Friday, August 30, 2019

ஏசாயா என்னும் மாபெரும் தீர்க்கதரிசி

ஏசாயா என்னும் மாபெரும் தீர்க்கதரிசி 


பெரும் தீர்க்க தரிசிகளில் முதலாவதாக வருபவர் ஏசாயா ஆவார்.இவர் உசியா,யோதாம்,ஆகாஸ்,எசேக்கியா போன்ற யூத அரசர்கள் அரசாண்ட காலகட்டங்களில் வாழ்ந்தவர்.இவருடைய புத்தகங்கள் மீண்டும் மீண்டும் நம்மை படிக்க தூண்டும் அளவில் மிக அருமையாக எழுதியிருப்பார்.இப்புத்தகத்தில் உவமைகள் நிரம்பி கிடக்கும்.நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உவமைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

கடவுளாகிய கர்த்தர் இத்தீர்க்கதரிசியைக் கொண்டு சொல்லிய வார்த்தைகள் ஈட்டி போல் நம் இருதயத்தில் இறங்கும்.அப்படிப்பட்ட ஒரு வசனம் மட்டும் பார்த்து விட்டு இக்கட்டுரையின் நோக்கத்திற்கு நாம் செல்லலாம்.
அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.

மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.

அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;

அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.[ஏசா 44:14-19]
மேற்கூறிய வார்த்தைகளை என்னவென்று சொல்வது? ஒரு மனிதன் மனவருத்தத்தோடு பேசுவது போன்று எல்லாம் வல்ல இறைவன் தீர்க்கதரிசி மூலமாக பேசுகிறார்.எண்ணற்ற தீர்க்கதரிசனங்களை கொண்டுள்ள இப்புத்தகத்தில் வியக்கத்தக்க தீர்க்க தரிசனம் ஒன்று உள்ளது.

ஒரு அரசன் இன்னும் பிறக்க வில்லை.பேரரசு ஒன்றை அவன் ஆளப்போகிறான் என்று சுமார் 200 வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறார்.அதிலும் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால்,அந்த அரசனுடைய பெயர் மட்டுமல்ல,அவனை தான்தான் திருமுழுக்கு செய்து உள்ளேன் என்றும் கூறுகிறார்.யார் அவன்? அவன் கோரேஸ் என்ற அரசன்.

தொடர்ந்து இந்த கோரேஸ்  பற்றிய தீர்க்க தரிசனத்தை நாம் பார்ப்போம்.அதற்க்கு முன்னால் ஏசாயா தீர்க்க தரிசி எசேக்கியா அரசன் காலத்தில் முழுமையாக வாழ்கிறார்.இந்த அரசனுடைய காலத்தில் அக்குறிப்பிட்ட தீர்க்கதரிசனத்தை அவர் கூறுகிறார்.
கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.[ஏசா 44:28]
எசேக்கியா அரசன் காலத்தில் யூத மக்கள் இன்னும் பாபிலோனுக்கு சிறைப்பட்டு செல்ல வில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.எசேக்கியா அரசன் ஏறத்தாழ ஒரு நல்ல ஆட்சியை கொடுத்தவன் ஆவான்.மேற்கூறிய வசனம் சொல்லப்பட்டிருக்கும் பொழுது தீர்க்கதரிசி எதனைப்பற்றி பேசுகிறார் என்று கூட தெரிந்திருக்காது.ஏனென்றால் கோரேஸ் இன்னும் பிறக்கவே இல்லை.

எருசலேம் நகரம் அந்த பொழுதில் நன்றாகவே இருக்கிறது,எனவே "கட்டப்பட்டு" என்று ஏன் கூறுகிறார்? என்று குழம்பியிருக்கக் கூடும்.அழிக்கப்பட்டிருந்தால்தானே கட்டப்படுவதற்கு.பின்னர் தேவாலயத்தைப் பற்றி கூறுகிறார்.தேவாலயம் ஏன் அஸ்திபாரப்பட வேண்டும்? அதுதான் நன்றாகவே இருக்கிறதே?சாலமோன் கட்டிய கோவில் மிக நன்றாகவே உள்ளது.பின் ஏன் இப்படி கூறினார்?இவ்வாறு மக்கள் குழம்பியிருக்கக்கூடும்.

எசேக்கியா காலத்தில் இத்தீர்க்கதரிசனத்தை மிகவும் விசித்திரமாக மக்கள் கருத்தியிருக்கக்கூடும்.எசேக்கியா ஓரளவுக்கு நன்றாகவே ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும்,

தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.

இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.[2 நாளா 32:27-30]
ஓரளவுக்கு நல்ல ஆட்சியை கொடுத்திருந்ததற்கு மேற்கூறிய வசனங்கள் சாட்சி.எனவே யூத நாட்டு மக்கள் தங்கள் நாட்டில் இந்த அரசனின் ஆட்சி காலத்தில் ஓரளவிற்கு அமைதியாகவே வாழ்ந்து வந்தனர்.இந்த சூழ்நிலையில்தான் மேற்கூறப்பட்ட தீர்க்க தரிசனம் வருகிறது.இதற்க்கு முன்பாகவே யூத மக்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டு போவார்கள் என்று கடவுள் அறிவித்திருப்பார்.
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.[ஏசா 39:6]
மேற்கூறப்பட்ட வசனங்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
  • எசேக்கியா அரசன் காலத்தில் மக்கள் நன்றாகவே இருந்தனர்.
  • இன்னும் பாபிலோனுக்கு சிறைப்பட்டு செல்ல வில்லை.
  • ஆனால் பாபிலோனுக்கு சிறைபிடித்து கொண்டு போகப்படுவார்கள் என்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டு விட்டது.
  • 39-ம் அதிகாரத்தில் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்படுவார்கள் என்று கூறிய தீர்க்கதரிசி,44-ம் அதிகாரத்தில் அவர்கள் கோரேஸ்  என்ற மன்னனால் விடுவிக்கப்படுதலைப்பற்றி பேசுகிறார்.
  • இவை அனைத்தும் ஏறத்தாழ 200 வருடங்களுக்கு பின்னர் நடைபெறப்போகும் நிகழ்வுகளாகும்.
எப்படி 200 வருடங்களுக்கு பின்னர் நடைபெறப்போகும் நிகழ்வு என்று கூறுகிறோம்? கோரேஸ் என்ற மன்னன் இன்னும் பிறக்க வில்லை.அவன் பெயர் முதற்கொண்டு கூறப்பட்டாயிற்று.எப்படி என்று பார்ப்போம்.எசேக்கியா அரசனுக்கு பின்னர்,
  • மனாசே   -  55 வருடங்கள் 
  • ஆமோன் -   2 வருடங்கள் 
  • யோசியா -  31 வருடங்கள் 
  • யோவகாஸ் -3 மாதங்கள் 
  • யோயாக்கீம் - 11 வருடங்கள் 
  • யோயாக்கீன் - 3 மாதங்கள் 
  • சிதேக்கியா    - 11 வருடங்கள் 
  • ஆக மொத்தம் சுமார் 166 வருடங்கள்.

ஏசா 39:6 வசனம் சுமார் 166 வருடங்கள் கழித்து நிறைவேறுகிறது.சிதேக்கியா அரசனுடைய காலத்தில் பாபிலோன் மன்னன் யூதாவை சிறைப்படுத்துகிறான்.என்ன ஒரு தீர்க்கதரிசனம் பாருங்கள்!

கடவுள் தன்னுடைய ஊழியக்காரர்களை எப்படி பயன்படுத்துகிறார் என்று பாருங்கள்.166 வருடங்கள் கழித்து ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறும் பொழுது,இடைப்பட்ட காலத்தில் அப்படி அந்த தீர்க்கதரிசனம் நிறைவேற வாய்ப்பில்லை என்றே பெரும்பாலும் நினைக்க தோன்றும்.ஆனால் மிக துல்லியமாக நிறைவேறி உள்ளது.

அடுத்துதான் மிகப்பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது.யூதா இப்பொழுது பாபிலோனுக்கு சிறைப்பட்டு சென்று விட்டது.அவர்கள் சில காலம் அங்கெ தங்கி இருக்க வேண்டும் என்றும் பின்னர் அவர்கள் விடுவிக்க படுவார்கள் என்றும் கூட தீர்க்க தரிசனம் கூறப்படுகிறது.யாரால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் ஏசாயாவுக்கு தன்னுடைய மக்கள் சிறைபிடிக்கப்பட்டு போவதையும்,எருசலேம் அளிப்பட்டு போவதையும் குறித்து நிறைய தீர்க்க தரிசனங்களை உரைக்கிறார்.பாபிலோன் நாடு கடவுளுடைய மக்களையும் கடவுளுடைய பெயர் தெரிந்து கொள்ளப்பட்ட நகரமான எருசலேமையும் துன்பப்படுத்தியதைக் குறித்து வருத்தப்பட்டு அது தொடர்பாக எண்ணற்ற தீர்க்கதரிசனங்களை கூறுகிறார்.பாபிலோனை சாடுகிறார்.ஏசா 47-ம் அதிகாரம் முழுவதும் இதைப்பற்றித்தான் உள்ளது. 48:20-ல் கீழ்கண்டவாறு கூறுகிறார்,
பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்[ஏசா 48:20]
யூத மக்கள் பாபிலோனில் 70 வருடங்கள் இருக்க வேண்டும் என்றும் அதற்க்கு பின்னர் அவர்கள் விடுவிக்க படுவார்கள் என்றும் எரேமியா தீர்க்கதரிசியும் கூறியிருப்பார்.ஏசாயா தீர்க்கதரிசி 70 வருடங்கள் என்று கூறாவிட்டாலும்,பாபிலோனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை தெளிவு படுத்தி இருப்பார். 
பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்[எரே 29:10]
ஆகவே ஏற்கனவே 166 வருடங்கள் பின்னர் பாபிலோனில் 70 வருடங்கள்,மொத்தம் 236 வருடங்கள் கழித்து நடக்க போகும் ஒரு நிகழ்வை 39:6-ல் ஏசாயா கூறுகிறார்.ஆச்சரியம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரு அமைதியான காலகட்டத்தில் கூறப்படுகின்றன. 

யாரைக்கொண்டு இந்நிகழ்வை நடத்துவேன் என்றும் கடவுள் ஏசாயா மூலமாகவே கூறுகிறார் பாருங்கள்.
கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.
தொடர்ந்து இந்த கோரேஸ்  என்ற மன்னனை குறித்து கடவுள் கூறுகிறார்.இந்த கோரேஸ் மன்னன் 200 வருடங்கள் கழித்துதான் பிறக்கவே போகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.எங்கோ ஒரு நாட்டில் சுமார் 200 வருடங்கள் கழித்து பிறக்க போகும் ஒருவனுடைய பெயரையும் கூட கடவுள் ஏசாயா மூலமாக கூறிவிட்டார்.ஏறத்தாழ 45-ம் அதிகாரம் முழுமையும் அவனைப்பற்றிய உள்ளது.
கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.

உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.[ஏசா 45:1-4]
நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.[ஏசா 45:13]
கர்த்தரே கடவுள் என்பதற்கு இதற்க்கு மேலும் என்ன நிரூபம் வேண்டும்? ஏசாயா எந்த கடவுளின் பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்தாரோ அந்த கடவுளே மெய்யான கடவுள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? சுமார் 200 வருடங்கள் கழித்து எங்கோ பிறக்க போகும் ஒருவனுடைய பெயரை சொல்லி அவன் என்ன செய்வான் என்பதையும் கூறின இஸ்ரேலின் கடவுளே மெய்யான கடவுளன்றி வேறு யார்?

சரி இத்தீர்க்க தரிசனம் நிறைவேறியதை எஸ்ரா புத்தகத்தில் நாம் பார்க்கலாம்.
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.

அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்[எஸ்ரா 1:1-4]
சரி எப்படி இது நிறைவேறியது என்பதை நாம் காணலாம்.முதலில் யார் இந்த கோரேஸ்  அரசன்?தானி 10:1-ஐ பார்க்கலாம்.
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.[தானி 10:1]
எனவே இந்த கோரேஸ்  என்பவன் பெர்சியா அரசனாவான்.இவன் ஒரு பேரரசன்.இவன் எப்படி பாபிலோனை கைப்பற்றினான் என்று நிறைய வரலாற்று புத்தகங்கள் உள்ளன.இவனை "கோரேஸ் தி கிரேட்" என்று வரலாற்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

பாபிலோன் ஒரு பேரரசு என்பது நமக்கு ஏற்கனவே தெரியும்.கைப்பற்றவே முடியாத ஒரு வலிமையான தேசம்.இத்தேசத்தின் கோட்டை சுவர்கள் மிகவும் வலிமையானவை.அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது.பக்கத்தில் உள்ள படத்தை பாருங்கள்.பழங்கால பாபிலோன் இப்படித்தான் இருந்திருக்கும் என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கற்பனை.தன் கோட்டை சுவர்களை மூன்றடுக்குகளாக பாபிலோன் கட்டியிருந்தது.

இப்படி நுழையவே முடியாத அளவுக்கு வலிமையாக இருந்த இந்த பாபிலோன் எப்படி வீழும் என்பதையும் ஏசாயா தீர்க்கதரிசி 13-ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,

வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.

ராஜ்யங்களுக்குள் அலங்காரமும் கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும்.[ஏசா 13:17-19]
இந்த 13-ம் அதிகாரம் முழுவதும் பாபிலோனின் அழிவைப்பற்றியே பேசுகிறது.என்ன ஒரு தீர்க்கதரிசனம்!200 வருடங்களுக்கு பின்னர் நடக்க இருக்கும் ஒரு பெரும் வரலாற்று நிகழ்வு கடவுளால் ஏசாயா மூலமாக கூறப்படுகிறது.

பாபிலோன் கைப்பற்றப்பட்ட விதமும் ஆச்சரியமிக்க ஒரு நிகழ்வாகும்.ஏற்கனவே கூறிப்படி பாபிலோன் வலிமையான கோட்டைசுவர்களை கொண்டிருந்தது.யாராலும் உள்ளே நுழையமுடியாத அளவுக்கு கட்டப்பட்டிருந்தது.அதனால் தன்னை ஒருவராலும் வீழ்த்த முடியாது என்ற அகங்காரத்தையும் கொண்டிருந்தது இந்த பாபிலோன்.எதைப்பற்றியும் ஏசாயா,எரேமியா போன்ற தீர்க்க தரிசிகள் விளக்கியிருக்கின்றனர்.

இந்த பாபிலோன் நகரத்தின் வழியே யூப்ரடீஸ் என்ற ஒரு ஆறு ஓடி கொண்டிருந்தது.தண்ணீர் இதில் எப்பொழுதும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும்.எனவே இந்த ஆறு இந்நகரத்திற்கு ஒரு இயற்கையான அரணாக இருந்தது.கோட்டை சுவர்களை உடைக்க முடியாது.ஆற்றை கடக்க முடியாது.கோரேஸ்  மன்னன் செய்த செயல் என்ன தெரியுமா?ஆறு நகரத்திற்குள் நுழையும் இடத்திற்கு சிறிது தொலைவுக்கு முன்னாள் தன்னுடைய பெரும் படையைக்கொண்டு ஆற்றின் போக்கை திருப்பி விட்டான்.பின்னர் வற்றிப்போன ஆற்றின் வழியாக நகரத்திற்குள் நுழைந்து அதை கைப்பற்றினான்.

தன்னை யாராலும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையில் கோட்டைக்கதவுகளை அப்போதைய பாபிலோனின் மன்னன் திறந்தே வைத்திருந்ததாக சில கதைகளும் உள்ளன.ஒரே இரவில் உள்ளே நுழைந்து பாபிலோனிய மன்னனை கொன்று அந்நகரை கோரேஸ் கைப்பற்றினான்.

முடிவுரை:

கடவுளாகிய கர்த்தர் ஒருவரே இறைவன்,அவரை தவிர வேறு கடவுள் கிடையாது என்று அனைவரும் உணரும் படியாக மேற்கூறிய தீர்க்கதரிசனங்கள் உள்ளன.
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.[ஏசா 45:5,6]
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை[ஏசா 45:22]
ஏசாயா தீர்க்க தரிசியின் மூலமாக பேசும் இவர் யார்? கடவுளாகிய கர்த்தர்.இந்த ஏசாயாவுக்கு "இயேசு" தெரியுமா? தெரியாது.மேற்கூறிய வசனங்களில் "கர்த்தர்" என்ற வார்த்தை உண்மையில் கடவுளுடைய பெயராகும்.அவருடைய பெயரை கணம் செய்ய வேண்டும்,தவறுதலாக உச்சரிக்க கூடாது என்பதினால் வணக்கத்திற்குரிய அப்பெயருக்கு பதிலாக ஆங்கிலத்தில் "LORD" என்று மொழிபெயர்த்து விட்டனர்.தமிழில் "கர்த்தர்"  என்று மொழிபெயர்த்துள்ளனர்.இப்பெயர் கொண்டுள்ள ஹீப்ரு எழுத்துக்கள் י,ה,ו,ה(வலமிருந்து இடமாக படிக்கவும்) ஆகும்.இந்த எழுத்துக்களை சேர்த்து உச்சரித்தால் கிடைப்பது "இயேசு" அல்ல.பின் எப்படி இயேசுவை நாம் வணங்கினோம்? மாபெரும் சதி இதற்க்கு பின்னால் உள்ளது.

ஏசாயா மூலமாக பேசிய கடவுள் வேறு யாருமல்ல அவர் ஆபிரகாமிடம் பேசிய கடவுளே.அவரையே அனைவரும் பணிந்து கொள்ள வேண்டும்.


இரா.இருதயராஜ்.

இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1grHOcck1dfC5n0qNHS9AdU-4o6_07oo5/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts