்டிகை" ஆகும்.இது எப்போது கடைப்பிடிக்கப்பட வேண்டும்?
15 ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.
16 ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.[லேவி 23:14,15]
15. நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு,
16. ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.[லேவி 23:15,16]
முதல் அறுவடைக்குப்  பின்பு  50 நாட்கள் கழித்து இந்த குறிப்பிட்ட பண்டிகை வருகிறது.ஐம்பது நாட்கள் என்பதை கிரேக்க மொழியில் "பெந்தேகோஸ்து" என்று கூறிவிட்டனர்.இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால்,இஸ்ரயேல் மக்களுக்குரிய பண்டிகை கிரேக்க பெயரால் அழைக்கப்படுகிறது என்பதுதான்.இஸ்ரயேல் மக்களுக்கு ஹீப்ரு மொழிதான் தாய்மொழி என்பது அனைவரும் அறிந்தது.

இயேசு வாழ்ந்த காலகட்டங்களில் யூதர்கள் ஏறத்தாழ தங்கள் மொழியை மறந்து விட்டனர்.அவருடைய காலத்தில் எருசலேமில் வாழ்ந்த மக்கள் யூதர்கள் மட்டுமல்ல.பல புற இனத்தவர்களும் அங்கே  வாழ்ந்தனர்.அதற்கு முன்னர் யூதர்கள் கிரேக்கர்களிடம் அடிமைப்பட்டு இருந்தனர்.கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரம் அப்பகுதி முழுவதையும் ஊடுருவி இருந்தது.இதன் காரணமாக யூதர்களுடைய எழுத்துக்களும் கிரேக்க மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தன.

பண்டிகை யூதர்களுக்குரியது.குறைந்தபட்சம் பண்டிகையின் பெயரையாவது ஹீப்ரு மொழியில் சொல்லியிருக்கலாம்.அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவரின் மனநிலை இங்கு வெளிப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.யூதர்கள் அப்பண்டிகையை "Shavout" என்று அழைப்பர்.தங்கள் ஹீப்ரு மொழியை தாங்கள் மறந்து விட்டாலும்,குறைந்தபட்சம் பண்டிகையின் பெயரையாவது அவர்கள் உச்சரித்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.ஆனால் இப்புத்தகத்தை எழுதியவர் "பெந்தேகோஸ்து" என்னும் பண்டிகை என்று குறிப்பிடுகிறார்.

யூத மக்களுக்கு "பெந்தேகோஸ்து" என்றால் என்னவென்றே தெரியாது.இதை எழுதுபவர் யூத மக்களுக்கு எழுதி இருந்தால் இவ்வார்த்தையை பயன்படுத்தி இருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.ஏன் "Shavout" என்ற வார்த்தைக்கு பதிலாக "பெந்தேகோஸ்து" என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்று தெரியவில்லை.யூதர்களில் பெரும்பாலோனோர் இயேசுவையும் அவர்களுடைய சீடர்களையும் வெறுத்தனர் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே சீடர்கள் யூதர்களை வெறுத்திருக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பயந்து வாழ்ந்திருக்க வேண்டும்.எருசலேமில் வாழ்ந்த மற்ற இனமக்களை அவர்கள் அணுகி அவர்களிடம் இயேசுவைப்பற்றிய செய்திகளை கூறியிருக்க வேண்டும்.அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்திலேயே அது குறிப்பிடப்பட்டுள்ளது.
5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.[தி.தூ.2:5]
5. வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.[அப் 2:5]
9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,
11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! “என்றனர்.[தி.தூ.2:9-11]
9. பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10. பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,
11. கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.[அப் 2:9-11]
பல நாடுகளில் இருந்து வந்த யூதர்கள்(இவர்கள் ஏற்கனவே அங்கு சிதறடிக்கப்பட்டிருந்தனர்) எருசலேமில் அங்கு வாழ்ந்து வந்தனர்.அவர்கள் "இறைப்பற்று" மிக்கவர்களாக இருந்தனர் என்பது இப்புத்தகத்தை எழுதிவரின் கருத்து.இவர்கள் தங்கள் தாய்மொழியாகிய ஹீப்ருவை மறந்து போயிருந்தனர்.அப்போதைய வழக்கு மொழியாக(ஏறத்தாழ) கிரேக்கம் இருந்தது.காரணம் ரோமர்களுக்கு முன்னர் கிரேக்கர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களைத்தான் இப்புத்தகத்தை எழுதியவர் "இறைப்பற்று மிக்க யூதர்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு தகவல் உள்ளது அது,யூதம்  தழுவிய மக்கள்.எனவே யூதர்களை பின்பற்றிய மக்கள் சிலரும் அங்கு இருந்தனர்.பிறப்பால் உத்தர அல்லாத ஆனால் யூத வழிமுறைகளை பின்பற்றிய மக்களும் அங்கு வாழ்ந்தனர்.பேதுரு யாரிடம் பேசுகிறார் என்று இப்புத்தகத்தை எழுதியவர் குறிப்பிடுகிறார் என்றால் இவர்களிடம்தான்,அதாவது வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கள் மொழியை மறந்த யூதர்கள்,மற்றும் யூதத்தை பின்பற்றிய புற இன மக்கள்.எருசலேமை விட்டு எங்கும் செல்லாத அங்கேயே வாழ்ந்த பூர்வகுடி யூதர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

சிதறடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்ற யூதர்களுக்கும் அங்கேயே தங்கிய யூதர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய யூதர்கள் தங்கள் மொழியை மற்றும் மறக்க வில்லை,தங்களுடைய கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள் அனைத்தயும் மறந்திருந்தனர்.அங்கேயே வாழ்ந்த யூதர்கள் இவர்களை வெறுத்தனர்.எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று இந்த யூதர்களையும், புற இனத்திலிருந்து யூதத்தை பின்பற்றியவர்களையும் குறிவைத்தே இயேசுவின் சீடர்கள் வாழ்ந்தனர்.

எங்கும் செல்லாமல் எருசலேமில் இருந்து வாழ்ந்து வந்த யூதர்கள் இயேசுவின் கொள்கைகளையும் போதனைகளையும் வெறுத்தனர்.அனைத்தயும் மறந்து வாழ்ந்த யூதர்கள் இவர்களை ஓரளவுக்கு ஆதரித்தனர்.எனவேதான் இவர்களிடம் சென்று இயேசுவின் சீடர்கள் பேசினர்.பேதுருவின் பேச்சை கேட்க கூடியிருந்தவர்களும் இவர்களே! உண்மையாக வாழ்ந்த யூதர்கள் அல்ல!

இந்த "சமரசம் செய்து கொண்ட யூதர்களுக்கு" பேதுருவின் பேச்சு மற்றும் மற்ற சீடர்களின் பேச்சு புதிதாக இருந்திருக்கும்.காரணம் அவர்கள் தங்களுடைய திருமறையையும்(பழைய ஏற்பாடு) மறந்திருந்தனர்.நீண்டகாலமாக வெளிநாடுகளில் வசித்த காரணத்தினால் அவர்கள் தங்களுடைய திருமறையை முற்றிலும் மறந்துபோயிருந்தனர்.

கிரேக்க மொழியின் தாக்கம் அப்பொழுது அதிகமாக இருந்தது.அதன் காரணமாகவே "வாரப்பண்டிகை", "பெந்தேகோஸ்து" என்று மாற்றப்பட்டது.நமக்கு இதை கூறியவர் அப்போஸ்தலர்(திருத்தூதர்) புத்தகத்தை எழுதியவர்.பெந்தேகோஸ்து என்ற சொல் பூர்வகுடி யூதர்களுக்காக பயன்படுத்தப்பட்டது அல்ல.பூர்வகுடி யூதர்கள் இவர்களை வெறுத்தனர்.சவுல் எண்ணப்பட்ட பவுல் ஒரு வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு யூதன் என்பதை இங்கு நினைவில் கொள்க.

இப்பொழுது பேதுரு இவர்களிடம் என்ன பேசுகிறார் என்பதை நாம் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

இரா.இருதயராஜ்.

No comments:

Post a Comment

My Posts