Saturday, January 4, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 2

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 2


உரொமப் பேரரசால் வெறுக்கப்பட்டு கடுமையான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட கிறித்தவம் ஒரு மறுமலர்ச்சியை கான்ஸ்டான்டின் ஆட்சிக் காலத்தில் பெற்றது என்பதை நாம் பார்த்தோம்.இயேசு இறந்த பிறகு சபைகள் பல்வேறு இடங்களில் தோன்றின. தொடர்ந்து செல்வதற்கு முன்னர் இச்சபைகள் உரோமப் பேரரசில் எங்கெல்லாம் இருந்தன என்பதை பக்கத்தில் இருக்கும் படத்தில் காணலாம். கிறித்தவத்திற்கு கிடைத்த இந்த பரிசை அது காத்துக் கொண்டதா என்பதையும் எவ்வாறு அது பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுகிறது என்பதையும் தற்போது பார்க்கலாம்.

தங்களுடைய மதம் எதை முக்கியமாக அறிவுறுத்துகிறதோ அதை கேள்விக்குள்ளாக்கும் செயலை நோக்கி கிறித்தவம் செல்கிறது என்பதை கான்ஸ்டான்டின் சீக்கிரமாகவே உணர்ந்து கொண்டான்.கான்ஸ்டான்டினுக்கு முன்னர் இருந்த அரசர்களால் பெரும் துன்புறுத்துதல்களுக்கு(Great Persecution) ஆளான சபைகள் அதிலிருந்து மீண்டெழுவதற்கு சிறிது சிரமம் காட்டியது.ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் இதுவே முதலாவது ஆகும்.உரோம பேரரசுக்கு உட்பட்ட எகிப்தில் புகழ்பெற்ற நகரமாகிய அலெக்சாண்ட்ரியா (Alexandria) இருந்தது.அங்கு பெருமை வாய்ந்த அலெக்சாண்ட்ரியா சபை இருந்தது.அச்சபையின் பிஷப்,பெரும் துன்புறுத்துதல்களில் (Great Persecution) அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கியவர்களை(Labsed) மன்னிக்க தயாராக இருந்தார்.இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.அலெக்சாண்ட்ரியாவுக்கு பக்கத்தில் இருந்த லைகோபோலிசு(Lycopolis) சபையின் பிஷப் மெலிசியஸ்(Melitius) இதனை கடுமையாக எதிர்த்து தனியாக தனக்கு கீழே ஒரு கிளையை உருவாக்கினார்.அலெக்சாண்ட்ரியா ,லைகோபோலிசு போன்ற சபைகள் அனைத்தும் எகிப்தின் வடக்கு பகுதியில் இருந்தன.எகிப்து ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியாகும்.துன்புறுத்தல்களுக்கு பயந்து பின்வாங்கியவர்களை மறுபடியும் சபைகளில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சூழ்நிலையில் ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் கர்தஜ்(Carthage) என்ற இடத்தில வைத்து பிஷப் தேர்தல் நடைபெற்றது (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).தற்போதைய CSI பிஷப் தேர்தல்கள் போன்று கடுமையான போட்டிகள் இருந்தன. துன்புறுத்தல் காலங்களில் யார் யார் என்னென்ன செய்தார்கள்,மன்னிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற கேள்விகள் மட்டுமன்றி தனிப்பட்ட,யார் பெரியவர் போன்ற போட்டிகளும் இருந்தன.உரோம சபைகளும் மற்றும் பல்வேறு சபைகளும் ஒன்று சேர்ந்து கேசிலியன் (Caecilian) என்பவரை மன்னிப்பதற்கு அதிகாரம் உள்ளவராக தேர்ந்தெடுத்தனர். இப்பதவிக்காக இவர் ஒரு பரிசு கொடுக்க வேண்டியிருந்தது,பின்வாங்கியவர்களை திரும்பவும் சபைகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சண்டையில் கர்தஜ்(Carthage)-ஐ சேர்ந்த பிஷப் சைபிரியன்(Cyprian) என்பவர் கொண்டிருந்த கருத்துக்கு முரண்பட வேண்டியிருந்தது.இவ்வாறு பல சிக்கல்களுக்கு இடையில் கேசிலியன் (Caecilian) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேசிலியன் (Caecilian) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டொனேடஸ்(Donatus) என்ற மற்றொரு பிஷப் தலைமையில் ஒரு புதிய பிரிவு ஏற்பட்டது.இப்பிரிவு வடக்கு ஆப்பிரிக்காவில் பரவியது.இந்த சிக்கல்கள் தீவிரமடைந்தது.பிரச்சினை அரசருக்கு எட்டியது.

டொனேடஸ்(Donatus) இப்பிரச்சினைகளை கான்ஸ்டான்டினுக்கு கொண்டு சென்றார்.தன் பேரரசின் அரசியலமைப்புகளில் மட்டுமே தலையிட்டு வந்த கான்ஸ்டான்டினுக்கு இது புதிய செயலாகும்.மேலும் தன் அறிவுக்கு தொடர்பில்லாத,மேதாவிகள் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த ஒரு பிரச்சினை இப்பொழுது தன் அவைக்கு வருகிறது.தன் பேரரசின் ஒற்றுமைக்கு இது அவசியம் என்று அவர் கருதியிருக்கக்கூடும்.தன்  ஆளுமையை இதில் அவர் காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

கான்ஸ்டான்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை கி.பி.313-ல் எடுத்தான்.தனக்கு முன் இருந்த அரசர்கள் பேரரசின் நீதி விசாரணை முறைகளை பயன்படுத்தி இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்திருப்பதை அவன் பார்த்திருக்கிறான்.ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் கிறித்தவ சபையின் தலைவர்களை அழைத்து "பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை எட்டும்படி" செய்வதை கவனித்து இருக்கிறான்.இப்பொழுது தானும் அவ்வாறே செய்ய போகிறான்,ஆனால் ஒரு சிறு மாற்றத்தோடு.வடக்கு ஆப்பிரிக்க சபைகளில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு "ஆலோசனை சங்கம்"(Council of Bishops ) இருப்பதையும் கவனித்திருக்கிறான்.அதையே பயன்படுத்த முடிவு செய்தான்.ஆனால் இப்பொழுது வடக்கு ஆப்பிரிக்க பிஷப்புக்களை மட்டும் அழைப்பதற்கு பதிலாக மத்திய தரைக்கடல் பகுதி முழுவதிலுமிருந்து பிஷப்புக்களை வரவழைப்பது என்று முடிவு செய்து அவ்வாறே அழைப்பும் விடுத்தான்.

இவ்வாறு கான்ஸ்டான்டின் தன்னுடைய முதல் "பிஷப்புக்களின் ஆலோசனைக்கு கூட்டத்தை(First Council of  Bishops)" உரோமில் கி.பி.313-ல் கூட்டினான்.இக்கூட்டத்தை கூட்டுவதற்கு காரணமாக இருந்த டொனேடஸ்(Donatus),கூட்டத்தின் முடிவுகளை ஏற்கவில்லை.எனவே கான்ஸ்டான்டின் மறுபடியும் ஒரு கூட்டத்தை இரண்டாவது முறையாக கூட்டினான்.இம்முறை இன்னும் பல இடங்களில் இருந்து பிஷப்புக்களை வரவழைத்தான்.இந்த இரண்டாவது "பிஷப்புக்களின் ஆலோசனைக்கு கூட்டம்" தற்போதைய பிரான்ஸ் நாட்டின் ஆர்லெஸ்(Arles) என்ற இடத்தில வைத்து நடைபெற்றது.

இந்த இரண்டாவது கூட்டத்தில் டொனேடஸ்(Donatus) மற்றும் அவரது ஆதரவாளர்களை சமரசம் செய்வதற்கு எவ்வளவு முயன்றும் முடியவில்லை.இது அரசன் கான்ஸ்டான்டினை கோபம் கொள்ள செய்தது.முடிவில் வீரர்களைக் கொண்டு வலுக்கட்டாயம் செய்யும் நிகழ்வு வரை சென்றது.சபைகள் பேரரசால் அங்கீகரிக்கப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் கிறித்தவர்களே கிறித்தவர்களை துன்புறுத்தும் நிலைமைக்கு சென்றது.டொனேடஸ்(Donatus) மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய தாய் கிளைக்கு (Mainstream) திரும்பும் படி உத்தரவிடப்பட்டனர்.ஆனால் இதன் விளைவு எதிர்பார்த்தபடி இல்லை.டொனேடஸ்(Donatus) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மென்மேலும் ஒதுங்கி சென்றனர்.மற்ற வடக்கு ஆப்பிரிக்க சபைகள் அனைத்தும் உரோமுக்கு இனங்கி சென்றன.இவர்கள் ஏறத்தாழ ஒதுக்கப்பட்டன.ஒருகட்டத்தில் இவர்கள் மறைந்தே போய்விட்டனர்.

மேற்கூறிய இரண்டு கூட்டங்களிலும் இருந்து பெரிய தத்துவ முடிவுகள் எட்டப்படவில்லை என்றாலும்,ஒரு புதிய வழிமுறை ஒன்று உருவாவதற்கு வித்திட்டது.கிறித்தவ சபைகளில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு "பிஷப்புக்களின் ஆலோனைக் கூட்டம்" என்ற வழிமுறை கிடைத்திருக்கிறது.இதுதான் கிறித்தவத்தை மேலும் புரட்டிப்போட்ட இருக்கிறது.அடுத்த பாகத்தில் அதனை காணலாம்.

No comments:

Post a Comment

My Posts