Saturday, April 27, 2019

சாத்தான் என்பவன் யார்? பாகம்-3

சாத்தான் என்பவன் யார்? பாகம்-3


முதல் இரண்டு பாகங்களை நீங்கள் படிக்காவிடில் அதை படித்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.இல்லையென்றால் புரிவது கடினம்.சாத்தான் என்பவனைப்பற்றிய தவறுதலான புரிதலுக்கு நம்மை இட்டு செல்லும் வசனத்தை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்(யோபு 1:6)
முழு பைபிளிலும் இந்த இடத்தில் மட்டும் "சாத்தான்" என்ற வார்த்தை சற்று வேறு பட்டு உள்ளது. இந்த நிகழ்வு, சர்வ வல்லமையுள்ள கடவுளாம் ஆபிரகாமுடைய கடவுள் வாசம் செய்யும் இடத்தில வைத்து நடைபெறுகிறது.அதாவது, பரலோகத்தில் வைத்து நடைபெறுகிறது.

கர்த்தருடைய இடத்தில் தேவபுத்திரர்கள் கூடும் பொழுது அசுத்தங்கள் தலைவனாகிய[கிறித்தவர்களின் கூற்றுப்படி] சாத்தானும் கூடுவதாக உள்ளது.ஒரு சில கேள்விகள் இங்கு எழுகின்றன.
  • தேவ புத்திரர்கள் கூடும் இடத்தில் வேறு யாரும் வர இயலுமா?
  • கர்த்தர் சர்வ வல்லவர்,பரிசுத்தர்.அசுத்தம் அவருடைய இடத்தை அண்ட முடியாது.
  • அப்படிப்பட்ட நிலையில் அசுத்த ஆவிகளின் தலைவனாகிய பிசாசாகிய "சாத்தான்" எப்படி பரிசுத்தரின் இடத்திற்குள் வர இயலும்?
  • கர்த்தருக்கு "சத்துருவாக" இருப்பவன், அவருக்கு கீழ்ப்படியாதவன் எப்படி அவருடைய இடத்திற்குள் வர இயலும்? அவரிடம் எப்படி பேச இயலும்?
  • அவன்தான் ஏற்கனவே கீழே விழத்தள்ளப்பட்டாயிற்றே,மறுபடி எப்படி பரலோகத்திற்குள்,அதுவும் கர்த்தருடைய இடத்திற்குள் அவனால் வர இயலும்?

எனவே கர்த்தருடைய சந்நிதியில் நிற்பவர்கள் தேவபுத்திரர்கள் மட்டுமே.பின் எப்படி சாத்தானும் அவர்கள் நடுவில் வந்து நின்றான் என்று உள்ளது?கிறித்தவர்களாகிய நாம் நினைப்பது போல் சாத்தான் இருந்தால்,அவனால் கர்த்தருடைய இடத்திற்குள் வர இயலாது.

பக்கம்-1-ல் நாம் படித்ததை நினைவு கூறுங்கள்.சாத்தான் என்பவன்,
  • ஒரு குறிப்பிட்ட,கீழே விழத்தள்ளப்பட்ட,அசுத்த ஆவிகளுக்கு தலைவனாக இருக்கிற,கர்த்தரை எதிர்க்கிற ஒருவன் அல்ல.
  • "எதிர்த்தல்" என்ற செயலை செய்கிற எவரையும் ஹீப்ரு மொழியில் "சாத்தான்" என்றே அழைக்கிறோம்.
மேற்கூறிய கருத்தை கவனத்தில் கொள்ளுங்கள். யோபு புத்தகத்தின் ஆரம்பத்தில், முதல் ஐந்து வசனங்களும் யோபு எப்படிப்பட்டவன் என்பதை கூறுகிறது.அவனை எதிர்க்க அல்லது சோதிக்க ஒரு தேவ தூதன் அதாவது ஒரு தேவபுத்திரன் விரும்புகிறான்.ஏனென்றால்,பூமி முழுவதும் சுற்றி திரிந்து வருவதாக அவன் கூறுகிறான்.பூமி முழுவதும் கர்த்தருடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது என்பது நமக்கு தெரியும்.எனவே கடவுள் தன்னுடைய புத்திரர்களை அதாவது தேவ தூதர்களை பூமி முழுவதும் அனுப்பி மனிதர்களை சோதிக்கிறார்.அவ்வாறு அனுப்பப்பட்ட தேவபுத்திரன் ஒருவன் யோபுவை கண்டிருக்கிறான்.அவனுடைய நற்காரியங்களை அறிந்து அவனை சோதிக்க விரும்புகிறான்.இந்த சூழ்நிலையில் அவன் கர்த்தருடைய சந்நிதியில் வருகிறான்.அதாவது யோபுவிற்கு "எதிரியாக",அவனை சோதிக்க விரும்புபவனாக, எனவே அவனுடைய "விரோதியாக,சத்துருவாக,பகைவனாக" வருகிறான்.இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன்.

இந்த நிலையில் அத்தூதனை அல்லது அந்த தேவ புத்திரனை  "சாத்தான்" என்று பைபிள் குறிப்பிடுகிறது.யோபுவினுடைய "எதிரியாக" அவன் மேல் "குற்றம் சாற்றுகிறவனாக" அந்த தேவ புத்திரன் கர்த்தருடைய சந்நிதிக்குள் வருகிறான்.கர்த்தர் அவனை கீழ் கண்டவாறு வினவுகிறார்.
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
இந்த வசனத்தை சற்று மாற்றி வாசிக்கலாம். 
கர்த்தர் (யோபுவின்)எதிராளியைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
யோபுவைப்பற்றி கர்த்தரே கீழ்கண்டவாறு சான்று கொடுக்கிறார்.
கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.
பின்பு தேவபுத்திரன் கீழ்கண்டவாறு பதில் கூறுகிறான்.
9.அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?

10.நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.
11.ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து,யோபு சோதிக்கப்பட வேண்டும் என்று தேவபுத்திரன் விரும்புவதாக நமக்கு தெரிகிறது. எனவேதான் அவனை "குற்றம் சாற்றுகிறவனாக" அதாவது "சாத்தானாக"பைபிள் நமக்கு கூறுகிறது.

ஒருவேளை உண்மையில் "சாத்தான்" என்பவன் "கடவுளுடைய "முதல் எதிரி" என்றால்,அவன் ஏன் கடவுளிடம் அனுமதி கேட்க வேண்டும்? அவனால்தான் தன்னிச்சையாக செயல்பட முடியுமே?தான் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் தொந்தரவு தருபவனாயிற்றே?இது உங்களுக்கு முரண்பட வில்லையா?

