Wednesday, August 28, 2019

ஏப்ரல்-14(சித்திரை 1) தமிழ் புத்தாண்டு என்று பைபிள் கூறுகிறதா?

ஏப்ரல்-14(சித்திரை 1) தமிழ் புத்தாண்டு என்று பைபிள் கூறுகிறதா?

           ஒவ்வொரு மொழி இனத்தவரும் அவர்களுக்குரிய புத்தாண்டை கொண்டுள்ளனர்.ஆனால் மூத்த இனங்களுள் ஒன்றான தமிழ் இனம் எந்த நாளை புத்தாண்டு என்று கொண்டாடுகிறது என்பதில் தற்போது குழப்பம் நிலவி வருகிறது.சிலர் தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்கின்றனர்.வேறு சிலர் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்கின்றனர்.எது உண்மை என்று நமக்கு தெரிய வில்லை.எது சரி என்று தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றனவா என்றும் நமக்கு தெரிய வில்லை.கற்றறிந்த சான்றோர்கள்தான் அதை தெளிவு படுத்த வேண்டும்.

இந்த சூழ்நிலையில் திருமறையான பைபிள் நமக்கு சில தெளிவான தகவல்களை தருகின்றது.அது என்னவென்று நாம் பார்ப்பதற்கு முன்னால்,ஆண்டொன்றை எவ்வாறு கணக்கிடுகிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஒரு "ஆண்டு" என்பது நமது பூமியானது சூரியனை முழுமையாக ஒரு முறை சுற்றி வர எடுத்து கொள்ளும் நாட்கள் என்பது நமக்கு தெரிந்த தகவல்.அனைத்து மனித இனக்குழுக்களும் இம்முறையினைத்தான் பின்பற்றி தங்களுக்குரிய ஆண்டினை கணக்கிட்டுக் கொண்டனர்.அதாவது சூரியனை மையமாகக் கொண்டே வருடம் கணக்கிடப்படுகிறது.பூமியானது சூரியனை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்பது பக்கத்தில் உள்ள படத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

வட்ட வடிவில் சுற்றும் பாதை இருப்பதினால்,எந்த புள்ளியில் ஆரம்பிப்பது என்பதுதான் புத்தாண்டை நிர்ணயிக்கிறது.வட்டத்தில் எந்த புள்ளி முதல் புள்ளி அல்லது ஆரம்பப்புள்ளி? இக்கேள்விக்கான பதிலில் வருடத்தின் முதல் நாள் எது என்பது உள்ளது.இந்த ஆரம்பப்புள்ளியை ஒவ்வொரு இனக்குழுவும் வெவ்வேறு விதமாக கைக்கொண்டு வந்துள்ளன.தமிழர்களாகிய நாம் வட்டத்தின் எந்த புள்ளியில் ஆரம்பித்தோம்? இதற்கான பதிலை நாம் பார்ப்பதற்கு முன்னர்,இந்த வட்ட பாதையின் வழியே பூமி பயணிக்கும் பொழுது என்ன நடக்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ளுவோம்.


கடவுளின் படைப்புகளில் எதை எடுப்பது எதை விடுவது?அவரின் அறிவைப்பற்றி நாம் பேச முடியுமா? தன்  தன் காலங்களில் மழை பொழிகிறது, பனி பொழிகிறது, காற்று வீசுகிறது. இவை அனைத்திற்கும் காரணம் "தானாகவே நடக்கும் பருவ நிலை மாற்றங்கள்" ஆகும்.இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு அடிப்படையே "சூரியனை சுற்றும் பூமி" ஆகும்.ஒரு முழு சுற்றுக்குள் இப்பருவ நிலை மாற்றங்கள் நடந்து முடிந்து விடுகின்றன.


தமிழில் கோடை காலம்,வசந்த காலம்,இலையுதிர் காலம்,மழைக்காலம் என நான்கு வகைகளாக பிரிக்கின்றனர்.சிலர் ஆறு வகை என்கின்றனர்.அவைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள்தான் உள்ளன.எனவே நாம் தற்போது நான்கு காலங்கள் என்றே கொள்வோம்.பெரும்பாலான இனக்குழுக்கள் காலங்களை நான்கு வகைகளாகவே பிரித்து வைத்துள்ளனர்.நாம் தற்போது புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,"காலங்கள் மாறுகின்றன" என்பதைத்தான்.இந்த கால நிலை மாற்றம் நடக்க வில்லை என்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.அனைத்து உயிரினங்களும் இதைத்தான் நம்பியுள்ளன .கடவுளின் "அளவற்ற அறிவை" இதில் நம்மால் உணர முடியும்.

கடவுளின் "அளவற்ற அறிவை" அறிந்து கொள்ள ஒரு சில வசனங்களை நாம் பார்க்க வேண்டும்.
வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?

பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,

பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,

வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?[யோபு 38:24-29]
மேற்கூறிய வசனங்கள் கடவுளின் "எண்ணி பார்க்க முடியாத அறிவை" நமக்கு தெரிய படுத்துகின்றன.இந்த வார்த்தைகளை "யோபு" என்ற மனிதனிடம் கடவுள் பேசுகிறார்.இந்த வார்த்தைகளின் மூலம்  இவைகள் அனைத்தையும் படைத்தவர் "யோபுவிடம் பேசிய அந்த கடவுளே" ஆவார்.தான் ஒருவரே அனைத்தையும் படைத்ததாக அவர் கூறுகிறார்.38-ம் அதிகாரத்திலிருந்து கடைசி அதிகாரம் வரைக்கும் நாம் படித்தோமானால் இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் பற்றி அவர் விவரிப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?[யோபு 38:32,33]
வேறு எந்த ஒரு இலக்கியத்திலும் அல்லது மதங்களுக்குரிய புத்தகங்களிலியோ "படைப்பைப் பற்றி இவ்வளவு விரிவாக கூறியிருப்பதாக நான் நினைக்க வில்லை.மற்ற மதங்களுடைய புத்தகங்கள் அனைத்தையும் நாம் படிக்க வில்லையாயினும் "வேறு எந்த ஒரு கடவுளும் தான்தான் அனைத்தையும் படைத்தேன்" என்று இவ்வளவு விரிவாக கூற வில்லை என்று  என்னுடைய கேள்வி அறிவின் படி நான் கூறுகிறேன்.ஒவ்வொருவரும் யோபுவின் புத்தகத்தை எவ்வித விருப்பு வெறுப்பின்றி ஒருமுறை படிக்க வேண்டும்."யோபுவின் கடவுள்" என்னதான் கூறுகிறார் என்று தெரிந்து கொள்வதற்காயினும் இப்புத்தகத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்.

இப்பொழுது நாம் தமிழ் புத்தாண்டுக்கு வருவோம்.பூமியானது சூரியனை சுற்றி வரும் நிகழ்வுதான் "வருடம்" என்று அழைக்கப்படுகிறது.இந்த "வருடத்தின்" முதல் நாள் எது என்பதுதான் இப்பொழுது குழப்பம்.பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் விருப்பப்படி அதை கணக்கிட்டு கொண்டனர்.தமிழர்களாகிய நமக்குத்தான் இப்பொழுது குழப்பம்.


பூமியானது சூரியனை சுற்றி வரும் வட்டப்பாதையில் முதல் புள்ளி எது என்று கடவுள் சொன்னால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.மனிதர்கள் எதிர் கருத்து கூறலாம் கடவுள் கூறினால் மறுக்க முடியாது.ஒரு வட்டத்தின் எந்த புள்ளியை வேண்டுமானாலும் முதல் புள்ளி என்று கற்பனை செய்ய மனிதர்களுக்கு அதிகாரம் உண்டு.ஆனால் குழப்பம்தான் மிஞ்சும்.கடவுள் கூறினால் அதற்க்கு அனைவரும் உடன்பட வேண்டும்.சரி,கடவுள் எங்கு அவ்வாறு கூறியிருக்கிறார்?

குழப்பங்களை தவிர்க்க நாம் இப்பொழுது "கிரிகோரியன்" நாள்காட்டியை பயன்படுத்துகிறோமே அதுபோலத்தான் பல வழிமுறைகள் இருக்கும் பொழுது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குறிப்பிட்ட வழிமுறையை மட்டும் நாம் பயன்படுத்துகிறோம்.நாம் இப்பொழுது ஆங்கில நாட்காட்டியை பயன்படுத்தி வருகிறோம்.எனவே மாதங்கள் அனைத்தையும் அதற்க்கு ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு புரிவதற்கு சுலபமாக இருக்கும்.ஒரு சில செய்திகளை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • திருமறையானது(பைபிள்) இஸ்ரயேல் மக்களுக்கே கொடுக்கப்பட்டது.
  • அவர்களின் மொழி எபிரேயம்(ஹீப்ரு).
  • அவர்களுடைய மாதங்கள் "சந்திரனைக்" கொண்டு கணக்கிடப்படுகிறது.
  • அவர்களுடைய வருடத்தின் முதல் மாதம் "நிசான்" என்று அழைக்கப்படுகிறது."ஆபீப்" என்றும் அதனை அழைக்கின்றனர்.
  • வருடத்தின் முதல் நாள் எப்படி கணக்கிடப்பட வேண்டும் என்று கடவுள் அவர்களுக்கு கூறியிருக்கிறார்.
  • அவர்களுக்கு "கடவுளால்" கொடுக்கப்பட்ட ஒன்று நமக்கு,அதாவது தமிழர்களாகிய நமக்கு,எப்படி பொருந்துகிறது என்று நாம் காண இருக்கிறோம்.
வருடத்தின் முதல் நாள் இதுதான் என்று எங்கு கடவுள் இப்படி கூறியிருக்கிறார்?


       கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:


    "இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக[யாத் 12:1,2]"

ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.[யாத் 13:4]
 ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே[உபா :16:1].
நன்றாக கவனித்து பாருங்கள்.வருடத்தின் முதல் நாள் எது என்று கடவுள் மோசேயிடம் கூறுகிறார்.அந்த மோசே மற்றும் ஆரோன் அதை எழுதி தங்கள் கூட்டத்தினருக்கு கொடுக்கின்றனர்.அதுதான் இன்று நம் கையில் உள்ள பைபிள்.சரி இன்று எப்படி இந்த ஆபீப் அல்லது நிசான் மதத்தை கண்டுபிடிப்பது? அதற்க்கு பதில்,எந்த நிலையில் இந்த கட்டளை கொடுக்கப்பட்டது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று.

கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை.[யாத் 9:31,32]
அதாவது இஸ்ரேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து புறப்படும் பொழுது நடக்கும் நிகழ்வு இது.அந்த சூழ்நிலையில் "கோதுமையும்,கம்பும்" கதிர் விடாமல் நிற்கின்றன.மற்ற பயிர்களையெல்லாம் கடவுள் அழித்து போட்டு விட்டார்.இதை நினைவில் கொள்ளுங்கள்.எனவே இஸ்ரயேல் மக்கள் இந்த கோதுமை கதிரைப் பார்த்து ஆபீப் அல்லது நிசான் மாதத்தின் முதல் நாளை கண்டு பிடிக்கின்றனர்.மேலும் தலைமுறை தலைமுறையாக இந்த குறிப்பிட்ட நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அதாவது மோசேயின் நாட்களிலிருந்து இந்நாள் வரை தொடர்ச்சியாக ஆபீப் மாதத்தின் முதல் நாள் யூதர்களால் சரியாக கணக்கிடப்பட்டு வருகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களாக இம்முறையினை அவர்கள்(யூதர்கள்) பின்பற்றி வருகின்றனர்.ஆங்கில நாட்காட்டியில் இந்த நிசான்(ஆபீப்) மாதம் "மார்ச்-ஏப்ரல்" மாதங்களில் வருகிறது.இந்த மாதங்கள் வசந்த காலத்தில் வருகிறது என்பதை நாம்  நினைவில் கொள்ள வேண்டும்.வசந்த காலம் என்பது மரங்கள் பூத்து குலுங்கும் காலமாகும்.குளிர் காலம் முடிந்து,ஒரு ரம்மியமான சூழ்நிலையினை இந்த வசந்த காலம் நமக்கு தரும்.கடும் குளிரின் நெடுநாட்களாக வீட்டிற்குள் அடங்கி கிடந்து தற்போது பூமியின் சுழற்சியின் காரணமாக மென்மையான வெயில் கிடைக்க ஆரம்பித்து விட்டது.எனவே திருமறையின் அடிப்படையில் வசந்த காலத்தில் வருடம் ஆரம்பிக்கிறது.

இப்பொழுது உறுதியாகி விட்டது:

தமிழ் புத்தாண்டு என்பதை நாம் ஏப்ரல் மாதத்தில்தான் கொண்டாடிக்கொண்டு வந்தோம்.இந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தினைத்தான் யூதர்களும் தங்களுடைய புத்தாண்டாக கொண்டுள்ளனர்.அதனை அவர்களுக்கு கொடுத்தது கடவுள் ஆவார்.என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.வசந்த காலத்தில்தான் நாமும் வருடப்பிறப்பைக் கொண்டுள்ளோம்.நம்முடைய முன்னோர்களும் சரியாகத்தான் கணக்கிட்டுள்ளனர்.தேதி மாறுபட்டாலும் காலம் ஒன்றாக உள்ளது.எனவே ஏப்ரல் மாதத்தில்தான் தமிழ் வருடப்பிறப்பு இருக்க வேண்டும்.ஏன் தை மாதம் என்று மாற்றினார்கள் என்று எனக்கு தெரிய வில்லை.

திருமறையின் அடிப்படையில் தை மாதம் என்பது நமக்கு புத்தாண்டு அல்ல.மேலும் தை மாதம் என்பது புத்தாண்டாக இருக்க வாய்ப்பில்லை என்பதற்கு சில காரணங்கள்..

  • தை  மாதம் குளிர் காலத்தில் வருகிறது.
  • பூமியின் வட பகுதிகளில் இந்த குளிர் காலம் என்பது மிக கடுமையாக இருக்கும்.
  • இந்த கடுமையான குளிர் காலங்களில் பயிர்கள் செழித்து வளராது.
  • நாம் பூமத்திய கோட்டுக்கு பக்கத்தில் இருப்பதினால் இந்த கடுங்குளிரில் தாக்கம் நமக்கு தெரியாது.
  • பொதுவாக இந்த கடுங்குளிர் காலத்தில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியே கிடப்பர்.
  • எனவே தை மாதம் என்பது புத்தாண்டாக இருக்க வாய்ப்பில்லை.
  • இல்லை,தை மாதம்தான் புத்தாண்டு என்று நாம் நினைத்தால்,கடவுள் வேறு விதமாக கூறியிருக்கிறார்.
புத்தாண்டை வசந்த காலத்தில் வைக்கும் படி கடவுளே கூறியிருக்கும் பொழுது நாம் அதனை மாற்ற இயலாது.நமது மனித அறிவின் படி பார்த்தாலும்,வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் ஒரு சோம்பேறித்தனமான காலத்தினை புத்தாண்டு என்று கடைபிடிக்க இயலாது.

எனவே தமிழ் புத்தாண்டு என்பது ஏப்ரல் மாதத்தில்தான் வருகிறது.மிகச்சரியாக எந்த தேதியில் வருகிறது என்பது சற்று மாறுபடும். அதற்கும் பல காரணங்கள் உள்ளன.சித்திரை மாதமே தமிழர்களின் புது வருட பிறப்பு என்று திருமறை கூறுகிறது என்று இப்பொழுது கூறலாம்.இந்த மாதத்தில்தான் பூமி தன்னுடைய ஒரு சுழற்சியை முடித்து அடுத்த சுழற்சிக்கு தயாராகிறது.இந்த அடுத்த சுழற்சியின் விளைவுகளாவன, புதிய இலைகள் முளைக்க ஆரம்பித்தல்,மொட்டுக்கள் மலர்தல்,பூக்கள் மலர்தல்,நீண்ட நேரம் சூரிய ஒளி கிடைத்தல் போன்றவைகளாகும்.

முடிவாக யோபு,ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்ற மனிதர்களிடம் பேசிய கடவுளே மெய்யான கடவுள் என்று திருமறை(பைபிள்) கூறுகிறது.கிறித்தவத்தை தழுவியவர்கள் இப்படித்தான் நம்பிக்கை கொள்ள வேண்டும்.இதைத்தான் திருமறை வலியுறுத்துகிறது.சூரியன் மற்றும் பூமியை படைத்தவர் இந்த கடவுள்தான்.அதனால் இவர் கூறுவதுதான் கடைசி தீர்ப்பு.வசந்த காலத்தில்தான் வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.அந்த வகையில் தமிழ் வருடப்பிறப்பு ஏப்ரல் மாதத்தில்தான் இருக்க வேண்டும்,தை  அல்ல.
இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையினை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1e-r9HIFH4RFAlg_r0BjxcHVe5YdEsM9t/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts