படைப்பும்,அறிவியலும் - பாகம் 1
படைப்பினைப்பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.இந்த உலகம் படைக்கப்பட்டது எப்படி என்று அறிஞ்சர்கள் மற்றும் அறிவியலாளர்கள் பற்பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அறிவியல் அறிவு இல்லாவிட்டாலும் கூட கற்பனைவளம் மிக்கவர்கள் இக்கேள்வியை தங்களுக்குள் கேட்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.இந்த உலகம் படைக்கப்பட்டது எப்படி என்ற இக்கேள்வி பதில் கிடைக்காத ஒரு கேள்வியாகவே இன்னும் இருக்கிறது என்பது அறிவியலாளர்களின் கருத்து.பற்பல பதில்கள் பல்வேறு தரப்பினரிடம் வந்தாலும் ஒரு உறுதியான முடிவு இன்னும் எட்டப்படாமலேயே உள்ளது.
இக்கட்டுரையின் பின்புலம்:
இக்கேள்வி என்னையும் குடைந்து கொண்டுதான் இருக்கிறது.பெரும் அறிவியல் அறிவு இல்லாவிட்டாலும் கூட, இருக்கிற சிறிதளவு அறிவு என்னுள் இக்கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறது.இளைஞனாக இருந்த பொழுது இது தொடர்பான பல புத்தகங்களை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் வாங்கி படித்திருக்கின்றேன்.
நாம் இருக்கின்ற இந்த பூமியானது தனியாக இல்லை,பிரபஞ்சம் என்ற ஒரு பெரும், கற்பனைக்கும் அடங்காத அமைப்பிற்குள் இருக்கும் ஒரு மிகச்சிறு புள்ளிதான் என்று புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டபோது பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. என்னையொத்த பெரும்பாலான இளைஞர்களுக்கு இத்தகவல் தெரியாது,குறிப்பாக என் நண்பர்களுக்கு.எனக்கு தெரிந்திருக்கிறது என்ற மமதையும் என்னுள் ஏறிக்கொண்டது.இது தொடர்பாக மேலும் புத்தகங்கள் வாங்கி படிப்பது எனது பழக்கமாக மாறிவிட்டது.
பின் பொறியியலில் பட்டம் பெற்றேன்.பட்டம் பெற்ற சில வருடங்களுக்கு பின் கூடுதல் அறிவு கிடைத்தது.மின்னியல் தொடர்பான பாடங்களை நான் படித்திருந்தேன்.இந்த சூழ்நிலையில் பிரபஞ்சம் பற்றிய அறிவு கூடுதலாக விரிவடைந்தது.பின்னர் பல கேள்விகள் என்னுள் எழுந்தன.
- கற்பனைக்கு எட்டாத இந்த அமைப்பு எப்படி தானாக உருவாக முடியும்?
- இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட முறையில் தானாகவே இயங்கும் படி உள்ளதே அது எப்படி?
- சிறிதும் பிசகாமல் சூரியன் உதிக்கிறது,மறைகிறது காலங்கள் மாறுகின்றனவே அது எப்படி?
- தானாக அனைத்தும் இயங்கும் என்பது அடிமுட்டாள்தம் என்பது எனக்கு தெரியும்.காரணம் ஆற்றல் அழிவின்மை விதி.
- இப்பிரபஞ்சத்தின் அமைப்பைப்பற்றி ஓரளவுக்கு கற்பனை செய்ய முடிபவர்களுக்கு,இதற்க்கு தேவைப்படும் ஆற்றலைப்பற்றி கற்பனை செய்ய முடியும்.
- ஆனால் அதன் அழவைப்பற்றி கற்பனை செய்ய இயலாது.அது அவ்வளவு பெரியது.
- கற்பனைக்கு எட்டாத இந்த ஆற்றலை கொடுத்தது யார்?"ஆற்றல் அழிவின்மை விதிப்படி" ஆற்றலானது படைப்பின் பொழுது அங்கேயே இருந்திருக்க வேண்டும்."எப்பொழுதுமே இருக்கின்ற ஆற்றல்" - எப்படி இது சாத்தியம்?
- இருக்கின்ற ஆற்றல்தான் பற்பல வகைகளாக மாறுகின்றன.கற்பனைக்கு எட்டாத காலகட்டத்திற்கு முன்னாள் இருந்த,இருக்கின்ற,இன்னும் இருக்கப்போகின்ற இந்த ஆற்றல் என்பது யார்? அல்லது எது?
மேற்கூறிய கேள்விகள் என்னை துளைத்து எடுத்தன."ஆற்றல்(Energy)" பற்றிய அடிப்படைத் தகவல்களை திரட்டினேன்.நான் பொறியியலில் படித்தது அனைத்தும் "ஆற்றல்"பற்றயதுதான் என்று அறிந்து கொண்டேன்.நான் மட்டுமல்ல பொறியியல் படிக்கும் அனைவரும் ஆற்றல் பற்றித்தான் படிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.ஒரு குறிப்பிட்ட மின்சுற்று அல்லது இயந்திரம் என்று அவர்கள் படிக்கும் அனைத்தும் "ஆற்றலைத்தான்" பயன்படுத்துகின்றன.
ஆற்றல் பற்றிய அறிவு என்னுள் வந்தவுடன் எனக்குள் தீயாய் எறிந்த கேள்வி "ஆற்றல் என்பதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் இந்த ஆற்றல் எப்பொழுதுமே இருந்திருக்க வேண்டும்,அனைத்தும் பிறந்து மறுக்கிறது ஆனால் ஆற்றல் மட்டும் நிலைக்கிறது என்றால் இந்த ஆற்றல் யார்? எதுவும் தோன்றுவதற்கு முன்னால் ஆற்றல் மட்டுமே இருந்திருக்க வேண்டும்,யார் இந்த ஆற்றல்? அல்லது எது இந்த ஆற்றல்?
இக்கேள்வி என்னை கிறித்தவத்திற்குள் தள்ளியது.அதுவரை நான் ஒரு தீவிர இந்து.பகவத் கீதையை நான் படித்திருக்கின்றேன்.இக்கேள்விகளுக்கு அங்கு விடையில்லை.அது ஒரு குழப்பங்கள் நிறைந்த புத்தகமாக எனக்கு தோன்றியது.கிறித்தவத்திற்கு நான் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு திருமறையை படித்தேன்.முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை.ஆனால் என்னுடைய கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் என்று தோன்றியது.
"ஈடு இணை இல்லாத, கற்பனைக்கு எட்டாத, எதற்க்குள்ளும் அடக்க முடியாத,எல்லைகள் வகுக்க முடியாத ஒருவர் இருக்கிறார் அவர்தான் கடவுள்.அவர் ஒருவர் மட்டுமே.அவருக்கு துணைகளோ,உதவிகளோ தேவை இல்லை,யாரை நம்பியும் அவர் இல்லை,அவர் குரலுக்கு உயிருள்ளவை உயிரற்றவை என அனைத்தும் கட்டப்படுகின்றன,என்று படித்தேன்.இவர்தான் கடவுளாக இருக்க முடியும் என்று எனக்கு தோன்றியது.காரணம் நான் படித்த தெரிந்து கொண்ட "ஆற்றலும்" இவ்வாறுதான்.அதுதான் அனைத்தையும் இயக்குகிறது.அதற்க்கு எதுவும் தேவை இல்லை.இந்த கடவுள் மட்டுமே கடவுள்.இவருக்கு இணை எதுவும் இல்லை" என்று நான் படித்த பொழுது கிறித்தவத்திற்குள் முழுகினேன்."
இக்கட்டுரையை எழுதுவதற்கும் ஒரு காரணம் உள்ளது.சில வாரங்களுக்கு முன்னர் "ஆதியாகமத்தை",அதாவது "தொடக்க நூலை" படிக்கலாம் என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்.இதற்க்கு முன்னர் பல முறை அதை படித்திருக்கிறேன்.ஆனாலும் பல கேள்விகளுக்கு இன்னும் எனக்கு விடையில்லை. இந்நிலையில் "ஆற்றல்" பற்றிய அறிவு என்னை இக்கடவுளை மட்டுமே தொழுது கொள்ள செய்தது."ஒரு கடவுள்" மட்டுமே சாத்தியம் "பல கடவுள்" சாத்தியம் அல்ல என்ற எனது கருத்திற்கு அடிப்படையே "ஆற்றல்" பற்றிய அறிவுதான்.
தொடர்ந்து ஆதியாகமம் படிக்க ஆரம்பித்தேன்.முதல் அதிகாரத்தை படிக்க ஆரம்பித்தேன்.ஆரம்பிக்கும் பொழுதே பல கேள்விகள் என்னுள் இருந்தன.அதில் சில மற்றவர்கள் என்னை கேட்டது.அவையாவன,
- படைப்பானது வரிசைக்கிரமமாக இல்லையே ஏன்?இஸ்லாம் சகோதரர்கள் இக்கேள்வியை கேட்டனர்.குறிப்பாக டாக்டர்.சாகிர் நாயக் இக்கேள்வியை கேட்டிருந்ததை அவருடைய காணொளிகளில் நான் பார்த்திருக்கிறேன்.
