திரித்துவ கொள்கைக்கு இயேசுவின் பதில்
முன்னுரை:
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிறித்தவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் ஒரு கொள்கை என்னவென்றால், அது திரித்துவ கொள்கை ஆகும்.பைபிளில் எந்த ஒரு இடத்திலும் காணப்படாத வார்த்தையாகிய "திரித்துவம்" என்ற வார்த்தை எப்படி கிறித்தவர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்தது? புதிதாக கிறித்தவத்திற்குள் இணைந்து கொண்டிருக்கும் விசுவாசிகளனைவருக்கும் இது என்னவென்றே தெரியாது.ஆனால் இக்கொள்கைக்கு ஆதரவாக மிக தீவிரமாக வாதிடுவார்கள்.மிகவும் சிக்கலான இக்கொள்கையைப் பற்றி விளக்குவதற்கு இந்த ஒரு கட்டுரை போதாது.இக்கொள்கை பைபிளுக்குள் இடம் பிடித்த வரலாற்றையும் நாம் தெரிந்து கொண்டால்தான் நமக்கு புரிவதற்கு சுலபமாக இருக்கும்.பின்னொரு கட்டுரையில் அதை விளக்கலாம் என்று இருக்கிறேன்.கர்த்தருக்கு சித்தமானால் நடக்கும்.
திரித்துவம் என்றால் என்ன?:
இறைவன் ஒருவனே.ஆனால் அவர் மூன்று தனித்தனியான பாத்திரங்களைக் கொண்டுள்ளார்.அதாவது தந்தையாகவும்,மகனாகவும்,பரிசுத்த ஆவியாகவும் மூன்று பாத்திரங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.மூவரும் தனித்தனியாக செயல் படுகின்றனர்.அதாவது,
- தந்தையானவர் மகன் அல்ல.பரிசுத்த ஆவியும் அல்ல.
- மகனானவர் தந்தை அல்ல.பரிசுத்த ஆவியும் அல்ல.
- பரிசுத்த ஆவியானவர் தந்தை அல்ல.மகனும் அல்ல.
ஆனால் மூவரும் ஒன்றாக உள்ளனர்.ஐன்ஸ்டின் அவர்களின் "சார்பு கொள்கையைக் கூட சுலபமாக விளக்கி விட முடியும் ஆனால் திரித்துவக் கொள்கையை அவ்வளவு சுலபமாக விவரிக்க இயலாது.
முடிவாக இக்கொள்கை என்னதான் சொல்கிறது?:
கடவுள் ஒருவர் அல்ல.பதிலாக மூவராக உள்ளார்.இதைத்தான் இக்கொள்கை கூறுகிறது.ஆனால் பைபிள் இதை ஆமோதிக்கிறதா என்றால்,இல்லை என்று உறுதியாக கூற முடியும்.
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.(யாத்:20:2).
மேற்கூறிய வசனத்தில் மிக தெளிவாக "நானே" என்று ஒருமையில் கடவுள் குறிப்பிடுகிறார்.எண்ணற்ற வசனங்கள் உள்ளன.ஆனால் மேலே கண்ட வசனத்தை மட்டும் இக்கட்டுரையில் தருகிறேன். இக்கட்டுரையின் நோக்கம் இக்கொள்கைக்கு இயேசுவின் பதில் என்ன என்பதுதான்.எனவே மற்ற வசனங்களை தவிர்த்து இயேசுவின் பதிலுக்கு செல்வோம்.
இயேசுவின் பதில்:
திரித்துவ கொள்கையாளர்கள் கூறுவது, இயேசுவும் திரித்துவத்தில் ஒருவரே.எனவே அவரையும் நாம் ஆராதிக்க வேண்டும் என்பதே ஆகும்.கடவுள் மூன்று ஆட்களாக இருந்தால் இயேசு கண்டிப்பாக அதை பற்றி கூறியிருப்பார் அல்லவா? அவருடைய பதிலை காண்போம்.
வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.(மாற்கு:12:28,29).
மேற்கூறிய வசனத்தை பாருங்கள்.இதற்க்கு ஏதாவது விளக்கம் தேவையா? எவ்வளவு பெரிய சதிக்குள் நாம் சிக்கியுள்ளோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
யாரை முக்கடவுள்களில் ஒருவர் என்று திரித்துவ வாதிகள் கூறுகின்றனரோ,அவரே அப்படி அல்ல என்கிறார்.பின் எப்படி இக்கொள்கை வந்தது?கர்த்தருக்கு சித்தமானால் அதைப்பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்க இருக்கிறோம்.
- கடவுள் ஒருவர்தான் என்று இயேசுவே கூறும் பொழுது திரித்துவ வாதிகள் ஏன் மூவர் என்று கூறுகின்றனர்?
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.(மத் :4:10).
இயேசு,கர்த்தரை ஆராதிக்க கூறுகிறார்.நாமோ இயேசுவை ஆராதிக்கிறோம்.என்ன கொடுமை இது?
முடிவுரை:
எல்லாம் வல்ல இறைவனாம்,ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களுடைய இறைவனை தவிர வேறு இறைவன் கிடையாது.அவரே சர்வ வல்லவர்.அவருக்கு ஈடு இணை கிடையாது.அவருக்கு முன்பாக மட்டுமே நமது முழங்கால்கள் முடங்கட்டும்.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
No comments:
Post a Comment