Friday, October 4, 2019

தேவன் அது நல்லது என்று கண்டார்

தேவன் அது நல்லது என்று கண்டார் 


ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் வரக்கூடிய வார்த்தை இது.வெளிப்பார்வைக்கு இந்த சொற்றொடர் சாதாரணமான ஒன்றுதான் என்று தோன்றினாலும் இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒன்றாக எனக்கு தோன்றுகிறது.

திருமறையாகிய பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள கடவுளால் இவ்வுலகம் மற்றும் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் படைக்கப்பட்டன என்று நம்புவர்களுக்கே இது புரியும் என நினைக்கிறேன்.

இக்கட்டுரை எதைப்பற்றியது என்றால்,இன்று நாம் "இயற்கைக்கு திரும்புவதைப் பற்றியது.இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏற்பட்ட மாபெரும் தொழிற்புரட்சி மக்களின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றி விட்டது என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒன்றுதான்.

உற்பத்தி:

எதையும் உற்பத்தி செய்யும் திறனை மானுடம் பெற்றது.வாழ்க்கை முறை மிகவும் எளிதானது.எதுவெல்லாம் மனுக்குலத்திற்கு மிகப்பெரும் நன்மைகள் படைக்கும் என்று அறிவிக்கப்பட்டதோ,அவை அனைத்தும் இன்று பெரும் தீமைகள் தரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது என்கிறோம்.
  • பிளாஸ்டிக் இன்று பெரும் அரக்கனாக மாறிவிட்டது.இது ஏற்கனவே பெரும் சூழல் மாசுபாட்டை உருவாக்கி விட்டது.
  • நன்றாக தெரிந்த ஒரு விளம்பரம், "அயோடின் உப்பு". இயற்கையாக கிடைக்கும் உப்பு தைராய்டு நோயை உருவாக்கும்,எனவே "அயோடின் சேர்க்கப்பட்ட உப்பை" பயன்படுத்த வேண்டும் என்ற விளம்பரம்.இன்று மறுபடியும் "கல் உப்பை" தேடுகிறோம்.
  • வேகமான உலகில்,எதுவும் உடனே வேண்டும் என்ற எண்ணத்தின் மற்றொரு உற்பத்தி "தெளிந்த எண்ணெய்கள்".

    மனிதனுடைய திறனுக்கேற்ப மிதமான வேகத்தில் ஆட்டி எடுக்கப் படும் பொழுது கிடைப்பது "இயற்கையான எண்ணெய்". அதுவே செயற் கையாக இயந்திரத்தில் வேகமாக ஆட்டப்படும் பொழுது கிடைத்தது "தெளிவான செயற்கை எண்ணெய் ".இது தீங்கு என்று இன்று தெரிந்து விட்டது.
  • வேகமான சமையலுக்கு இன்று பயன்படுத்தப்படும் " சமையல் பொடிகள்".ஒரு கட்டத்தில் "பெரும் கவுரவமாக" கருதப்பட்ட இச்செயல் இன்று உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒன்று என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
  • நாட்டு மாட்டு பால்.சில காலத்திற்கு முன்பு நாட்டு மாடு வைத்திருப்பவர்களை இளக்காரமாக பார்த்த காலம் உண்டு.சீமைப்பசுக்கள் வைத்திருப்போர் சிறந்தவர்களாக பார்க்கப்பட்டனர்.இன்று இதன் அருமை தெரிந்து விட்டது.
இது போன்று எண்ணற்ற செயல்களில் மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன.இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களே நலமானது என்ற எண்ணம் தற்போது மேலோங்கி வருகிறது.இதன் மூலமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

இயற்கையாக கிடைக்கும் அனைத்தும் நம்முடைய நல வாழ்வுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தவில்லை.மனிதனின் அறிவின் மூலமாக உருவாக்கப்பட்ட அனைத்தும் தீமைபயப்பதாக உள்ளது.இன்று தீமையாக தெரியாமல் இருக்கலாம்.இவ்வாறுதான் மனிதன் உருவாக்கிய அனைத்தும் முதலில் நினைக்கப்பட்டன. இன்று நிலைமை வேறாக உள்ளது.இதற்க்கு முன் இல்லாத நோய்கள் எல்லாம் உருவாகின்றன.சீமைப் பசுக்கள் மூலம் பெறப்படும் பால் என்பது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல என்று இன்று நிரூபிக்கப்பட்டாயிற்று.சீமை பசுக்கள் இயற்கையானவை அல்ல.அவைகள் செயகையாக கருத்தரிக்க படுபவர்கள்.அதிக பால் தர வேண்டும் என்பதற்காக பல செயல்கள் அதன் மீது செய்யப்பட்டன.இன்று உண்மை வெளியே வந்து விட்டது.மனிதன் உருவாக்கியது இன்று தீமை என்று விளங்கி விட்டது.

இயற்கை என்பது என்ன?

இயற்கையான பொருட்களை பற்றிய விழிப்புணர்வு  ஓரளவுக்கு இன்று ஏற்பட்டு விட்டது.இயற்கை என்றால் என்ன? மனிதனால் உருவாக்கப்படாத அனைத்தும் இயற்கையே.அப்படியென்றால் இயற்கை தானாக உருவானதா? தானாகவே எதுவும் உருவாகாது என்பது அறிவியல் கோட்பாடு.

எனவே இயற்கை என்பதும் படைக்கப்பட்ட ஒன்றுதான்.மனிதனால் படைக்கப்பட்டது அல்ல.இயற்கை என்பது இறைவனால் படைக்கப்பட்ட காரணத்தினால் அது "நன்றாகவே" உள்ளது.இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒருவேளை இக்கருத்தை ஏற்றுக்கொள்ள சிரமப்படலாம்.

"மனிதனால் படைக்கப்பட்ட "அனைத்தும்" நன்மை தரக்கூடியது இல்லையா?" என்று நீங்கள் கோபப்படலாம்.மனிதனால் படைக்கப்பட்ட அனைத்தும் தீமை தரக்கூடியதாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள சிறிதளவு அறிவியல் தெரிந்தால் போதுமானது என்று நான் நினைக்கிறேன்[எது இயற்கை எது செயற்கை என்பது விவாதத்திற்குட்பட்டது].இயற்கையாக படைக்கப்பட்ட எந்த ஒரு பொருளிலோ அல்லது உயிரினத்திலோ மனிதனுடைய அறிவு கலக்கும் பொழுது நன்மை என்று முதலில் தோன்றுகிறது.இறைச்சி தேவையை நிறைவு செய்ய கோழிகளுக்கு செயற்கை வளர்ப்பு முறைகள் கையாளப்பட்டன.ஆரம்பத்தில் சரியான செயல் என்று தோன்றிய அம்முறை இன்று தவறு என்று நிரூபிக்கப்படுகிறது.பிராய்லர் கோழிகள் உணவுக்கு ஏற்றது அல்ல என்று அனைவருக்கும் இன்று தெரியும்.

எப்படி படைக்கப்பட்டது?

இயற்கை என்று நாம் நினைக்கும் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது.அவர் இவைகளை படைத்தது விட்டு ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கிறார்.படைக்கப்பட்டது "நன்றாக" உள்ளது என்று தெரிந்து கொண்டு அடுத்தப் படைப்பிற்கு செல்கிறார்.

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம்        உண்டாயிற்று.
    வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.[ஆதி 1:3,4]
    பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
    அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.[ஆதி 1:9-12] 
நல்லது என்று தெரிந்த பிறகே இறைவன் நமக்கு அனைத்தையும் தருகிறார்.எனவே அவை நன்றாகவே இருக்கும்.இயற்கை என்பது அவருடைய படைப்பே! அவருடைய படைப்பு அனைத்தும் நன்றே!!.இயற்கையாக கிடைக்கும் அனைத்தும் நன்றாகவே உள்ளது என்பதற்கு சில உதாரணங்களை நாம் காணலாம்.


பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். தானாகவே மரத்தில் பழுக்கும் பழங்களுக்கும், காய்களை பறித்து நாம் பழுக்க வைப்பதற்கும் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது.அதிலும் விரைவாக பழுக்க வைப்பதற்காக இன்று பல வேதிப்பொருட்களை சேர்க்கும் முறைகள் பெருகி விட்டன.அவ்வாறு வேதிப்பொருட்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பலன்கள் தங்களுடைய தன்மையை இழந்து விடுகின்றன.விரைவாக பழுக்க வைப்பது நல்லது என்று ஆரமபத்தில் நம்பப்பட்ட ஒன்று பின்னர் தீமை தரக்கூடியது என்று கண்டறியப்படுகிறது.தானாகவே பழுக்கும் பழங்கள் தங்களுடைய தன்மையை அப்படியே கொண்டுள்ளன.அதாவது படைக்கப்பட்ட பொழுது அவைகள் என்ன நற்குணங்களைக் கொண்டிருந்தவனாவோ அவைகள் நமக்கு அப்படியே கிடைக்கிறது.மனிதனுடைய அறிவு உள்ளே புகுந்த பொழுது நஞ்சாக மாறிவிட்டது.

மனிதன் தன்னுடைய போக்குவரத்துக்காக ஊர்திகளை உண்டாக்கினான்.பற்பல நோக்கத்திற்காக இன்று எண்ணற்ற ஊர்திகளை நாம் கொண்டுள்ளோம்.மனிதன் இவைகளை ஆரம்பத்தில் உருவாக்கிய போது,மனுக்குலத்திற்கு கிடைத்த பெரும் நன்மை என்றே நினைத்திருப்போம்.


இன்றும் கூட நாம் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்போம். இவைகள் இல்லாமல் எப்படி வாழ முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். மனிதன் இவைகளை எல்லாம் உருவாக்க வேண்டும் என்று இறைவன் நினைத்தாரா என்று தெரிய வில்லை.ஆனால் எதெற்கெல்லாம் இன்று நாம் ஊர்திகளைக் கொண்டுள்ளோமோ அவைகள் எதுவும் இன்றி பழங்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அவர்கள் இவ்வசதிகளை அனுபவிக்காத காரணத்தினால் நன்றாக வாழவில்லை என்று கூட நீங்கள் நினைக்கலாம்.நன்றாக வாழ்வது என்பது ஒவ்வொருவருடைய மனநிலைமையைப் பொறுத்தது.சரி இவ்வூர்திகளால் பெரும் நன்மைகள் இருக்கின்றன என்று நீங்கள் நினைத்தால் நான் தீமைகளை பட்டியலிடுகிறேன்.

  • முதலில் நம்முடைய "இயக்கம்" குறைந்து விடுகிறது.இதன் காரணமாக உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சங்கிலி தொடர்போல் இம்மாற்றங்கள் அடுத்த மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. விளைவு.....? புதுப்புது நோய்கள்.
  • இவ்வூர்திகள் இயங்குவதற்கு எரிபொருள்கள் தேவை.அதற்காக நாம் பூமியை துளையிடுகிறோம்.பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவு துளையிட்டு எரிபொருட்களை அங்கிருந்து கொண்டு வருகிறோம்.
  • இந்த எரிபொருட்கள் மூலமாக இயங்கும் ஊர்திகள் அனைத்தும் நன்மைபயக்கின்றனவா?இல்லை.சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு முதன்மையான காரணிகள் இவைகளில் இருந்து வெளிவரும் மாசுக்கள்.
  • நாம் நினைப்பதை விட மிக மோசமான விளைவுகளை ஊர்திகளில் இருந்து வரும் மாசுக்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.வேகமான உலகில் நாம் இதனை நினைப்பதே இல்லை.இது "நல்லது" என நாம் காண்கிறோமா?
மேற்கூறியவைகள் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான்.இந்த ஊர்திகள் இல்லாமல் வாழவே முடியாதா என்ற கேள்விக்கு பதில் முடியும் என்பதே.பழங்கால எகிப்திய பிரமிடுகளை நினைத்து பாருங்கள்.இன்று வசதிகள் என்று நினைக்கும் எதுவும் இல்லாமல் அத்தகைய கட்டிடங்களை கட்டியிருக்கிறார்கள்.


விலங்குகளையும் இறைவன் படைத்தார். மனிதன் அவைகளை ஆண்டு கொள்ள அனுமதித்தார். பழங்கால மக்கள் இவ்விலங்குகளை  ஊர்தியாக பயன்படுத்தினர். எனவே அனைத்தும் இயங்கியது, அனைவரும் இயங்கினர், நலமாக இருந்தனர். படைக்கப்பட்ட அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருந்தது. சுற்று சூழலுக்கு மிக ஆதாரமான "உயிர் சங்கிலி தொடர்" பாதுகாக்கப்பட்டது.இன்று மனிதன் விலங்குகள் இல்லாமல் வாழ கற்றுக் கொண்டான்.எதை கடவுள் "நன்று" என்று கண்டாரோ அதன் படி மனிதனின் வாழ்க்கை இன்று இல்லை.

இதன் காரணமாக தனித்து வாழ கற்றுக்கொண்டான்.இவ்வாறு வாழ்வதற்காக உலகம் படைக்கப்படவில்லை.இயற்கையை தேடி ஓடும் நிகழ்வில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் நம்முடைய அறிவில் உருவாக்கப்படும் எதுவும் "நன்றாக" இல்லை என்பதே.

இயற்கைதான் சிறந்தது:

மனிதன் தன்னுடைய அறிவில் எதை செய்தாலும் அதில் தீமையே மிஞ்சுகிறது என்பதற்கு மற்றோரு உதாரணத்தை பார்ப்போம்.அதிலிருந்து கடவுளால் உருவாக்கப்பட்ட இயற்கை மட்டுமே சிறந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.


இன்று குக்கரில் சோறு வடிக்கிறோம்.அவ்வாறு குக்கரில் சோறு வடிக்கும் பொழுது,அரிசியானது வேகுவதற்கு எவ்வளவு நேரம் தன்னுடைய தன்மையைப் பொறுத்து எடுத்துக் கொள்கிறதோ அதை நாம் துரிதப்படுத்துகிறோம்.இவ்வாறு துரிதப்படுத்துவதால் என்ன தீமை?வெப்பமானது அரிசியின் அனைத்து பாகங்களையும் இயல்பாக ஊடுருவி செல்ல வேண்டும்.அவ்வாறு சென்ற பிறகுதான் அரிசியானது சோறாக மாறுகிறது.

துரிதப்படுத்தலின் விளைவாக வெப்பம் மிக வேகமாக அரிசியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் படி செய்கிறோம்.ஆனால் அப்படி நடக்காது.வெப்பம் அரிசிக்குள் ஊடுருவி செல்லும் பொழுது அரிசியின் சில பகுதிகளை ஊடுருவாமல் சென்று விடும்.நாம் பயன்படுத்தும் குக்கருக்கு,அரிசியின் அனைத்து பகுதிகளும் வெந்து விட்டதா என்பது தெரியாது.பதிலாக குக்கருக்குள் இருக்கும் அழுத்தம் மட்டுமே அதற்க்கு கணக்கு.

இவ்வாறு வேக வைக்கப்பட்ட சோறானது தன்னுடைய இயல்பான தன்மையுடன் இருக்காது.பார்வைக்கு நன்றாக தெரியும் சோறானது உடலுக்கு தீமை தரக்கூடிய குணங்களை கொண்டிருக்கிறது.எனவே பழங்கால முறைப்படி விறகு கொண்டு அடுப்பில் வேக வைக்கப்பட்டு,சுடுதண்ணீரை வடித்து செய்யப்படும் செய்யப்படும் முறைதான் சிறந்தது என்று இன்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.எனவே இயற்கைதான் சிறந்தது.கடவுளின் படைப்பே சிறந்தது.

இறைவனின் படைப்பு: 

தான் படைத்த அனைத்தும் நன்றாக இருக்கிறதா என்று இறைவன் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.இதன் பொருள், மனிதன் வாழ்வதற்கு தகுந்ததாக படைக்கப்பட்ட அனைத்தும் உள்ளதா என்பதை அவர் நினைத்துப்பார்த்து பின்னர் நமக்கு தந்திருக்கிறார்.எனவே நாம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் உள்ளன.புதிதாக எதையும் நாம் நம்முடைய அறிவில் உருவாக்க வேண்டிய தேவை இல்லை.

மனிதன் படைக்கப்பட்ட பிறகு இறைவன் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டதை திருமறையில் நம்மால் காண இயலும்.படைக்கப்பட்ட அனைத்தும் மனிதனுக்கு உகந்ததாகவும் அவன் நிம்மதியாக வாழவும் தகுதியாக உள்ளதா என்பதை கடவுள் உறுதிப்படுத்தினார் என்பதற்கு ஆதாரமாக ஒரு நிகழ்வை நாம் காண இயலும்.
பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.[ஆதி 2:18].
தான் உருவாக்கிய ஒரு  குறிப்பிட்ட செயல் நன்றாக இல்லை என்பதை இறைவன் பின்னர் கண்டறிகிறார்.ஒரு ஆண் தனியாக இருப்பது "நன்றாக இல்லை" என்று காண்கிறார்.அவனுக்கு துணை இருப்பதுதான் நல்லது என்று தன்னுடைய முதல் முடிவை மாற்றி அவனுக்கு ஒரு பெண் துணையை படைக்கிறார்.படைக்கப்பட்ட அனைத்தும் நன்றாக இருக்கிறது என்பதை கடவுள் உறுதி செய்கிறார் என்பதே கற்பனைக்கு எட்டாத ஒரு செயலாக உள்ளது.

எனவே இறைவன் படைத்ததெல்லாம் மனிதனுக்கே.அவைகளில் எதுவும் சரியில்லை என்று கூறிக்கொண்டு புதிதாக உருவாக்கும் பொழுது நாம் தவறு செய்கிறோம்.ஏனெனில் நம்முடைய அறிவு என்பது எல்லைக்குட்பட்டது.ஆனால் கடவுளுடைய அறிவோ எல்லையிலாதது.அவரே அனைத்தையும் அறிந்தவர்.எது சரி என்று அவர் ஒருவருக்கே தெரியும்.

மனிதனுடைய அறிவும் ஒரு எல்லைக்குட்பட்டதே என்பதை நிரூபிப்பதற்கு இன்று நம்முடைய "இயற்கையை தேடும்" செயலே போதுமானது.இந்த இயற்கையை படைத்த இறைவன் எப்படிப்பட்டவர்,அவருக்கு உதவி தேவையா,துணை தேவையா,அவர் யார்?
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது[ஏசா 40:28].
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.[எரே 23:24]
திருமறையின் படி இந்த இறைவன் "יהוה" [வலமிருந்து இடமாக படிக்க வேண்டும்]ஆவார்.இவருடைய பெயர் மிகவும் போற்றப்படத்தக்க ஒன்று என்பதினால் அவருடைய பெயரை தமிழில் நான் எழுத வில்லை.ஆனால் அவரை நாம் "ஆபிரகாமின் கடவுள்" என்று அழைக்கலாம்.இவர் இயேசு அல்ல.இந்த கடவுளைத்தான் இயேசுவும் வணங்கினார்.வணங்கப்படத்தக்கவர் இவர் ஒருவரே.

இவர் ஒருவரே.இவருக்கு துணை என்று யாரும் தேவை இல்லை.ஏனென்றால் இவர் கடவுள்.துணை தேவைப்படுவோர் கடவுளாக இருக்க முடியாது.இவருக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.கடவுள் ஒருவர்தான்.அவரைத்தவிர யாரும் கிடையாது.

குழுக்கள் போன்று இணைந்து செயல்படும் கடவுளர்கள் என்று யாரும் கிடையாது.படைத்தல்,காத்தல்,அழித்தல் என்று துறை வாரியாக செயல்படும் அமைப்பு கிடையாது.இவை அனைத்தையும் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இவ்வுலகை,உங்கள் சுற்றுப்புறத்தை உற்று நோக்கினால் மேற்கூறியவைகள்தான் சரி என்பதற்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.[ஆதி 1:31]
இந்த தேவனை,அதாவது ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளை நாம் அனைவரும் பணிந்து கொள்வோமாக!.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1wMs2G_3h8PEOb3EV5dI7q2NiEEUqPe0F/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts