Saturday, June 15, 2019

யோவான் 13:27-விளக்கம்

யோவான் 13:27-விளக்கம் 

முதலில் இந்த வசனம் என்ன கூறுகிறது என்று பார்த்து விடுவோம்.
அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
மேலும் சில பொதுவான கருத்துக்களையும் நாம் பார்த்து விடுவோம். 

பழைய ஏற்பாட்டில் இல்லாத கருத்துக்கள் புதிய ஏற்பாட்டில் இருப்பதை நாம் காணலாம்.பழைய ஏற்பாடு "ஒரே கடவுளாகிய" இஸ்ரயேலின் கடவுளை மட்டும் பேசுகிறது.அவரைத்தவிர வேறு யாரையும் வழிபடுதலை கடுமையாக தடைசெய்கிறது.அவருக்கு சமமாக யாரையும் வைக்கவும் நம்மை தடை செய்கிறது.

அவரை மீறி எதுவும் நடக்க இயலாது.அவர் நினைத்தது மட்டுமே நடக்கும்.ஆனால் பல கடவுள் வழிபாட்டில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட கருத்துக்களை உடையவர்கள் அல்ல.

தீமைகளுக்கென்று தனி கடவுள் ஒருவன் உள்ளான்.பாதாள உலகின் தலைவன் அவன்,அணைத்து தீமைகளுக்கும் அவனே காரணம்,இந்த உலகம் அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது,அருவருக்கத்தக்க எண்ணங்களுக்கு அவனே காரணம்,கடவுளுடைய எண்ணங்களுக்கு மாறாக அவன் செயல்படுவான் போன்ற கருத்துக்களை பல கடவுள் வழிபாட்டைக் கொண்டிருப்பவர்கள் வைத்திருக்கின்றனர்.நாட்டுக்கு நாடு தீமை கடவுளின் பெயர் மட்டும் மாறுபடலாம் ஆனால் கருத்துக்கள் மேற்கூறியவைகள்தான்.

ஒரு கடவுள் வழிபாட்டை உடைய யூத முறைகள் மேற்கூறிய கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபடுகிறது.அவைகளில் சில,
  • கடவுள் ஒருவரே,அவர் கர்த்தர்.ஆபிரகாம் எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த கடவுள்தான் அவர்.
  • அவருக்கு மேலானது என்று எதுவும் இல்லை.
  • அவரை மீறி எதுவும்,யாரும் செயல் பட முடியாது.
இப்பொழுது யோ:13:27 வசனத்திற்கு வருவோம்.அங்கே சாத்தான் யூதாசிற்குள் புகுந்தான் என்பது போன்று உள்ளது.இந்த உள்ளே புகுந்த "சாத்தான்" யார்?அவன் என்ன செய்ய போகிறான்?
  • உள்ளே புகுந்த "சாத்தான்" என்பவன் தீமைகளுக்கெல்லாம் காரணம்.
  • அவன் யூதாசின் இருதயத்திற்குள் நுழைந்து இயேசுவை  காட்டிக்கொடுக்க செய்ய போகிறான்.
  • அவனுடைய பெயர் "சாத்தான்" என்பதுதான்.
  • யூதாஸ் கேடு செய்ய காரணம் "இந்த சாத்தான்".இயற்கையாகவே இந்த யூதாஸ் நல்லவன்.
  • இந்த சாத்தானுக்கு எதிராகத்தான் இயேசு யுத்தம் செய்ய போகிறார்.
  • இந்த "சாத்தான்" கடவுளின் விரோதி.கடவுளுடைய எண்ணங்களுக்கு விரோதி.
  • எனவேதான் கடவுளின் குமாரனாகிய இயேசுவை யூதர்களிடம் காட்டிக்கொடுக்க போகிறான்.
மேற்கூறிய எண்ணங்களின் அடிப்படையில்தான் புதிய ஏற்பாடு எழுதப்பட்டுள்ளது.இங்கேதான் புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் மாறுபடுகிறது.கடவுளுக்கு விரோதமாக எவராலும் செயல் பட முடியாது என்று பழைய ஏற்பாடு கூறுகிறது.அப்படி இருப்பவர்தான் கடவுளும் கூட.

ஆனால் புதிய ஏற்பாடு கிரேக்கர்களுடைய கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.எனவேதான் "கடவுளின் எதிரியான சாத்தான்" என்கிற அடிப்படையில் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே புதிய ஏற்பாடு என்பது கிரேக்கர்களுக்கான ஒரு புத்தகம் ஆகும்.

சாத்தான் என்பவன் நாம் நினைப்பது போன்று ஒரு தனியான,கடவுளுடைய எண்ணங்களுக்கு விரோதமான ஒருவன் அல்ல.பழைய ஏற்பாட்டின் படி கடவுளுக்கு விரோதி என்று ஒருவன் இருக்கவே முடியாது.பல கட்டுரைகள் "சாத்தான்" என்பவனைப்பற்றி எழுத்து உள்ளேன்.அதை படித்து பார்த்தால் புரியும்.

சரி,சாத்தான் என்பவன் கடவுளுக்கு விரோதி என்றே கொள்வோம்.உலக மக்களின் பாவங்களுக்காகவே இயேசு மரிக்க வேண்டியிருக்கிறது  என்பதே கடவுளின் எண்ணம் என்றே கொள்வோம்.
அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.[ரோம 4:25].
அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; [கலா :1:4]
[மேற்கூறிய இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண் படும்] 

இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இயேசு நம்முடைய பாவங்களுக்காக பலியாக வேண்டி உள்ளது.இது தேவனுடைய சித்தம்.எனவே இயேசு மறு பேச்சு பேசாமல் பலியாக வேண்டும்.

இயேசு பலியாகி விட்டால்,நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.நாம் கடவுளுடைய பிள்ளைகளாகி விடுவோம் இது நமக்கு நல்லது,சாத்தானுக்கு?

சாத்தானுக்கு இது கெட்ட தகவல்.எனவே இயேசு மரிப்பதை அவன் தடுத்தாக வேண்டும்.ஆனால் இயேசு மரிக்க அவன் உதவி செய்கிறான்.யூதாசின் எண்ணங்களுக்குள் புகுந்து அவரை காட்டி கொடுக்க செய்கிறான்.என்ன ஒரு முரண்பாடு?

இப்பொழுது சொல்லுங்கள்.சாத்தான் நல்லது செய்தானா? இல்லை கெட்டது செய்தானா? வசனத்தின் படி நமக்கு,அதாவது இயேசுவுக்கு கெட்டது செய்கிறான்.ஆனால் கடவுளுக்கு நன்மை செய்கிறான்.இயேசு இறக்க உதவி செய்கிறானே.ஆனால் பல இடங்களில் அவனை திட்டி எழுதியிருக்கிறார்களே ஏன்?

இயேசுவும் கூட ஒரு இடத்தில பேதுருவைப்பார்த்து,"எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்" என்று கூறுகிறாரே ஏன்?

தவறுதலான புரிதல் மற்றும் கிரேக்க கலாச்சார குழப்பம்.இவைகள் அனைத்தின் தாக்கம்தான் புதிய ஏற்பாடு.புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "சாத்தான்" என்ற கருத்து கிரேக்கர்களுடையது.யூதர்களுடையது அல்ல.பழைய ஏற்பாட்டினுடையதும் அல்ல.

சாத்தான் பற்றிய என்னுடைய கட்டுரையை படித்து பாருங்கள்.

முடிவு:

அதாவது,சாத்தான் என்ற வார்த்தையை கிரேக்க கலாச்சாரத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டதன் விளைவு புதிய ஏற்பாடு.சாத்தான் என்பவனை தனியான ஒருவனாக எண்ணுவதன் மூலம் இயேசுவும் இத்தவறான கருத்தைக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது.

கிரேக்க தாக்கத்தால் பாதிக்கப்பட்டு நிறைய யூதர்கள் அக்காலகட்டத்தில் இருந்தனர்.கிரேக்கர்களுடைய அழகு,அறிவு,கலாச்சாரம்,காலை,இலக்கியம் போன்றவைகளால் யூத மக்களில் பல பேர் பாதிக்க பட்டனர்.அவர்கள் புது ஒரு கலவையை உருவாக்க முனைந்திருக்கலாம்.

இதே எண்ணத்தைத்தான் இயேசுவும் கொண்டிருந்தார் என இப்பொழுது நமக்கு தெரிகிறது.இயற்கையாக இயேசு ஒரு யூதர்.அப்படியிருக்க "சாத்தான்" என்ற வார்தையைப் பற்றிய கிரேக்க கருத்தை எப்படி உள்வாங்கி கொண்டார்? பழைய ஏற்பாட்டை மறுதலித்து ஒருவர் எப்படி "மேசியாவாக" இருக்க முடியும்?

தங்களுடைய பழைய ஏற்பாட்டு அறிவு,கிரேக்கர்களின் தாக்கம் போன்றவைகள் இணைந்து ஒரு புதிய புரிதலை நோக்கி தள்ளி இருக்கலாம்.அதன் விளைவே புதிய ஏற்பாட்டு கருத்துக்கள்.இதை குறித்து பாளை ஏற்பாட்டில் கடவுள் ஏற்கனவே எச்சரிக்கை செய்திருக்கிறார்.
அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள். [யாத் 34:15,16]
புதிய ஏற்பாடு கூறுவது போல் கடவுள் மூன்று பேராக இல்லை.அவர் ஒரே ஒருவர்தான்.அவர் கர்த்தர்.அவர் ஆபிரகாமின் கடவுள்.அவரை நாம் பக்தியுடன் பணிந்து கொள்வோமாக!

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1-lqGOeVo7ZwNs2lUbR2HOXq2HYbtiSTZ/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts