Friday, May 31, 2019

சாத்தான் மின்னலைப்போல் வானத்திலிருந்து விழுகிறதை கண்டேன்.[லூக் 10:18]

சாத்தான் மின்னலைப்போல் வானத்திலிருந்து விழுகிறதை கண்டேன்.[லூக் 10:18]


புதிய ஏற்பாடு என்பது கிரேக்க கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதற்கு சாட்சியாக லூக் :10:18 வசனத்தை குறிப்பிடலாம்.சாத்தான் என்பவன் யார் என்பது பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதி உள்ளேன்.அதன்படி,
  • சாத்தான் என்பவன் தனி ஒரு தூதன் அல்ல.
  • அது யாருடைய பெயரும் அல்ல.
  • தன்மையைக் குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தைதான் இந்த "சாத்தான்" என்ற சொல்.
  • எதிர்த்தல் என்ற செயலை குறிக்க பயன்படும் வார்த்தைதான் இந்த சாத்தான் என்ற சொல்.
  • பழைய ஏற்பாட்டில் வரும் "சாத்தான்" என்ற வார்த்தை இந்த வகையிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • புதிய ஏற்பாட்டில் "சாத்தான்" என்ற சொல் தீமைகளுக்கு ஆதாரமாக இருக்கும் ஒரு தள்ளப்பட்ட தூதனை குறிக்க பயன்படுகிறது.
"தள்ளப்பட்ட தூதன்" என்று ஒருவன் இருக்கிறான்,அவன்தான் அனைத்து தீமைகளுக்கும் காரணம்,என்று பழைய ஏற்பாட்டில் உள்ளதாக ஏறத்தாழ அனைத்து கிறித்தவர்களும் நம்புகின்றனர்.

ஆனால் ஹீப்ரு மொழி தெரிந்தவர்களுக்கு இது தவறு என்று தெரியும்.எனவே யூத மக்கள் கிறித்தவர்கள் நம்புவது போன்று நம்பிக்கை கொள்வது இல்லை.அவர்களை பொறுத்தவரை கடவுளை எதிர்த்து நிற்க எவரும் இல்லை.அது தூதனாக இருந்தாலும் சரி, இல்லை மனிதனாக இருந்தாலும் சரி.

பின் எப்படி "நன்மை Vs தீமை" என்ற ஒரு  முறை வந்தது? அதற்கு கிரேக்க,ரோம மற்றும் எகிப்திய வழிபாட்டு முறைகளைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பல கடவுள் வழிபாட்டு முறைகளில் தீமைகளுக்கென்று ஒரு கடவுள் இருப்பான்.

யூத வழிபாட்டு முறைகளில் இந்த நம்பிக்கைகள் கிடையாது.இதை நாம் பழைய ஏற்பாட்டிலும் காணலாம்.சர்வ வல்லமை படைத்த கடவுள் ஒருவரே.அவரை எதிர்த்து யாராலும் நிற்க இயலாது,என்பதே பழைய ஏற்பாடு நமக்கு சொல்லும் பாடம்.

கிரேக்கர்களின் ஆதிக்கம் பரவிய பின்னர்,அவர்களுடைய கலாச்சாரமும் சேர்ந்தே பரவியது.இன்று அமெரிக்க கலாச்சாரம் எப்படி மிகப்பெருமையுடன் பார்க்கப்படுகிறதோ அவ்வாறு கிரேக்க கலாச்சாரம் பார்க்கப்பட்டது.

எனவே தீமைகளுக்கென்று ஒருவன் தேவைப்பட்டான். கிரேக்க கலாச்சாரம்  ஊடுருவி இருந்த நேரம் அது.முதல் நூற்றாண்டு காலகட்டம் மற்றும் அதற்க்கு முந்தைய 200 வருடங்களில் இக்கலாச்சாரம் நன்றாக வேரூன்றி இருந்தது.

சிதறியிருந்த யூதர்களில் பெரும்பாலோனோர் கூட இக்கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்."சாத்தான்" என்ற ஒருவன் உருவானது இவ்வாறாக கூட இருக்கலாம்.கிரேக்கர்களுக்கு ஏற்றாற்போல் இக்கதாப்பாத்திரம் நாளடைவில் உருவாகிவிட்டது.

இப்பொழுது இயேசுவும் கூட "தீமைகளுக்கென்றே படைக்கப்பட்ட ஒரு தூதன் இருப்பதாக" நம்பியிருக்கிறார்.எனவேதான் அவன் கீழே விழத்தள்ளப்பட்டதாக லூக்கா நற்செய்தி புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.அப்படியென்றால்,
  • படித்த யூதர்கள் நம்பாத ஒரு செய்தியை யூதனாகிய இயேசு நம்பினாரா?
  • பிதாவை எதிர்த்து செயல்பட ஒருவனால் கூடும் என்று இயேசு நம்பினாரா? அல்லது லூக்கா நம்பினாரா?
  • இயேசு கூறியதாக லூக்கா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறாரா?
ஒரு கலாச்சாரம் மற்றொரு கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் புரிந்து கொள்ளலாம்.நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை நாம் இதற்காக எடுத்து கொள்வோம்.நமக்கே உரிய தனி அடையாளங்கள் என்னென்ன என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.சிலவற்றை கீழே தருகிறேன்.
  • நமக்கு தமிழ் பெயர்களை தவிர வேறு எதுவும் தெரியாது.ஆனால் யாரை நாம் நம்மை விட பெரியவர்களாக நினைக்கிறோமோ அவர்களுடைய பாதிப்பு நம்முடைய பழக்கவழக்கங்களில் தொற்றிக்கொண்டு விடும்.நமது முன்னோர்கள்,அரசன் முதல் ஆண்டி வரை,இயற்கையிலேயே அழகான பிராமணர்களின் பழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம்.இன்று நம்முடைய பெயர்களில் சம்ஸ்கிருத தாக்கம் மிக அதிகம்.
  • சினிமா,டீவி,போன்றவற்றின் ஊடுருவல் மிக அதிகம் இன்று.அதில் காட்டப்படுபவர்களை போன்று இருக்க விருப்பப்படுகிறோம்.இவர்களில் பெரும்பான்மையானோர் வட இந்தியர்கள் அல்லது கேரள மக்கள்.கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நமக்கே தெரியாமல் இவர்களுடைய செயல்பாடுகளை நாமும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.
இவ்வாறு ஒரு கலாச்சாரம் மற்றவற்றில் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது.அத்தாக்கத்தின் விளைவாக,பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

யார் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்?

யாரை அழகு,அறிவு,வீரம் உடையவர்களாக நாம் நினைக்கிறோமோ அவர்கள்தான் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். கிரேக்கர்கள் இயற்கையிலேயே இம்மூன்றையும் கொண்டிருந்தனர். எனவே அவர்களுடைய தாக்கம் மற்றவர்கள் மீது ஏற்பட்டது.

சுருக்கமாக கூற வேண்டுமாயின்,யாரை நாம் நம்மை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறோமோ அவர்களிடம் நாம்  படுகிறோம்.அவர்களை நாம் பின்பற்ற ஆரம்பித்து விடுகிறோம்.கிரேக்கர்கள் சென்ற இடமெல்லாம் இதுதான் நடந்தது.இவ்வாறுதான் யூதர்களும் பாதிக்க பட்டிருந்தனர்.

கடவுளும் இதைக்குறித்து முன்னரே எச்சரிக்கை செய்து இருக்கிறார்.

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;

அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.[யாத் 34:12-16]

ஆனால்  நாம் அவ்வாறு இருப்பதில்லை.அழகு,அறிவு,வீரம் இவைகள் கண்களை குருடாக்கி விட்டன.கடவுள் எச்சரித்தபடி நடந்தும் விட்டது.

கிரேக்கர்களின் தாக்கத்தினால் நமக்கு கிடைத்ததுதான் "புதிய ஏற்பாடு".கடவுளுக்கு எதிராக செயல்படும் "தூதன்"தான் "சாத்தான்" என்ற புதிய கோட்பாடு கிரேக்கர்களுடையது.அதை இயேசு நம்பியிருக்கிறார்.அதன்விளைவாக நமக்கு கிடைத்த வசனம்தான் "லூக் 10:18".

கடவுள் ஒருவரே! அவர் இஸ்ரயேலின் கடவுளே!இதைத்தான் பழைய ஏற்பாடு வலியுறுத்துகிறது.பின்னர் வந்தவவைகள் அனைத்தும் கிரேக்க,ரோமா கலாச்சார தாக்கங்கள்.மெய்யான கடவுளாகிய இஸ்ரேலின் கடவுளை நாம் அனைவரும் பணிந்து கொள்வோமாக!

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

Saturday, May 25, 2019

ஏசாயா 53-ம் அதிகாரம் - ஒரு விளக்கம்

ஏசாயா 53-ம் அதிகாரம் - ஒரு விளக்கம்


ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்தில் 53-ம் அதிகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த அதிகாரம் யாரைப்பற்றி பேசுகிறது?இந்த அதிகாரத்தின் அத்தனை வசனங்களையும் சற்று மாற்றியும் நாம் வாசித்து பார்க்க வேண்டும். இந்த அதிகாரத்தில் வரும் "அவர்" என்ற வார்த்தையை "அவன்" என்றும் நாம் வாசித்து பார்க்க வேண்டும். இந்த "அவர்" யார்? "இவரை" நாம் மிகவும் மரியாதையாக நினைத்தால் "ர்" என்னும் மரியாதை எழுத்தை சேர்ப்போம். இல்லையென்றால் "ன்" என்னும் எழுத்தை சேர்ப்போம். தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது நாம் கடைபிடிக்கும் வழக்கம் இது.

தமிழ் பைபிளில் "அவர்" என்று உள்ளது.நமக்கு இது நன்றாக தெரியும்.அப்படியென்றால் இந்த அதிகாரத்தில் ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுபவர் மிகவும் மரியாதைக்குரியவர் என்று தமிழில் மொழிபெயர்த்தவர்கள் நினைத்துள்ளனர்.உண்மையில் ஏசாயா தீர்க்கதரிசி குறிப்பிடுபவர் யார்? அதை நாம் தெரிந்து கொள்ள 52-ம் அதிகாரத்தை நாம் படிக்க வேண்டும்.

52-ம் அதிகாரம் என்ன சொல்கிறது?

எருசலேம் நகரம் திருப்பிகொள்ளப்படுதலைப்பற்றி இந்த அதிகாரத்தின் முதல் 12 வசனங்கள் கூறுகின்றன.13-ம் வசனத்தில் இருந்து வித்தியாசமான ஒரு நிகழ்வை தீர்க்கதரிசி கூறுகிறார். கர்த்தருடைய தாசன் என்று "ஒருவனை" குறிப்பிடுகிறார்.யார் இந்த கர்த்தருடைய தாசன்? ஏசா:49:3-ஐ படிப்போம்.
அவர் என்னை நோக்கி: நீ என்தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார்.[ஏசா:49:3]
இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.[ஏசா 44:1]
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. [ஏசா:44:21]
யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார். [ஏசா:49:5]
யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார். [ஏசாயா 49:6]
இப்படி எண்ணற்ற  வசனங்கள் உள்ளன. இப்பொழுது யார் கர்த்தருடைய தாசன் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும். புத்தகம் எழுதும் ஒவ்வொருவரும் தனித்தனி பாணியை கடைபிடிப்பர்.ஏசாயா தீர்க்க தரிசியும் தனக்கென்று ஒரு வழியை கொண்டிருந்தார்.உவமைகளைக் கொண்டு கவிதை நடையில் மிக அருமையாக எழுதியிருப்பார்.இஸ்ரயேல் மக்களை அவர் "கர்த்தருடைய தாசன்" அல்லது "கர்த்தருடைய ஊழியக்காரன்" என்று குறிப்பிட்டு எழுதியிருப்பார். இப்புத்தகத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு மட்டுமே இது புரியும். பாஸ்டர்கள் கூற,நீங்கள் எப்பொழுதாவது புரட்டி பார்த்து படித்தால்,உங்களுக்கு விளங்கியிருக்காது.

எனவே 52-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் இருந்து ஏசாயா தீர்க்க தரிசி வேறு பாதைக்கு மாறுகிறார்.இஸ்ரயேல் மக்களை அவர் "கர்த்தருடைய தாசன்" என்று ஒப்புமை படுத்தி கூறுகிறார்.

எப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது?

ஆரம்பத்தில் யாரை தீர்க்கதரிசி இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் இருந்திருக்கலாம்.ஏனென்றால் தீர்க்கதரிசன புத்தகங்களை புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்று உங்களுக்கு தெரியும்.பல பேர் பல விதமாக புரிந்து கொள்வர்.

யாரோ ஒருவர் அடிக்க பட வேண்டும்,பாடு பட வேண்டும் என்று மட்டும் நன்றாக தெரிகிறது.ஆனால் அது யார் என்று தெரிய வில்லை.இஸ்ரயேல் மக்களை தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் "பாடுபட போகும் அந்த ஒருவரை" தேடி பலபேர் அலைந்தனர்.இயேசுவும் அவ்வாறே தன்னை நினைத்திருக்க கூடும்.அல்லது அவரது சீடர்கள் அவ்வாறு நினைத்திருக்கக்கூடும்.

இயேசுவின் சீடர்களும்,பின்வந்தவர்களும் அவ்வாறே நினைத்தான் விளைவாக "கர்த்தருடைய தாசன் இயேசுதான்" என்று நினைத்து பைபிளை மொழி பெயர்ந்தனர்.அதனால்தான் "அவன்" என்று மொழிபெயர்க்காமல் "அவர்" என்று மொழிபெயர்த்து விட்டனர்.அது கூட பெரிய தவறு இல்லை.ஆனால் தவறான புரிதலுக்கு அது இட்டு சென்று விட்டது.தொடர்ந்து வசனங்களை பார்ப்போம்.

53-ம் அதிகாரம் உண்மையில் 52-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.இஸ்ரயேல் மக்கள் படப்போகும் பாட்டை 14-ம் வசனம் கூறுகிறது.இஸ்ரேல் மக்கள் கி.மு.300-ம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே பல அரசுகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த பாடுகள் மூலம் புறஜாதி இராஜாக்கள் மற்றும் புறஜாதி மக்கள் ஒரு பெரும் இரகசியத்தை அறிந்து கொள்ள போகிறார்கள் என்று 15-ம் வசனம் கூறுகிறது.இந்த 15-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இராஜாக்கள் அடுத்த வசனத்தை பேசுவது போல் தீர்க்கதரிசி எழுதுகிறார்.அதாவது 53-ம் அதிகாரத்தின் முதல் வசனம். அந்த புறஜாதி இராஜாக்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்கள்,

"எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?

இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

    அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

    இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டு போனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.[ஏசா:53:1-8]".

    மேற்கூறிய  எட்டு வசனங்களும் புறஜாதி இராஜாக்களால் பேசப்படுவது போன்று தீர்க்கதரிசி எழுதி உள்ளார்.இவ்வசனங்களில் வரும் "அவர்" என்ற வார்த்தை "கர்த்தருடைய தாசனை" அதாவது "இஸ்ரேல் மக்களை" குறிக்கிறது.இதில் குறிப்பிடப்பட்டுள்ள பாடுகள் அனைத்தையும் இஸ்ரேல் மக்கள் அனுபவித்துள்ளனர் என்று நமக்கு தெரியும்.

    மேற்கூறிய வசனங்களில் உள்ள "அவர்" என்ற வார்த்தைக்கு பதிலாக "அவன்" என்று வாசித்து பாருங்கள்.சரியாகவே இருக்கும்."அவர்" என்று எழுதுவதா அல்லது "அவன்" என்று எழுதுவதா என்பது மொழிபெயர்ப்பவருடைய மன நிலைமையை பொறுத்தது அல்லது அவருடைய புரிதலை பொறுத்தது.

    மனிதர்களால் அசட்டை பண்ணப்பட்டவர் யார்? இஸ்ரேல் மக்கள்தான் அந்த கொடுமையை அனுபவித்தனர் என்று நமக்கு தெரியும்.ஒரு வசனம் மூலமாக அதையும் காணலாம்.
    இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.[ஏசா:49:7]
    முடிவுரை:

    இஸ்ரயேல் மக்களைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி 53-ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.இஸ்ரயேல் மக்களை தனது ஊழியக்காரன் என்றும் தமது தாசன் என்றும் கடவுள் குறிப்பிட்டிருக்கிறார்.இஸ்ரேல் மக்களை தனியொரு மனிதனாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள அதிகாரம் இது.ஏசாயா தீர்க்கதரிசி தன்னுடைய புத்தகம் முழுவதும் இம்முறையை பயன்படுத்தி உள்ளார்.எனவே இது இயேசுவை குறிப்பது அல்ல.

    இக்கட்டுரையைப் பதிவிறக்கம் செய்ய:
    இரா.இருதயராஜ்.
    மேலும் பல கட்டுரைகளை வாசிக்க:

    Friday, May 17, 2019

    பைபிள் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

    பைபிள் என்ற வார்த்தையின் பொருள் என்ன? 

    முன்னுரை:

    பைபிள் என்ற வார்த்தையின் பொருள் என்ன? அது எந்த மொழியை சேர்ந்த வார்த்தை? ஏன் தமிழ் மொழியில் அந்த வார்த்தை மொழிபெயர்க்கப்படவில்லை? நாம் தற்போது படித்துக் கொண்டிருக்கும் பைபிள் உண்மையில் "பைபிள்"தானா? இவற்றிற்க்கெல்லாம் என்ன பதில்?

    ஒரு வேலை நாம் தற்பொழுது படித்துக் கொண்டிருக்கும் பைபிள் உண்மையிலேயே கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அருளிய இறைசெய்தி அல்ல என்றால்,உங்கள் மன நிலை என்னவாக இருக்கும்? இதற்கான பதில்களை நாம் தெரிந்து கொள்ள,"பைபிள்" என்றால் என்ன?, என்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    "பைபிள்" என்ற வார்த்தையின் பொருள்:

    பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்று நாம் பார்ப்போம்.
    "the sacred scriptures of Judaism and Christianity"
    அதாவது,யூத மார்க்கம் மற்றும் கிறித்தவம் மார்க்கம் ஆகிய இந்த இரண்டு மார்க்கங்களின் புனித புத்தகம்தான் இந்த பைபிள் என்ற புத்தகம்.

    Oxford அகராதி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

    "Middle English: via Old French from ecclesiastical Latin "biblia", from Greek (ta) biblia - ‘(the) books’, from biblion ‘book’, originally a diminutive of "biblos" ‘papyrus scroll’, of Semitic origin."

    அதாவது "புத்தகம்" என்று பொருள் தரக்கூடிய "biblio" என்ற கிரேக்க மொழியிலிருந்து இந்த "பைபிள்" என்ற வார்த்தை வந்துள்ளது.எனவே "பைபிள்" என்றால் "புத்தகம்" என்றே பொருள்.

    நாம் தற்போது "புத்தகம்" என்றுதான் பைபிளை புரிந்து கொண்டுள்ளோமா? அநேகமாக "இல்லை" என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.மற்றுமொரு ஆதாரத்தை நாம் காணலாம்.
    The word Bible itself is simply a transliteration of the Greek word bíblos (βίβλος), meaning "book." So the Bible is, quite simply, The Book. However, take a step further back and the same Greek word also means "scroll" or "parchment." Of course, the first words of Scripture would have been written on parchment, and then copied to scrolls, then those scrolls would be copied and distributed and so on.
    அதே பொருளைத்தான் இதுவும் கூறுகிறது. "https://www.biblestudytools.com/bible-study/explore-the-bible/what-does-bible-mean.html" என்ற வலைப்பகுதியில் இதை தெரிந்து கொள்ளலாம்.

    கிரேக்க ஆதிக்கம்:

    கிரேக்கர்கள் மத்திய கிழக்கு நாடுகளை கைப்பற்றி ஆட்சி புரிந்த பொழுது அவர்களுடைய கலாச்சாரம் அப்பகுதிகளுக்குள் ஊடுருவியது. அவர்களுடையது மிகவும் முன்னேறிய ஒன்றாக இருந்தது.அவர்களுடைய அறிவு கூர்மை மற்றவர்களை விட மிகவும் மேலோங்கி இருந்தது. கணிதம், அறிவியல், வானவியல், தர்க்கவியல் போன்றவைகளில் அவர்களுக்கு மற்றவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இணையாக கல்வியில் தழைத்தோங்கி இருந்தவர்கள் யூதர்களே.தங்களுக்கு கடவுள் அருளியவைகளை சுருள்களில் எழுதி வைத்ததன் மூலம் யூதர்களுடைய கல்வி அறிவு கிரேக்கர்களுக்கு விளங்கியது.

    கடவுளின் வார்த்தைகளுக்கு எண்ணற்ற வகையில் விளக்கங்கள் எழுதி வைத்ததன் மூலம் யூதர்கள் மற்ற சமூகத்தினரை விட பல மடங்கு கல்வி அறிவில் மேலோங்கி இருந்தனர்.ஆனால் யூதர்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இவைகளை அடக்கி இருந்தனர்.வானவியல், அறிவியல், கணிதம் போன்றவற்றில் அவர்களுடைய பங்களிப்பு குறைவாகவே இருந்தது.இதற்க்கு காரணமும் இருந்தது.அவர்கள் கடவுளுடைய வார்த்தைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்.

    இயற்கையாகவே எதையும் கேள்வி கேட்டு விளக்கங்கள் கொடுக்கும் அறிவை கிரேக்கர்கள் கொண்டிருந்தனர்.கிரேக்கர்கள் யூத தேசத்தை வென்ற பின்பு அவர்களுடைய இந்த எழுத்தறிவு கிரேக்கர்களை ஈர்த்தது.கிரேக்கர்களுடைய வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் யூதர்களின் இளஞர்களை ஈர்த்தது.ஒருகட்டத்தில் யூத இளைஞர்கள் முற்றிலுமாக ஈர்க்க பட்டனர்.

    இந்த கலப்பு ஏற்படுத்திய விளைவுதான் "யூதர்களின் இறை வேத மொழிமாற்றம்".கிரேக்க தாக்கம் யூதர்களை பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தியது.கிரேக்க மொழி ஏறத்தாழ மத்திய கிழக்கு நாடுகளை ஊடுருவியது.யூதர்களுடைய எழுத்துக்களும் கிரேக்கத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டன.


    இவ்வாறு உருவாகிய ஒன்றுதான் "Septuagint" பைபிள்.எனவே "பைபிள்" என்றால் "புத்தகம்" என்று மட்டுமே பொருள்.அது வேறு எந்த பொருளையும் கொடுக்க வில்லை.ஆனால் கீழ்கண்ட கேள்விகள் தற்போது எழுகின்றன.
    • "பைபிள்" என்ற வார்த்தை "புத்தகம்" என்ற பொருளைத்தான் கொடுக்கிறது என்றால்,யூதர்கள் அவ்வாறுதான் அழைத்தார்களா? ஏனென்றால் யூதர்களுக்குத்தான் இறைவாக்கு அருளப்பட்டது.
    • யூதர்கள் வேறுவிதமாக அழைத்தார்கள் என்றால்,எவ்வாறு அழைத்தனர்?அவைகளின் பொருள் என்ன?
    • தற்போது நாம் படித்துக் கொண்டிருக்கும் பைபிள் யூதர்களுடைய வார்த்தைகளை கொண்டுள்ளதா?
    • இறைவாக்கு யூதர்களுக்கு அருளப்பட்டபொழுது இயேசு இருந்தாரா?
    • புதிய ஏற்பாடு யூதர்களுடைய பைபிளில் உள்ளதா?
    மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் பெரும்பாலும் நமக்கு தெரியாது.முதல் கேள்விக்கு பதிலை இப்பொழுது நாம் தெரிந்து கொள்வோம்.பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
    Hebrew Bible, also called Hebrew Scriptures, Old Testament, or Tanakh, collection of writings that was first compiled and preserved as the sacred books of the Jewish people.
    யூதர்கள் தங்களுடைய பைபிளை "TANAKH" என்று அழைக்கின்றனர்.இந்த வார்த்தை மூன்று ஹீப்ரு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் தொகுப்பு ஆகும்.அவைகள்,"Torah", "Nevim", "Ketuvim" ஆகும்.இவ்வார்த்தைகளின் பொருள்,

    • Torah - Law. உண்மையில் இதனுடைய பொருள் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது."Torah" என்ற வார்த்தை "yarah" என்ற வார்த்தையிலிருந்து வந்த ஒன்றாக உள்ளது."Yarah" என்றால் " தண்ணீரைப் போல் பாய்ந்து செல்" அல்லது "அம்பை போல் பாய்ந்து செல்" என்று பொருளாகும்.எனவே "Torah" என்றால் "தண்ணீரைப்போல் பாய்ந்து வரக்கூடிய ஒன்று" எனப்பொருள் படும்.எது பாய்ந்து வருகிறது? எங்கிருந்து பாய்ந்து வருகின்றது? கட்டளைகள் பாய்ந்து வருகின்றது. கடவுளிடமிருந்து பாய்ந்து வருகின்றது. தகப்பனிடமிருந்து பிள்ளைகளுக்கு பாய்ந்து வருகின்றது.
    • Nevim - Prophets. தீர்க்கதரிசிகள்.தீர்க்கதரிசன புத்தகங்கள்.
    • Ketuvim - Writings.சங்கீதம்,எஸ்தர்,போன்ற புத்தகங்கள்.
    யூதர்கள் இவ்வாறு தங்கள் எழுத்துக்களை தொகுத்து வைத்துள்ளனர்.அதை "புனித எழுத்துக்கள்" அல்லது "Scriptures" என்று அழைக்கிறோம்.இப்பொழுது முடிவை தெரிந்து கொள்வோம்.

    பைபிள் என்றால் புத்தகம் என்று மட்டும்தான் பொருள்.எனவே கிரேக்க வார்த்தை மிகச்சரியான பொருளை தர வில்லை."புனித எழுத்துக்கள்" என்று பொருள் தரக்கூடிய வார்த்தை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    கடவுள் தங்களுக்கு அருளிய செய்திகளை தொகுத்து தனியே சுருள்களாக யூதர்கள் வைத்திருந்தனர்.இவர்கள் வைத்திருப்பது மட்டுமே "புனித எழுத்துக்கள்" அல்லது "Holy Scriptures" ஆகும். இதுவே இயேசு இறக்கும் போது வரைக்கும் யூதர்களிடம் இருந்தது. இப்பொழுதும் அவர்கள் இதைத்தான் வைத்திருக்கின்றனர்.

    இவர்கள் வைத்திருக்கும் இந்த புனித எழுத்துக்களில் "புதிய ஏற்பாடு" என்று ஒன்று கிடையாது.பின் எப்படி இது வந்தது?பைபிள் என்று அவர்கள் அழைப்பது "பழைய ஏற்பாடு" மட்டும்தான்.

    யாருக்கு இறை செய்தி அருளப்பட்டதோ,அவர்களிடம் இல்லாத ஒன்று "இறை செய்தி" என்ற போர்வைக்குள் வந்தது எப்படி? வர வேண்டிய காரணம் என்ன?

    யூதர்களிடம்தான் இறை எழுத்துக்கள் உள்ளதே, பின் ஏன் வேறொன்று? அவர்களுடையதையே நாமும் படிக்க வேண்டியதுதானே.

    பவுல் எழுதிய கடிதங்கள்,பேதுரு எழுதிய நிரூபங்கள் போன்றவைகள் தொகுக்கப்பட்டு யூதர்களுடைய "புனித எழுத்துக்களுக்கு" பின்னால் இணைக்கப்பட்ட தொகுப்பை இன்று நாம் பைபிள் என்று அழைக்கிறோம்.

    முடிவுரை:

    எனவே,இன்று நாம் பைபிள் என்று அழைப்பது,இயேசு இறந்த பின்னர் அவரைப்பற்றி எழுதிய நூல்களை தொகுத்து உண்மையான "புனித எழுத்துக்களுக்கிடையே" வைத்து விட்ட ஒரு புத்தகம்தான்.

    இன்றைய "பைபிள்" என்பது முழுவதும் "புனித எழுத்துக்கள்" கிடையாது.பழைய ஏற்பாடு மட்டும்தான் இறை எழுத்துக்களை கொண்டுள்ளது                           

    DOWNLOAD THIS DOCUMENT                                                                                             இரா.இருதயராஜ்.

    Friday, May 10, 2019

    ஒரு வீட்டிற்கு பல தகப்பன்கள் இருக்க முடியுமா?

    கடவுள் ஒருவர்தானா? அவர் யார்?

    கடவுள் எத்தனை பேர்? பல பேர்கள் கடவுளாக இருக்கலாமா? அப்படி இருக்க முடியுமா? ஒரு வீட்டிற்கு பல தகப்பன்கள் இருக்க முடியுமா? இருக்கலாம்,என்றால் பல கடவுள் இருக்கலாம்.

