Friday, April 12, 2019

யோ:14:8,9-என்ன கூறுகிறது?

யோ:14:8,9-என்ன கூறுகிறது?
இரா.இருதயராஜ்.

இயேசுவிடம் அவருடைய சீடன் பிலிப்பு கேள்வி ஒன்றை கேட்கின்றான். 
    "பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
      அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?"

                   மேற்கூறிய வசனம் மிகப்பெரும் அளவில் கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயேசுவும்,பிதாவும் ஒருவர்தான். இருவரும் வெவேறு ஆள் கிடையாது, என்று ஆணித்தரமாக கூறுவதற்கு மேற்கூறிய வசனங்கள் பயன்படுகின்றன.இந்த வசனங்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

                    பழைய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ள கடவுள் தன்னைப்பற்றி எவ்வாறு கூறியிருக்கிறார்?கீழ்கண்ட வசனங்களில் இருந்து அதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
    நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.(யாத் 33:20).
இந்த வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு கீழ்கண்டவாறு இருக்கலாம்.

நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்க முடியாது என்றார். 
கடவுளைக் காண்பவர்களின் நிலைமை இவ்வாறு இருக்கிறது. எனவே ஒரு மனிதனாலும் கடவுளைக் காண முடியாது.பிலிப்புவிற்கு இந்த செய்தி தெரியாதா? பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று எவ்வாறு ஒரு யூதன் கேட்க முடியும்?அனைத்து யூத மக்களுக்கும் இது தெரியும்."எனக்கு தெரியாது" என்று ஒரு யூதனும் கூற இயலாது.ஏனென்றால்,வழிவழியாக யூதர்கள் இந்த செய்தியை தங்கள் குழந்தைகளுக்கு கடத்தி விடுவார்கள்."எந்த ஒரு மனிதனாலும் சர்வவல்ல இறைவனைக் காண இயலாது" என்ற செய்தி ஏறத்தாழ அனைத்து யூதர்களுக்கும் தெரியும்.இந்த நிலையில் யூதனாகிய பிலிப்பு எவ்வாறு இந்த கேள்வியைக் இயேசுவிடம் கேட்டான்?சரி,படிப்பறிவு இல்லாத பாமரனாகிய பிலிப்பு இந்த கேள்வியை அறியாமையினால் கேட்டாலும் கூட, இயேசு ஏன் யாத் 33:20-வது வசனத்தை பதிலாக கூற வில்லை?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பிலிப்புவின் முன்னோர்கள் கூட இதை அறிந்திருந்தனர்.நியா:13:22-ம்  வசனத்தை பாருங்கள்.
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.(நியா:13:22)
சாதாரண மனிதர்கள் கூட இதை அறிந்திருந்தனர் என்பதற்கு மேற்கூறிய வசனமே சாட்சி.
                           
பல நேரங்களில் பழைய ஏற்பாட்டு வசனங்களை மேற்கோள் காட்டிய இயேசு, பிலிப்புவின் கேள்விக்கு ஏன் குழப்பமான பதிலைக் கூறினார்? ஏதாவதொரு மனிதனை பார்த்து விட்டால் சர்வ வல்ல கடவுளை பார்த்த மாதிரி ஆகி விடுமா? தனக்கு எந்த ஒரு வகையிலும் ஈடு இனை வைக்கக் கூடாது என்று யாத் 20:4-ல் கூறியிருக்கிறார்.

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;(யாத் 20:4).
இப்படியிருக்க, தன்னை பார்த்து விட்டால் பிதாவை பார்த்த மாதிரி என்று எவ்வாறு கூறியிருக்க முடியும்? மத்தேயு, மாற்கு சுவிஷேசங்களில் இயேசு தன்னை இவ்வாறு உயர்த்தி பேச வில்லை.யோவான் எழுதிய இந்த சுவிஷேசத்தில் மட்டுமே இயேசுவை மிக உயர்வாக காட்டியிருக்கிறார்.எனவே கீழ்கண்ட எண்ணங்கள்  எனக்குள்  எழுகின்றன.

  1. யோவான் தன்னுடைய கருத்தை திணித்து இருக்கிறார்.
  2. எரேமியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலகட்டங்களில் இஸ்ரேல் மக்கள் "ஒரு தெய்வ"வழிபாட்டில் இருந்து விலகி சென்று பாபிலோனிய வழிமுறைகளை கடைப்பிடித்தனர்.அதனுடைய தாக்கம் இயேசு வாழ்ந்த காலகட்டங்களிலும் இருந்திருக்கின்றது.யோவான் அவ்வாறான ஒரு தாக்கத்திற்கு உட்பட்டிருக்க கூடும்.
  3. உண்மையில் யோவான் சுவிஷேசத்தை யோவான்தான்  எழுதினாரா? அவர்தான் என்றால் சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் தன்னை ஏன் அறிமுக படுத்த வில்லை?
இயேசுவை உயர்த்துவதன் மூலம் அவரை சர்வவல்ல கடவுளுக்கு இணையாக்க முயற்சி செய்திருக்கிறார். இன்று அதை கிறித்தவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள்.ஆனால், காலம் ஒன்று வரும்.அப்பொழுது கர்த்தரை அறியும் அறிவை அனைவரும் பெற்றிருப்பார்கள்.இதை கடவுளே கூறியிருக்கிறார்.

கடைசியாக நாம் என்ன கூறுகிறோம் என்றால்,பிலிப்பு கேட்ட கேள்வியே தவறு.பிலிப்பு அக்கேள்வியைக் கேட்டது போன்று காட்டி இயேசுவை உயர்த்தி இருக்கிறார் யோவான்.அதாவது ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

உண்மையான கடவுள் தன்னை பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தி இருக்கிறார்.அவரையே தொழுது கொள்ளுங்கள்.மனிதர்களை அல்ல!

No comments:

Post a Comment

My Posts