Saturday, August 24, 2019

நித்திய மீட்பும் இயேசுவின் பலியும்

நித்திய மீட்பும் இயேசுவின் பலியும்  

    எபிரேயர் புத்தகம் 9-ம் அதிகாரம் நித்திய மீட்பை குறித்து விளக்குகிறது.அதாவது நிரந்தர மீட்பை குறித்து விளக்குகிறது.முதலில் ஒரு தவறான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.என்னவென்றால் "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை" என்ற கருத்தாகும்.

அறியாமல் செய்த பாவங்களுக்காக மன்னிப்பை பெறுவதற்கு கடவுள் சில வழிமுறைகளை லேவியராகமம் புத்தகத்தில் கொடுத்துள்ளார்.ஆடு,மாடு,புறா போன்றவைகளை கொண்டு நாம் மன்னிப்பு பெற இயலும்.இவைகளை கொண்டு வர திராணி இல்லாத ஏழைகளுக்காக ஒரு வழியையும் கடவுள் கொடுத்துள்ளார்.ஒரு சிறிதளவு "மாவு" போதுமானது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஆடு,மாடு,புறா போன்றவைகளின் இரத்தம் இல்லாமல் வெறும் "மாவை" கொண்டு கடவுள் பாவ மன்னிப்புக்கு இடம் அளித்துள்ளார்.இந்நிலையில் "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை" என்ற பவுலின் கருத்து எப்படி சரியாகும்?

பவுல் என்ன கூற வருகிறார் என்று நாம் காணலாம்.எபிரேயர் புத்தகத்தை படித்து பார்க்கலாம்.
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்![எபி 9:12-14].
மேற்கூறிய வசனங்களில் இருந்து பவுல் என்ன கூற வருகிறார் என்றால்,இயேசுவின் இரத்தம் சுத்திகரிப்பதற்கு போதுமானது.நாம் ஏற்கனவே "இரத்தம் மிக அவசியமாக தேவை இல்லை,மாவு போதுமானது" என்று பார்த்திருக்கின்றோம்.இப்படி இருக்க இயேசுவின் இரத்தம் அவசியம் என்ற பவுலின் கருத்து எப்படி சரியாகும்?

இப்படி சொன்ன பவுல் தானே தேவாலயத்திற்கு சென்று பாலி கொடுத்திருக்கின்றாரே அது எப்படி?தான் எழுதியது ஒன்று செய்தது ஒன்று.
அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காக வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.[அப் 21:26]
பவுல் ஏன் பலி செலுத்தினார்? அவர்தான் இயேசுவின் இரத்தத்தாலே மீட்க பட்டு விட்டாரே! ஏன்?

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் சிதறடிக்கப்பட்டனர் என்பது உங்களுக்கு தெரியும்.அவர்களுக்கு தற்போது கோவில் இல்லை.இந்நிலையில் எப்படி அவர்கள் கடவுளிடம் பாவ மன்னிப்பு பெறுவார்கள்?
அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து,

தங்களைச் சிறைபிடித்துக் கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது,

உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து,

உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்கு கிடைக்கப்பண்ணுவீராக.[1இராஜா 8:47-50]
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.[2நாளா 7:14]
மேற்கூறிய வசனங்கள் இரத்தம் இல்லாமல் பாவ மன்னிப்பு பெறுதலை குறித்து கூறுகிறது.எனவே நாம் நம்மை தாழ்த்தி அவரை நோக்கி விண்ணப்பம் செய்யும் பொழுது அவர் மன்னிப்பார்.எசேக்கியேல் புத்தகமும் இதைப்பற்றி விளக்கமாக கூறுகிறது.

சரி அதனால் என்ன குழப்பம்? என்ன குழப்பம் என்றால் இயேசுவின் இரத்தம் மட்டுமே பாவ மன்னிப்பிற்கு வழி என்று கூறுவதுதான்.அதோடு நின்று விட்டால் கூட பரவாயில்லை,இயேசுதான் கடவுள் என்று கூறுவதுதான் குழப்பத்திற்கு அடிப்படை.

எனவே தேவாலயம் இப்பொழுது இல்லாவிட்டாலும் கூட இஸ்ரயேல்  மக்கள் முழு மனதுடன் மனம் திரும்பி கடவுளிடம் விண்ணப்பம் செய்தால் பாவ மன்னிப்பு பெறலாம்.

இதன் மூலம் கிறித்தவர்கள் தற்போது கூறும் கருத்துக்கள் என்னவென்றால் தேவாலயம் இனிமேல் தேவை இல்லை என்பதுதான்.இங்குதான் மிகப்பெரும் குழப்பம் உண்டாகிறது.
  • தேவாலயத்திற்கு பதில் சபைகள்.
  • இயேசுவே தேவாலயம்.
மேற்கூறிய கருத்துக்கள் தற்போது உள்ளன.ஆனால் இதற்க்கு முரண்பாடாக எசேக்கியேல் புத்தகம் உள்ளது.இரண்டு வசனங்களை தருகிறேன்.இரண்டும் ஒன்றுக்கொன்று எப்படி முரண்படுகிறது என்பதை பாருங்கள்.
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.[வெளி 21:22]
பின்பு அவர் என்னை தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாய் அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.[எசே 41:1]
முதல் வசனம் வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.வரப்போகும் புதிய எருசலேம் நகரத்தில் தேவாலயம் இருக்காது என்கிறது.பதிலாக எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக கடவுள் கூறுவது என்னவென்றால்,இஸ்ரயேல்  மக்கள் தங்கள் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்து சுகமாக தங்கியிருக்கும் கடைசி காலங்களில் தேவாலயம் இருக்கும் என்கிறார்.என்ன ஒரு முரண்பாடு?

எசேக்கியேல் தீர்க்கதரிசி கடவுளுடைய நாமத்தில் தீர்க்க தரிசனம் உரைத்தவர்.அதில் பல நிறைவேறி உள்ளது.வெளிப்படுத்தல் அப்படி அல்ல.மேலும் அக்காலத்தில் புதிய தேவாலயத்தில் பழைய ஏற்பாட்டு பலியிடும் முறைமைகள் அனைத்தும் இருக்கும் என்றும் தீர்க்கதரிசி மூலமாக கூறுகிறார்.

எனவே,இயேசுதான் நித்திய மீட்பை உண்டு பண்ணினார் என்றால்,
  • தேவாலயம் எதற்கு?
  • அன்றாட பலிகள் எதற்கு?
  • எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக கடவுள் கூறியது தவறா?
  • இல்லை பவுலும் வெளிப்படுத்துதல் புத்தகமும் தவறா?
  • முதலில்,"நிரந்தர மீட்பு" என்ற கருத்தின் விளக்கம் என்ன?
  • இந்த "நிரந்தர மீட்பு" பற்றி பழைய ஏற்பாட்டில் எங்காவது கூறப்பட்டுள்ளதா?
இதை படிக்கும் நீங்கள் நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வாருங்கள்.ஒருவர் கடவுளின் போற்றத்தக்க பெயரில் தீர்க்க தரிசனம் கூறுகிறார்.மற்றொருவர் தனக்கு ஏற்பட்ட தரிசனத்தை கூறுகிறார்,ஆனால் கடவுளின் பெயரில் அல்ல.யாரை நம்புவது என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1_wzU_HSvTi4-3VnO7Z4EWDdaO3_HSbRY/view?usp=sharing

No comments:

Post a Comment

My Posts