இயேசுதான் மேசியாவா?
இயேசு ஒரு தீர்க்கதரிசி என்று ஒரு கிறித்தவ ஊழியக்காரரிடம் இப்பொழுதுதான் நிரூபித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்[அது அவ்வளவு சுலபமான செயல் அல்ல].உடனே அவர் என்ன கூறுவார் என்றால் "இயேசுதான் மேசியா".அவரது கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பார்ப்போம்.
1.யூதர்களின் பார்வையில் மேசியா:
இயேசுதான் மேசியா என்று யூதர்களின் பைபிள் கூறுகிறது என்பது கிறித்துவத்தின் அடிப்படை கூற்றுகளில் ஒன்று.யூத மார்க்கம் இதை முற்றிலும் மறுத்துக்கொண்டே வந்திருக்கிறது.மேசியாவிற்குரிய அனைத்து தகுதிகளையும் இயேசு நிறைவேற்றியிருக்கிறார் என்பதே யூத கிறித்தவர்களின் நோக்கம்.யூதர்களின் பார்வையில் இக்கூற்றுகள் அனைத்தும் பொய் என்று நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது.
2."மேசியா" என்ற ஹீப்ரு வார்த்தையின் வேர்ச்சொல்:
ஹீப்ரு மொழியில் "மேசியா" என்ற வார்த்தை "Moshiach" என்பதாகும்.இந்த வார்த்தையை அப்படியே ,உள்ளது உள்ளபடி,தமிழில் மொழிபெயர்தோமானால் "திருப்பொழிவு செய்யப்பட்டவர் [அபிசேகம் செய்யப்பட்டவர்]" (1சாமு 10 :1-2) என்பதாகும். இதனுடைய பொருள் என்னவென்றால்,ஒருவரை அல்லது ஒரு பொருளை எண்ணையைக் கொண்டு திருமுழுக்கு செய்தல்[அபிசேகம் செய்தல்] ஆகும்(1இராஜா 1:39).
யூத பைபிள் முழுவதும் இவ்வார்த்தையானது பலரை அல்லது பல பொருட்களைக் குறிக்க பயன்படுகிறது.உதாரணமாக ஆசாரியர்கள் (லேவி 4:3),தீர்க்கதரிசிகள்(ஏசா 61:1),யூதர்களின் கோவில் மற்றும் அதனுடைய தட்டு முட்டு சாமான்கள்(யாத் 40:9-11),யூதனல்லாத பெர்சியா அரசன் கோரேஸ்(ஏசா 45:1).
இந்த மேசியா என்ற வார்த்தையின் ஒரு சில வடிவங்கள் ஏறத்தாழ 150 முறை பைபிள் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.தானியேல் 9-ம் அதிகாரம் தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் இந்த வார்த்தையானது "திருமுழுக்கு செய்யப்பட்ட" அல்லது "அபிசேகம் செய்யப்பட்ட" என்றே கிறித்தவ பைபிள்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தானியேல் 9-ம் அதிகாரத்தில் மட்டும் "மேசியா" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது கோவில்[தேவாலயம்] அழிக்க படுவதற்கு முன்னரே "மேசியா" வந்து விட்டார் என்று நிருபிப்பதற்காக சரியான மொழிபெயர்ப்புகளில் இருந்து கிறித்தவர்கள் விலகி செல்கின்றனர்.நூறு வருட இடை வெளியில் இரண்டு மேசியாக்களைப் பற்றி இந்த தானியேல் 9-ம் அதிகாரம் பேசுகிறது.
- முதலாவது பெர்சியாவின் அரசனாகிய கோரேசு. முதலாவது கோவில் அழிக்கப்பட்ட பின்னர் 52 வருடங்கள் கழித்து[7 வாரங்களின் வருடங்கள்] அவன் யூத மக்கள் நாடு திரும்பவும் இரண்டாவது கோவிலைக் கட்டவும் அனுமதி கொடுக்கிறான்.
- இரண்டாவது திருமுழுக்கு செய்யப்பட ஆசாரியத்துவம்(லேவி 4:3).இந்த ஆசாரியத்துவம் 434[62 வாரங்களின் வருடங்கள்] வருடங்கள் கழித்து முடிவுக்கு வருகிறது.
யூதர்களின் ஆங்கில பைபிள்களில் ஹீப்ரு வார்த்தையான “Moshiach” ஒருக்காலும் “Messiah” என்று மொழிபெயர்க்கப்பட வில்லை.பதிலாக "Anointed" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனாலும் யூதர்கள் மேசியாவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.யூதர்களுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட நம்பிக்கைதான் "மேசியா".எனவே இந்த வரப்போகும் மேசியாவைப்பற்றி சரியாக விளக்க யூதர்ளே தகுதி பெற்றிருக்கின்றனர்.
மேசியா பற்றிய யூத நம்பிக்கைகளுக்கு பைபிளின் வசனங்களே அடிப்படை.அவைகள் கீழே தரப்பட்டுள்ளது.மேசியா என்பவர் ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்பது யூதர்களின் அடிப்படை புரிதல்[தெய்வீக தன்மை போன்றவைகளில் உடன்பாடு கிடையாது].அவர் இந்த உலகத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவார்.ஒருவரை மேசியா என்று ஏற்றுக்கொள்வதற்கு அவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும்.அவைகளாவன,
- அவர் ஒரு யூதனாக இருக்க வேண்டும்[உபா 17:15,எண் 24:17].
- அவர் யூத கோத்திரத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்[ஆதி 49:10].தாவீது மற்றும் சாலொமோன் வழியாக வந்த ஒரு ஆண் வாரிசாக இருக்க வேண்டும்[1நாளா 17:11,சங் 89:29-38,எரே 33:17,2சாமு 7:12-16, 1நாளா 22:10,2நாளா 7:18].
- சிதறியிருக்கும் இஸ்ரேலின் மக்களை ஒன்று சேர்த்து மறுபடியும் நாடு திரும்ப செய்ய வேண்டும்[ஏசா 27:12-13,11:12].
- எருசலேமில் யூதர்களின் கோவிலை மறுபடி கட்ட வேண்டும்[மீகா 4:1].
- உலகத்தில் அமைதியை கொண்டு வர வேண்டும்[ஏசா 2:4,11:6,மீகா 4:3].
- இந்த உலகத்தின் மக்களை சர்வவல்ல இறைவனாம் கர்த்தரை மட்டுமே தொழுதுகொள்ள செய்ய வேண்டும்[ஏசா 11:9,40:5,செப் :3:9].
என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.
நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.
என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
மேற்கூறப்பட்டுள்ள தகுதிகளில் ஏதாவது ஒன்றையாவது "மேசியா" எனக்கூறிக்கொள்ளும் ஒருவர் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அவர் "மேசியாவாக"இருக்க முடியாது.
4.யூதர்களின் மேசியாவாக இயேசு ஏன் இருந்திருக்க முடியாது?:
இயேசு ஒரு யூதனாக இருந்தாலும் கூட மற்ற தகுதிகளில் அவர் ஒரு தகுதியில் கூட தேற வில்லை.அவருடைய வம்சாவழி பற்றிய முரண்பாடுகள் அடங்கிய வசனங்கள்[லூக்கா மற்றும் மத்தேயு] அவர் தாவீது வம்சத்தில் வந்தவர் என்ற தகுதியைக் கூட அவருக்கு கொடுக்க வில்லை.
மேலும் அவருக்கு மனித தகப்பன் கிடையாது என்று புதிய ஏற்பாடு கூறுகிறது.ஒருவனுடைய வம்சாவழி அவனுடைய தந்தையின் வழியாகவே கணக்கிடப்படுகிறது என்று யூத பைபிள் தெளிவாக கூறுகிறது(எண் 1:18,எரே 33:17).எனவே இயேசு யூத கோத்திரத்தை சேர்ந்தவரும் அல்ல தாவீது,சாலொமோனுடைய வம்சவழியில் வந்தவரும் அல்ல.
மரியாளின் கணவனாகிய யோசேப்பின் வழியாக இயேசுவின் வம்சாவழியை நிரூபிக்க பழைய ஏற்பாட்டு வசனங்களை பயன்படுத்துவோமானால் மேலும் பல சிக்கல்கள் வரும்.
எகொனியா என்ற அரசனின் வழியாக யோசேப்பு வருவதாக புதிய ஏற்பாடு கூறுகிறது.ஆனால் இந்த எகொனியா கர்த்தரால் சபிக்க பட்டவன்."தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கத்தக்க புருஷன் இவனுக்கு இனிமேல் இருக்க மாட்டான்" என்பதாக எரேமியா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் உரைத்திருப்பார்[எரே 22:30].யோசேப்பின் வம்சம் இயேசுவுக்கு கடத்தப்படுவதாக நாம் கொண்டாலும் கூட அவருடைய தகுதியிழப்பிற்க்கே அது வழி செய்கிறது.
முடிவாக இயேசுவின் வம்சாவழி முரண்பட்ட வகையில் லூக்காவும் மத்தேயுவும் விவரிக்கின்றார்.லூக்கா, இயேசுவின் தாயாகிய மரியாளின் வம்ச அட்டவணையை குறிப்பிடுகின்றார் என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.மூல கிரேக்க மொழிபெயர்ப்பின் அடிப்படையில் கூட இது சாத்தியமில்லை.வம்சம் என்பது தந்தையின் வழியாகவே கடத்தப்படுகிறது என்பதை நாம் ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.எனவே இந்த விளக்கம் முற்றிலும் தவறு.
தாயின் வழியாக கணக்கிடுவதாக ஒரு ஒப்புக்கு கணக்கில் கொண்டாலும் கூட அதிலும் ஒரு சிக்கல் வருகிறது.சாலொமோனின் சகோதரனாகிய நாத்தான் வழியாக தாவீது வம்சத்தில் மரியாள் வருவதாக லூக் 3:31 குறிப்பிட்டுள்ளது.ஆனால் பழைய ஏற்பாடு 1நாளா 22:10-ல்,சாலமன் வழியாகவே வம்சம் வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது,நான்காவது,ஐந்தாவது மற்றும் ஆறாவது தகுதிகளை இயேசு தான் வாழ்ந்த காலத்திலோ அல்லது அதன் பிறகோ பெற வில்லை அல்லது நிறைவேற்றவில்லை.இயேசு இரண்டாவது முறை திரும்பி வரும் பொழுது இவைகளை நிறைவேற்றுவார் என்பது சாத்தியமில்லை.ஏனென்றால் இரண்டாம் வருகை என்பதை பைபிள் எங்கேயும் குறிப்பிடவில்லை.
சுருங்க கூற வேண்டுமாயின் மேற்கூறப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தையும் ஒருவர் நிறைவேற்றும் வரை அவரை "மேசியா" என்று கூற இயலாது.
மேசியா மற்றும் இயேசு பற்றிய கிறித்தவர்களின் புரிதலுக்கும் யூதர்களின் பைபிளுக்கும்[அதாவது பழைய ஏற்பாடு] இடையே பெருமளவு வேறுபாடுகள் உள்ளது.கான்ஸ்டான்டின் என்ற அரசனின் காலகட்டத்தில் சபைகளின்[Church] தூண்டுதல்களாலும் கி.பி 324-ல் வெளியிடப்பட்ட "Nicene Creed" என்ற அறிவிப்புகளினாலும் இந்த வேறுபாடுகள் உண்டாயின.
குறிப்பு:மேசியா என்பவர் தொழுதுகொள்ளப்படுவதற்காக உண்டாக்க படப்போவதில்லை.உலகத்தில் அமைதியை நிலைநாடுவதுமே கர்த்தரைப்பற்றிய அறிவை உலக மக்களுக்கு கொடுப்பதுமே அவரின் செயல்.
https://jewsforjudaism.org என்ற பக்கத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் இரா.இருதயராஜ்.