    பைபிலின் அடிப்படையில் ஒரு வீட்டிற்குள் பல தாய்மார்கள் இருக்கலாம்.பைபிளின் அடிப்படையில் நாம் இதை பார்க்க விட்டாலும் இக்கருத்து சரியே! ஆனால் ஒரு வீட்டிற்கு,அதாவது ஒரு குடும்பத்திற்கு பல தகப்பன்கள் இருக்க முடியுமா? அவ்வாறு நம்மால் கற்பனை செய்ய இயலுமா?

    பின் எப்படி நமக்கு பல தகப்பன்கள் இருக்க முடியும்?அதாவது,நம்மை படைத்த பரம தகப்பன்,அதாவது கடவுள்,பல பேராக எப்படி இருக்க முடியும்?அசிங்கமாக இல்லையா?

    கற்பனை செய்யவே முடியாத இந்த செயலை நாம் நிஜத்தில் கொண்டு வந்து வழிபட்டு கொண்டு இருக்கிறோம்.ஒரே தகப்பன்தான் உண்டு என்று நீங்கள் நம்பினால் மேற்கொண்டு படியுங்கள்.

    ஒரு குடும்பத்தில் பல தகப்பன்கள் இருப்பதாக நாம் ஒரு வழியாக கற்பனை செய்து கொள்வோம்.அதன் மூலம் எழும் கேள்விகள் என்னவென்றால்,

    • தாய் பல பேருடன் உறவில் உள்ளார்.எனவே இது வேசித்தனம்.
    • வேசித்தனம் மூலம் பிறந்த குழந்தைகள் அக்குடும்பத்தில் உள்ளனர்.
    • அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் தகப்பன் யார் என்பது யாருக்கும் தெரியாது.
    • அந்த தாய் இன்று யாருடன் இருப்பாள்?அதை பார்த்து கொண்டு மற்ற கணவன்கள் சும்மா இருப்பார்களா?
    • தாயின் மன நிலைமை என்ன?
    • அத்தாயின் சமைக்கப்பட்ட உணவை அனைவரும் விருப்பத்தோடு சாப்பிடுவார்களா?
    • ஒரு வேளை உணவின் அடிப்படையில் சண்டை ஏற்பட்டால் என்ன நடக்கும்?
    • குழந்தைகள் எந்த தகப்பனுடைய பேச்சைக் கேட்கும்?
    இப்படி பல கேள்விகளை நாம் அடுக்கி கொண்டே செல்லலாம்.எனவே ஒரு தகப்பன்தான் இருக்க முடியும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.அதாவது ஒரு கடவுள்தான் இருக்க முடியும்.அவரே அனைத்திலும் வல்லவராக இருக்க முடியும்.அவருக்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது.

    யார் அந்த கடவுள்?

    அவர் யார்? இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,முதலில் சில கேள்வி பதில்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    1. தான்தான் கடவுள் என்று யாராவது குறிப்பிட்டுள்ளனரா?
    2. எங்கு குறிப்பிட்டுள்ளனர்?
    3. தன்னைப்பற்றி விவரித்துள்ளாரா?
    4. தன்னை தவிர வேறு கடவுள் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளாரா?
    5. தன்னுடைய பெயரை குறிப்பிட்டுள்ளாரா?
    மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்,எனக்கு தெரிந்த வரையில் ஒரு இடத்தில்தான் உள்ளது. அது பைபிள்.அதை  வசனமாக கீழே தருகிறேன்.

    தான் ஒருவரே கடவுள்:


      நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை(ஏசா 45:5)
    மேற்கூறிய வசனத்தில் தன்னை தவிர வேறு தேவன், அதாவது வேறு கடவுள் இல்லை என்று கூறுகிறார்.அவர் தன்னை "கர்த்தர்" என்று கூறியிருக்கிறார்."கர்த்தர்" என்பது மொழிபெயர்ப்பு ஆகும்.இது ஹீப்ரு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது ஆகும்.

    தான் ஒருவரே தேவன்.தன்னை தவிர வேறு தேவன் இல்லை என்று, "கர்த்தர்" என்று நாம் தமிழில் அழைக்கும் தேவன் கூறியிருக்கிறார்.
    மற்றொரு வசனத்தை கவனியுங்கள்.
    நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.[ஏசா:44:6].
    முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.[ஏசா:46:9].
    மற்றுமொரு வசனத்தை கவனியுங்கள்,
    நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. [ஏசா:43:10].
    நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். [ஏசா:43:12]
    மேற்கூறியவாறு எண்ணற்ற வசனங்கள் உள்ளன.ஆனால் தான் ஒருவரே கடவுள் என்றும் வேறு ஒரு கடவுள் இல்லை என்றும் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளன.

    அவருடைய பெயர் என்ன?

    அவருடைய பெயரை தெரிந்து கொள்ள முதலில் ஒன்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அவருடைய பெயர் மிகவும் போற்றப்படத்தக்கது.நாம் நினைத்தபடியெல்லாம் அதை பயன்படுத்தக்கூடாது.நம் மாமிச தகப்பனுடைய பெயருக்கு எவ்வளவு மரியாதை கொடுப்போமோ அதை விட பன்மடங்கு கொடுக்க வேண்டும்.எனவேதான் பைபிளை ஹீப்ரு மொழியிலிருந்து மொழிபெயர்க்கும் பொழுது அவருடைய பெயர் வரும் இடங்களில் எல்லாம் "கர்த்தர்" என்று மொழிபெயர்த்து விட்டனர்.காரணம் மரியாதைக்காக.எனவே நாமும் அப்பெயருக்குரிய மகத்துவத்தை மதிக்க வேண்டும்."கர்த்தர்" என்றே நாமும் பயன்படுத்துவோம்.
    மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.[யாத் 3:15].
    மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,[யாத் :6:2].
    கடவுள் கூறுகிறார், "நான் யெகோவா" என்று.பைபிள் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது ஆகும்.எனவே அவருடைய பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நமக்கு இன்றும் தெரியாது.மேற்கூறியவாறு உச்சரிக்கலாம் என்று நினைக்கின்றனர். எனக்கு இதைப்பற்றி முழுமையாக தெரியவில்லை.ஆனால் நாம் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டியது,கடவுளுடைய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
    நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.[ஏசா:42:8].
    இப்பொழுது கடவுள் யார் என்று தெரிந்து விட்டது.அவருடைய பெயர் என்ன என்றும் தெரிந்து விட்டது.இவைகள் அனைத்தும் பைபிளில் உள்ளது என்றும் தெரிந்து விட்டது.அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவர் தான் எப்படி பட்டவர் என்று கூறியிருக்கிறாரா என்பதைப்பற்றித்தான்.

    அவர் எப்படி பட்டவர்?

    அவர் எப்படி பட்டவர் என்று தெரிந்து கொள்ள ஒரு சில வசனங்களை பார்ப்போம்.
    மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.[யாத் 20:3,4,5].
    ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, [எண் 14:17].
    வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. [ஏசா:45:18]
    யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? [ஏசா:46:5]
    எனவே கடவுள் என்பவர் எரிச்சலுள்ளவர்,நீடிய பொறுமை உள்ளவர்,சாந்தமுள்ளவர்,வானத்தையும் பூமியையும் படைத்தவர்,போன்ற எண்ணற்ற குணங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    தன்னை யாருக்கும் ஒப்பிடக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.இவரைத்தவிர வேறு யாரை நாம் தொழுது கொள்ள வேண்டும் என்று  நினைக்கிறீர்கள்? 
    இரா.இருதயராஜ்.
    பதிவிறக்கம் செய்ய.

    Saturday, May 4, 2019

    இயேசுதான் மேசியா,இயேசுதான் வரப்போகிறவராகிய எலியா,இயேசுதான் இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தப்போகிறவராகிய தீர்க்கதரிசி

    இயேசுதான் மேசியா,இயேசுதான் வரப்போகிறவராகிய எலியா,இயேசுதான் இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தப்போகிறவராகிய தீர்க்கதரிசி

    முன்னுரை:

    இயேசுதான் மேசியா,இயேசுதான் வரப்போகிறவராகிய எலியா,இயேசுதான் இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தப்போகிறவராகிய தீர்க்கதரிசி,என்று முதல் மூன்று நற்செய்தி புத்தகங்களும் நிரூபிக்க முயற்சி செய்கின்றன.இதற்க்கு காரணம்,
    • மல்கியா தீர்க்கதரிசி புத்தகத்தில்,எலியா தீர்க்கதரிசி இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தும் வேலையை செய்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    • கர்த்தர் தன்னுடைய தூதனை இந்த உலகத்திற்கு அனுப்புவார் என்றும் மல்கியா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • மல்கியா:3:1 மற்றும் மல்கியா:4:5 வசனங்களை படித்து பாருங்கள்.
    எனவே யூத மக்கள் மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் உள்ள நபர்கள் வர ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அவ்வப்போது சில பேர் எழும்பி இஸ்ரயேலை காக்க வந்த மேசியா நான்தான் என்று கூறிக்கொண்டிருந்தார்.இந்த சூழ்நிலையில்தான் இயேசு பிறக்கிறார்.அவர் வளர்ந்த பிறகு அவரை இந்த இருவரில் ஒருவராக நினைக்க ஆரம்பிப்பதாக நற்செய்த்தி புத்தகங்களை எழுதியவர்கள் கூறுகின்றனர்.

    அவ்வாறு நிரூபிப்பதற்காக பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.அவ்வாறு மேற்கோள் காட்டப்பட்ட வசனங்கள் அனைத்தும் இயேசுவிற்கு பொருந்துகிறதா என்பதே நம்முடைய கேள்வி. எடுத்துக்காட்டிற்காக அப்படிப்பட்ட ஒரு மேற்கோள் வசனத்தை தர இருக்கிறேன்.

    மத்தேயு 2:15:
    ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
    அதாவது இங்கே  கூறப்பட்டுள்ளது என்னவென்றால்,இயேசுவை எகிப்திலிருந்து அவருடைய பெற்றோர்கள் அழைத்துக்கொண்டு வருகின்றனர்.

    பழைய ஏற்பாட்டில் எந்த தீர்க்கதரிசி இவ்வாறு உரைத்திருக்கிறார் என்று பார்த்தால்,அது ஓசியா தீர்க்கதரிசி ஆவார்.அந்த வசனத்தை இப்பொழுது பார்ப்போம்.
    இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.[ஓசியா 11:1].
    இந்த வசனம் என்ன கூறுகிறது?:

    முழு வசனத்தியும் நாம் பார்க்க வேண்டும்.மத்தேயு பாதி வசனத்தை மட்டுமே கொடுத்துள்ளார்.இந்த ஓசியா புத்தகம் ஒரு அருமையான கவிதை நடை புத்தகம் ஆகும். கடவுள் ஓசியா தீர்க்கதரிசியைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

    நம்முடைய தமிழ் கவிஞர்கள்,பெண்களை வர்ணிக்கும் பொழுது நிலவை பயன்படுத்துவார்கள்.பெண்ணுடைய கண்களை மீனுக்கு ஒப்பிடுவார்கள்.இது உங்களுக்கு தெரியும்.ஒப்புமையோடு   எழுதுதல் என்பது ஒரு கவிதை நடை.ஓசியா அதை பயன்படுத்தி உள்ளார்.உணர்ந்து படிப்பவர்களுக்கு அது மிகவும் அருமையாக இருக்கும்.

    அது போன்று இஸ்ரயேல் தேசத்தை கடவுள் தன்னுடைய மனைவியாக ஒப்புமை படுத்தி இரண்டாம் அதிகாரத்தில் கூறியிருப்பார்.அதை ஓசியாவிற்கு விளக்குவதற்காகவே அவனை ஒரு சோர பெண்ணை மனம் முடிக்க கடவுள் சொல்லியிருப்பார்.இதன் மூலம் கடவுள் விளக்குவது என்னவென்றால்,
    • இஸ்ரயேல் தேசம் வேசி தனம் செய்து விட்டது.
    • ஓசியா தன் பிள்ளைகளோடு பேசுவது போல் இரண்டாம் அதிகாரம் உள்ளது.
    • ஆனால்,அது கர்த்தர் ஒப்புமையோடு பேசுகிறார்.
    • ஓசியா தன் பிள்ளைகளோடு பேசும்பொழுது,"உங்கள் தாய் இனிமேல் எனக்கு மனைவி அல்ல.காரணம் அவளுடைய வேசி தனம்."
    • இஸ்ரயேல் தேசம் எனக்கு மனைவி அல்ல.அது வேசித்தனம் செய்து விட்டது.
    • இஸ்ரேல் தேசம் தன் வேசித்தனங்களை அகற்றிப்போட்டால் நன்மை உண்டாகும் என்று கர்த்தர் கூறுகிறார்.
    இவ்வாறாக கடவுள் மிக அழகாக ஒப்புவமையோடு ஓசியா புத்தகம் முழுக்க பேசியிருப்பார்.இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அடுத்து மத்தேயு கூறிய வசனத்திற்கு வருவோம்.

    இஸ்ரயேல் என்ற இளைஞன்:

    மேலே நாம் கண்ட அதே ஒப்புவமையை இங்கும் கடவுள் ஓசியா தீர்க்கதரிசி மூலமாக பயன்படுத்துகிறார்.இஸ்ரயேல் மக்களை தன் மகனாக ஒப்புமை செய்து கடவுள் பேசுகிறார்.அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது அவரவர் படிக்கும் ஆழத்தை பொறுத்து இருக்கிறது.

    இஸ்ரயேலை தன்னுடைய மகனாக கடவுள் கற்பனை செய்கிறார்.முழுவசனத்தையும்  கவனியுங்கள்.
    இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
    எகிப்தில் இருந்தது யார்? ஓசியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் இயேசு இருந்தாரா? அப்படி இல்லாத போது தீர்க்கதரிசி எப்படி இயேசுவை குறிப்பிடுவார்? இயேசுவைத்தான் குறிப்பிடுகிறார் என்று மத்தேயு எப்படி கற்பனை செய்தார்? இயேசுதான் ஓசியா வாழ்ந்த காலத்தில் இல்லையே.எதற்க்காக இப்படி செய்தார்? இது பொய்யாக இருக்கும் சமயத்தில் அவர் எழுதிய புத்தகத்தை எப்படி நம்புவது?

