சாத்தான் என்பவன் யார்? பாகம்-3
முதல் இரண்டு பாகங்களை நீங்கள் படிக்காவிடில் அதை படித்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.இல்லையென்றால் புரிவது கடினம்.சாத்தான் என்பவனைப்பற்றிய தவறுதலான புரிதலுக்கு நம்மை இட்டு செல்லும் வசனத்தை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்(யோபு 1:6)
முழு பைபிளிலும் இந்த இடத்தில் மட்டும் "சாத்தான்" என்ற வார்த்தை சற்று வேறு பட்டு உள்ளது. இந்த நிகழ்வு, சர்வ வல்லமையுள்ள கடவுளாம் ஆபிரகாமுடைய கடவுள் வாசம் செய்யும் இடத்தில வைத்து நடைபெறுகிறது.அதாவது, பரலோகத்தில் வைத்து நடைபெறுகிறது.
கர்த்தருடைய இடத்தில் தேவபுத்திரர்கள் கூடும் பொழுது அசுத்தங்கள் தலைவனாகிய[கிறித்தவர்களின் கூற்றுப்படி] சாத்தானும் கூடுவதாக உள்ளது.ஒரு சில கேள்விகள் இங்கு எழுகின்றன.
- தேவ புத்திரர்கள் கூடும் இடத்தில் வேறு யாரும் வர இயலுமா?
- கர்த்தர் சர்வ வல்லவர்,பரிசுத்தர்.அசுத்தம் அவருடைய இடத்தை அண்ட முடியாது.
- அப்படிப்பட்ட நிலையில் அசுத்த ஆவிகளின் தலைவனாகிய பிசாசாகிய "சாத்தான்" எப்படி பரிசுத்தரின் இடத்திற்குள் வர இயலும்?
- கர்த்தருக்கு "சத்துருவாக" இருப்பவன், அவருக்கு கீழ்ப்படியாதவன் எப்படி அவருடைய இடத்திற்குள் வர இயலும்? அவரிடம் எப்படி பேச இயலும்?
- அவன்தான் ஏற்கனவே கீழே விழத்தள்ளப்பட்டாயிற்றே,மறுபடி எப்படி பரலோகத்திற்குள்,அதுவும் கர்த்தருடைய இடத்திற்குள் அவனால் வர இயலும்?
எனவே கர்த்தருடைய சந்நிதியில் நிற்பவர்கள் தேவபுத்திரர்கள் மட்டுமே.பின் எப்படி சாத்தானும் அவர்கள் நடுவில் வந்து நின்றான் என்று உள்ளது?கிறித்தவர்களாகிய நாம் நினைப்பது போல் சாத்தான் இருந்தால்,அவனால் கர்த்தருடைய இடத்திற்குள் வர இயலாது.
பக்கம்-1-ல் நாம் படித்ததை நினைவு கூறுங்கள்.சாத்தான் என்பவன்,
- ஒரு குறிப்பிட்ட,கீழே விழத்தள்ளப்பட்ட,அசுத்த ஆவிகளுக்கு தலைவனாக இருக்கிற,கர்த்தரை எதிர்க்கிற ஒருவன் அல்ல.
- "எதிர்த்தல்" என்ற செயலை செய்கிற எவரையும் ஹீப்ரு மொழியில் "சாத்தான்" என்றே அழைக்கிறோம்.
இந்த நிலையில் அத்தூதனை அல்லது அந்த தேவ புத்திரனை "சாத்தான்" என்று பைபிள் குறிப்பிடுகிறது.யோபுவினுடைய "எதிரியாக" அவன் மேல் "குற்றம் சாற்றுகிறவனாக" அந்த தேவ புத்திரன் கர்த்தருடைய சந்நிதிக்குள் வருகிறான்.கர்த்தர் அவனை கீழ் கண்டவாறு வினவுகிறார்.
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
இந்த வசனத்தை சற்று மாற்றி வாசிக்கலாம்.
கர்த்தர் (யோபுவின்)எதிராளியைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
யோபுவைப்பற்றி கர்த்தரே கீழ்கண்டவாறு சான்று கொடுக்கிறார்.
கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.பின்பு தேவபுத்திரன் கீழ்கண்டவாறு பதில் கூறுகிறான்.
9.அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?
10.நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.11.ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான்.
மேற்கண்ட வசனங்களில் இருந்து,யோபு சோதிக்கப்பட வேண்டும் என்று தேவபுத்திரன் விரும்புவதாக நமக்கு தெரிகிறது. எனவேதான் அவனை "குற்றம் சாற்றுகிறவனாக" அதாவது "சாத்தானாக"பைபிள் நமக்கு கூறுகிறது.
ஒருவேளை உண்மையில் "சாத்தான்" என்பவன் "கடவுளுடைய "முதல் எதிரி" என்றால்,அவன் ஏன் கடவுளிடம் அனுமதி கேட்க வேண்டும்? அவனால்தான் தன்னிச்சையாக செயல்பட முடியுமே?தான் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் தொந்தரவு தருபவனாயிற்றே?இது உங்களுக்கு முரண்பட வில்லையா?
உண்மையில் 11-ம் வசனத்தை ஹீப்ரு மொழியில் படித்தோமானால்,"தயவு செய்து" என்று யோபுவின் எதிராளி கர்த்தரிடம் கேட்பது போன்று உள்ளது.எனவே அவன் கர்த்தரிடம் விண்ணப்பம் செய்கிறான்.அவன் விண்ணப்பத்தை கடவுள் அங்கீகரிக்கிறார். யோபுவை சோதிக்க விரும்புவதன் மூலம் அவனுக்கு "எதிராளியாக" மாறும் தேவபுத்திரனால் தன்னிச்சையாக செயல் பட முடிய வில்லை.
எனவே நாம் நினைப்பது போல்,யோபுவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள "சாத்தான்" என்பவன் கடவுளுடைய எதிரி அல்ல.முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு "எதிரி" என்று ஒருவன் இருக்க இயலாது.
இப்பொழுது யோபுவின் புத்தகத்தில் உள்ள மீதி வசனங்களை படித்து பாருங்கள் உங்களுக்கு நன்றாக புரியும்.நம்முடைய தவறான புரிதல்கள் நமக்கு தவறான பொருளை கொடுக்கின்றன.தவறான பொருளைக் கொடுத்தாலும் சகித்துக் கொண்டு மாரு படி திருத்தி கொள்ளலாம்.ஆனால் கர்த்தர் அருவருக்கும் சில காரியங்களை நோக்கி நம்மை இந்த தவறான புரிதல்கள் தள்ளி சென்று விட்டன.
அவற்றைப்பற்றி நாம் அடுத்த பாகத்தில் படிக்க இருக்கிறோம்.நான்காம் பாகத்தில் "சாத்தான்" என்ற கருத்து எப்படி கிரேக்கர்களின் கருத்துக்களுக்கு ஒத்து போகிறது என்பதை பார்க்க இருக்கிறோம்.பழைய ஏற்பாட்டில் எங்கேயும் குறிப்பிடப்படாத ஒன்று எப்படி பைபிளுக்குள் நுழைந்தது?நாம் எப்படி அதை இருக பற்றி கொண்டோம்?தொடர்ந்து நான்காம் பாகத்தை படியுங்கள்.
இரா.இருதயராஜ்.
No comments:
Post a Comment