உண்மையில் 11-ம் வசனத்தை ஹீப்ரு மொழியில் படித்தோமானால்,"தயவு செய்து" என்று யோபுவின் எதிராளி கர்த்தரிடம் கேட்பது போன்று உள்ளது.எனவே அவன் கர்த்தரிடம் விண்ணப்பம் செய்கிறான்.அவன் விண்ணப்பத்தை கடவுள் அங்கீகரிக்கிறார். யோபுவை சோதிக்க விரும்புவதன் மூலம் அவனுக்கு "எதிராளியாக" மாறும் தேவபுத்திரனால்  தன்னிச்சையாக செயல் பட முடிய வில்லை.

எனவே நாம் நினைப்பது போல்,யோபுவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "சாத்தான்" என்பவன் கடவுளுடைய எதிரி அல்ல.முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு "எதிரி" என்று ஒருவன் இருக்க இயலாது.

இப்பொழுது யோபுவின் புத்தகத்தில் உள்ள மீதி வசனங்களை படித்து பாருங்கள் உங்களுக்கு நன்றாக புரியும்.நம்முடைய தவறான புரிதல்கள் நமக்கு தவறான பொருளை கொடுக்கின்றன.தவறான பொருளைக் கொடுத்தாலும் சகித்துக் கொண்டு மாரு படி திருத்தி கொள்ளலாம்.ஆனால் கர்த்தர் அருவருக்கும் சில காரியங்களை நோக்கி நம்மை இந்த தவறான புரிதல்கள் தள்ளி சென்று விட்டன.

அவற்றைப்பற்றி நாம் அடுத்த பாகத்தில் படிக்க இருக்கிறோம்.நான்காம் பாகத்தில் "சாத்தான்" என்ற கருத்து எப்படி கிரேக்கர்களின் கருத்துக்களுக்கு ஒத்து போகிறது என்பதை பார்க்க இருக்கிறோம்.பழைய ஏற்பாட்டில் எங்கேயும் குறிப்பிடப்படாத ஒன்று எப்படி பைபிளுக்குள் நுழைந்தது?நாம் எப்படி அதை இருக பற்றி கொண்டோம்?தொடர்ந்து நான்காம் பாகத்தை படியுங்கள்.
இரா.இருதயராஜ்.

சாத்தான் என்பவன் யார்? பாகம்-2

சாத்தான் என்பவன் யார்? பாகம்-2


முதலாம் பாகத்தை நீங்கள் படிக்க வில்லை என்றால்,முதலில் அதை படித்து விடுங்கள்.இல்லையென்றால் தொடர்ந்து படிப்பது கடினமாக இருக்கும்.சாத்தான் என்பவன் நாம் நினைப்பது போல் உள்ளவன் அல்ல என்பதை தெரிந்து கொண்ட பிறகு,அடுத்த பைபிள் வசனத்தை நாம் காணலாம்.
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?(1 சாமு:29:4).
மேற்கூறிய வசனத்தில் "சத்துருவாயிராதபடிக்கு" என்ற தமிழ் வார்த்தைக்குரிய  ஹீப்ரு வார்த்தை என்னவென்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.வார்த்தை எண் 7854, "satan" ஆகும்.ஒரு வேளை இந்த வசனத்தை கீழ்கண்டவாறு வாசித்தால்,நாம் என்ன நினைப்போம்?
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சாத்தானாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
மேலும் மாற்றி படித்து பார்க்கலாம்.
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் எதிராளியாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
இந்த வசனம் கூறும் பொருள் என்னவென்றால்,தாவீதைக் குறித்து பெலிஸ்தரின் பிரபுக்கள் பேசுகிறார்கள்.அவர்களோடு தாவீதும் போருக்கு வந்தால் தாவீது அவர்களுக்கு எதிராளியாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்று பயப்படுகிறார்கள்.இதுதான் பொருள்.

தமிழர்களாகிய நாம் தமிழ் பைபிளை படிக்கிறோம்.அதில் "சத்துரு" என்று போட்டிருக்கிறது.அந்த வார்த்தையை பார்த்தவுடன்,நம்முடைய மனது கீழ்கண்டவாறு நினைக்க ஆரம்பிக்கிறது,
  • ஐயோ! இது சாத்தான். இவன்தான் கீழே விழத்தள்ளப்பட்ட "அந்த குறிப்பிட்ட தூதன்".
  • இவன் பெயர் "லூசிபர்".
  • இவன் எப்பொழுதும் கர்த்தருக்கு விரோதமாகவே செயல் படுவான்.
  • இவன்தான் பிசாசு.
மேற்கண்டவாறு நாம் நினைத்து கொள்கிறோம்.ஆனால் மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு நாம் மனதில் நினைக்கும் பொருளை கொள்ள முடியுமா?அந்த இடத்திற்கு அப்பொருள் பொருந்துமா? தமிழ் பைபிளில் "சத்துருவாயிராதபடிக்கு"என்ற வார்த்தைக்கு பதில் "எதிராளியாயிராதபடிக்கு" என்ற வார்த்தையை கொண்டு மொழிபெயர்த்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

சரி இப்படி நாம் நினைப்பது தவறா? ஆம்,தவறுதான்.நம்மை தவறான  பொருள் கொள்ளும்படி இட்டு செல்வது ஒரு பக்கமாக இருந்தாலும்,கிரேக்கர்களின் பல கடவுள் வழிபாட்டுக்கு நம்மை  அழைத்து சென்று விடுகின்றன.

சாத்தான் என்று நாம் நினைப்பதற்கும் மேற்கூறிய வசனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறன்.அடுத்து ஒரு வசனத்தை நாம் காணலாம்.
அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,(2சாமு:19:22).
இங்கும் வார்த்தை எண்:7854-னது, "satan"-"சத்துரு" என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வசனத்தை  மாற்றி படித்து பார்க்கலாம்.
அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் எதிரிகளாவதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,(2சாமு:19:22).
மிக சாதாரண பொருளைத்தான் மேற்கூறிய வசனம் கொடுக்கிறது. ஆனால் நாம் தேவை இல்லாமல் சாத்தான்-லூசிபர்-பிசாசு-கடவுளுக்கு விரோதி என்று பொருள் கொள்கிறோம். அடுத்த ஒரு வசனத்தை காணலாம்.
ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.(1இராஜ:5:4)
இங்கும் "விரோதி" என்ற வார்த்தையின் ஹீப்ரு வார்த்தை "satan",வார்த்தை எண்:7854 ஆகும்.சிறப்பாக பொருள் கொள்ளும் படி இங்கு ஒன்றும் இல்லை.நீங்களே இதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன்.

இவ்வாறாக மிகச்சாதாரணமாக நாம் புரிந்து கொள்ளும்படிதான் அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் உள்ளன.1இராஜ:11:14,23,25;1நாளா:21:1.இந்த வசனங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

அடுத்து நாம் பார்க்க இருக்கும் வசனம்தான் தவறுதலான புரிதலுக்கு இட்டு செல்லும் வசனம்.அதை நாம் மூன்றாம் பாகத்தில் காணலாம்.
இரா.இருதயராஜ்.

சாத்தான் என்பவன் யார்?-பாகம்-1

சாத்தான் என்பவன் யார்?-பாகம்-1


பைபிளில் சாத்தானைப் பற்றி நிறைய உள்ளது.நமக்கும் அவனைப்பற்றிய பல கருத்துக்கள் இருக்கும். உண்மையில் அவனைப்பற்றி நமக்கு என்ன தெரியும்?அவனைப்பற்றிய யூதர்களின் கருத்து என்ன?அவர்களுடைய பைபிள் மற்றும் நம்முடைய பைபிள் சாத்தானைப்பற்றி என்ன கூறுகிறது? முதலில் சாத்தானைப்பற்றி பொதுவாக கிறித்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்த்து விடுவோம்.சாத்தான் என்பவன்,
  • கீழே விழத்தள்ளப் பட்ட தூதன்.
  • அவன் கடவுளுடைய கட்டளைகளை விரோதிப்பவன்.
  • அவன் கடவுளுடைய எதிராளி.
  • அவன் லூசிபர் என்றும் அழைக்கப்படுகிறான்.
  • அவன் பிசாசு என்றும் அழைக்கப்படுகிறான்.
  • அவன் கடவுளுக்கு பயப்படும் அவருடைய மக்களை துன்புறுத்துபவன்.
  • அவன் எப்பொழுதும் கடவுளுடைய மக்களுக்கு விரோதமாகவே இருப்பான்.
  • கடவுளுக்கு எதிர்த்து நிற்பவன்.
  • அவன் தன்னிச்சையாக,சுதந்திரமாக எந்த நேரத்திலும் யாரையும் துன்புறுத்துபவன்.
  • அவன் பாதாளத்தில் வாழ்பவன்.
  • அவன் எப்பொழுதும் குற்றம் சாற்றுபவனாகவே இருக்கிறான்.
இப்படிப்பட்ட கருத்துக்களை கிறித்தவர்களாகிய நாம் கொண்டிருக்கிறோம்.சாத்தான் பற்றிய யூதர்களுடைய கருத்துக்களை நான் படிக்கும் பொழுது அவர்களுடைய கருத்து சற்று வித்தியாசமாக இருந்தது.அதை கொஞ்சம் விளக்கமாக இங்கு உங்களுக்கு தர உள்ளேன்.

சாத்தான் என்ற சொல் பைபிளில் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 27 இடங்களில் வருகிறது.முதன் முதலில் எங்கு வருகிறது என்பதையும்  நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணாகமம் புத்தகத்தில் முதன் முதலாக வருகிறது.அதுவும் ஆச்சரியமான விதத்தில் வருகிறது.
அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்(எண்:22:22).
இந்த வசனத்தில் வருகின்ற "எதிராளியாக" என்ற வார்த்தைக்குறிய ஹீப்ரு வார்த்தை என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த வார்த்தை என்னவென்றால்,"שָּׂטָן-satan" என்பது ஆகும்.மேற்சொன்ன வசனத்தை சற்று மாற்றி கீழே தந்துள்ளேன்.


அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு சாத்தானாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்(எண்:22:22).
இந்த இரண்டு  வசனங்களையும் நன்றாக படித்து பாருங்கள்.மேலும் தொடர்வதற்கு முன்னர் "சாத்தான்" என்ற வார்த்தையை பற்றி ஒரு சில விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

  • சாத்தான் என்ற வார்த்தை ஹீப்ரு மொழியை சேர்ந்தது ஆகும்.
  • நாம் நினைப்பது போல் அது ஆங்கில மொழியையோ அல்லது வேறு எந்த மொழியையோ சேர்ந்தது அல்ல.
  • இந்த ஹீப்ரு வார்த்தையின் பொருள் "எதிராளி" அல்லது "பகைவன்" என்பது ஆகும்.இந்த வார்த்தையின் மூல வார்த்தையும் "satan" என்பதே ஆகும்.அது ஒரு வினைச்சொல் ஆகும்.அதன் பொருள் "குற்றம் சாட்டு" அல்லது "பழி கூறு" என்பது ஆகும்.
  • இதனுடைய ஸ்ட்ராங்க் நம்பர் 7854 ஆகும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இந்த வார்த்தையானது ஒரு குறிப்பிட்ட செயலைக்  குறிக்க பயன்படுத்தப்படுவது ஆகும்.அதாவது "குற்றம் சாட்டுதல்" அல்லது "பகைத்தல்" என்ற தன்மையைக் குறிக்க பயன்படுகிறது.இந்த வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்பொழுது நாம் காணலாம்.

  1. இவ்வளவு நாள் என் உயிர் நண்பனாக இருந்தவன் இன்று எனக்கு "எதிராளியாக" மாறிவிட்டான்.
  2. இந்த தேர்தலில் என்ன "எதிர்த்து" களமிறங்குபவர் திரு.மணி அவர்கள்.
  3. என் மகன் என்னுடைய சொல்லை மதிக்காமல் எப்பொழுதும் என்னை "எதிர்த்து" பேசுகிறான்.
மேற்கண்ட கூற்றுகளில் முதலாவது கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நண்பன் மட்டுமே எதிராளியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.எதிர்க்கும் யாரும் எதிராளியே.குறிப்பிட்ட ஒரே ஒருவர்தான் எதிராளியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.இந்த பொருளில்தான் எண்ணாகமம் வசனம் அமைந்துள்ளது.மறுபடியும் அந்த வசனத்தை பாருங்கள்.

அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின் மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்(எண்:22:22).
இங்கே கர்த்தருடைய தூதன் பிலேயாமுக்கு "எதிராளியாக" நின்றான்.கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளை செயல்படுத்தும் ஒரு தூதன்தான் இங்கு "சாத்தான்" என்று குறிப்பிடப்படுகிறான்.கர்த்தரால் கீழே விழத்தள்ளப்பட்ட தூதன் எப்படி அவருக்கு கீழ்ப்படிந்து செயல்படுவான்? ஏற்கனவே கீழ்ப்படியாமல் போனதினால்தானே அவன் கீழே விழத்தள்ளப்பட்டான்.முரண்படுகிறதல்லவா? இது ஒரு செயலைக் குறிக்கும் வார்த்தை என்று மட்டும் நினைத்து பாருங்கள் உங்களுக்கு சுலபமாக புரிந்து விடும்.கீழ்வரும் கேள்விகளிக் கவனியுங்கள்.

  • இவன் "லூசிபெராக" இருந்தால் அப்பெயர் ஏன் பயன்படுத்தப்படவில்லை?
  • இவன் பிசாசாக இருந்தால் கர்த்தருடைய கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிந்தான்?
  • ஏன் கர்த்தருக்கு விரோதமாக செயல் படவில்லை?
  • ஏன் பிலேயாமுக்கு ஆதரவாக செயல்பட வில்லை?
இந்த வார்த்தை ஒரு செயலை குறிக்கும் வார்த்தை என்பதை நினைத்து வசனத்தை மறுபடியும் படித்து பாருங்கள்.உங்களுக்கு மிக சுலபமாக புரியும்.அடுத்து ஒரு வசனத்தை பாருங்கள்.
கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.(எண் :22:32).
மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலும் "எதிரியாக" என்ற வார்த்தைதான் உள்ளது.கர்த்தருடைய எண்ணங்களுக்கு விரோதமாக பிலேயாமுடைய செயல் இருந்ததினால் கர்த்தருடைய தூதன் பிலேயாமுக்கு எதிரியாக மாறி விட்டான்.

  • எனவே கர்த்தருடைய தூதன்தான் இங்கே "சாத்தான்".
  • "சாத்தானாக" மாறிய கர்த்தருடைய தூதன் கர்த்தருக்கு கீழ்ப்படிக்கிறான்.
  • கிறித்தவர்களுடைய கருத்துப்படி, இந்த "கர்த்தருடைய தூதனாகிய சாத்தான்" கர்த்தருக்கு விரோதமாகத்தானே செயல் பட்டிருக்க வேண்டும்? அவ்வாறு செயல் பட வில்லையே ஏன்?
  • நம்முடைய தவறுதலான புரிதல்தான் இதற்கு காரணம்.
இந்த சாத்தான் என்ற வார்தையைப் பற்றி "Brittanica" என்ற தகவல் களஞ்சியம் என்ன கூறுகிறது என்பதை பாருங்கள்.
"Satan, in the Abrahamic religions (Judaism, Christianity, and Islam), the prince of evil spirits and adversary of God. Satan is traditionally understood as an angel (or sometimes a jinnī in Islam) who rebelled against God and was cast out of heaven with other “fallen” angels before the creation of humankind. Ezekiel 20:14–18 and Isaiah 14:12–17 are the key Scripture passages that support this understanding, and, in the New Testament, in Luke 10:18 Jesus states that he saw Satan fall like lightning from heaven. In all three Abrahamic religions, Satan is identified as the entity (a serpent in the Genesis account) that tempted Eve to eat the forbidden fruit in the Garden of Eden and was thus the catalyst for the fall of humankind. (For further discussion of Satan in Islam, see Iblīs.)"
அதாவது சாத்தான் என்பவன் "அனைத்து அசுத்த ஆவிகளுக்கும் தலைவன்  என்றும் கடவுளுடைய முதல் எதிரி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுக்குலத்தின் தோற்றத்திற்கு முன்பே பரலோகத்தில் இருந்து கீழே விழத்தள்ளப்பட்ட தூதன்தான் அவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இவன்தான் ஏவாளை உண்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த பழத்தை உண்ண தூண்டியவன்.

ஆனால் இந்த தகவல் களஞ்சியத்தில் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் பைபிள் ஆதாரம் கிடையாது.உலக அளவில் போற்றப்படும் ஒரு தகவல் களஞ்சியம் எவ்வாறு பைபிளுக்கு முரண்படுகிறது என்பதை பாருங்கள்.இந்த தகவல் களஞ்சியத்தின் கூற்று படி,

  • "சாத்தான்" என்பவன் தனியொரு குறிப்பிட்ட தூதன்.
  • கடவுளுடைய "முதல் எதிரி".
  • கீழே விழத்தள்ளப்பட்ட தூதன் என்பதற்கு ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தையும் எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்தையும் மேற்கோள் காட்டுகின்றனர்.அது தவறு என்பதை பின்னொரு கட்டுரையில் எழுத இருக்கிறேன்.
  • ஏவாளை தூண்டியவன் "சாத்தான்" என்பது தவறு.உண்மையில் "சர்ப்பம்" என்றுதான் உள்ளதே அன்றி "சாத்தான்" என்று அல்ல.
  • இந்த "சாத்தான்" தனியொரு தூதன் என்றால்,கடவுளுடைய முதல் எதிரி என்றால் ஏன் அவன் கடவுளுக்கு கீழ்ப்படிந்தான்?
அப்படியென்றால் உலகம் போற்றும் இந்த தகவல் களஞ்சியம் தவறானதா? இந்த தகவல் களஞ்சியம் தவறு அல்ல.இந்த தகவல்தான் தவறு.ஹீப்ரு மொழியையும் இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை முறையையும் கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்ட பதிவு இது.

எனவே சாத்தான் என்பவன் நாம் நினைப்பது போல் ஒருவன் கிடையாது.அவன் யார் என்பதை கீழ்கண்டவாறு கொடுத்துள்ளேன்.

  • "சாத்தான்" என்பவன் ஒரு சுதந்திரமாக முடிவெடுக்கக் கூடிய ஒரு தனி ஒரு தூதன் அல்ல.
  • "சாத்தான்" என்பவன் கடவுளுக்கு கட்டுப்பட்ட சுயமுடிவுகள் எடுக்க முடியாத ஒரு தூதன்.
  • "சாத்தான்" என்பது செயலைக் குறிக்கும் வார்த்தை என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • "எதிர்த்தல்" என்ற செயலை செய்யும் யாரும் "சாத்தான்"என்று அழைக்கப் படலாம்.
  • பூமியில் கடவுளுக்கு எதிராக உள்ளவர்களை "எதிர்க்கும்" அனைத்து மக்களும் அல்லது தூதர்களும் "சாத்தான்களே".
  • "எதிர்த்தல்" அல்லது "பகைத்தல்" செயலை செய்யும் யாவரும் "சாத்தான்களே". உடனே நாம் அவர்களை தவறாக நினைக்க கூடாது.
இந்த உதாரண கூற்றைக் கவனியுங்கள். "செல்வியும் நானும் மிகவும் இணைபிரியா தோழிகள். ஒரு நாள் அவளுடைய இரு சக்கர வாகனத்தை கடன் கேட்டேன்.அவள் கொடுக்க மறுத்து விட்டாள்.அதிலிருந்து அவளை நான் என் எதிரியாக,அதாவது சாத்தானாக, பார்க்கிறேன்".இக்கூற்று மறுக்க முடியாதது.
இந்த உதாரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.இன்னும் பல முடிவுகள் உள்ளன.தொடர்ந்து அவைகளை நாம் பார்க்க இருக்கிறோம்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒருவேளை தகவல் களஞ்சியம் சரி என்றும் என்னுடைய கூற்றுகள் தவறு என்றும் நினைக்கலாம்.அப்படியேன்றால் நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும்.தொடர்ந்து இரண்டாம் பாகத்தை படியுங்கள்.


இரா.இருதயராஜ்.

Saturday, April 20, 2019

இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்;

    இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்.

      மேற்கூறிய வசனத்தை லூக்கா எழுதிய நற்செய்தி புத்தகத்தில் காணலாம்.இந்த வசனத்தில் சில முக்கிய கேள்விகள் எனக்கு எழுகின்றன.

      1."லேகியோன்" என்றால் என்ன?
      2.அது என்ன மொழியில் உள்ளது?
      3.ஏன் அவ்வாறு எழுதப்பட்டது?

      இந்த "லேகியோன்" என்ற வார்த்தையின் ஆங்கில வடிவம் "
      Legion" என்பது ஆகும்.இந்த வார்த்தை ரோமர்களுடைய லத்தின்  மொழியை சேர்ந்தது.இந்த வார்த்தையின் பொருள் என்ன என்பதை நாம் முதலில் பார்க்க வேண்டும்.கேம்பிரிட்ஜ் மொழி அகராதி என்ன சொல்கிறது என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

      "a large group of soldiers who form a part of an army, especially the ancient Roman army":

      "a division of 3,000–6,000 men, including a complement of cavalry, in the ancient Roman army"

      தமிழில் இதை எவ்வாறு மொழி பெயர்களாம் என்றால்,"3000-தில் இருந்து 4000 வரை ஆட்களை கொண்ட படைப்பிரிவு ஒரு லேகியோன் ஆகும்".

      உண்மையில் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது ஆகும்.அவ்வாறு கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளில் எப்படி லத்தீன் வார்த்தை வந்தது?கிரேக்க மொழியானது இந்த லத்தீன் வார்த்தையை கடன் வாங்கி இருக்கிறது.கிரேக்க மொழியில் இந்த வார்த்தை "λεγεων (legeon)" என்று எழுத படுகிறது.கிரேக்க மொழியில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருந்தாலும், "லேகியோன்" என்ற வார்த்தை லத்தீன் மொழியை சார்ந்ததே ஆகும்.

      சரி ஏன் இவ்வாறு எழுதப்பட்டது? அது நமக்கு தெரிய வில்லை.உண்மையில் இந்த கதை நடந்ததா? அதுவும் நமக்கு தெரியாது.ஆனால் கீழ்கண்டவாறு ஒரு புரிதலை நாம் கொள்ளலாம்.

      இந்த லூக்கா புத்தகம் எழுதப்பட்ட காலம் சுமார் கி.பி.70-ம் நூற்றாண்டு ஆகும்.அந்த காலகட்டத்தில் யூதர்களை ரோமர்கள் மிகவும் கொடுங்கோல் ஆட்சி புரிந்த காலம்.தங்களை காப்பாற்ற "மேசியா" எப்பொழுது வருவார் என்று யூதர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலம் அது.இந்த காலகட்டத்தில் இயேசுவின் சீடர்கள் அவரை "கிறிஸ்து" அதாவது "மேசியா" என்று நம்பினர்.ரோமர்களின் ஆட்சியில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். 

      இப்பொழுது கதையை பாருங்கள்.இயேசுவிடம் கொண்டு வரப்பட்ட அந்த "பிசாசு பிடித்திருந்த மனிதன்" ஒரு யூதன்.அவனை பிடித்திருந்த பிசாசுகள் "லேகியோன்" அல்லது "Legion" என்று அழைக்கப்பட்டது.அதாவது "ரோம படைகளின் பிடியில் யூதர்கள் இருந்தனர்" என்பதை  சொல்லாமல் சொல்கிறார் லூக்கா.அதனால்தான் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட லூக்கா புத்தகத்தில் நாசூக்காக ரோம வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார் எனலாம்.இந்த பிசாசுகளை பன்றிகளுக்குள் செல்ல அனுமதி அளிக்கிறார் இயேசு.பன்றிகள் யூதர்களுக்கு அருவறுப்பானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அப்பன்றிகள் கடலுக்குள் சென்று மடிகின்றன.அதாவது ரோமர்களை இயேசு அழிப்பார் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இக்கதையில் வெளிப்படுகிறது.

      எனவே இயேசுவை மேசியாவாக கற்பனை செய்து கொண்டு அல்லது நம்பி கொண்டு எழுதப்பட்ட புத்தகம்தான் லூக்கா எழுதிய நற்செய்தி புத்தகம் ஆகும் என்று ஏன் நாம் என்ன கூடாது? ரோமர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுபட துடித்த யூதர்களில் சிலர்தான் இயேசுவின் சீடர்கள் ஆவர்.உயிர்தெழுந்ததாக கூறப்படும் இயேசு திரும்பி வந்து நம்மை மீட்பார் என்று அவர்கள் ஏன் நம்பியிருக்கக்கூடாது? ஆனால் இயேசு திரும்பி வரவில்லை.எனவே அடுத்த புத்தகம் எழுதிய யோவான் ஒரு படி மேலே போய் இயேசுவை உயர்த்தி,அவர் தெய்வீக தன்மை கொண்டவர் என்றும் சர்வ வல்லமை கொண்ட கடவுளின் சொந்த குமாரன் என்றும் கற்பனை செய்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார்.

      இந்த வலி விலகல்தான் திரித்துவத்தின் அடிப்படை.கால போக்கில் அவரை கடவுளின் அங்கம் என்று ரோமர்கள் ஆக்கி விட்டனர்.ஏனெனில்,யூதர்களை அடக்குவதற்கு அவர்கள் வழிபட்டு முறைகளையும் மாற்ற வேண்டும் என்று ரோமர்கள் நினைத்தனர்.ரோமர்களுக்கு பல கடவுள் வழிபாட்டு முறை இருந்தது.எனவே மூன்று கடவுள்களில் ஒருவர்தான் இயேசு என்று பிற்காலங்களில் வலியுறுத்தப்பட்டது.இன்று நாம் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டோம்.மெய்யான கடவுளை விட்டு விட்டோம்.

      ஆபிரகாமின் கடவுளே மெய்யான கடவுள் அவரையே தொழுது கொள்வோமாக.அவர் "சர்வ வல்லவர்".

      இரா.இருதயராஜ்.
      இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
      https://drive.google.com/file/d/1jVCfeqJlu9WoZ1efL28vQ11wZceuvhj3/view?usp=sharing

Friday, April 19, 2019

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால் வருகிறவனாகிய எலியா இவன்தான்(மத்:11:14)

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால் வருகிறவனாகிய எலியா இவன்தான்(மத்:11:14)

மத்தேயு எழுதின நற்செய்தி புத்தகத்தில் இந்த வசனம் உள்ளது.அதாவது இயேசு, மக்களிடம் பேசும்பொழுது இந்த வார்த்தையை கூறுகிறார்.யோவானை பற்றி இவ்வாறு கூறுகிறார்.ஏன் இவ்வாறு கூறினார்? அதற்கு நாம் மற்றொரு வசனத்தை பார்க்க வேண்டும்.
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.(மல்கி:4:5).
அதாவது கர்த்தருடைய நாள் வருவதற்கு முன்னர் எலியா தீர்க்க தரிசி  இந்த உலகத்திற்கு அனுப்பப்படுவான் என்று மல்கியா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் கூறுகிறார்.அதனால் யூத மக்கள் மல்கியா தீர்க்கதரிசி உரைத்த இந்த எலியாவை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.இந்த சூழ்நிலையில் யோவானைப்பற்றி இயேசு பேசுகிறார்.அந்த வானத்தை நாம் பாப்போம்.
நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.(மத்:11:14)
யோவான் பற்றிய இயேசுவின் கருத்து இது.இந்த நிகழ்வை நாம் யோவான்  எழுதிய நற்செய்தி புத்தகத்தில் பார்ப்போம்.எருசலேமில் இருந்த யூதர்கள் யோவானிடம் ஆள் அனுப்பி விசாரிக்கின்றனர்.அவர் யார் என்று கேட்கின்றனர்.அதற்கு அவருடைய பதில் கீழ்கண்ட வசனங்களில் உள்ளது.
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.(யோவா:1:21)
இங்கு யோவான் தன்னை எலியா அல்ல என்று கூறுகிறான்.அப்படி என்றால் கீழ்கண்ட கேள்விகள் நமக்கு எள்கின்றன.

  1. யோவான் தன்னை எலியா அல்ல என்று கூறுகின்றான். ஆனால்  இயேசுவோ யோவான்தான் எலியா என்று கூறுகின்றான்.
  2. யார் கூறுவதை நாம் நம்புவது?
  3. ஏன் இந்த குளறுபடி?

முடிவுரை:

                      மத்தேயு எழுதிய நற்செய்தி புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி தெரிந்திருக்கும்.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காட்டி அது இயேசு மூலம் இவ்வாறு நிறைவேறி இருப்பதாக அவர் அடிக்கடி கூறியிருப்பார்.அந்த வகையில் மத்தேயு,மல்கியாவில் உள்ள அந்த குறிப்பிட்ட வசனத்தை மேற்கோள் காட்டி அது யோவான்  மூலமாக நிறைவேறி விட்டதாக கூற முற்பட்டிருக்கிறார்.
                  ஆனால் யோவான் எழுதிய நற்செய்தி புத்தகம் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.இயேசு தெய்வீக தன்மை கொண்டவர் மற்றும் அவர் கடவுளிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் இப்புத்தகத்தை எழுதி இருப்பார்.தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதலைப் பற்றி இப்புத்தகத்தை எழுதிய யோவானுக்கு கவலை இல்லை. எனவே மத்தேயு புத்தகம் எழுதி ஏறத்தாழ 100 வருடங்கள் கழித்த பின்னரே யோவான் இந்த நற்செய்தி புத்தகத்தை எழுதுகிறார்.எனவே மத்தேயு என்ன கூறி எழுதி இருந்தார் எனபது யோவானுக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.யோவான்ஸ்நானன் எலியா அல்ல என்று குறிப்பிட்டு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு விட்டது.
                             
அப்படி என்றால் நாம் யோவான்ஸ்நானனை யார் என்று கொள்வது? இவர்கள் எழுதிய புத்தகங்களை எவ்வாறு நம்ப இயலும்? புதிய ஏற்பாடு என்பது ஒரே ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு" போன்றவர்கள் வழிபட்ட உண்மையான கடவுளுக்கு இணையாகவோ அல்லது அவரது உன்னதத்தை குறைப்பது போன்றோ எழுதப்பட்டிருக்கிறது.
                              நாம் இதனை புரிந்து கொண்டு உண்மையான கடவுளாகிய ஆபிரஹாம் வழிபட்ட கடவுளையே வழிபடுவோமாக.

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1pTTT1I4tNOB-wdo0tSEVAyLRUsvv7tak/view?usp=sharing

Saturday, April 13, 2019

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று


"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;  உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை".- இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால்,அனைத்தும் "வார்த்தை என்கிற தேவன் மூலம் படைக்கப்பட்டது" என்பது ஆகும்.தொடர்ந்து பார்ப்பதற்கு முன்னர் யோ:1:1-ஐ வாசித்து விடலாம் என்று நினைக்கிறேன்.

    ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.(யோ:1:1)

இந்த வசனத்தில் வரும் "வார்த்தை" என்ற வார்த்தையை பற்றிய என்னுடைய முந்தைய படித்து விட்டு  இக்கட்டுரையை படித்தால் புரிந்து கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பார்த்து விடுவோம்.

In the beginning was the Word, and the Word was with God, and the Word was God(Jh:1:1)-NIV.

ஆங்கிலம் மற்றும் தமிழ்  வசனங்களை ஒப்பிட்டு படித்து பாருங்கள்.உங்களுக்கு ஒன்று புரிய வேண்டும்."வார்த்தை தேவனிடத்தில் இருந்தது" என்ற வாக்கியத்தில் "எந்த தேவனிடத்தில் இருந்தது?" என்பது குறிப்பிடப்படவில்லை."the Word was with God" என்றுதான் உள்ளதே அல்லாமல் "the God" என்று இல்லை.எனவே பொதுவாக "வார்த்தை"யானது ஏதோ ஒரு கடவுளுடன் இருந்தது என்று மட்டுமே பொருள் கொள்ள இயலும்.பைபிள்-ஐ பொறுத்தவரையில் ஒரே கடவுள்தான் உள்ளார்.அவரை "the God" என்று மட்டுமே குறிப்பிட முடியும்.எனவே யோவான் "தேவன்" என்று குறிப்பிட்டது யார் என்பது நமக்கு தெரிய வில்லை.இதை பற்றி முந்தைய கட்டுரையில் எழுதி உள்ளேன்.தற்போது இந்த வசனத்திற்கு வருவோம்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.(யோ:1:3)
இந்த வசனத்தின் மூலமாக எழும் கேள்விகள்.

  1. பைபிளில் ,அதாவது மெய் கடவுளாகிய "ஆபிரகாமின் கடவுளுக்கு" உலகத்தை படைக்கும் பொழுது யாருடைய உதவியாவது தேவைப்பட்டதா?
  2. அப்படி அவர் யாரோ ஒருவர் அல்லது யோவானின் கூற்று படி "வார்த்தையாகிய தேவனின்" மூலமாகத்தான் அனைத்தையும் படைத்தார் என்று ஆபிரகாமின் கடவுள் கூறியிருக்கிறாரா?
  3. மேற்கூறியபடி இல்லை என்று நிரூபித்து விட்டால் யோவான் எழுதிய சுவிஷேசத்தை நாம் நம்பலாமா?
இப்பொழுது கடவுளின் படைப்பைப்பற்றி தெரிந்து கொள்ள சில வசனங்களை பார்க்கலாம்.
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.(யோபு:38:4)
உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.(ஏசா:44:24).
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.(ஏசா:48:13)
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. (ஏசா:46:9)
நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. (ஏசா:45:5)
 மேற்கூறிய வசனங்கள் அனைத்தும் தெளிவாக கூறுவது என்னவென்றால்,"கர்த்தர்" ஒருவரே உலகத்தை தனி ஒருவராய் படைத்தார். யார் மூலமாகவும் அவர் எதையும் படைக்க வில்லை. அவரால் அனைத்தும் முடியும். அவரால் மட்டுமே முடியும். அவரே "கர்த்தர்". அவரே "கடவுள்". அவர் ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுள்.அவரையே நாமும் எவ்வித குழப்பமும் இன்றி தொழுது கொள்வோமாக.

முடிவுரை:
                          யோவான் கூறிய கருத்து தவறு என்று நிரூபிக்க பட்டுவிட்டது.அவர் ஏன் இப்படி பட்ட முரண்பட்ட கருத்தை கூறினார்?யோவான் தான் நினைத்த ஒரு கருத்தை இயேசுவை கொண்டு நிறைவேற்ற விரும்பியிருக்கிறார்.ஆனால் கடவுளுக்கு யார் உதவியும் தேவை இல்லை.அதுபோல் யார் மூலமாகவும் அவர் எதையும் படைக்க வில்லை.கடவுள் மட்டுமே தானாகவே அனைத்தையும் படைத்திருக்கிறார்.கடவுள் இப்படி கூறியிருக்க,யோவான் ஏன் கடவுள் கூறிய வார்த்தைக்கு முரண்பட்டார்?யோவான் கடவுளின் வார்த்தைகளை அறியாமல் இருந்தால்,அவர் எழுதிய நற்செய்தியை எவ்வாறு நம்ப முடியும்?

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
https://drive.google.com/file/d/1OuK-QNXLTXz0JXFZLm14HdzgxPMY9ZIq/view?usp=sharing
 ----------------------------------------------------

ஆதியிலே வார்த்தை இருந்தது

ஆதியிலே வார்த்தை இருந்தது
                                                                                             இரா.இருதயராஜ் 

         மிகவும் அதிகமாக மேற்கோள் காட்டப்படும் வசனங்களில் ஒன்று யோ:1:1 ஆகும்.இயேசுவின் கடவுள் தன்மையையும்,அவர் பிதாவுடன் கூட அனைத்து காலங்களிலும் இருந்தார் என்பதையும் நிரூபிக்க இந்த வசனம் பயன்படுகிறது.இந்த வசனத்தின் பொருள் என்ன?இது கூறும் கருத்து என்ன?

இந்த "வார்த்தை"என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த "வார்த்தை" எங்கிருந்து வந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அதற்காக நாம் ஒரு சிறிய வரலாற்று சுருக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

கிரேக்கர்களின் ஆதிக்கம் கி.மு 350-களில் பரவியிருந்தது. கிரேக்கர்கள் ஒரு தனிப்பட்ட சிறப்பை கொண்டிருந்தனர்.அது அவர்களுடைய அறிவு ஆகும்.எதையும் ஏன்,எதற்கு என்று வினவி அதற்க்கு பலதரப்பட்ட பதில்களை வெளிக்கொண்டு வரும் சிறப்பைக்கொண்டிருந்தனர்.இந்த கிரேக்கர்கள் உலகின் பல பகுதிகளை வெற்றி கொண்ட பிறகு இவர்களுடைய கலாச்சாரம் இவர்கள் வெற்றி கொண்ட பகுதிகளுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது.எதையும் ஆராய்ந்து பார்க்கும் அவர்களுடைய அறிவு மற்ற அறிவாளிகளையும் பாதித்தது.இந்த கிரேக்கர்களுடைய மொழியில் உள்ள ஒரு வார்த்தைதான் "logos"  ஆகும்.தமிழ் மொழியில் இதன் பொருள் "வார்த்தை" என்று நாம் கொண்டுள்ளோம்.உண்மையில் "வார்த்தை" என்பதுதான் இதன் பொருளாக உள்ளதா என்று நாம் ஆராய்ந்து பார்த்தால்,மேலும் சில விளக்கங்கள் நமக்கு கிடைக்கின்றன.கிரேக்க தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.
"Of the modes of persuasion furnished by the spoken word there are three kinds. The first kind depends on the personal character of the speaker [ethos]; the second on putting the audience into a certain frame of mind [pathos]; the third on the proof, or apparent proof, provided by the words of the speech itself [logos]. Persuasion is achieved by the speaker's personal character when the speech is so spoken as to make us think him credible."
தனித்தனியான  விளக்கங்களை பார்க்கலாம்.
Ethos (sometimes called an appeal to ethics), then, is used as a means of convincing an audience via the authority or credibility of the persuader, be it a notable or experienced figure in the field or even a popular celebrity.

Pathos (appeal to emotion) is a way of convincing an audience of an argument by creating an emotional response to an impassioned plea or a convincing story.
Logos (appeal to logic) is a way of persuading an audience with reason, using facts and figures.
தமிழில் இதன் விளக்கங்களை நாம் காணலாம்.
  • Ethos: நம் மீது மற்றவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு காரணமான குணங்களைக்கொண்டு அல்லது நமது தோற்றத்தைக்கொண்டு நமது கருத்துக்களை நம்ப செய்வது. 
  • Pathos: நம்முடைய உணர்ச்சிகரமான பதில்களை கொண்டு நம்ப செய்யும் உத்தி.
  • Logos: நாம் அடுக்கடுக்காக கொடுக்கும் சான்றுகளை கொண்டு நிரூபிக்கும் திறமை அல்லது மற்றவர்களை நம்ப வைக்கும் திறமை.

எனவே "Logos" என்ற வார்த்தையின் பொருள் வெறும் "வார்த்தை" என்பது மட்டும் அல்ல."வார்த்தை"களில் இருந்து வரும் "கருத்துக்களும்" ஆகும்."LOGIC" என்ற ஆங்கில வார்த்தை "Logos" என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்ததுதான். தவறான ஒரு கருத்தைக்கூட "சரி" என்று வாதிடுவதற்கு "LOGIC ABILITY" வேண்டியிருக்கிறது. எனவே தமிழில் "வார்த்தை" என்று படிக்கும் போது நமக்கு கீழ்கண்ட குழப்பங்கள் ஏற்படலாம்.
  1. இந்த "வார்த்தை" எப்படி தானாகவே இருக்கும்?
  2.  அதற்க்கு உயிர் உண்டா? உயிர் இல்லாமல் தானாகவே எப்படி இருக்கும்?
  3. தானாக இருப்பது மட்டுமன்றி எப்படி தேவனாகவும் இருந்தது?
  4. இந்த கேள்விகள் யோ:1:1-ஐ படிக்கும் கிறித்தவர்காளுக்கு ஏன் ஏற்பட வில்லை?
  5. யோ:1:14-ல் இந்த "வார்த்தை" மாம்சமாக மாறியதாக கூறப்பட்டுள்ளது.இது எப்படி நடக்கும்? உயிரில்லாத வார்த்தை எப்படி ஒரு "மனித"உருவம் எடுத்தது?
  6. யார் அதற்க்கு உயிர் கொடுத்தது?
மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த "வார்த்தை" என்ற வார்த்தைக்கு தீர்வுதான் என்ன?இதற்க்கு மற்றுமொரு சிறிய வரலாற்று சுருக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

நாம் ஏற்கனவே கூறியபடி,கிரேக்கர்களின் வெற்றிக்கு பிறகு அவர்களின் தாக்கம் அனைத்திலும் பரவியது.உண்மையில் அக்காலகட்டத்தில் அது மிக உயர்வாகவும் கருதப்பட்டது.அரிஸ்டாட்டில் ,ஹெராக்ளிட்டஸ் போன்ற கிரேக்க தத்துவ ஞானிகள் மற்றும் "பிலோ" என்ற யூத தத்துவ ஞானி போன்றோர்களின் கூற்றுப்படி இந்த "Logos" அல்லது "LOGIC ABILITY" அல்லது தமிழில் "வாதிடும் அறிவு",இதுதான் இந்த உலகத்தின் அடிப்படை.அதாவது "அறிவே கடவுள்".வேறு எதுவும் அல்ல."அறிவே" அனைத்தையும் உண்டாக்கி இருக்கிறது.இந்த தத்துவ ஞானிகளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அனைவரும் அக்கருத்துக்களின் அடிப்படையில் எண்ணற்ற புத்தகங்களை எழுதி உள்ளனர்.

நமது "யோவான் நற்செய்தி" புத்தகத்தின் ஆசிரியரும்,இயேசுவின் சீடர் என்று கூறப்படுபவருமான "யோவான்" இந்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் என்று நான் கருதுகிறேன்.இதன் காரணமாகவே அவர் "Logos"-ஐ பயன்படுத்தி இருக்கிறார்.அறிவுதான் அனைத்திற்கும் காரணம் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்டு அக்கருத்தை இயேசுவுக்கு பொருத்தி பார்த்திருக்கிறார்.அது கடைசியில் எல்லாம் வல்ல கடவுளாகிய "ஆபிரகாமின் கடவுளை" மக்களின் பார்வையில் இருந்து அகற்றி இயேசுவை வழிபாடும் நிலைமைக்கு கொண்டு சென்று விட்டது.

இப்பொழுது யோ:1:1-ஐ வாசித்து பாருங்கள்.

    ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
இந்த வசனத்தை மாற்றி எழுதி உள்ளேன்,பாருங்கள்.
    ஆதியிலே அறிவு இருந்தது, அந்த அறிவு தேவனிடத்திலிருந்தது, அந்த அறிவு  தேவனாயிருந்தது.
இந்த "அறிவு"என்ற வார்த்தைக்கு பதிலாக "கூர்மை அறிவு(reasoning power)" என்ற வார்த்தையை மாற்றி போட்டு வாசித்தால் மேலும் நன்றாக நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

யோவான் இந்த "reasoning power" அல்லது "கூர்மை அறிவை" இயேசுவுடன் ஒப்பிட்டு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.உலகம் படைக்கப்படுவதற்கு இந்த அறிவு தேவைப்பட்டதாக அவர்நினைத்து விட்டார்.அதனாலதான் அந்த "அறிவு" ஆதியிலே இருந்தது என்றும் தவறாக நினைத்து விட்டார்.அது கடவுளாகவும் இருந்தது என்று மிக பெரும் தவறையும் செய்து விட்டார்.இந்த கிரேக்க தாக்கத்தைப்பற்றி  மிக சிறிய அளவிற்குத்தான் நான் தந்துள்ளேன்.ஆனால் பெரும் அளவிற்கு இதைப்பற்றி புத்தகங்கள் உள்ளன.யார் வேண்டுமானாலும் படித்து பார்க்கலாம்.

முடிவுரை:
                    கிரேக்கர்களின் ஆட்சிக்கு பின்னர் "தத்துவ அறிவு" ஞானிகளின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது."கடவுள்" யார்?,என்பதை பற்றிய தர்க்கங்களும்,இயற்கை மற்றும் படைப்புகளைப்பற்றிய ஆராய்ச்சி தத்துவ ஞானிகளை "அறிவுதான் அனைத்திற்கும் காரணம்"என்ற நிலையை நோக்கி இட்டு சென்றிருக்கிறது.இதன் வெளிப்பாடே யோவான் எழுதிய சுவிஷேசம்.
                ஆனால் கடவுள் யாரென்று இஸ்ரேல் மக்களுக்கு முன்னமே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் தனிப்பட்டவர். அவருக்கு ஈடு இணை கிடையாது.அவர் மட்டுமே அனைத்தையும் படைத்தவர்.அவருக்கு உதவி செய்ய யாரும் தேவை இல்லை.எது "அறிவு" என்பதை அவரே தெளிவு படுத்தி இருக்கிறார்.யோபு:28:29-ஐ வசித்து பாருங்கள்,உங்களுக்கு புரியும்.எனவே "அறிவு" அல்லது "வார்த்தை" கடவுள் அல்ல.

-----------------------------------------------------------------------------------------

"ஈடு இணை இல்லாத மெய்யான கடவுளாகிய "ஆபிரகாம் வழிபட்ட கடவுளையே தொழுது கொள்ளுங்கள்"



My Posts