- மேலும் செடிகொடிகள் படைக்கப்பட்ட பிறகுதான் சூரியன் படைக்கப்படுகிறது,இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருந்தார்.
இக்கேள்விக்கு எனக்கு பதிலில்லை.எனக்கும் இதைக்குறித்து சற்று கவலையாகத்தான் இருந்தது.இம்முறை கடவுள் இதற்க்கு பதில் தருவார் என்ற எண்ணம் எனக்குள் ஏனோ ஏற்பட்டது.அம்மாதிரியே பதிலும் கிடைத்தது.
பதில் கிடைத்தவுடன் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது. அதிலிருந்து பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது.கடவுளுக்கு நன்றி சொல்லி அன்றையதின வாசிப்பை முடித்தவுடன் "தி இந்து" ஆங்கில செய்தி தாளை புரட்டினேன்.அங்கு ஒரு செய்தி. "இயற்பியலுக்கான நோபல் பரிசு" அறிவிக்கப்பட்டிருந்த செய்தியை பார்த்தேன். ஆதியாகமத்தில் கிடைத்த விடைகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அச்செய்தி இருந்தது."பெரு வெடிப்பு கொள்கை(Big Bang Theory)" பற்றி அடிப்படை அறிவு எனக்கு ஏற்கனவே இருந்தது.இப்பொழுதுதான் படித்தேன் அதற்குள் கடவுள் எனக்கு மேலும் ஒரு தெளிவை கொடுத்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
படைப்பைப் பற்றிய பல சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது.ஆச்சரியமான தகவல்கள் எனக்கு கிடைத்தன.கடவுள் பற்றிய நம்பிக்கை மேலும் எனக்குள் பெருகியது.இவரே கடவுள் என்பதற்கு திருமறையை விட்டு வெளியே கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.
இவைகளைத்தான் இக்கட்டுரையில் விரிவாக எழுத இருக்கிறேன்.தொடக்க நூலில் விவரிக்கப்பட்டுள்ள படைப்பு மிக தெளிவாகவும் சரியாகவும் இருக்கிறது.இக்கட்டுரையை கொஞ்சம் விரிவாகவே எழுத நினைக்கிறேன்.எனவே பொறுமையுடன் படித்து பாருங்கள்.
படைப்பின் சுருக்கத்தை முதலில் நாம் இங்கே பார்த்து விடுவோம் பின்னர் விரிவாக பார்க்கலாம்.
நாள்:1
வெளிச்சம் படைக்கப்படுகிறது, தண்ணீர் படைக்கப்படுகிறது, குறிப்பாக "இரவு-பகல்"(வெளிச்சம்-இருள் ) படைக்கப்படுகிறது.நாள்:2
"ஒரு விரிவு" படைக்கப்படுகிறது.இதுதான் வானங்கள் அல்லது வானம்.நாள்:3
கடலும், தரையும்(இத்தரைத்தான் "நிலம்" என்று அழைக்கப்படுகிறது) உருவாக்கப்படுகிறது.புல், பூண்டுகள், விதைகள், கனிகள் உருவாக்கப்படுகின்றன.நாள்:4
முதல் நாள் உருவாக்கப்பட்ட "இரவு-பகல்"-ஐ ஆண்டுகொள்ள சூரியன், நிலவு மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இதன் மூலம் நாட்கள், வருடங்கள்,காலங்கள்,அடையாளங்கள் போன்றவைகள் தோன்றுகின்றன.அதாவது சூரியன் நிலா போன்றவைகள் இயங்க ஆரம்பிக்கின்றன.நாள்:5
தண்ணீரில் வாழ்பவன,பறப்பன போன்றவைகள் உண்டாக்கப்படுகின்றன.நாள்:6
விலங்குகள் மற்றும் மனிதர்கள் படைக்கப்படுகின்றனர்.நாள்:7
ஓய்வு நாள் ஆசீர்வதிக்கப்படுகிறது."பூமி" என்ற வார்த்தையின் விளக்கம்:
இந்த வார்த்தையை கேட்டவுடன் நமது மனக்கண்ணில் தோன்றுவது பூமி உருண்டைதான். உண்மையில் "பூமி" என்ற வார்த்தை தமிழ் வார்த்தைதானா என்று எனக்கு தெரிய வில்லை.ஆனால் அவ்வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பது எனது கருத்து.ஒரு மொழிபெயர்ப்பில் நாம் பயன்படுத்தும் வார்த்தை மூல மொழி என்ன கருத்தைக் கூறுகிறதோ அதை சிதைக்கும் வண்ணமாக இருக்கக்கூடாது.
ஏனென்றால் "பூமி" என்று நாம் தமிழ் திருமறையில் படிக்கும் பொழுது அது மூல மொழியாகிய எபிரேய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இந்த வார்த்தைக்குறிய எபிரேய வார்த்தை "Haretz(אֶרֶץ)" என்பது ஆகும்.இதன் பொருள் "ஒரு பரந்த நிலப்பரப்பு" என்பது ஆகும்.
எனவே பூமி என்று மொழிபெயர்த்ததற்கு பதிலாக "நிலப்பரப்பு" அல்லது "நிலம்" என்பதே சரியான மொழிபெயர்ப்பாக இருக்க முடியும்.தமிழ் வார்த்தை பயன்படுத்தாதன் விளைவே இதற்கு காரணம்.இந்த "Haretz(אֶרֶץ)" என்ற வார்த்தை இடத்திற்கு தக்கவாறு பொருள் கொள்ளப்பட வேண்டும்."தேசம்" அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டினைக் குறிக்கவும் இந்த சொல்தான் பயன் படுகிறது.
கத்தோலிக்க திருமறை இதனை சரியாக மொழிபெயர்த்துள்ளது.
"மண்ணுலகு" என்ற வார்த்தை நமக்கு சரியான பொருளைத் தருகிறது.அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
10கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார்[தொ.நூ 1:9,10]
இந்த அடிப்படைக்கு கருத்துக்களை மனதில் கொண்டு தொடர்ந்து நாம் படிக்கலாம்.இது போன்று நாம் கொண்டுள்ள ஒரு தவறான புரிதல் என்னவென்றால்,வானமும்,பூமியும் முதல் நாளே படைக்கப்பட்டது என்று நினைப்பதுதான்.இது தவறு.தொடர்ந்து படியுங்கள் உண்மை விளங்கும்.
ஹீப்ரு அடிப்படைகள்:
ஹீப்ரு மொழி மற்றும் தமிழ்,ஆங்கிலம் போன்ற மொழிகளில் "உறுதி படுத்தும் சொல்" என்று ஒன்று உள்ளது.ஆங்கிலத்தில் இது "The" என்ற வார்த்தை ஆகும்.தமிழில் "இந்த", "அந்த" போன்ற வார்த்தைகளாக.இவ்வார்த்தைகள் ஒரு சொற்றொடரில் பொதிந்திருக்கும் கருத்தை மிகத்தெளிவாக,எவ்வித சந்தேகமும் இன்றி தெரிவிக்கப் பயன்படுகிறது.
உதாரணமாக "தோட்டத்தில் ஒரு மாடு மேய்ந்தது" என்று கூறுவதற்கும் "தோட்டத்தில் இந்த மாடுதான் மேய்ந்தது" என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.இரண்டாவது கூற்றில் "இந்த" என்ற வார்த்தை "எந்த மாடு" மேய்ந்தது என்பதை உறுதிப்படுத்தி விட்டது.
இவ்வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் மேலும் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும் முதலில் நாம் காண வேண்டும்.
ஏதாவது ஒன்றைப்பற்றி நாம் விளக்கி கட்டுரை ஒன்றை எழுதும் பொழுது,ஒருவரைப்பற்றியோ அல்லது ஒரு பொருளைப்பற்றியோ நாம் முதல் முறையாக கூற முற்படும் பொழுது இந்த "உறுதிப்படுத்தும் வார்த்தையை" பயன்படுத்த மாட்டோம்.ஒருமுறை பயன்படுத்திய பிறகு அடுத்தடுத்த முறைகளில் "இந்த அல்லது அந்த" என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.உதாரணமாக,
நான் நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக,என் வீட்டிலிருந்து புறப்பட்டு பேரூந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தேன்.ஒரு மாடு ஒன்று எனக்கு எதிரே வந்து கொண்டிருந்தகத்து."அந்த" மாடு என்னை முட்டி விடக்கூடாது என்பதற்காக நான் எச்சரிக்கையாக விலகி சென்றேன்.
மேற்கண்ட உதாரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.ஹீப்ரு மொழியிலும் இது போன்று ஒரு சொல் உள்ளது.அது "Ha(ה)" ஆகும்.இது ஒரு முக்கியமான சொல்.பெரும்பாலும் இவார்த்தையை நாம் கவனிப்பதில்லை.ஆதியாகமம்[தொடக்க நூல்] படிக்கும் பொழுது இவ்வார்த்தை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும்.
இவ்வார்த்தை பல தவறான கருத்துக்களை மாற்றியிருக்கிறது.இங்கும் அவ்வாறான ஒரு கருத்தை மாற்றப்போகிறது.
No comments:
Post a Comment