Saturday, August 31, 2019

மீகா 2:3-ஒரு விளக்கம்

மீகா 2:3-ஒரு விளக்கம் 

மொழிபெயர்ப்பு என்பது மிகவும் சிக்கலான வேலை ஆகும்.ஒரு மொழியில் எழுதப்பட்டவற்றை மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்யும் பொழுது மூல மொழியில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் சிறிதும் மாற்றம் செய்யப்படாமல் செய்வது என்பது சவால் நிறைந்த செயல் ஆகும்.

மொழிபெயர்ப்பவர் தம்மை அறியாமலையே தன்னுடைய கருத்துக்களை திணிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.மொழிபெயர்ப்பவர் தான் சரியாகவே செய்துள்ளதாக நினைப்பார்.ஆனால் மூல மொழியில் புலமைபெற்றோர் எவரையாவது கொண்டு சோதனை செய்யும் பொழுது அத்தவறுகள் வெளிப்படும்.

மொழி என்பது இருதயத்தின் உள்ளே பொதிந்துள்ளவைகளை பேச்சாகவும் எழுத்தாகவும் மாற்றக்கூடிய ஒரு கருவி ஆகும்.மனிதர்களின் இருதயம் ஒருவருக்கொருவர் மாறுபடக்கூடியது.விருப்பு,வெறுப்பு போன்ற எவையும் இல்லாமல் மொழிபெயர்க்கும் பொழுது கூட அறியாமல் தவறு நடந்து விட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஒரு தவறு மீகா தீர்க்கதரிசியின் புத்தகத்தினுடைய தமிழாக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வசனத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.அந்த வசனத்தை நாம் முதலில் காணலாம்.
ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன்; அதினின்று நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை; அது தீமையான காலம்.[மீகா 2:3]
மீகா ஒரு சிறிய தீர்க்கதரிசி ஆவார்.இவர் எசேக்கியா அரசன் அரசாண்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர் ஆவார்.யூத,இஸ்ரயேல் மக்களுடைய தீமையான செயல்களினிமித்தம் கடவுள் அவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்கிறார்.இதுதான் மேற்கூறிய வசனத்தின் பொருள்.மேற்கூறிய வசனத்தில் என்னதான் மொழிபெயர்ப்பு தவறு உள்ளது? அதை நாம் தெரிந்து கொள்வதற்கு இந்த வசனத்தின் பல மொழிபெயர்ப்புகளை நாம் காணலாம்.

முதலில் NIV மொழிபெயர்ப்பை பார்ப்போம்.
Therefore, the Lord says:
“I am planning disaster against this people,

    from which you cannot save yourselves.

You will no longer walk proudly,
    for it will be a time of calamity.
இதனுடைய தமிழாக்கம்:"இந்த மக்களுக்கு எதிராக அழிவை நான் நினைத்திருக்கிறேன்.அதிலிருந்து நீங்கள் உங்களை தப்புவிக்க முடியாது.அது ஒரு அழிவு காலமாக இருப்பதினால்,நீங்கள் இனிமேல் கர்வமாக நடக்கமாட்டீர்கள்".

அடுத்ததாக CJB மொழிபெயர்ப்பை காணலாம்.
Therefore this is what Adonaisays:
“Against this family I am planning an evil
from which you will not withdraw your necks;
nor will you walk with your heads held high,
for it will be an evil time.”
இதனுடைய தமிழாக்கம்: "எனவே ஆண்டவர் கூறுகிறார்,இந்த குடும்பத்திற்கு எதிராக நான் தீங்கை நினைத்திருக்கிறேன்.அதிலிருந்து நீங்கள் உங்கள் கழுத்துக்களை நீக்க முடியாது.நீங்கள் தலைநிமிர்ந்து நடக்கவும் மாட்டீர்கள்.ஏனென்றால் அது மிகவும் தீங்கான காலம்." 

அடுத்து KJV மொழிபெயர்ப்பை காணலாம்.
Therefore thus saith the Lord; Behold, against this family do I devise an evil, from which ye shall not remove your necks; neither shall ye go haughtily: for this time is evil.
இதனுடைய தமிழாக்கம்:"எனவே கர்த்தர் கூறுகிறார்;இந்த குடும்பத்திற்கு எதிராக ஒரு தீங்கை நான் நினைத்திருக்கிறேன்,அதிலிருந்து உங்கள் கழுத்துக்களை உங்களால் நீக்க முடியாது.பெருமையாய் நடக்கவும் மாட்டீர்கள் காரணம் அது தீங்கான காலம்.

