Saturday, March 28, 2020

திருப்பாடல்கள்(சங்கீதம்) 2:12 - பொருள் என்ன?

திருப்பாடல்கள்(சங்கீதம்) 2:12 - பொருள் என்ன?

ஒரு தனிமனிதனுடைய கவித்திறமையை திருப்பாடல்கள் புத்தகம் நமக்கு விளக்குகிறது.தாவீது என்ற அந்த தனிமனிதன் தன எண்ணங்களை எல்லாம் கவிதை நடையில் பதிவு செய்திருக்கிறான்.ஆடுகள் மேய்க்கும் ஒரு சிறுவனாக இருந்தபோதிலிருந்தே தன எண்ணங்களை பதிவு செய்திருக்கிறான்.தான் நம்பும் கடவுளைப்பற்றி தன்னுடைய எண்ணங்களை எழுதி, இசையமைத்து நமக்கு தந்திருக்கிறான்.இந்த தாவீது எழுதிய திருப்பாடல்களில் இரண்டாம் திருப்பாடல் ஏறத்தாழ ஓர் இறைவாக்கு என்று கூறப்படுகிறது.ஒருவருக்கு எப்பொழுது கவித்திறமை வெளிப்படும்? எப்பொழுது மற்ற செயல்கள் அவருடைய கவனத்தை ஈர்க்காமல் தான் விரும்பும் செயல்கள் மீது அதிக ஈர்ப்பு உடையவராக மாறுகிறாரோ அப்பொழுது அவருக்குள் இருக்கும் கவித்திறமை வெளிப்பட ஆரம்பிக்கும்.தான் நினைக்கும் எண்ணங்களை எழுத்தில் அப்படியே கொண்டு வருவர்.

அவ்வாறு தாவீது எழுதிய இரண்டாம் திருப்பாடலை நாம் கவனித்தோமானால் அவர் ஒரு அரசனைப்பற்றியும் தன்னுடைய கடவுளாகிய கர்த்தரைப் பற்றியும் எழுதியிருப்பார்.தன்னுடைய கடவுள் தன்னிடம் பேசுவது போன்று எழுதி பின்னர் அதனை நமக்கு கூறுவது போன்று அத்திருப்பாடல் இருக்கும்.இதனை நாம் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னர்,இத்திருப்பாடலை எழுதியது தாவீது இல்லை என்று கற்பனை செய்து கொள்வோம்.யாரோ ஒருவர் எழுதியுள்ளார் என்றே கொள்வோம்.கவித்திறமை மிக்க ஒருவர் எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்வோம். 1-4 வாக்கியங்கள் மூலமாக நமக்கு என்ன கூறுகிறார்?

மண்ணுலகின் அரசர்கள் அனைவரும் கர்த்தருக்கு எதிராக செயல்கள் செய்கின்றனர் என்று கூறுகிறார்.அப்படி என்ன செயல்கள் செய்து விட்டனர்? கர்த்தர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை மண்ணுலகின் அரசனாக்கியிருக்கிறார்,அந்த அரசனுக்கு எதிராக எண்ணங்கள் கொள்கின்றனர்.அப்படி எண்ணங்கள் கொள்வதன் மூலம் அவர்கள் கர்த்தருக்கே எதிரான எண்ணங்கள் கொள்கின்றனர் என்று நமக்கு இத்திருப்பாடலை எழுதியவர் கூறுகிறார்.6-வது வாக்கியத்தின் மூலம் நமக்கு அவர் மேலும் சிலவற்றை கூறுகிறார்.
6. நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
6 ‘என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.’ 
கர்த்தர் கூறுவதை இத்திருப்பாடலை எழுதியவர் நேரடியாக கேட்டது போன்று நமக்கு கூறுகிறார்.அதாவது கர்த்தர் இவரிடமோ அல்லது பொதுவாகவோ கூறுகிறார்,அதனை இவர் கேட்டிருக்கிறார்,பிறகு நமக்கு அப்படியே எழுதி தருகிறார்.மண்ணுலகின் அரசர்களின் செயலை பார்த்து கர்த்தர் நகைத்து ,"நான் என்னுடைய திருமலையாகிய சீயோனில் ஓர் அரசனை தேர்ந்தெடுத்து அவனை ஆட்சி புரிய வைத்திருக்கிறேன்" என்கிறார்.ஆனால் அடுத்த வசனம் நமக்கு ஆச்சரியத்தை தருகிறது.அதாவது,கர்த்தர் இப்பொழுது நேரடியாகவே இத்திருப்பாடலை எழுதியவரிடம் பேசுகிறார் போன்று உள்ளது.அதனை பார்க்கலாம்.
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்; ‘நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்.
8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.
9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன்  கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.’ 
இத்திருப்பாடலை எழுதியவரை நோக்கி,"நீ என்னுடைய மகன்,இன்று உன்னை உருவாக்கினேன்,இம்மண்ணுலகை உனக்கு தந்தேன்,நீ ஆட்சி செய்" என்று கூறுகிறார்.இதை நமக்கு இத்திருப்பாடலை எழுதியவர் நமக்கு அப்படியே தந்திருக்கிறார்.

இதன் பிறகு அவர்,அதாவது இத்திருப்பாடலை எழுதியவர்,நமக்கு கூறுகிறார்,"இதோ கர்த்தரே என்னை தன்னுடைய மகன் என்று கூறிவிட்டார்,எனக்கு ஆட்சி அதிகாரங்கள் அனைத்தையும் தந்து விட்டார்,அதனால் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்",மேலும் அவருடைய மகனாகிய என்னை உங்களுடைய செயல்கள் மூலம் கோபம் கொள்ள செய்யாதீர்கள்,என்னை முத்தமிட்டு என்னுடன் இணக்கமாயிருங்கள்,இல்லையென்றால் என்னுடைய கோபத்தை தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்",இதுதான் இத்திருப்பாடலை எழுதியவர் நமக்கு கூறியவை.இப்பொழுது நாம் சில கேள்விகளை முன் வைக்கலாம்.
  • யார் இந்த திருப்பாடலை எழுதியவர்? அவர் யார் என்று தெரிந்தால் அவர்தான் பூவுலகின் அரசன்.மேலும் அவர்தான் கர்த்தரால் தேர்ந்துடுக்கப்பட்டவர்.
  • கர்த்தர் அவருடன் நேரடியாக பேசியிருக்கிறார்.அப்பேச்சின் விபரங்களை நமக்கு தந்திருப்பதால் அவர் மிக முக்கியமானவர்.
  • உண்மையில் இத்திருப்பாடலை எழுதியவர் கர்த்தர் பேசியதை நேரடியாக பார்த்தாரா? அப்படி பார்த்தால் அவர் உயிருடன் இருக்க முடியாதே?
  • தன்னை "மகன் என்றும் ,இன்று பெற்றெடுத்ததாகவும் கூறியிருந்தால் உண்மையில் இவர்தான்,அதாவது இத்திருப்பாடலை எழுதியவர்தான் "கர்த்தரின் மகன்" ஆவார்.
  • எனவே யார் இப்பாடலை எழுதியது? இதற்கு விடை கிடைத்தால் மேற்கூறிய கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.

இப்பாடலை எழுதியவர் யார் என்று தெரியாமல்,இன்னாரைத்தான் குறிக்கிறது என்று நாம் எவரையும் கூற இயலாது.காரணம்,கர்த்தர் தன்னிடம்தான் பேசியதாக அவரே கூறியிருக்கிறார்.ஆனால் நமக்கு ஒரு துருப்பு சீட்டு உள்ளது.இப்பாடலை எழுதும் பொது இவர் மன்னனாக இருந்திருக்கிறார்.இம்மன்னனை கர்த்தரே தேர்ந்தெடுத்திருக்கிறார்.
13 உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.[1 சாமு 16:13]
13. அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். [1 சாமு 16:13]
எனவே கர்த்தர் தாவீதைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று உறுதியாகிறது.சவுலையும் கர்த்தர்தானே தேர்ந்தெடுத்தார் என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் சவுலுக்கு பாடல்கள் பாடும் திறன் கிடையாது.எனவே தாவீதை குறிப்பதற்கே அதிக வாய்ப்பு நமக்குள்ளது.

அப்படியென்றால் சாலமோனை குறிப்பதற்கு வாய்ப்பில்லையா?அவனையும்தான் கர்த்தர் "தன்னுடைய மகன்" என்று கூறியிருக்கிறார்.அவனும்தான் நல்ல பாடல்களை எழுதியிருக்கிறான்.சாலமோன் திறமைசாலிதான்,பாடல்கள் பாடும் திறன் கொண்டவன்தான்,ஆனால் அவனையும் குறிக்கவில்லை என்பதற்கு நமக்கு ஓர் சான்று இப்பாடலில் உள்ளது. சாலமோன் காலத்தில் அவனுடைய நாடெங்கும் அமைதி நிலவியது.ஆனால் இப்பாடலை பாடிய மன்னனின் காலத்தில் இவனுக்கெதிராக மற்ற அரசர்கள் செயல் பட்டிருக்கின்றன என்று இப்பாடலை எழுதியவரே குறிப்பிடுகிறார்.எனவே மறுபடியும் இது தாவீதை குறிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக இருக்கிறது.காரணம்,தாவீதிற்கு எதிராக பல பகைஞர்கள் அவனுடைய காலத்தில் இருந்தனர்.

முடிவாக இப்பாடலை எழுதியது தாவீதுதான் என்றும்,இப்பாடலில் அவன் தன்னை "கடவுளின் மகன்" என்றும் அறிவிக்கிறான்.கடவுளின் மகனாகிய தன்னை கோபப்படுத்தாமல் தன்னிடம் அணைத்து மன்னர்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவன் இப்பாடல் மூலமாக அறிவிக்கிறான் என்றும் ஏறத்தாழ உறுதியாகிறது.

இரா.இருதயராஜ்.

