Friday, May 31, 2019

சாத்தான் மின்னலைப்போல் வானத்திலிருந்து விழுகிறதை கண்டேன்.[லூக் 10:18]

சாத்தான் மின்னலைப்போல் வானத்திலிருந்து விழுகிறதை கண்டேன்.[லூக் 10:18]


புதிய ஏற்பாடு என்பது கிரேக்க கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதற்கு சாட்சியாக லூக் :10:18 வசனத்தை குறிப்பிடலாம்.சாத்தான் என்பவன் யார் என்பது பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதி உள்ளேன்.அதன்படி,
  • சாத்தான் என்பவன் தனி ஒரு தூதன் அல்ல.
  • அது யாருடைய பெயரும் அல்ல.
  • தன்மையைக் குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தைதான் இந்த "சாத்தான்" என்ற சொல்.
  • எதிர்த்தல் என்ற செயலை குறிக்க பயன்படும் வார்த்தைதான் இந்த சாத்தான் என்ற சொல்.
  • பழைய ஏற்பாட்டில் வரும் "சாத்தான்" என்ற வார்த்தை இந்த வகையிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது.
  • புதிய ஏற்பாட்டில் "சாத்தான்" என்ற சொல் தீமைகளுக்கு ஆதாரமாக இருக்கும் ஒரு தள்ளப்பட்ட தூதனை குறிக்க பயன்படுகிறது.
"தள்ளப்பட்ட தூதன்" என்று ஒருவன் இருக்கிறான்,அவன்தான் அனைத்து தீமைகளுக்கும் காரணம்,என்று பழைய ஏற்பாட்டில் உள்ளதாக ஏறத்தாழ அனைத்து கிறித்தவர்களும் நம்புகின்றனர்.

ஆனால் ஹீப்ரு மொழி தெரிந்தவர்களுக்கு இது தவறு என்று தெரியும்.எனவே யூத மக்கள் கிறித்தவர்கள் நம்புவது போன்று நம்பிக்கை கொள்வது இல்லை.அவர்களை பொறுத்தவரை கடவுளை எதிர்த்து நிற்க எவரும் இல்லை.அது தூதனாக இருந்தாலும் சரி, இல்லை மனிதனாக இருந்தாலும் சரி.

பின் எப்படி "நன்மை Vs தீமை" என்ற ஒரு  முறை வந்தது? அதற்கு கிரேக்க,ரோம மற்றும் எகிப்திய வழிபாட்டு முறைகளைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பல கடவுள் வழிபாட்டு முறைகளில் தீமைகளுக்கென்று ஒரு கடவுள் இருப்பான்.

யூத வழிபாட்டு முறைகளில் இந்த நம்பிக்கைகள் கிடையாது.இதை நாம் பழைய ஏற்பாட்டிலும் காணலாம்.சர்வ வல்லமை படைத்த கடவுள் ஒருவரே.அவரை எதிர்த்து யாராலும் நிற்க இயலாது,என்பதே பழைய ஏற்பாடு நமக்கு சொல்லும் பாடம்.

கிரேக்கர்களின் ஆதிக்கம் பரவிய பின்னர்,அவர்களுடைய கலாச்சாரமும் சேர்ந்தே பரவியது.இன்று அமெரிக்க கலாச்சாரம் எப்படி மிகப்பெருமையுடன் பார்க்கப்படுகிறதோ அவ்வாறு கிரேக்க கலாச்சாரம் பார்க்கப்பட்டது.

எனவே தீமைகளுக்கென்று ஒருவன் தேவைப்பட்டான். கிரேக்க கலாச்சாரம்  ஊடுருவி இருந்த நேரம் அது.முதல் நூற்றாண்டு காலகட்டம் மற்றும் அதற்க்கு முந்தைய 200 வருடங்களில் இக்கலாச்சாரம் நன்றாக வேரூன்றி இருந்தது.

சிதறியிருந்த யூதர்களில் பெரும்பாலோனோர் கூட இக்கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்."சாத்தான்" என்ற ஒருவன் உருவானது இவ்வாறாக கூட இருக்கலாம்.கிரேக்கர்களுக்கு ஏற்றாற்போல் இக்கதாப்பாத்திரம் நாளடைவில் உருவாகிவிட்டது.

இப்பொழுது இயேசுவும் கூட "தீமைகளுக்கென்றே படைக்கப்பட்ட ஒரு தூதன் இருப்பதாக" நம்பியிருக்கிறார்.எனவேதான் அவன் கீழே விழத்தள்ளப்பட்டதாக லூக்கா நற்செய்தி புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.அப்படியென்றால்,
  • படித்த யூதர்கள் நம்பாத ஒரு செய்தியை யூதனாகிய இயேசு நம்பினாரா?
  • பிதாவை எதிர்த்து செயல்பட ஒருவனால் கூடும் என்று இயேசு நம்பினாரா? அல்லது லூக்கா நம்பினாரா?
  • இயேசு கூறியதாக லூக்கா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறாரா?
ஒரு கலாச்சாரம் மற்றொரு கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் புரிந்து கொள்ளலாம்.நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை நாம் இதற்காக எடுத்து கொள்வோம்.நமக்கே உரிய தனி அடையாளங்கள் என்னென்ன என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.சிலவற்றை கீழே தருகிறேன்.
  • நமக்கு தமிழ் பெயர்களை தவிர வேறு எதுவும் தெரியாது.ஆனால் யாரை நாம் நம்மை விட பெரியவர்களாக நினைக்கிறோமோ அவர்களுடைய பாதிப்பு நம்முடைய பழக்கவழக்கங்களில் தொற்றிக்கொண்டு விடும்.நமது முன்னோர்கள்,அரசன் முதல் ஆண்டி வரை,இயற்கையிலேயே அழகான பிராமணர்களின் பழக்கங்களை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டோம்.இன்று நம்முடைய பெயர்களில் சம்ஸ்கிருத தாக்கம் மிக அதிகம்.
  • சினிமா,டீவி,போன்றவற்றின் ஊடுருவல் மிக அதிகம் இன்று.அதில் காட்டப்படுபவர்களை போன்று இருக்க விருப்பப்படுகிறோம்.இவர்களில் பெரும்பான்மையானோர் வட இந்தியர்கள் அல்லது கேரள மக்கள்.கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் நமக்கே தெரியாமல் இவர்களுடைய செயல்பாடுகளை நாமும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.
இவ்வாறு ஒரு கலாச்சாரம் மற்றவற்றில் மீது தாக்கம் ஏற்படுத்துகிறது.அத்தாக்கத்தின் விளைவாக,பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

யார் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்?

யாரை அழகு,அறிவு,வீரம் உடையவர்களாக நாம் நினைக்கிறோமோ அவர்கள்தான் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். கிரேக்கர்கள் இயற்கையிலேயே இம்மூன்றையும் கொண்டிருந்தனர். எனவே அவர்களுடைய தாக்கம் மற்றவர்கள் மீது ஏற்பட்டது.

சுருக்கமாக கூற வேண்டுமாயின்,யாரை நாம் நம்மை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவர்கள் என நினைக்கிறோமோ அவர்களிடம் நாம்  படுகிறோம்.அவர்களை நாம் பின்பற்ற ஆரம்பித்து விடுகிறோம்.கிரேக்கர்கள் சென்ற இடமெல்லாம் இதுதான் நடந்தது.இவ்வாறுதான் யூதர்களும் பாதிக்க பட்டிருந்தனர்.

கடவுளும் இதைக்குறித்து முன்னரே எச்சரிக்கை செய்து இருக்கிறார்.

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும்.

அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள்.

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;

அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.[யாத் 34:12-16]

ஆனால்  நாம் அவ்வாறு இருப்பதில்லை.அழகு,அறிவு,வீரம் இவைகள் கண்களை குருடாக்கி விட்டன.கடவுள் எச்சரித்தபடி நடந்தும் விட்டது.

கிரேக்கர்களின் தாக்கத்தினால் நமக்கு கிடைத்ததுதான் "புதிய ஏற்பாடு".கடவுளுக்கு எதிராக செயல்படும் "தூதன்"தான் "சாத்தான்" என்ற புதிய கோட்பாடு கிரேக்கர்களுடையது.அதை இயேசு நம்பியிருக்கிறார்.அதன்விளைவாக நமக்கு கிடைத்த வசனம்தான் "லூக் 10:18".

கடவுள் ஒருவரே! அவர் இஸ்ரயேலின் கடவுளே!இதைத்தான் பழைய ஏற்பாடு வலியுறுத்துகிறது.பின்னர் வந்தவவைகள் அனைத்தும் கிரேக்க,ரோமா கலாச்சார தாக்கங்கள்.மெய்யான கடவுளாகிய இஸ்ரேலின் கடவுளை நாம் அனைவரும் பணிந்து கொள்வோமாக!

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:

No comments:

Post a Comment

My Posts