இந்த மூன்று மொழிபெயர்ப்புகளில் இருந்தும் நமக்கு தெரிய வருவது என்னவென்றால் ஒரே ஒரு வார்த்தை மட்டும் வேறுபடுகிறது மற்ற அனைத்து வார்த்தைகளும் சமமான பொருளையே தருகிறது.கர்வம்,தலைநிமிர்ந்து,பெருமை ஆகிய மூன்று வார்த்தைகள்தான்.

உண்மையில் இந்த மூன்று வார்த்தைகளும் ஒரு ஹீப்ரு வார்த்தையின் மொழிபெயர்ப்புகள்தான்.அந்த ஹீப்ரு வார்த்தை "רוֹמָ֔ה" ஆகும்.இதற்குரிய எண் s7317 ஆகும்.இதன் பொருளில்தான் இத்தனை வேறுபாடுகள்.பல்வேறு அகராதிகளில் ஒவ்வொரு விதமாக கொடுத்துள்ளனர்.நான் ஸ்ட்ராங்க்(STRONG) அகராதியை எடுத்துள்ளேன்.

இந்த வார்த்தை 7317-ன் வேர்ச்சொல் 7311-ல் உள்ளது.இவ்வார்த்தையின் மொழிபெயர்ப்பு மிகவும் சிக்கல்தான்.இந்த குறிப்பிட்ட வசனம் கூறும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாம் மொழிபெயர்த்தால் சிக்கல் சிறிது குறைய வாய்ப்பு உள்ளது.7317-ன் பொருளை நாம் பார்ப்போம்.

இதன் உச்சரிப்பு :  rowm
இதன் பொருள்    :elation,i.e. (adverbially) proudly -- haughtily.
தமிழில்                :பெரும் மகிழ்ச்சி,மகிழ்வான 

வேர்ச்சொல்லின் உச்சரிப்பு       : room
இதன் பொருள்                            : to be high or exalted, rise
தமிழில்   : உயர்வான நிலையில் இரு,உயர்த்தப்பட்டிரு,உயர்ந்திரு.

"elation" என்ற ஆங்கில வார்த்தையின் பொருள் "மகிழ்வான மனநிலையை" குறிக்கும் ஒன்றாகும்.கர்வம்,மேட்டிமை போன்ற சொற்களை நாம் "மகிழ்வான" சூழ்நிலையை குறிக்க பயன்படுத்த மாட்டோம்.தமிழில் அவைகள் பயன்படுத்தப்படவேண்டிய இடத்தை நாம் அறிவோம்.

இங்கு எந்த சூழ்நிலையை வசனம் விளக்குகிறது என்றால்.ஒரு தீங்கான,ஆபத்து நிலைமையை விவரிக்கின்றது.கடவுள் அந்த ஆபத்தை வருவிக்கப்போகிறார்.ஆபத்துகள் இல்லாத நிலையில் நாம் எப்படி இருப்போம்?மகிழ்வாக இருப்போம் அவ்வளவுதான்.

அதாவது கடவுள் வருவிக்கப்போகும் அந்த ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் தங்கள் தலைகளை தொங்க விட்டு,கவலையுடன் இருப்பார்கள்.இதுதான் அந்த வசனம் கூறும் பொருள்.ஆபத்தின் காரணமாக தலைநிமிர்ந்து நடக்க இயலாது.எனவே CJB மொழிபெயர்ப்பு சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.


இந்த வசனத்தில் வரக்கூடிய "நீங்கள் மேட்டிமையாய் நடக்க மாட்டீர்கள்"என்ற வார்த்தை,அக்குறிப்பிட்ட வசனம் கூறக்கூடிய சூழ்நிலைக்கு பொருந்தவில்லை என்று நான் நினைக்கின்றேன்.ஆபத்து வருவதற்கு முன்னாள் மக்கள் தலைநிமிர்ந்து நடப்பார்கள்.அதாவது அவர்கள் யாருக்கும் அடிமைகளாகாமல் சுய மரியாதையோடு இருப்பார்கள்.ஆபத்து வந்த பின்னர் தங்கள் சுயமரியாதையை இழப்பார்கள். அதாவது தலைகுனிவார்கள்,வெட்கமடைவார்கள், மரியாதைக்குறைவிற்கு உட்படுவார்கள்.இப்படிப்பட்ட நிலைக்கு கடவுள் அவர்களை தாழ்த்தபோகிறார்.இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது.

ஒரு மகிழ்வான சூழ்நிலை இனி இருக்காது என்பதைத்தான் அவ்வசனம் குறிக்கிறது."தலைநிமிர்ந்து" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
இரா.இருதயராஜ்.

இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1qRDEFIKC93NqOeMbTYeZmcJTulcl_TaM/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts