Saturday, May 4, 2019

இயேசுதான் மேசியா,இயேசுதான் வரப்போகிறவராகிய எலியா,இயேசுதான் இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தப்போகிறவராகிய தீர்க்கதரிசி

இயேசுதான் மேசியா,இயேசுதான் வரப்போகிறவராகிய எலியா,இயேசுதான் இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தப்போகிறவராகிய தீர்க்கதரிசி

முன்னுரை:

இயேசுதான் மேசியா,இயேசுதான் வரப்போகிறவராகிய எலியா,இயேசுதான் இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தப்போகிறவராகிய தீர்க்கதரிசி,என்று முதல் மூன்று நற்செய்தி புத்தகங்களும் நிரூபிக்க முயற்சி செய்கின்றன.இதற்க்கு காரணம்,
  • மல்கியா தீர்க்கதரிசி புத்தகத்தில்,எலியா தீர்க்கதரிசி இந்த உலகத்தில் வந்து சீர்படுத்தும் வேலையை செய்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கர்த்தர் தன்னுடைய தூதனை இந்த உலகத்திற்கு அனுப்புவார் என்றும் மல்கியா புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மல்கியா:3:1 மற்றும் மல்கியா:4:5 வசனங்களை படித்து பாருங்கள்.
எனவே யூத மக்கள் மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் உள்ள நபர்கள் வர ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அவ்வப்போது சில பேர் எழும்பி இஸ்ரயேலை காக்க வந்த மேசியா நான்தான் என்று கூறிக்கொண்டிருந்தார்.இந்த சூழ்நிலையில்தான் இயேசு பிறக்கிறார்.அவர் வளர்ந்த பிறகு அவரை இந்த இருவரில் ஒருவராக நினைக்க ஆரம்பிப்பதாக நற்செய்த்தி புத்தகங்களை எழுதியவர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறு நிரூபிப்பதற்காக பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.அவ்வாறு மேற்கோள் காட்டப்பட்ட வசனங்கள் அனைத்தும் இயேசுவிற்கு பொருந்துகிறதா என்பதே நம்முடைய கேள்வி. எடுத்துக்காட்டிற்காக அப்படிப்பட்ட ஒரு மேற்கோள் வசனத்தை தர இருக்கிறேன்.

மத்தேயு 2:15:
ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
அதாவது இங்கே  கூறப்பட்டுள்ளது என்னவென்றால்,இயேசுவை எகிப்திலிருந்து அவருடைய பெற்றோர்கள் அழைத்துக்கொண்டு வருகின்றனர்.

பழைய ஏற்பாட்டில் எந்த தீர்க்கதரிசி இவ்வாறு உரைத்திருக்கிறார் என்று பார்த்தால்,அது ஓசியா தீர்க்கதரிசி ஆவார்.அந்த வசனத்தை இப்பொழுது பார்ப்போம்.
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.[ஓசியா 11:1].
இந்த வசனம் என்ன கூறுகிறது?:

முழு வசனத்தியும் நாம் பார்க்க வேண்டும்.மத்தேயு பாதி வசனத்தை மட்டுமே கொடுத்துள்ளார்.இந்த ஓசியா புத்தகம் ஒரு அருமையான கவிதை நடை புத்தகம் ஆகும். கடவுள் ஓசியா தீர்க்கதரிசியைக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

நம்முடைய தமிழ் கவிஞர்கள்,பெண்களை வர்ணிக்கும் பொழுது நிலவை பயன்படுத்துவார்கள்.பெண்ணுடைய கண்களை மீனுக்கு ஒப்பிடுவார்கள்.இது உங்களுக்கு தெரியும்.ஒப்புமையோடு   எழுதுதல் என்பது ஒரு கவிதை நடை.ஓசியா அதை பயன்படுத்தி உள்ளார்.உணர்ந்து படிப்பவர்களுக்கு அது மிகவும் அருமையாக இருக்கும்.

அது போன்று இஸ்ரயேல் தேசத்தை கடவுள் தன்னுடைய மனைவியாக ஒப்புமை படுத்தி இரண்டாம் அதிகாரத்தில் கூறியிருப்பார்.அதை ஓசியாவிற்கு விளக்குவதற்காகவே அவனை ஒரு சோர பெண்ணை மனம் முடிக்க கடவுள் சொல்லியிருப்பார்.இதன் மூலம் கடவுள் விளக்குவது என்னவென்றால்,
  • இஸ்ரயேல் தேசம் வேசி தனம் செய்து விட்டது.
  • ஓசியா தன் பிள்ளைகளோடு பேசுவது போல் இரண்டாம் அதிகாரம் உள்ளது.
  • ஆனால்,அது கர்த்தர் ஒப்புமையோடு பேசுகிறார்.
  • ஓசியா தன் பிள்ளைகளோடு பேசும்பொழுது,"உங்கள் தாய் இனிமேல் எனக்கு மனைவி அல்ல.காரணம் அவளுடைய வேசி தனம்."
  • இஸ்ரயேல் தேசம் எனக்கு மனைவி அல்ல.அது வேசித்தனம் செய்து விட்டது.
  • இஸ்ரேல் தேசம் தன் வேசித்தனங்களை அகற்றிப்போட்டால் நன்மை உண்டாகும் என்று கர்த்தர் கூறுகிறார்.
இவ்வாறாக கடவுள் மிக அழகாக ஒப்புவமையோடு ஓசியா புத்தகம் முழுக்க பேசியிருப்பார்.இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அடுத்து மத்தேயு கூறிய வசனத்திற்கு வருவோம்.

இஸ்ரயேல் என்ற இளைஞன்:

மேலே நாம் கண்ட அதே ஒப்புவமையை இங்கும் கடவுள் ஓசியா தீர்க்கதரிசி மூலமாக பயன்படுத்துகிறார்.இஸ்ரயேல் மக்களை தன் மகனாக ஒப்புமை செய்து கடவுள் பேசுகிறார்.அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது அவரவர் படிக்கும் ஆழத்தை பொறுத்து இருக்கிறது.

இஸ்ரயேலை தன்னுடைய மகனாக கடவுள் கற்பனை செய்கிறார்.முழுவசனத்தையும்  கவனியுங்கள்.
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.
எகிப்தில் இருந்தது யார்? ஓசியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் இயேசு இருந்தாரா? அப்படி இல்லாத போது தீர்க்கதரிசி எப்படி இயேசுவை குறிப்பிடுவார்? இயேசுவைத்தான் குறிப்பிடுகிறார் என்று மத்தேயு எப்படி கற்பனை செய்தார்? இயேசுதான் ஓசியா வாழ்ந்த காலத்தில் இல்லையே.எதற்க்காக இப்படி செய்தார்? இது பொய்யாக இருக்கும் சமயத்தில் அவர் எழுதிய புத்தகத்தை எப்படி நம்புவது?

அப்படி என்றால் அந்த இளைஞன் யார்?:

நாம் ஏற்கனவே கூறிய படி ஓசியா புத்தகம் ஒரு கவிதை நடை புத்தகம்.ஒப்புவமைகளால் நிறைந்த புத்தகம்.இஸ்ரேலை தன்னுடைய குமாரனாக கடவுள் பார்க்கிறார்.இஸ்ரேலை தன்னுடைய குமாரன் என்று அவர் பல இடங்களில் கூறியும் உள்ளார்.
அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.[யாத் 4:22].
எனவே  இஸ்ரயேல் மக்களைத்தான் தன்னுடைய குமாரன் என்று கடவுள் உவமையாக கூறுகிறார்.இஸ்ரயேல் தேசம்தான் எகிப்தில் அடிமை பட்டு இருந்தது.கடவுள் இஸ்ரயேல் தேசத்தை விடுவித்து வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.இது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இதைத்தான் கடவுள் உவமையோடு,இஸ்ரயேலை இளைஞனாகவும்,அவனை நேசித்ததாகவும்,அதனால்தான் அவனை அடிமைத்தளையில் இருந்து விடுத்ததாகவும் கூறுகிறார்.

முடிவுரை:

எனவே இஸ்ரேல் தேசத்தைத்தான் கர்த்தர் தன்னுடைய குமாரன் என்று கூறியிருக்கிறார்.இயேசுவை அல்ல.ஏனென்றால் இயேசு அப்பொழுது பிறக்கவே இல்லை.

தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையில் மத்தேயு இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இருக்கலாம்.அப்படி அவர் தவறாக புரிந்து கொண்டார் என்றால்,ஏன் பாதி வசனத்தை மட்டும் கூறியிருக்கிறார்?

முதல் பாதியை சொன்னால் இயேசுவிற்கு இந்த வசனத்தை பொருத்தி பார்க்க முடியாது என்று கூட இருக்கலாம் அல்லவா?

இவ்வாறு தவறான மேற்கோள்கள் நிறைய உள்ளன.இயேசுவை முன்னிறுத்த முயன்றதன் விளைவு இன்று அவரை கடவுளாக வழிபடுகிறோம்.சர்வ வல்ல கடவுளாம் ஆபிரகாமின் கடவுள் இதை எப்படி பார்ப்பார்?

நாம் அனைவரும் மெய்யான ஒரே கடவுளாகிய இஸ்ரயேலின் கடவுளையே பணிந்து கொள்வோமாக.

1.சரி,இயேசுதான் மேசியாவா?
       
அவ்வாறு உறுதியாக கூறமுடியவில்லை.காரணம்,மேசியா வரும்பொழுதும்,வந்தபின்பும்,சில காரியங்கள் நடைபெறும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது.அவைகள் எதுவும் நடைபெற்றதாக தெரிய வில்லை.ஏசா:11-ம் அதிகாரம் 1முதல் 10-ம் வசனங்கள் வரை வாசித்து பாருங்கள்.எதுவும் நடைபெற்றிருக்கிறதா?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

2.இயேசுதான் வரப்போகிற எலியாவா?

இதையும் உறுதியாக கூற முடியவில்லை.யூத மக்கள் இயேசுதான் வரப்போகிற எலியா என்று நம்புவதாக நற்செய்த்தி புத்தகங்களை எழுதியவர்கள் விவரிக்கிறார்கள்.ஆனால் இயேசுவோ,தான் எலியா அல்ல,பதிலாக யோவான்ஸ்நானன்தான் எலியா என்று கூறுகிறார்(மத் :11:14).யோவான்ஸ்நானனோ,தான் எலியா அல்ல,பதிலாக ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக சத்தமாக"இருக்கிறேன்,என்று கூறுகிறார்.எனவே இது குழப்பமாக உள்ளது.

குழப்பங்கள் அதிகம் நிறைந்த புதிய ஏற்பாட்டை சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டியுள்ளது.எனவே எந்த குழப்பமும் இன்றி மெய்யான ஒரே கடவுளாம் "இஸ்ரயேலின் கடவுளையே"நாம் அனைவரும் தொழுது கொள்வோமாக.
இரா.இருதயராஜ்.
இந்த கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

No comments:

Post a Comment

My Posts