    அப்படி என்றால் அந்த இளைஞன் யார்?:

    நாம் ஏற்கனவே கூறிய படி ஓசியா புத்தகம் ஒரு கவிதை நடை புத்தகம்.ஒப்புவமைகளால் நிறைந்த புத்தகம்.இஸ்ரேலை தன்னுடைய குமாரனாக கடவுள் பார்க்கிறார்.இஸ்ரேலை தன்னுடைய குமாரன் என்று அவர் பல இடங்களில் கூறியும் உள்ளார்.
    அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.[யாத் 4:22].
    எனவே  இஸ்ரயேல் மக்களைத்தான் தன்னுடைய குமாரன் என்று கடவுள் உவமையாக கூறுகிறார்.இஸ்ரயேல் தேசம்தான் எகிப்தில் அடிமை பட்டு இருந்தது.கடவுள் இஸ்ரயேல் தேசத்தை விடுவித்து வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.இது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இதைத்தான் கடவுள் உவமையோடு,இஸ்ரயேலை இளைஞனாகவும்,அவனை நேசித்ததாகவும்,அதனால்தான் அவனை அடிமைத்தளையில் இருந்து விடுத்ததாகவும் கூறுகிறார்.

    முடிவுரை:

    எனவே இஸ்ரேல் தேசத்தைத்தான் கர்த்தர் தன்னுடைய குமாரன் என்று கூறியிருக்கிறார்.இயேசுவை அல்ல.ஏனென்றால் இயேசு அப்பொழுது பிறக்கவே இல்லை.

    தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் மத்தேயு இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இருக்கலாம்.அப்படி அவர் தவறாக புரிந்து கொண்டார் என்றால்,ஏன் பாதி வசனத்தை மட்டும் கூறியிருக்கிறார்?

    முதல் பாதியை சொன்னால் இயேசுவிற்கு இந்த வசனத்தை பொருத்தி பார்க்க முடியாது என்று கூட இருக்கலாம் அல்லவா?

    இவ்வாறு தவறான மேற்கோள்கள் நிறைய உள்ளன.இயேசுவை முன்னிறுத்த முயன்றதன் விளைவு இன்று அவரை கடவுளாக வழிபடுகிறோம்.சர்வ வல்ல கடவுளாம் ஆபிரகாமின் கடவுள் இதை எப்படி பார்ப்பார்?

    நாம் அனைவரும் மெய்யான ஒரே கடவுளாகிய இஸ்ரயேலின் கடவுளையே பணிந்து கொள்வோமாக.

    1.சரி,இயேசுதான் மேசியாவா?
           
    அவ்வாறு உறுதியாக கூறமுடியவில்லை.காரணம்,மேசியா வரும்பொழுதும்,வந்தபின்பும்,சில காரியங்கள் நடைபெறும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.அவைகள் எதுவும் நடைபெற்றதாக தெரிய வில்லை.ஏசா:11-ம் அதிகாரம் 1முதல் 10-ம் வசனங்கள் வரை வாசித்து பாருங்கள்.எதுவும் நடைபெற்றிருக்கிறதா?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    2.இயேசுதான் வரப்போகிற எலியாவா?

    இதையும் உறுதியாக கூற முடியவில்லை.யூத மக்கள் இயேசுதான் வரப்போகிற எலியா என்று நம்புவதாக நற்செய்த்தி புத்தகங்களை எழுதியவர்கள் விவரிக்கிறார்கள்.ஆனால் இயேசுவோ,தான் எலியா அல்ல,பதிலாக யோவான்ஸ்நானன்தான் எலியா என்று கூறுகிறார்(மத் :11:14).யோவான்ஸ்நானனோ,தான் எலியா அல்ல,பதிலாக ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக சத்தமாக"இருக்கிறேன்,என்று கூறுகிறார்.எனவே இது குழப்பமாக உள்ளது.

    குழப்பங்கள் அதிகம் நிறைந்த புதிய ஏற்பாட்டை சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டியுள்ளது.எனவே எந்த குழப்பமும் இன்றி மெய்யான ஒரே கடவுளாம் "இஸ்ரயேலின் கடவுளையே"நாம் அனைவரும் தொழுது கொள்வோமாக.
    இரா.இருதயராஜ்.
    இந்த கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

    Friday, May 3, 2019

    மத்தேயுவின் மற்றொரு தவறு

    மத்தேயுவின் மற்றொரு தவறு 
    முன்னுரை:

    மத்தேயு எழுதிய நற்செய்தி புத்தகத்திற்கு ஒரு தனித்தன்மை உண்டு.இயேசுதான் மேசியா என்று நிரூபிப்பதற்காக அவர் கடும் முயற்சி செய்திருப்பார்.அவ்வாறான நிரூபிக்கும் முயற்சியில் நடந்த பல தவறுகளில்  ஒன்றை நாம் காண இருக்கிறோம்.

    இயேசுவின் பிறப்பு:

    இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்பது நமக்கு தெரியும்.அவருடைய பிறப்பை பற்றி நமக்கு சொல்வது இரண்டு நற்செய்தி புத்தகங்கள்.ஒன்று மத்தேயு எழுதியது.இரண்டாவது லூக்கா எழுதியது.இந்த இரண்டு புத்தகங்களும் இயேசுவின் பிறப்பைப்பற்றி நமக்கு சொன்னாலும்,இரண்டுக்கும் இடையில் பல முரண்பாடுகள்.

    முரண்பாடுகளைப்பற்றி நாம் இப்பொழுது விரிவாக பார்க்க போவது இல்லை.பதிலாக மிகப்பெரும் தவறு ஒன்றை நாம் பார்க்க போகிறோம்.ஏற்கனவே "மத்தேயுவின் மாபெரும் தவறு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன்.அதையும் படித்து பாருங்கள்.

    கடவுள் ஒருவர்தான்.அவர் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்கள் வழிபட்ட கடவுளே.அவரை மட்டுமே நாம் தொழுது கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகின்றார்.வேறு கடவுள்களை வழிபடக்கூடாது என்று தெளிவாக கூறியிருக்கிறார்.

    என்ன கூறப்பட்டுள்ளது?:

    இப்பொழுது மத்தேயுவின் தவறுக்கு வருவோம்.இரண்டாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை படித்து பாருங்கள்.அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என்ன?
    • ஏரோது அரசனைப்பற்றி கூறப்பட்டுள்ளது.
    • கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வருவது பற்றி கூறப்பட்டுள்ளது.
    • நட்சத்திரம் தோன்றியது பற்றி கூறப்பட்டுள்ளது.
    • கிறிஸ்துவுக்கு அடையாளம் அந்த நட்சத்திரம்.
    • சாஸ்திரிகள் குழந்தையை பணிந்து கொள்ளுதல்.
    • ஏரோது இரண்டு வயதுக்குட்பட்ட ஆண்குழந்தைகளை கொலை செய்தல்.
    • எகிப்துக்கு தப்பி செல்லுதல்.
    இதில் என்ன பிரச்சினை உள்ளது? பிரச்சினை உள்ளது.முதல் பிரச்சினை,கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வருவது பற்றி.யார் இந்த சாஸ்திரிகள்?கிழக்கு என்றால் எது?விடை தேடுவோம்.