To Download this Essay:
https://drive.google.com/file/d/14YUk000-WlwN3snEwAcNfoC3yVdztRYY/view?usp=sharing

Saturday, March 21, 2020

உவமைகள் பேரழகு - ஏசாயா 47-ம் அதிகாரம்

உவமைகள் பேரழகு - ஏசாயா 47-ம் அதிகாரம் 

உவமைகளை கையாள்வது என்பது ஒரு கலை.தமிழ் மொழியில் உவமைகள் பயன்பாடு மிக அதிகம்.பெண்ணை நிலவுக்கு ஒப்பிட்டு,நிலவை புகழ்வது போன்று பெண்ணை வர்ணிப்பது என்பது தமிழ் கவிஞர்களுக்கு காய் வந்த கலை.அது போன்று ஹீப்ரு மொழியிலும் உவமைகளை மிக அருமையாக கையாண்டு இருப்பர்.குறிப்பாக இறைவாக்காளர் ஏசாயா மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பார்.

பாபிலோன் நாடு செல்வ செழிப்புடன் இருந்த காலம்.யூத மக்களை அடிமைகளாக பிடித்து செல்வதை பற்றியும்,யூத நாடு அடிமைப்பட்டு போவதை பற்றியும் ஏசாயா முன்னறிவித்து இருப்பார்.இதன் காரணமாக இந்நாட்டைப் பற்றி கோபம் கொண்டு அது எவ்வாறு தன்னுடைய இடத்தை இழக்க போகிறது என்று தன்னுடைய புத்தகத்தில் கூறியிருப்பார்.அவ்வாறு கூறும் பொழுது பாபிலோன் நாட்டை ஒரு இளம்பெண்ணுக்கு சமமாக்கி வர்ணித்து இருப்பார்.இப்பொழுது அவர் கூறுவதை கவனியுங்கள்.
1 மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; “மெல்லியலாள் “, “இனியவள்” என்று இனி நீ அழைக்கப்படாய்.
2 எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை; உன் முக்காடுதனை அகற்றிவிடு; உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.
3 உன் பிறந்தமேனி திறக்கப்படும்; உன் மானக்கேடு வெளிப்படும்; நான் பழி வாங்குவேன்; எந்த ஆளையும் விட்டுவையேன்.[ஏசா 47:1-3]
இந்த அதிகாரம் முழுவதும் இவ்வாறே இருக்கும்.ஒரு "கன்னி பெண்" எவ்வாறு பாதுகாக்கப்படுவாள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும்.அப்படிப்பட்ட பாதுகாப்பையும் பாசத்தையும் அவள் இனி எதிர்பார்க்க முடியாது என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

பாபிலோன் நாட்டை "ஒரு கன்னி பெண்" என்று வர்ணித்து எழுதுவது என்பது நமக்கு இரு செய்திகளை தருகிறது."கன்னி பெண்ணை" பழங்கால சமூகங்கள் எப்படி போற்றி பாதுகாத்தன என்பதையும்,பாபிலோன் நாடு கன்னிப்பெண்ணுக்கு சமமாக்க பட்டதால் அந்நாடு எவ்வகையான செழிப்பை கொண்டிருந்தது என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.கன்னிப்பெண் என்பவள் அழகு நிறைந்தவள்.அது போன்று இந்நாடும் அழகு மிகுந்தது என்று கூறுகிறார்.ஆனால் அந்த அழகு இனிமேல் இருக்காது என்று இறைவாக்கு உரைக்கிறார்.

Saturday, March 14, 2020

பிறவிக்குணம் - யார் காரணம்?

பிறவிக்குணம் - யார் காரணம்?

அனைவருக்கும் பிறவிக்குணம் என்று ஒன்று இருக்கும்.இன்னாருடைய மகன் அல்லது மகள் இவ்வகையான குணத்தைக் கொண்டிருப்பர் என்று கணிக்கும் மனிதர்களை நாம் கண்டிருப்போம். நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகள் என்று அனைவரின் பிறவிக் குணத்தைப் பற்றி நமக்கு சில எண்ணங்கள் இருக்கலாம்.அதை நாம் அவர்களிடம் கூறியிருக்கலாம் அல்லது கூறாமல் நமக்குள்ளேயே வைத்திருக்கலாம்.அதுபோன்றே நமக்கும் சில பிறவிக்குணங்கள் இருக்கலாம்.பிறவிக்குணங்களில் நல்லவைகளும் இருக்கலாம் கெட்டவைகளும் இருக்கலாம்.நம்முடைய நண்பர்களில் சிலபேருடைய குணங்களை கூர்ந்து கவனித்து இருப்பீர்கள்."இவன் அல்லது இவள் மிகவும் அமைதியாக இருக்கிறானே அல்லது இருக்கிறாளே,எப்படி?,இவள் மிகவும் அமைதியாக பேசுகிறாள்,கோபம் கொள்ளாமல் அமைதியாக பதில் கூறுகிறாள்,எப்படி?" என்று நாம் வியந்திருக்கலாம்.பொதுவாக பிறவிக்குணம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்படலாம்.
  • நம்மை அறியாமலேயே நாம் ஒரு குறிப்பிட்ட விதமாக செயல்படுவது.
  • நம்மை அறியாமலேயே நாம் சிலவற்றை விரும்புவது.
நம்முடைய பள்ளிக் காலங்களிலும் கல்லூரிக் காலங்களிலும் நமக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களைப் பற்றி  நமக்கு பலவித எண்ணங்கள் இருந்திருக்கும்.ஒரு சிறு தவறுக்கும் கடுமையாக கோபம் கொள்ளும் ஆசிரியரையும்,பெரும் தவறு செய்திருந்தாலும் கடுமை காட்டாமல் அமைதியாகவும் பொறுமையாகவும் பேசும் ஆசிரியர்களையும் நாம் கண்டிருப்போம்.அவ்விரு வகையான ஆசிரியர்களைப் பற்றி நாம் வியந்திருப்போம்.அவ்விருவரும் அவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன?ஒரு சிறு தவறு ஒருவருக்கு பெரும் தவறு போலவும், ஒரு பெரும் தவறு மற்றவருக்கு சிறு தவறு போலவும் இருக்க காரணம் என்ன?

சிறு வயதில்,பெரும்பாலும்,நம்முடைய பெற்றோர் நம்மை நற்பண்புகளை சொல்லிக் கொடுத்தே வளர்ப்பர்.ஆனாலும் சிலருக்கு திருடும் எண்ணம் வரக் காரணம் என்ன? தேவையான அனைத்தும் கிடைத்திருந்தாலும் திருடும் பழக்கம் சிலருக்கு இருக்கும் அதற்கு காரணம் என்ன? ஆண்,பெண் உறவுகள் ஒரு குறிப்பிட்ட வரைமுறையில்தான் இருக்க வேண்டும் என்று உள்ளது,ஆனாலும் இப்பொழுது நடைமுறையில் அவ்வாறு இல்லை.காரணம் என்ன? வரைமுறை மாறி நடப்போர் கூறும் காரணம் என்னவென்றால்,"நான் என்ன செய்வேன்,நான் அவ்வாறு செய்ய விரும்பா விட்டாலும் எனக்குள் அந்த எண்ணங்கள் உள்ளனவே,எப்படி?",இதற்கு என்ன காரணம்?

பதின்ம வயதில் ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்திருக்க வாய்ப்புள்ளது.சில குறிப்பிட்ட சிறுவர்கள் மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டிருப்போம்.அவர்களுடைய செயல்கள் பெரும்பாலும் பெண்களுடைய செயல்களை ஒத்திருக்கும்.நாம் அவர்களை பகடி செய்து விளையாடியிருக்கலாம்.பிறகு அவர்களை வெறுத்திருக்கலாம்.இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கு காரணம் என்ன என்று எப்பொழுதாவது சிந்தித்திருந்தோமானால் அவர்களை நாம் கண்ணியத்தோடு நடத்தியிருப்போம்.தொலைக்காட்சிகளில் அப்படிப்பட்ட சில ஆண்களையும் பெண்களையும் பேட்டிக்கண்டு ஒளிபரப்பியதை நான் பார்த்திருக்கிறேன்."நான் என்னுடைய செயல்களில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்ணாக உணர்ந்தேன்", என்று அவர்கள் கூறுவதை கண்டிருக்கிறேன்.

இப்படிப் பட்டவர்கள் திருநங்கைகள் என்று இன்று அழைக்கிறோம்.இவர்கள் இவ்வாறு இருக்க விரும்பிடுகின்றனரா?இல்லை.அவர்களுடைய பதின்ம வயதிற்கு பின்னர் அவர்களுடைய பாலின உணர்வுகள் அவர்களை அவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளுகிறது."நான் என்ன செய்வேன்,என் எண்ணங்கள் இவ்வாறுதான் உள்ளது", என்பது அவர்களுடைய பதிலாக இருக்கிறது.இவ்வகையான இயல்பிற்கு யார் காரணம்? அவர்களுக்குள் மறைந்திருந்த அந்த இயல்பை அவர்களுக்கு கொடுத்தது அவர்களை படைத்த கடவுள் என்றால் அதை எப்படி நாம் புரிந்து கொள்ள முடியும்.

பிறப்பில் நான் ஆணாக இருந்தாலும் என்னுடைய செயல்கள் பெண் போன்று உள்ளனவே,யார் காரணம்? அது தவறு என்றும் அறிந்திருந்தாலும் எனக்குள் அந்த எண்ணங்கள் தீயாய் எறிகின்றதே  ஏன்? மற்றவருக்கு அது இல்லையே ஏன்? இந்த எண்ணங்களின் விளைவாக நான் தவறு செய்தால்( நான் விரும்பவில்லை ஆனாலும்) யார் பொறுப்பு? இந்த எண்ணங்கள் எனக்குள் வர யார் காரணம்? 

நான் ஒரு பெண்ணாக பிறந்திருந்தாலும் என்னுடைய செயல்கள் ஆண் போலவே உள்ளனவே ஏன்?அதை நான் விரும்பாவிட்டாலும் அவ்வாறான  எண்ணங்கள் எனக்குள் இருந்தது எப்படி? என்னை விட்டு அகல மாட்டேன் என்கிறதே எப்படி?எப்படி எனக்குள் வந்தது? ஒரு பெண்ணாக நான் அமைதியாகவும் அடக்கமாகவும் இருக்க விரும்புகிறேன் அனால் முடியவில்லையே ஏன்? பெண்ணின் குணம் "அமைதி" என்றால் என்னுடைய இந்த தீவிர பேச்சுக்கு யார் காரணம்?

மேற்கூறியவைகளுக்கு யார் காரணம் என்று இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நினைக்கிறீர்கள்?இது போன்று எண்ணற்ற குணங்கள் உள்ளன.அனைத்தையும் விவரிக்க இயலாது.நாம் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் " என்னை படைத்தது கடவுள்" என்று நீங்கள் உறுதியாக நம்புவீர்கள்,குறிப்பாக கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்.உங்களை படைத்தது உங்கள் இறைவன் என்றால் உங்களுக்குள் இருக்கும் "மேற்கூறிய எண்ணங்களுக்கும்" அவர்தான் காரணம் அல்லவா?உங்களைப் படைத்த இறைவன் "உங்களை தற்போது நீங்கள் உள்ளவாறு படைத்திருக்கிறார் அல்லவா"? நீங்கள் உங்களை உண்மையாக சுய பரிசோதனை செய்து கொண்டால் உங்களுக்குள் இருக்கும் "தீய" எண்ணங்களை நீங்கள் கண்டு கொண்டிருப்பீர்கள்.அப்படியென்றால் உங்களுக்கு இருக்கும் இந்த "தீய" எண்ணங்களுக்கு காரணமும் கடவுளே!,அல்லவா? உங்களை படைத்தது அவர்தானே?

உங்களை தீய எண்ணங்கள் கொண்டவராக படைத்து விட்டு உங்களுக்கு தண்டனையும் கொடுத்தால் எப்படி நியாயமாகும்? உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட இயல்பை வைத்து விட்டு,அந்த இயல்பின் காரணமாக நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு தண்டனை எப்படி வழங்க இயலும்? பிறக்கும் ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்றால் அந்த ஒவ்வொருவரின் இயல்புக்கும் அவரே காரணம் அல்லவா?ஒரு பிராமண குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவர்தான் படைக்கிறார் என்றால் அக்குழந்தையை "சிலைகளை வணங்கும்படி" படைத்தது எதனால்? படைத்த தன்னையே வணக்கும் படி அவர் படைத்திருக்கலாமே?சிலைகளை அல்லது பிறவற்றை வணங்கும்படி கடவுள் அவர்களை படைத்தது விட்டு அவர்களை தண்டிப்பது எப்படி நியாயம்?அப்படிப்பட்டவர்களுக்கு சந்ததிகளை வழங்காமல் இருந்திருக்கலாமே?

எனவே தற்பொழுது "படைப்பு" பற்றிய நம் எண்ணங்களை மாற்றி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.நம்முடைய படைப்பிற்கு கடவுள்தான் காரணம் என்றால் நம்முடைய இயல்பிற்கும் அவரே காரணம் அல்லவா? அப்படியென்றால் கடவுள் மிக மோசமான செயலை செய்கிறார் என்றே பொருளாகும்.தவறு செய்யும் பய் நமக்கு இயல்பை கொடுத்து விட்டு பின்னர் தண்டிப்பது என்பது கடவுளின் செயல் என்று நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் இவ்வுலகைப் படைத்த இறைவன் அவ்வாறு அல்ல.இறைவன் அல்லது கடவுள் என்பவர் அப்படிபட்டவராக இருக்க முடியாது.

இறைவன் இரக்கமுள்ளவராக இருக்கிறார்.இரக்கம் என்றால் எவ்வாறு என்றால் நீங்கள் அவருக்கு முன்பாக தவறு செய்தாலும் அவர் உங்களை வெறுக்காமல் பொறுமையுடன் காத்திருக்கிறார்.நீங்கள் அவரை வணங்காமல் வேறு எதை வணங்கினாலும் பொறுமையுடன் இருக்கிறார்.மேலும் மனிதர்களை அவர் படைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.என் படைப்பிற்கு காரணம் என் தாய் மற்றும் தந்தையே.ஒருவருடைய தாய் தந்தை வழியாக அவர்  படைக்கப்பட வேண்டும் என்பதுதான் இறைவனுடைய செயலே அன்றி இறைவன் நேரடியாக நம்மை படைக்கிறார் என்பது மேற்கண்ட முரண்பாடுகளுக்கு நம்மை இட்டு செல்லும்.என் படைப்பிற்கு என் இயல்பிற்கும் காரணம் இறைவன் அல்ல,பதிலாக என் தாய் தந்தையரே!!

அப்படியென்றால் என் இயல்பிற்கு நானும் காரணம் அல்ல இறைவனும் காரணம் அல்ல,பதிலாக பெற்றோரே காரணம்.பிறப்பு அல்லது "பல்கி பெருகுதல்" என்பது பெற்றோர் வழியாக நடக்க வேண்டும் என்பதே இறைவனின் படைப்பு.உங்களையும் என்னையும் படைத்தது பெற்றோரே அன்றி இறைவன் அல்ல,ஆனால் இறைவன் வகுத்து தந்த வழிமுறையில் நம்மை படைத்துள்ளனர்.எனவே நம் தவறுகளுக்கு காரணம் நாமே அன்றி இறைவன் அல்ல.ஆனால் உலகில் உள்ள அனைத்தும் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.அவரின் மேற்பார்வையில் அனைத்தும் இயங்குகிறது.வழிமுறைகளை நமக்கு தந்தவரே இறைவன்.முதன் முதலில் மனிதர்களை அவர் படைத்து பின்னர் அவர்களை பல்கி பெறுக செய்திருக்க்கிறார்.பல்கி பெருகுதல் என்பது "ஆண்  பெண் இணைப்பின்" வழியாக நடைபெறுகிறது. 

அவ்வாறு ஒரு ஆணும் பெண்ணும் இணையும் பொழுது அவர்களுடைய இயல்புகளை பிறக்கும் சந்ததிகள் பெறுகின்றனர்.இதுவே இறைவனின் நடைமுறை.ஆண் ,பெண் இணைப்பு அவரின் வழிமுறை.இதற்கு மாறாக நடக்கும் அனைத்தும் இறைவன் விரும்பாதவைகளாக இருக்க வேண்டும்.

முடிவாக ஒவ்வொருவருடைய இயல்பிற்கும் காரணம் அவர்களுடைய பெற்றோரே.உங்களுடைய இயல்பும் உங்கள் மனைவியின்  இயல்பும் பிறக்கும் குழந்தைகளுக்கு கடத்தப்படுகிறது.இப்பொழுது உங்களுடைய இயல்பில் எது தவறானது என்று நீங்கள் அறிவீர்கள்.அதனை முளையிலேயே கிள்ளி ஏறிய முயல வேண்டும்.நற்பண்புகளை சிறு வயதிலேயே ஊட்டி வளர்க்கும் குழந்தைகள் அவர்களுடைய சந்திதிக்கு நல்ல இயல்புகளை கொடுக்க வாய்ப்புள்ளது.அப்படியென்றால் நம்முடைய கெட்ட இயல்புகளில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? தெரிய வில்லை.அதற்கு இறைவன் ஏதாவது வழிமுறைகளை கொடுத்துள்ளாரா என்று தெரியவில்லை.ஆனாலும் அவரை நாம் வழிபட்டு அவரிடம் வேண்டுதல் செய்யலாம்!

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:🔻
https://drive.google.com/file/d/167o8brJ5ri0eF6SC4hzrk_PRVr791kaA/view?usp=sharing

Saturday, February 22, 2020

ஏசாயா 42-ம் அதிகாரம்:விளக்கம்

ஏசாயா 42-ம் அதிகாரம்:விளக்கம் 


அத்தனையும் இனிப்பு 
ஏசாயா என்ற இறைவாக்காளர் எசேக்கியா என்ற அரசன் ஆட்சிபுரிந்த காலத்தில் வாழ்ந்தவர் ஆவார்.அவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு பிறகே தன புத்தகத்தை எழுத ஆரம்பிக்கிறார். புதிய ஏற்பாட்டில் முதல் நான்கு நற்செய்தி புத்தகங்களை எழுதியவர்கள் இம்முறையை பின்பற்ற வில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.இதன் மூலம் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டவர் யார் என்று நாம் புரிந்து கொள்ள முடியும்.இவரின் எழுத்துநடை படிப்போரை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.42-ம் அதிகாரத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதை சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்க இருக்கிறோம்.தொடர்ந்து செல்லும் முன் நாம் அறிந்து கொண்டிருக்க மற்றும் கொள்ள வேண்டிய அடிப்படை தகவல்களை கீழ் தந்துள்ளேன்.
  • ஏசாயா தன்னுடைய எழுத்துக்களை எபிரேய மொழியில் எழுதியுள்ளார்.
  • யூத மற்றும் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய இறைவனின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவர் எழுதியுள்ளார்.
  • அம்மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தன்னுடைய எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளார்.
  • யூத மக்கள் அல்லாதோர்க்கு இவர் எழுதவில்லை.நமக்கு எழுதியுள்ளார் என்பது போன்று பார்க்கக் கூடாது.
தற்போது இந்த அதிகாரத்தை படிக்க ஆரம்பிக்கலாம்.தமிழுக்கும் எபிரேய மொழிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அதில் ஒன்று,வார்த்தைகள் அல்லது எழுத்துக்கள் மூலம் ஒருவருக்குரிய மரியாதையையும் சேர்த்து தெரிவிப்பது."அவன்" என்ற சொல்லுக்கும் "அவர்" என்ற சொல்லுக்கும் பொருள் ஒன்றுதான் என்றாலும் கூட சுட்டிக்காட்டப்படுபவரின் மரியாதை அதில் அடங்கியுள்ளது.

பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்யப்படும் பொழுது,மொழிபெயர்ப்பு செய்பவர் பிற மொழியில் உள்ள பாத்திரங்கள் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருக்கிறார் என்பது அவருடைய மொழிபெயர்ப்பிலிருந்து வெளிப்படும்.எனவே மொழிபெயர்ப்பவரின் எண்ணங்களே தமிழில் படிப்பவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்.உண்மையில் அப்பாத்திரங்கள் அப்படிப்பட்ட மரியாதைக்குரியவைகளா என்பது மூல மொழியில் புலமை பெற்றிருந்தால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட முடியும் அல்லது மூல மொழியினை தாய்மொழியாக கொண்டிருப்பவர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

ஏசாயா புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்டது என்பதை முன்னரே தெரிவித்திருந்தேன்.42-ம் அதிகாரத்தில் முதல் ஏழு சொற்றொடர்கள்(வசனங்கள்) ஒரு குறிப்பிட்ட ஒருவரைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.இவர் யார் என்று நமக்கு தெரிய வேண்டும்.இந்த வாக்கியங்களை கூறுபவர் யார் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்நேரத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றொரு செய்தி என்னவென்றால் ப்ரோட்டஸ்டன்ட்டுகளின் தமிழ் திருமறையைவிட (CSI,பெந்தேகோஸ்து சபைகள் போன்றவை) கத்தோலிக்க திருமறை மிகவும் நன்றாக மொழிபெயர்ப்பு செய்ய பட்டிருக்கிறது.அருமையான தமிழ் வார்த்தைகள் சரியான மொழிபெயர்ப்பை தரும் வகையில் இருக்கிறது.ப்ரோட்டஸ்டண்டுகளின் திருமறையை தமிழை தாய்மொழியாக கொண்டிராத ஒருவர் மொழிபெயர்த்தத்தின் விளைவே இதற்க்கே காரணம்.எண்ணிலடங்கா தவறுகள் மற்றும் பொருத்தமற்ற வார்த்தைகள் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் விளைவு தவறான பொருள் கொள்ளப்படுதல் ஆகும்.எனவே இங்கு இரண்டு மொழிபெயர்ப்புகளை தரவிருக்கிறேன்.இந்த அடிப்படைகளை மனதில் நிறுத்திக் கொண்டு வாக்கியங்களை பார்க்கலாம்.
1 இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.
2 அவர் கூக்குரலிடமாட்டார்; தம்குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்;டார்.
3 நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார்.

4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
5 விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே;
6 ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.
7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.[கத்தோலிக்க திருமறையில் இருந்து]
1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான்  தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
2. அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார்.
3. அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.
5. வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குக் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது.
6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். [ப்ரோட்டஸ்டாண்டுகளின் திருமறை]
முன்னரே கூறியுள்ளபடி மேற்கண்ட வாக்கியங்கள் ஒரு குறிப்பிட்ட ஒருவரை குறிக்கிறது.அவர் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாக்கியங்களை கூறுபவர் "கர்த்தர்" ப்ரோட்டஸ்டண்டுகளாலும் "ஆண்டவர்" என்று கத்தோலிக்கர்களாலும் அழைக்கப்படுகின்ற இஸ்ரயேலின் இறைவன் ஆவார்.அவர் இறைவன் என்றால் அவர் இன்னொருவரை மரியாதை கொடுத்து அழைக்க வேண்டியது இல்லை.காரணம் அவர் இறைவன்,எனவே அனைத்தும் அவருக்கு கீழ்.இஸ்ரயேல் மக்களின் இறைவன் கூறுவதாக ஏசாயா நமக்கு குறிப்பிடுவது என்னவென்றால் ஒருவரை அவர் எழுப்ப இருக்கிறார்,அவர் குறிப்பிட்ட செயல்களை செய்ய போகிறார், என்பதே ஆகும்.

அவர் எழுப்ப இருக்க ஒருவருக்கு அவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள "அவர்" என்பது "அவன்" என்றும் மொழிபெயர்க்க படலாம்.பின் எப்படி "அவர்" என்று மோயில்பெயர்க்கப்பட்டது? தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த "அவர்",அதாவது எழுப்பப்படப்போகும் ஒருவர், மரியாதைக்குரியவாறாக தோன்றியிருக்கலாம்.அதன் காரணமாக "அவன்" என்று கூறுவதற்கு பதிலாக "அவர்" என்று மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவர் செய்யும் செயல்கள் அளப்பரிய செயல்களாக இருக்கிற காரணத்தினால் இவர் "இயேசுவாகத்தான்" இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் "அவர்" என்ற சொல்லுக்கு காரணம்.உண்மையில் இவ்வாக்கியங்கள் இயேசுவைத்தான் குறிக்கிறதா என்று நாம் கடைசியில் காண இருக்கிறோம்.

இஸ்ரயேல் மக்களுக்கு இது போன்ற அளப்பரிய செயல் ஒன்றை செய்ய போகும் மற்றொரு மனிதனைப் பற்றியும் ஏசாயா கூறியிருக்கிறார்.அங்கு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் எவ்வாறு மொழிப்பெயர்த்துள்ளனர் என்பதையும் நாம் பார்க்கலாம்.
28. கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.[ஏசா 44:28]
 28 சைரசு மன்னனைப்பற்றி, “அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான் என்றும், எருசலேமைப்பற்றி, “அது கட்டியெழுப்பப்படும்” என்றும் திருக்கோவிலைப்பற்றி, “உனக்கு அடித்தளம் இடப்படும்” என்றும் கூறுவதும் நானே.[எசா 44:28]
இஸ்ரயேலின் இறைவனுடைய எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றப் போகும் ஒருவனைப் பற்றி ஏசாயா இங்கு குறிப்பிடுகிறார்.அம்மனிதனை இங்கு "அவன்" என்று மொழிபெயர்த்துள்ளனர்.இவ்வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மனிதன் வேறு யாருமல்ல,அவன் "மீதியா -பெர்சியா" தேசங்களின் அரசன் கோரேசு(Cyrus) ஆவான்.இத்தனைக்கும் இது ஒரு நிறைவேறிய இறைவாக்கு ஆகும்.இங்கு இம்மன்னனை "அவன்" என்று மொழிபெயதுள்ளனர்.இங்கும் கூட இஸ்ரயேலின் இறைவன் கூறுவது போன்றுதான் வாக்கியம் உள்ளது.முன்னர் குறிப்பிட்ட பகுதியிலும் அவ்வாறுதான் உள்ளது.ஆனால் ஓரிடத்தில் "அவர்" என்றும் மற்றொரு இடத்தில "அவன்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.ஏன்? மொழிபெயர்ப்பாளர்கள் மன நிலையே இதற்கு காரணம்.தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை பொறுத்த வரையில் கோரேசு மன்னன் முக்கியமானவன் கிடையாது.ஆனால் அவன் இஸ்ரயேல்  கடவுளால் அழைக்கப்பட்ட ஒருவன் ஆவான்.அவனைப்பற்றி கூறியுள்ளவைகள் நிறைவேறி உள்ளன.ஆனால் 42-ம் அதிகாரத்தில் கூறியுள்ளவைகள் இன்னும் நிறைவேறி உள்ளனவா என்று ஆராய வேண்டி உள்ளது.

எனவே மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது.யாரை உயர்த்த வேண்டும் யாரை தாழ்த்த வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணங்களின் அடிப்படையிலேயே உள்ளது.இஸ்ரயேலின் இறைவன் உயர்ந்தவர் என்பதினாலும் அவர் யாரையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் இல்ல என்ற காரணத்தினாலும்,குறிப்பிடப்பட்டவர் யார் என்று இன்னும் தெரியாததினாலும்  மேற்கண்ட வாக்கியங்களை கீழ்வருமாறு எழுதலாம்.
1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவனே; என் ஆவியை அவன் மேல் அமரப்பண்ணினேன்; அவன் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவான்.
1 இதோ! என் ஊழியன் ! அவனுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவன் அவன்; அவனால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவனுள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவன் மக்களினங்களுக்கு நீதி வழங்குவான்.
யார் இந்த ஊழியன் என்று  தெரிந்து கொள்ள 16-ம் வாக்கியத்தை பார்க்க வேண்டும்.அதில் குருடன் என்று ஒருவன் குறிப்பிடப்பட்டுள்ளான்.
16. குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
16 பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்; அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்; அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்; கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்; இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன; நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன். 
16-ம் வாக்கியத்திற்கு முன்பு வரை தன்னை யார் என்றும் எப்படிப்பட்டவர் என்றும்  இஸ்ரயேலின் இறைவன் கூறியுள்ளார்.அதன் பிறகு இந்த வாக்கியத்தை கூறுகிறார்.இதில் குருடர் என்று குறிப்பிடப்படுவது யார்? குருடன் என்று ஒருமையில் உள்ளதா அல்லது பன்மையில் உள்ளதா என்று கவனித்தால்,இது பன்மையில் உள்ளது.எனவே "இக்குருடன்"ஒரு தனிப்பட்ட மனிதன் கிடையாது.குருடரான இம்மக்களுக்கு நன்மையை செய்ய போவதாக கூறுகிறார்.தொடர்ந்து என்ன கூறப்பட்டுள்ளது என்று கவனியுங்கள்.இந்த குருடர் யார் என்று 19-ம் வசனத்தில் உள்ளது.அதைப்படித்து பாருங்கள்.

18. செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.
19. என் தாசனையல்லாமால் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?
18 செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.
19 குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?
அதாவது தன்னுடைய ஊழியனை(தாசன்) குருடன் என்று இஸ்ரேலின் இறைவன்  குறிப்பிடுகிறார்.மேலும் அவனை செவிடன் என்றும் குறிப்பிடுகிறார்.ஏன் அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று அவரே காரணம் கூறுகிறார்.
20. நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான்.
20 பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.
பல செயல்களை அவனுக்கு முன்பு(தாசன் ,ஊழியன்)   இஸ்ரயேலின் இறைவன் நடத்திக் காட்டியிருந்தாலும் அவன் அவற்றின் மூலம் எதையும் காண வில்லை,அவரை புரிந்து கொள்ளவும் இல்லை.எனவே அவனை குருடன் என்று கூறுகிறார்.குருடர்களாக இந்த இஸ்ரேலின் மக்களுக்குத்தான் தான் நல்ல செயல்கள் பல செய்யவிருப்பதாக 16-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார். 

இதையெல்லாம் கூறியும் இன்னும் கூட அவ்வாறுதான் தங்களுடைய பழைய வழிகளில்தான் நடக்கிறார்கள் என்று 23-ம் வசனத்திலிருந்து கூறுகிறார்.

முடிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் என்னவென்றால்,
  • இங்கு கூறப்பட்டுள்ள தாசன் அல்லது ஊழியன் வேறு யாருமல்ல "இஸ்ரயேல் மக்கள்தான்" அவர்கள்.
  • இஸ்ரயேல் மக்களை தன்னுடைய ஊழியன் என்றும் தாசன் என்றும் இன்னும் பல இடங்களில் இஸ்ரயேலின் இறைவன் கூறியுள்ளார்.
  • ஏசா:44:1-ல் "என் ஊழியன்(தாசன்) யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும் ஏசா 43:8-ல் "கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.இஸ்ரயேல்  மக்களைத்தான் குருடர்கள் என்றும் தாசன் என்றும் குறிப்பிடுகிறார் என்று இதன் மூலம் விளங்கும்.
அப்படியென்றால் இந்த அதிகாரத்தின் முதல் ஏழு வாக்கியங்களும் ஒரு தனிப்பட்ட ஒருவனைப் பற்றி குறிப்பிடவில்லையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.இஸ்ரயேல்  மக்களை ஒரு தனி மனிதனைப் போன்று உருவகப் படுத்தி பேசியுள்ளது போன்றுதான் தோன்றுகிறது.

இல்லை அவ்வாறு ஒரு தனி மனிதனை இவ்வாக்கியங்கள் குறிப்பிட வில்லை என்றால் இது இயேசுவையும் குறிக்காது.அந்த தாசன் செய்யப்போகும் செயல்கள் இன்னும் நடைபெற வில்லை.
4 உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர்.
4. அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். 
உலகில் நீதியை நிலைநாட்டி விட்டுத்தான் இயேசு இறந்தாரா? இல்லை. உலகம் இன்னும் அநியாயத்துக்குள்தான் உள்ளது. எங்கும் அநியாயம்.
6. நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,
7 பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
சிறையில் உள்ளோர் என குறிப்பிடப்பட்டவர்கள் யார்? சிறைகளில் இருந்த மற்றும் சிதறடிக்கப்பட்டிருந்த இஸ்ரயேல்  மக்களைத்தான் இது குறிப்பிடுகிறது.ஏனெனில் இப்புத்தகம் அவர்களுக்குத்தான் எழுதப்பட்டது.அவ்வாறு இருந்த அனைவரையும் இயேசு விடுவித்த பின்தான் இறந்தாரா? இல்லை.

எனவே இது இயேசுவும் இல்லை என்றால் யார்? ஒரு வழிதான் உள்ளது,அது அவர் இன்னும் வரப்போகிற ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது இஸ்ரயேல்  மக்கள் யாரும் சிறைகளில் இல்லையே! எனவே எப்படிப்பார்த்தாலும் 1-7 வாக்கியங்கள் குறிப்பிடுபவன இஸ்ரயேல்  மக்களையே என்பதுதான் சரியாக இருக்க வாய்ப்புள்ளது.

இரா.இருதயராஜ்
Download Here↓ 

Friday, February 21, 2020

ஆல்பா ஒமேகா யார்?

ஆல்பா ஒமேகா யார்?


ஆல்பா(Alpha) மற்றும் ஒமேகா(Omega) என்பது கிரேக்க மொழியின் முறையே முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் ஆகும். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் இவ் வெழுத்துக்களை குறிப்பிட்டு ஒரு வாக்கியம் உண்டு. அதிகமாக பயன்படுத்தப் படும் வாக்கியங்களில் இதுவும் ஒன்று ஆகும். இப்புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாக்கியத்தின் மூலம் நமக்கு வெளிப்படுத்த நினைக்கும் கருத்து என்னவென்றால்,இவ்வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை பேசுபவர் எவரோ அவரே "முதலும் கடைசியுமாக இருக்கிறார்" என்பதே ஆகும்.இப்புத்தகம் யாரால் எழுதப்பட்டது என்பது இன்னும் முடிவாக வில்லை.ஆனால் கி.பி 100-களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.அக்காலகட்டங்களில் கிறித்தவம் ஓரளவுக்கு வேரூன்ற ஆரம்பித்து விட்டிருந்தது.மேலும் இப்புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஆனால் தற்போதைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்தே வந்தவைகள் ஆகும்.

இவ்வாக்கியம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ள முதலில் அவ்வாக்கியம் எவ்வாறு தமிழில் உள்ளது என்பதை காணலாம்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
8 “அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. 
இந்த வாக்கியம்  பல கேள்விகளை எழுப்புகிறது. இப்புத்தகத்தை எழுதியவர் உள்நோக்கத்தோடு,தம்முடைய கருத்துக்களை அல்லது தான் சார்ந்துள்ள கருத்துக்களை கூறுவதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளார் என தோன்றுகிறது.தன்னுடைய கருத்துக்கள் யூதர்களுக்கும் கற்றறிந்தவர்களுக்கும் ஏற்புடையதாக இருக்காது என்ற அச்சத்தில் தன்னுடைய கருத்துக்கள் வெளிப்படையாக தெரியாதவாறு எழுதியுள்ளார்.முதல் வரிகளில் உள்ள கருத்து ஒன்றாகவும் அடுத்த வரியில் உள்ள கருத்து முதல் அவருக்கு முரணானதாகவும் இருக்கிறது.இரண்டையும் ஒரு சேர எழுதியுள்ள காரணத்தினால் இவர் மீது குற்றம் சாட்டுவது கடினம்.தன மீது குற்றம் சாட்ட வழி இல்லாதவாறு,"இப்படிக் கேட்டால் அப்படியும் அப்படிக் கேட்டால் இப்படியும்" கூறி தப்பித்து கொள்ளும் அளவிற்கு எழுதியுள்ளார்.கீழ்கண்ட கேள்விகளை கவனித்தால் அது புரியும்.
  • இவ்வாக்கியத்தை கூறுபவர் "எல்லாம் வல்லவர் " என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குழப்பம் இல்லாதவாறு "கர்த்தர்" அல்லது "ஆண்டவர்" என்று  உள்ளது.எனவே இதைக் கூறுபவர் "இயேசு" என்று கூற முடியாது.
  • "எல்லாம் வல்ல ஆண்டவரை அதாவது கர்த்தரை" எப்படி "இருந்தவர்" என்று கூற இயலும்? "இருக்கின்றவராகவே இருக்கிறேன்" என்று கூறிய ஒருவரை "இருந்தவர்" என்று கூறியது எப்படி?
  • "இருந்தவர்" என்றால், இருந்து, பின்னர் இல்லாமல் போன ஒருவரைத்தானே  குறிக்கும்? "எல்லாம் வல்லவர்" எப்படி "இல்லாமல்" போனார்?
  • "எல்லாம் வல்லவர்தான் பிதா" என்றால் அவர் இறந்ததாக இவ்வாசிரியர் கூறுகிறாரா?
  • இல்லை,இவ்வார்த்தைகளை கூறுபவர் "இயேசுதான்" என்றால்,இயேசு எல்லாம் வல்லவரா? எல்லாம் வல்லவர் என்றால் ஏன் அடி வாங்கினார்?
  • மேலும் இயேசு தன்னை "ஆல்பா ஒமேகா" என்று கூறுகிறாரா?அப்படித்தான் என்றால் ஏசா:41:4 யாரைக் குறிக்கிறது?
  • 4 இவற்றைச்செய்து முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்தே தலைமுறைகளை அழைத்தவரன்றோ! ஆண்டவராகிய நானே முதலானவர்! முடிவானவற்றுடன் இருக்கப் போவதும் நானே!
  •   4. அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே.
 மேற்கண்ட வார்த்தைகளை கூறியவர் யார்?யாரைக் குறித்து அவர் கூறுகிறார்? இயேசுதான் கடவுள்,பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுள் அவர்தான் என்று தன்னுடைய எழுத்துக்கள் மூலம் கூற விரும்பியுள்ளது போன்று தோன்றுகிறது.யூதர்கள் இக்கருத்தினை கண்டு நகைப்பது மட்டுமல்லாது தன்னை கொன்று போடுவார்கள் என்று இவர் அஞ்சியிருக்கலாம்.அதன் விளைவாக "வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது" போன்று எழுதியுள்ளார்."இது இயேசுவா" என்றால் இல்லை கடவுள் என்பதும்,இது கடவுளா என்றால், இல்லை இயேசு என்பதும் இதன் மூலம் சாத்தியமாகிறது.

இயேசுவை கடவுளாக ஆக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருப்பது நன்றாக தெரிகிறது.இதனை சற்று புரிந்து கொண்டு படித்தால் உண்மை விளங்கும்.வெளிப்படுத்தல் புத்தகத்தில் வருகின்ற அக்குறிப்பிட்ட வாக்கியம் புதிதாக கிறித்தவத்தில் இனைந்த ஒருவருக்கு மிகவும் குழப்பம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1CneHTVEnlJMPJwUWgIdh8bCHX2Nsovcv/view?usp=sharing

Friday, February 7, 2020

இயற்கையை வெல்லுமா செயற்கை?

இயற்கையை வெல்லுமா செயற்கை?


இயற்கை 
மனுக்குலம் எதையெல்லாம் படைக்கவில்லையோ அல்லது படைக்க முடியவில்லையோ அவையெல்லாம் இயற்கை என்று நாம் வரையறுக்கலாம். கடல் இயற்கை, காடு இயற்கை, வானம் இயற்கை,மரம் இயற்கை, மாடு இயற்கை, மனிதன் இயற்கை, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.கார் செயற்கை,  கப்பல் செயற்கை, வானூர்தி செயற்கை, தொலைகாட்சி செயற்கை என்று அடுக்கிக்கொண்டு செல்லலாம்.அறிவியல் மனிதனின் வாழ்க்கையை செழுமைப் படித்தியிருக்கிறதா அல்லது மழுங்கடித்திருக்கிறதா என்று சிந்தித்தோமானால் என்ன பதில் கிடைக்கும் என்பதுதான் இக்கட்டுரை.

கார்களின் கண்டுபிடிப்பு மனுக்குலத்தின் மகத்தான செயல் என்று நாம் நினைக்கிறோம்.நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல முடிகிறது,எனவே இது ஒரு மகத்தான கண்டுபிடிப்புதான்.நோய்வாய் பட்ட நேரத்தில் மிகவும் பயனுடையது.ஆனால் உடல் உழைப்பை சிறிது சிறிதாக கார்கள் நம்மைவிட்டு அகற்றிக் கொண்டிருக்கின்றன.உழைப்பு என்பது உடலின் இயக்கம்.


ஊர்திகள் கண்டுபிடிக்கப் படாமல் இருந்திருந்தால் மனிதனின் உடல் இயக்கம் இப்பொழுது இருப்பதை விட மிக அதிகமாக இருந்திருக்கும். இயக்கத்தோடு தொடர்புடையது உணவு.எனவே உணவு பழக்க வழக்கங்கள் மாற்றம் கொண்டிருந்திருக்கும். உணவின் சக்தி வீணடிக்கப்படாமல் ஆற்றலாக மாற்றப்பட்டிருக்கும்.மனிதனுக்கு அது பெரும் பயனுடையதாக இருந்திருக்கும்.இயக்கம் குறைந்ததின் காரணமாக தன உடலில் தேவையில்லாத கொழுப்புக்களை சேமித்து வைக்கிறான்.அது அவனுக்கு தீங்காக முடிகிறது.உணவிற்காக ஆடுமாடுகளையும் தன் உதவிக்காக குதிரை,கழுதை போன்ற விலங்குகளையும் தன் கூடவே வளர்த்திருப்பான்.சக்தி வீணடிக்கப்பட்டிருக்காது.ஆனால் தற்போது தன்னுடைய ஊர்திகளுக்காக மண்ணையும் கூட விடாமல் தோண்டி எரிபொருளை எடுக்கிறான்.எரிபொருட்கள் எறிவதன் மூலமாக தனக்கு தீங்கை தானே வரவழைத்துக் கொள்கிறான்.

இது எல்லாம் தெரியாமலா இறைவன் இவ்வுலகை படைத்திருப்பார்?தன் கண்டுபிடிப்புகள் அபாரமானவைகள் என்று இன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.இன்று இயற்கையே பெரியது என்று உணர்ந்து கொண்டோம்.இயற்கையை, செயற்கையாக உருவாக்க இயலாது.படைத்தவைகளில் சிறந்தது கடவுளின் படைப்பாகிய இயற்கையாக உள்ளவைகள் மட்டுமே.

இரா.இருதயராஜ்.

Saturday, January 25, 2020

உவமைகளின் பேரழகு - ஓசியா இரண்டாம் அதிகாரம்

உவமைகளின் பேரழகு - ஓசியா இரண்டாம் அதிகாரம் 

உவமை என்பது தமிழில் அடிக்கடி கவிஞர்களால் பயன்படுத்தும் ஒரு கருவி ஆகும். கருத்துக்களை பசுமரத்தாணி போல் பதிய செய்யும் தகுதி உவமைகளுக்கு உண்டு. திருமறையிலும்  இவ்வாறான உவமைகளை நாம் காணலாம். திருமறையில் உவமைகளை அதிகம் பயன்படுத்திய இருவர் ஏசாயா மற்றும் ஓசியா  ஆவர்.இதில் ஓசியா மூலம் தான் கூற வரும் கருத்தை கர்த்தர் கூறும் விதமானது,ஒருவருடைய இருதயத்தை சுத்தியலைக் கொண்டு அடிப்பதைப்போல் இருக்கும்.இன்றைய திரைக்கதைகள் தோற்றுப்போகும் அளவுக்கு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கும்.இஸ்ரயேல் நாடானது இரண்டு நாடுகளாக பிரிந்து சென்ற பிறகு வடக்கு பகுதி இஸ்ரயேல்  என்றும் தெற்கு பகுதி யூதா என்றும் அழைக்கப்பட்டது.வடநாடான இஸ்ரயேல் கர்த்தரை விட்டு வழிவிலகி சென்று விட்டது.அதை சுட்டி காட்ட முதல் இரு அதிகாரங்களை ஓசியா பயன்படுத்தியுள்ளார்.

ஒரு விபச்சாரியை மனம் செய்து கொள்ளுமாறு ஓசியாவை கர்த்தர் கூறுகிறார்.வடக்கு நாடான இஸ்ரயேலின் செயலை இது குறிக்கிறது.அவள் ஓசியாவுக்கு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள்.நாடு விபசாரம் செய்கிறது.கர்த்தரைவிட்டு அந்நிய கடவுள்களை தொழுதுகொள்கிறது.இதன் பின்னர் வரும் இரண்டாம் அதிகாரத்தின் ஆரம்பத்தில் ஓசியா பேசுவது போல் வார்த்தைகள் இருக்கும்.இங்குதான் உவமை ஆரம்பிக்கிறது.
1 அம்மீ என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். “ருகாமா” என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.
2 “வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல; நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும்.[ஓசையா 2:1,2]
1. உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப் பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள்.
2. உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும் தன் வியாபாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்.[ஓசி 2:1,2]
அம்மீ என்றால் "என் மக்களே" என்றும் "ருகாமா" என்றால் "இரக்கம் பெற்றவள்" என்றும் பொருளாகும்.ஓசியா தன் குழந்தைகளை பார்த்து மேற்கண்டவாறு கூற சொல்கிறார்.விபசாரியான தன் மனைவியை குறித்து மனம் வருந்தி கீழ்வருமாறு கூறுகிறார்.

2 “வழக்காடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல; நான் அவளுக்குக் கணவனுமல்ல; அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசார குறிகளைத் தன் மார்பினின்றும் அகற்றட்டும்.
இஸ்ரயேலை வெறுத்து அவர்களுக்கு இனி தான் கடவுள் அல்ல என்று  கர்த்தர் கூறுவது போன்று இது உள்ளது.அடுத்தடுத்த  வசனங்கள் நேரடியாகவே கர்த்தர் பேசுவது போன்று மாறிவிட்டது.இந்நிலையில் ஓசியாவின் விபசார மனைவி தன் விபசாரத்தை தொடர்ந்ததால் மேற்கண்ட வசனத்தை கூறினார்.தொடர்ந்து ஓசியா கூறுகிறார்,
5 அவர்களின் தாய் வேசியாய் வாழ்ந்தாள்; அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்; “எனக்கு உணவும் தண்ணீரும், ஆட்டு மயிரும் சணலும், எண்ணெயும் பானமும் தருகின்ற என் காதலரைப் பின் செல்வேன்” என்றாள்.
6 ஆதலால், நான் அவள் வழியை முள்ளால் அடைப்பேன்; அவள் எதிரில் சுவர் ஒன்றை எழுப்புவேன்; அவளால் வழி கண்டுபிடித்துப் போக இயலாது.
7 அவள் தன் காதலர்களைப் பின்தொடர்ந்து ஓடுவாள்; ஆனால்; அவர்களிடம் போய்ச் சேரமாட்டாள். அவர்களைத் தேடித் திரிவாள்; ஆனால் அவர்களைக் காணமாட்டாள். அப்போது அவள், “என் முதல் கணவனிடமே நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதைவிட, அப்போது எனக்கு நன்றாயிருந்தது” என்பாள்.
8 கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் அவளுக்குக் கொடுத்தது நானே என்பதை அவள் அறியவில்லை. நான் வாரி வழங்கிய பொன், வெள்ளியைக் கொண்டே பாகாலுக்குச் சிலை செய்தார்கள்.
எட்டாவது வாக்கியத்தை திரும்ப வாசித்துப் பார்த்தால் கர்த்தர் கூறுவது போன்றே இருப்பதை உணர முடியும்.ஓசியா பேசுவது போன்று கர்த்தர் இஸ்ரயேல் மக்களை பார்த்து பேசுகிறார்.9-13 வாக்கியங்கள் ஓசியா தன் மனைவிக்கு கொடுக்கும் தண்டனையை குறித்து கூறுகிறார்.இது உவமை.உண்மையில் கர்த்தர் இஸ்ரயேல் மக்களுக்கு செய்யும் செயல்களைக் குறித்து அவ்வாக்கியங்கள் பேசுகின்றன.

இவ்வளவுக்கும் பிறகு ஓசியா  தன மனைவியை நேசிக்கிறார்.அவளை அழைத்து சேர்த்துக் கொள்வதை பற்றி கூறுகிறார்.இதை கர்த்தர் இஸ்ரயேல் மக்களை பார்த்து கூறுகிறார் என்பதை 15-வைத்து வாக்கியத்தின் மூலம் அறியலாம்.
14 “ஆதலால் நான் அவளை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன்.
15 அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆகோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியதுபோல் பாடுவாள்.
16 அந்நாளில், ‘என் கணவன்’ என என்னை அவள் அழைப்பாள்; ‘என் பாகாலே’ என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்” என்கிறார் ஆண்டவர்.
14. ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,
15. அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.
16. அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். 
கடைசி வாக்கியம் "கர்த்தர் கூறுகிறார்" என்றே உள்ளது.சொல்ல வரும் கருத்தை மற்றவர் மூலமாக கர்த்தர் கூறுகிறார்.ஓசியா தன் மனைவியிடம் பேசுவது போலவும் உள்ளது அதே நேரத்தில் கர்த்தர் தன் மக்களிடம் பேசுவது போன்றும் உள்ளது.இவ்வாறான உவமை மிக அரிது.


இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
HERE!!

Friday, January 24, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 7(இறுதி)

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 7(இறுதி)


திரித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது.மிக சரியாக கூறுவது என்றால் முடிவுக்கு கொன்டு வரப்பட்டது.ஆனால் கேள்விகளும் குழப்பங்களும் இன்னும் மிச்சம் இருக்கத்தான் செய்கிறது.நைசீன் முடிவுகள்(Creed of Nicene) உரோம அரசின் முடிவாக இருந்த காரணத்தினால் அரசை எதிர்த்து செயல்பட முடியாமல் அதிருப்தியாளர்கள் ஒதுங்கி விட்டனர்.உரோம அரசின் ஆதரவோடு கிறித்தவம் தன்னை மாற்றிக் கொண்டது.அரசிற்கு நெருக்கமானவர்கள் யார்,அவர்கள் மூலமாக அதிகாரத்தை மேலும் பெருக்கிக் கொள்வது எப்படி என்ற எண்ணங்கள் மேலோங்கி இருந்தன.காலத்தின் போக்கில் தன்னை தனியான அதிகார மையமாக வளர்த்துக் கொண்டது.கிறித்தவத்தின் வளர்ச்சியில் "திரித்துவம் பற்றிய சர்ச்சை" நீண்ட கால போர் ஒன்றை போலவே பார்க்கப் படுகிறது.               போரிடும்                    குழுக்களிடையே நிலவுகின்ற  "வெற்றி பெரும் வேட்கை", உண்மையான போர்களில் இருப்பதை போன்றே இருந்ததை வரலாறுகளின் மூலம் உணர முடிகிறது.கருத்துக்களை தங்கி நிற்கும் குழுக்கள் தங்களுடைய ஆதரவாளர்களை திரட்டுவதிலும்,தங்களுக்கு எதிர்ப்பாளர்களை எப்படி கவிழ்ப்பது,அதற்காக அரசின் ஆதரவை எப்படி பெறுவது,ஆதரவைப் பெறுவதற்காக என்ன செய்வது போன்ற செயல்கள் கிறித்தவத்தின் அடிப்படை தத்துவங்களை நகைக்க செய்துவிடும் அளவிற்கு இருக்கின்றன.இந்த திரித்துவ போரை தற்பொழுது காண வேண்டும் என்றால் தற்போதைய CSI மற்றும் RC சபைகளில் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறைகளை பார்த்தால் போதுமானது.

ஆதரவுகள் எப்படி திரட்டப் படுகின்றன, எதிர்ப்பாளர்கள் எவ்வாறு கையாளப் படுகின்றனர்,ஆட்சியாளர்களுடன் எப்படி தொடர்பை ஏற்படுத்து கின்றனர், ஆட்சியாளர்களுக்கு இவர்கள் தயவு ஏன் தேவைப் படுகிறது.  ஆட்சியாளர்களும் இவர்களும் எப்படி        ஒருங்கிணைந்து  செயல் படுகின்றனர், கிறித்தவத்தின் அடிப்படை கருத்துக்கள் எப்படி காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன போன்ற செயல்கள் இன்றைய CSI மற்றும் RC சபைகளில் கண்கூடாக தெரியும் நிகழ்வுகள் ஆகும்.இது போன்றுதான் அன்றைய உரோம அரசில் "திரித்துவப் போர்" நடைபெற்றது.

திரித்துவத்தின் அடிவேர் எங்குள்ளது? ஏன் திரித்துவம் என்ற ஒன்று தோன்றியது?இக்கேள்விகளுக்கு பதில் வேண்டுமானால் அக்காலகட்டத்தில் நிலவிய சில எண்ணங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.எவ்வகையான எண்ணங்கள் திரித்துவம் பற்றிய கேள்விகளுக்கு இட்டுச் சென்றது என்று ஆராய வேண்டும்.அக்காலத்தில்,குறிப்பாக கிரேக்கர்களில் அரிஸ்ட்டாட்டில்,பிளாட்டோ போன்றோர் கொண்டிருந்த எண்ணங்கள் பற்றி நாம் அறிந்தோமானால் அன்றைய காலகட்டத்தில் கிரேக்கர்கள் மற்றும் அவர்கள் எங்கெல்லாம் வாந்தனரோ அங்கெல்லாம் இவ்வெண்ணங்கள் பரவியிருக்க வேண்டும்.மனுக்குலம் இவ்வளவு வேதனைகள் பட காரணம் என்ன,இவ்வளவு கெட்ட எண்ணங்களுக்கு காரணம் என்ன,கடவுள்தான் இவ்வுலகை படைத்தார் எனில் ஏன் இவ்வளவு அநியாயங்கள்,தவறு செய்தோர் தண்டிக்கப்பட மாட்டார்களா,போன்ற எண்ணங்களே அவைகள்.

மேற்கூறிய எண்ணங்கள் கிரேக்கர்களிடையே மட்டும் இல்லை,அனைத்து இனங்களிலும் சிந்தனை செய்வோர் இடையே இவ்வெண்ணங்கள் இருந்திருக்க வேண்டும்.கிரேக்கர்கள் மத்திய தரைக்கடல் மற்றும் ஆசியாவை வென்று அப்பகுதி முழுவதும் பரவிய பின்னர் அவர்களுடைய எண்ணங்களும் பரவின.ஆனால் இவ்வெண்ணங்களுக்கு கிரேக்கர்கள் மட்டும் காரணம் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.யூதர்கள் கூட இவ்வெண்ணங்களை கொண்டிருந்தனர் என்பதை பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள் என்ற இரு பிரிவினர் வழியாக நாம் அறியலாம்.

பாவம் என்றால் என்ன என்று ஒவ்வொரு இனமும் வெவ்வேறு வகையான கருத்துக்களை கொண்டிருந்தன.யூதர்கள் தங்களுடைய எழுத்துக்கள் மூலமாக,அதாவது பழைய ஏற்பாடு மூலமாக, இதற்கான விளக்கத்தை கொண்டிருந்தனர்.தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க ஒருவர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கொண்டிருந்தனர்.தங்கள் வழிபாடும் கடவுளே அவரை அனுப்பி வைப்பார் என்று அவர்களுடைய பழைய ஏற்பாடு கூறுகிறது.அவர்களில் பலபேர் "தான்தான் அவர்" என்று கூறி இறந்துபோயிருக்கின்றனர்.அதாவது அவ்வப்போது இத்தகைய மனிதர்கள் சிலர் தோன்றிக்கொண்டிருந்தனர்.கிரேக்கர்களும் யூதர்களும் சேர்ந்து வாழும் சூழ்நிலை உருவானபொழுது இரண்டு பேருடைய எழுத்துக்களும் இரண்டு பேருக்கும் தெரிய வந்தன.

மனுக்குலமானது தன்னுடைய "பாடுகளில்" இருந்து விடுபட என்ன வழி என்று கிரேக்கம் சிந்தித்தது.யூதர்கள் தங்களை  "தங்களுடைய அடிமைத்தனத்தில்" இருந்து விடுவிக்க "மேசியா வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.பாவம் என்றால் என்ன என்பது பற்றி யூதர்களுடைய புத்தகம் தெளிவாக விளக்கங்களை கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.இப்புத்தகத்தை அறிந்து கொண்ட கிரேக்கர்கள் மற்றும் கிரேக்கர்களுடைய கருத்துக்களை அறிந்து கொண்ட யூதர்கள் என்று ஒரு புதிய "சிந்தனையாளர்கள் கூட்டம்" உருவாகி வளர்ந்து வர ஆரம்பித்தது.யூதர்களை விடுவிக்க வரப்போகும் "மேசியா",இப்பொழுது சிறிது மாற்றம் கொண்டு மனுக்குலத்தை விடுவிக்க வருகிறார் என்ற புதிய எண்ணங்கள் இந்த சிந்தனையாளர்கள் மத்தியில் உருவாகியது என்று நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.இந்த எண்ணத்தை யூதர்கள் அனைவருமோ அல்லது கிரேக்கர்கள் அனைவருமோ கொண்டிருக்க வில்லை இரு குழுக்களிலும் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே இக்கருத்தை கொண்டிருக்க வேண்டும்.இந்த இரு குழுக்களிலும் இவ்வகையான எண்ணம் கொண்டோர் மத்தியில் இயேசு வாழ்ந்திருக்க வேண்டும்.இவ்வகையான எண்ணங்கள் அப்பொழுது நிலவின என்பதற்கு எண்ணற்ற தரவுகள் உள்ளன.

கிரேக்கர்கள் தங்கள் வெற்றி கொண்ட பகுதிகளில் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.அவ்வாறு அவர்கள் ஏற்படுத்திய குடியிருப்பு பகுதி எகிப்தில் உள்ள "அலெக்சாண்டிரியா(Alexandria)" நகரம் ஆகும்.கி.மு.100-களில் இருந்து இந்நகரம் பெரும் வணிக நகரமாக நிலவியது.பல்வேறு மக்கள் இங்கு வந்து குடியேறினர்,குறிப்பாக யூதர்கள்.இந்நகரம் பெரும் நூலகம் ஒன்றைக் கொண்டிருந்தது என்றால் எவ்வகையான மக்கள் அங்கு வாழ்ந்திருந்தனர்,சிந்தனைகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.இந்நகரத்தின் பக்கத்தில் குகைகள் நிறைந்த பகுதி ஒன்றும் உள்ளது."அறிவே முக்கியம்(Knowledge)"  என்ற எண்ணம் கொண்ட ஒரு குழு ஒன்று இக்குகைகளில் தங்களுடைய எழுத்துக்களை(எண்ணங்களை) தோல்  சுருள்களில் பதிவு செய்து அவைகளை இக்குகைகளில் பத்திரப்படுத்தி இருக்கின்றனர்.இவர்களை "Knosis" என்று அழைக்கின்றனர்."அறிவே உங்களை விடுதலையாக்கும்" என்ற கருத்து இவர்களுடையது.இவர்களுடைய எழுத்துக்களை 1947-ல் பிரெஞ்சு ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்தார். இவைகள் இன்று புத்தகமாக நமக்கு கிடைக்கிறது.

எனவே பாவங்களில் இருந்து விடுவிக்க மேசியா வருகிறார் என்று புதிய கருத்து இந்த "இணைந்த குழு" உருவாக்கியது.இதைத்தான் இயேசு வலியுறுத்துகிறார்."மனதிரும்புங்கள்,பாவம் செய்யாதீர்கள்,ஒரு புதிய உலகம் வரப்போகிறது போன்ற கருத்துக்களை இயேசு போதித்தார்.இக்கருத்துக்களை அவருடைய சீடர்களும் பரப்பினர்."யூத விடுதலை" என்பதிலிருந்து "பாவ விடுதலை" என்பதாக மாறிவிட்டது.ஏறத்தாழ மனிதர்கள் அனைவரும் "நல்ல மனிதனாக இருப்பது எப்படி" என்று சிந்திப்பர்.இயற்கையாக மனிதர்களில் இருக்கும் இவ்வெண்ணங்களுக்கு இவர்களுடைய போதனைகள் கைகொடுத்தது.இப்பொழுது இயேசு மேசியா ஆகி விட்டார்.அவர் நம்மை பாவங்களில் இருந்து விடுவிப்பார் என்ற கருத்து பரப்பப் பட்டது.மனிதர்களில் எவரெல்லாம்,ஏன் உலகில் இவ்வளவு பாடுகள் என்று சிந்திக்கிறார்களோ" அவர்கள் அனைவருக்கும் "விடுவிக்கும் ஒருவர்" தேவைப்படுகிறார்.யூதர்களின் மேசியா இப்பொழுது அனைத்து மக்களின் மேசியா ஆகி விட்டார்.இதே வழியில் சிந்திப்பவர்கள் பெரும்பாலும் மேசியாவை ஆதரிக்கும் நிலைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை.ஒருவழியாக,"இவ்வுலகின் பாடுகளில் இருந்து விடுபட வழி ஒன்று கிடைத்து விட்டது",இனிமேல் இக்கருத்தை பரப்ப வேண்டியதுதான் வேலை.இதை செய்தவர்களே கிறித்தவர்கள்.

மேசியா கிடைத்தாகி விட்டது.அவர் இனிமேல் யூதர்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது,அனைத்து மக்களின் "விடுவிப்பாளர்"அவர்.யூதர்கள் அல்லாத சிந்தனையாளர்கள் மத்தியில் ஒரு புது குழப்பம் ஏற்பட்டது.இந்த "மேசியாவிற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?",இதுவே புது குழப்பம்.அவர் யார் கடவுளின் "சொந்த மகன்" என்றால் எப்படி?இதுதான் அடுத்த சிந்தனை,திரித்துவத்தின் வேர் இங்குதான் உள்ளது."தங்களுடைய மேசியா" ஒரு சாதாரணமான ஆளாக இருப்பதில் யூதர் அல்லாத கிறித்தவர்களுக்கு விருப்பம் இல்லை.காரணம் யூதர் அல்லாத கிறித்தவர்கள் யூதர்களை வெறுத்தனர்.யூதர்களுடைய "தனிவழி" அவர்களை கோபப்படுத்தியது.தங்களை யூதர்களை விட தாழ்வானவர்களாக இவர்கள் கருதியத்தின் விளைவு அல்லது யூதர்களுடைய "தனிவழி" மீதான வெறுப்பு அல்லது யூதர்கள் கொண்டிருந்த செல்வாக்கு மீதான வெறுப்பு போன்ற காரணங்களால் "தங்களுடைய மேசியா"வை யூதர்களின் கடவுளுக்கு தாழ்வாக இருப்பதை வெறுக்க செய்தது.எப்படியாவது யூதர்களின் கடவுளுக்கு மேலாக அவரை கொண்டு செல்ல வேண்டும் அல்லது அவருக்கு இணையாக வேண்டும்,இதுவே தங்களுடன் இனைந்து  வாழ மறுக்கும் யூதர்களை பழிவாங்கும் செயல்,இவ்வகையான எண்ணங்களின் அடிப்படையில் பிறந்த கருத்துதான் மேசியா யார்,கடவுளுக்கு அவருக்கும் இடையேயான தொடர்பு என்ன? என்ற கேள்விகள்.

இக்கேள்விகள் இட்டு சென்ற பாதைதான் "திரித்துவ போர்".நீண்ட நெடிய கருத்து போர்.யூதர்களின் கடவுளுக்கு ஒருவழியாக தங்களுடைய மேசியாவை இனையாக்கி விட்டாயிற்று.கடவுளின் சொந்த மகன்,இரட்சகர்,வரப்போகும் உலகம்,என்று பலவித கருத்துக்கள் உருவாகின.எகிப்தில் உள்ள கும்ரான் (Qumran) குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட "நாசிஸ்(Knosis)" எழுத்துக்களை ஒருவர் படித்தாரெனில் இவற்றை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தற்பொழுது நைசீன் முடிவுகள் அல்லது நைசீன் நம்பிக்கைகள் (Nicene Creed) என்ன கூறுகிறது என்று தமிழில் பார்க்கலாம்.அவற்றை யூதர்களின் பழைய ஏற்பாட்டுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். 

வ.எண்
நைசீன் முடிவுகள் - ஆங்கிலம்
நைசீன் முடிவுகள் - தமிழாக்கம்
விளக்கம்
1
We believe in one God, the Father almighty,
      maker of heaven and earth,
      of all things visible and invisible.
கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத அனைத்தையும்,வானத்தையும் மன்னுலகையும் படைத்த தந்தையாகிய ஒரே கடவுளிடத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
யூதர்களின் கருத்துக்களுக்கு இது முரன்படவில்லை
2
And in one Lord Jesus Christ,
      the only Son of God,
      begotten from the Father before all ages,
           God from God,
           Light from Light,
           true God from true God,
      begotten, not made;
      of the same essence as the Father.
தந்தை எவற்றால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அவற்றைக் கொண்டே, உருவாக்கப்படாமல் பிறப்பிக்கப்பட்ட;உண்மையான கடவுளிடம் இருந்து உண்மையான கடவுளாகவும்,ஒளியிடமிருந்து ஒளியாகவும்,கடவுளிடம் இருந்து கடவுளாகவும்,அனைத்து காலங்களுக்கும் முன்னர் தந்தையிடம் இருந்து பிறப்பிக்கப்பட்ட கடவுளின் ஒரே மகனாகிய ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
இது மிகவும் குழப்பம் தரக்கூடிய பகுதி.ஆனால் இயேசுவும் கடவுள் என்று இப்பகுதி மிகத்தெளிவாக கூருகிறது.சாதாரனமாக கடவுள் அல்ல தந்தை எப்படி உள்ளாரோ அப்படியே எள்ளலவும் குறையாமல் இவரும் கடவுள்.அதாவது தந்தையும் இவரும் இனையானவர்கள்.
3
Through him all things were made.
இவரின் வழியாகவே அனைத்தும் உருவாக்கப்பட்டன
யூதர்களின் பழைய ஏற்பாடு இவ்வாறு கூறவில்லை
4
For us and for our salvation
           he came down from heaven;
           he became incarnate by the Holy Spirit and the virgin Mary,
           and was made human.
எங்களுக்காகவும் எங்களுடைய விடுதலைக்காகவும் இவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார்;தூய ஆவியின் வழியாகவும் கன்னியாகிய மரியாளின் வழியாகவும் இவர் மனித வடிவம் பெற்றார்.மேலும் ஒரு மனிதனாக ஆக்கப்பட்டார்.
கன்னிபெண் ஒருவள் குழந்தை பெருவது என்பது யூதர்களின் கருத்துக்கு எதிரானது.ஆனால் கிரேக்கம்,உரோம்,எகிப்து போன்ற நாடுகளில் இக்கதைகள் உள்ளன.மேலும் கடவுள் மனித வடிவம் பெருதல் என்பது இந்துக்களின் “அவதாரம்” என்பதுடன் தொடர்புடையது.
5
He was crucified for us under Pontius Pilate;
           he suffered and was buried.
பொந்தியுஸ் பிலாத்து என்பவரின் கீழ் இவர் எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார்.அவர் பாடுகள் பட்டார் கடைசியில் புதைக்கப்பட்டார்.
பொந்தியுஸ் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதை “தங்களுக்காகவே” செய்யப்பட்டது போன்று கூறப்பட்டுள்ளது.அதாவது பொந்தியுஸ் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைந்ததன் மூலம் நன்மையையே செய்துள்ளான் என்பதாக கூறப்பட்டுள்ளது.
6
The third day he rose again, according to the Scriptures.
           He ascended to heaven
           and is seated at the right hand of the Father.
எழுதியுள்ளவற்றின்படி அவர் மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்.அவர் வானத்துக்கு ஏறி தந்தையின் வலது பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறார்
மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழும்ப வேண்டும் என்று எங்கும் எழுதப்படவில்லை.எங்கிருந்து இக்கருத்து வந்தது என்று தெரியவில்லை.
7
He will come again with glory
           to judge the living and the dead.
உயிரோடு இருப்பவர்களையும் இறந்து போனவர்களையும் நியாயம் செய்வதற்காக அவர் மறுபடியும் தன் மகிமையுடன் திரும்ப வருவார்.
இக்கருத்தும் யூதர்களின் கருத்துக்கு முரனானது
8
His kingdom will never end.
அவருடைய ஆட்சி முடிவில்லாதது

9
And we believe in the Holy Spirit,
      the Lord, the giver of life.
வாழ்வைக் கொடுப்பவரான ஆண்டவராகிய தூய ஆவியின் மேலும் நாங்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்.
இக்கருத்தும் யூதர்களின் கருத்துக்கு முரனானது.
10
He proceeds from the Father and the Son,
      and with the Father and the Son is worshiped and glorified.
இவர்(தூய ஆவி) தந்தை மற்றும் மகனிடம் இருந்தே வருகிறார்.தந்தை மற்றும் மகனுடன் சேர்ந்து இவரும்(தூய ஆவி) மகிமைப்படுத்தப்பட்டு வணங்கப்படுகிறார்.
இக்கருத்தும் யூதர்களின் கருத்துக்கு முரனானது.
11
He spoke through the prophets.
      We believe in one holy catholic and apostolic church.
இவர்(தூய ஆவி) இறைவாக்கினர் மூலமாக பேசினார்.நாங்கள் ஒரே புனித கத்தோலிக்க மற்றும் அப்போஸ்தல சபையின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.
கத்தோலிக்க சபை என்பது “அனைவருக்குமான சபை” அல்லது Universal Church என்று பொருள்.அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக பல்வேறு கிளை சபைகள் தோன்றின.அவைகளை ஒன்றினைத்து உருவாகியதுதான் கத்தோலிக்க சபை.கத்தோலிக்(Catholic) என்றால் “Universal-அனைத்து” என்று பொருள்
12
We affirm one baptism for the forgiveness of sins.
பாவங்களின் மன்னிப்பிற்காக ஒரே திருமுழுக்கை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

13
We look forward to the resurrection of the dead,  and to life in the world to come. Amen.
இறந்தவர்கள் உயிரோடு எழும்பி வரப்போகும் உலகில் வாழ்வடைவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஆமென்.


முடிவுரை:

திரித்துவம் என்பது பழைய ஏற்பாட்டில் எங்கும் இல்லாத ஒரு கருத்தாகும்.யூதர்கள் இதனை முற்றிலும் நிராகரிக்கின்றனர்.ஒரே கடவுள் கொள்கைக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது.மனிதர்கள் ஒன்று கூடி ஒரு கருத்தை ஏற்படுத்தி அதனை பல போராட்டங்களுக்கு இடையே சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளனர்.

இந்த சுருக்கமான வரலாறு "A HISTORY OF CHRISTIANITY - DIARMAID MACCULLOCH " என்ற புத்தகத்தினை  தழுவி எழுதப்பட்டது.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1FBvKsBfslmYFPbE47sZurrn81RyL5m3a/view?usp=sharing

My Posts