    கிழக்கு தேசம் எது?:

    பெத்லகேமுக்கு கிழக்கு பகுதி என்பது பாபிலோனிய தேசம் ஆகும்.ஆசிய பகுதிகளும் இதில் அடங்கும்.இத்தேசத்தை "கல்தெயர் தேசம்" என்று பைபிள் கூறுகின்றது.இந்த கல்தெயர்கள் சில பழக்க வழக்கங்களை கொண்டிருந்தனர்.அவைகள் கர்த்தருக்கு அருவறுப்பானவைகள்.அவையாவன,
    • வான சாஸ்திரம்.
    • குறி சொல்லுதல்.
    • நட்சத்திர கூட்டத்தை கொண்டு காலம் கணித்தல்.
    இவர்களை பற்றி "Brittanica" தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்பதை காண்போம்.
    “Chaldean” also was used by several ancient authors to denote the priests and other persons educated in the classical Babylonian literature, especially in traditions of astronomy and astrology.
    இந்த "கல்தெயர்கள்" வான சாஸ்திரங்களிலும்,குறி சொல்லுதலிலும்,ஜோசியம் பார்ப்பதிலும் தேர்ந்தவர்களை குறிப்பதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் "கல்தெயர்" என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.இந்த கற்று தேர்ந்தவர்கள் அனைவரும் ஆசாரியர்களாக இருந்தனர்.

    ஆசாரியர்கள் என்றவுடன் பைபிளில் கூறப்பட்டுள்ள நம் தேவனுடைய ஆசாரியன் என்று நினைத்து விடாதீர்கள்.இவர்கள் அனைவரும் பாபிலோனிய கடவுள்களின் ஆசாரியர்கள்.அதாவது பூஜாரிகள்.

    மத்தேயுவின் இரண்டாம் அதிகாரத்தில் "சாஸ்திரிகள்" என்ற வார்த்தைக்கு உரிய கிரேக்க வார்த்தை என்னவென்றால் "magos"  என்ற வார்த்தை ஆகும்.இவ்வார்த்தையின் பொருளை நாம் இப்பொழுது அறிந்து கொள்ளலாம்.

    யார் இந்த சாஸ்திரிகள்?:

    கிரேக்க மொழியில் "வானவியல் அறிஞர்கள்" அல்லது "சாஸ்திரிகள்" என்பவர்களை "μάγος" என்று அழைக்கிறோம்.அதாவது "magos" என்று அழைக்கிறோம்.இந்த வார்த்தையின் பொருள் என்ன? பார்ப்போம்.

    magos: a Magian, i.e. an (Oriental) astrologer, by implication - "a magician"
    Original Word: μάγος, ου, ὁ
    Part of Speech: Noun, Masculine
    Transliteration: magos
    Phonetic Spelling: (mag'-os)
    Definition: a Magian, an (Oriental) astrologer, by implication a magician
    Usage: a sorcerer, a magician, a wizard.
    புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது என்று உங்களுக்கு தெரியும்.எனவே மத்தேயு பயன்படுத்திய இந்த "magos" என்ற வார்த்தை எந்த பொருளைக் குறிக்கிறது என்று உங்களுக்கும் இப்பொழுது தெரியும்.

    உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.நட்சத்திரங்களை கொண்டு காலத்தை கணித்து சொல்லும் ஜோசியர்களைத்தான் "magos" என்று அழைக்கிறோம்.இந்த பாபிலோனிய தேசம்தான் பெத்லகேமுக்கு கிழக்கு பகுதி.மிக பெரும் சாம்ராஜியமாக இருந்த தேசம் அது.

    இந்த "ஜோசியம் சொல்லுதலை" கடவுள் வெறுக்கிறார்.இதை செய்பவர்களை அவர் அருவருக்கிறார்.இயேசு வாழ்ந்த கால கட்டங்களில் ரோம அரசாங்கம் ஆட்சி செய்தது.ஆனால் கிரேக்கர்களின் கலாச்சாரம் எங்கும் ஊடுருவி இருந்தது.

    எரேமியா தீர்க்க தரிசியின் புத்தகத்தை நாம் படித்தோமானால் இந்த பாபிலோனிய கலாச்சாரம் பற்றி சிறிது விளங்கும்.மேலும் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கடவுள் கூறுவதை கவனியுங்கள்.
    நாள்பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.(ஏசா :57:3)
    57-ம்  அதிகாரம் முழுவதும் படித்து பாருங்கள்.நாள் பார்த்தலின் தீவிரம் புரியும்.இப்பொழுது நாம் மத்தேயுவிற்கு வருவோம்.

    இந்த "வான சாஸ்திரிகளைத்தான்" மத்தேயு குறிப்பிடுகிறார்.ஏனென்றால் இவர்களைத்தான் "magos" என்று அழைத்தனர் என்று வரலாறு கூறுகின்றது.நட்சத்திரங்களை பார்த்துதான் இவர்கள் வந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.எனவே நம்முடைய புரிதல் சரிதான்.

    ஆனால் நம்முடைய கேள்வி என்னவென்றால்,
    • கர்த்தர் அருவருக்கும் இந்த "ஜோசியர்களை" ஏன் மத்தேயு நம்பினார்?
    • யூதர்கள் இவர்களை உறுதியாக நம்பியிருக்க மாட்டார்கள்.
    • யூதர்கள் அல்லாதோர் மட்டுமே இந்த ஜோசியர்களை நம்பினர்.
    • யூதர்களின் இராஜாவாகிய மேசியாவின்  பிறப்பை,நட்சத்திரம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று பழைய ஏற்பாட்டில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது?
    • இயேசுதான் மேசியா என்று நிரூபிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா?
    • ஜோசியர்களை மத்தேயு நம்பினார் என்றால்,மத்தேயுவை எப்படி நாம் நம்ப இயலும்?
    • அவர் புத்தகத்தில் எழுதி இருப்பது அனைத்தும் சரிதான் என்று நாம் எப்படி நம்ப இயலும்?
    அடுத்த தவறு:

    இவை அனைத்திற்கும் மேலாக மற்றொரு பெரும் தவறை மத்தேயு செய்திருக்கிறார்.கீழ்கண்ட வசனத்தை படியுங்கள்.
    அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.[மத் :2:11].
    இயேசுவின் தாயாகிய மரியாளும் தந்தையாகிய யோசேப்பும் யூதர்கள் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.கர்த்தரை தவிர வேறு யாருக்கும் பணிய கூடாது என்று அவர்களுக்கு தெரியும்.மேற்கண்ட வசனத்தை என்னவென்று சொல்வது?மத்தேயு என்னதான் கூற வருகிறார்?குழந்தையை விழுந்து பணிந்ததை மத்தேயு நேரடியாக கண்டாரா? அப்படியே இயேசுதான் மேசியா என்றாலும் கூட மெசியாவை தொழுது கொள்ள வேண்டும் என்று எங்கு உள்ளது?

    முடிவுரை:

    கீழ்த்திசை ஜோஸ்யரை  ஏன் மத்தேயு நம்பினார்?

    இயேசுதான் மேசியா என்று நிரூபிக்க மத்தேயு முயன்றிருக்கிறார்.அதற்காக கீழ்திசையாரின் போதகங்களை தன்னுடைய புத்தகத்தில் திணித்திருக்கிறார்.எனவே மத்தேயுவை நம்புவது கூடாது என்பது என்னுடைய கறுத்து.

    சர்வ வல்ல கடவுளாம் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்கள் வழிபட்ட கடவுளையே தொழுது கொள்வோமாக.
    இரா.இருதயராஜ்.
    இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

    My Posts