Friday, January 3, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 1

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 1


திரித்துவம் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கை. கிறித்தவர் யாராவது ஒருவர் இந்த நம்பிக்கையை கேள்வி கேட்டால் அவர் கிறித்தவராக இருக்க முடியாது.இந்த நம்பிக்கைதான் ஒருவர் கிறித்தவர் ஆவதற்கு அடிப்படை.ஆதிகாலத்தில்,அதாவது இயேசு இறந்தவுடன் அவருடைய சீடர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை கொண்டிருந்தார்களா என்றால், இல்லை என்று மிக உறுதியாக கூறமுடியும். இக்கூற்றுக்கான ஆதாரம் திருத்தூதர்ப் பணிகளில் (அப்போஸ்தலர் நடவடிக்கைகள்) உள்ளது. இப்புத்தகத்தை படித்துப் பார்த்தால் இயேசுவின் சீடர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கை எது ஒன்றையும் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகும்.இந்நம்பிக்கை கி.பி.320-களில்தான் உருவாகிறது.திருமறையில் எங்கு தேடிப்பார்த்தால் தென்படாத ஒரு கருத்து எப்படி உள்ளே வந்தது என்பது மிகவும் ஆச்சரியமே.புரிந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் இக்கருத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அது மிகப்பெரும் தவறாக முடிந்து விடும்.காரணம் "புரிதல்" என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும்.தன்னுடைய போதனையில் எங்கும் இயேசுவோ,பவுலோ,பேதுருவோ,யோவானோ வெறும் எந்த ஆதிகால சீடர்களும் குறிப்பிடாத ஒன்று எப்படி அறிமுகமானது என்பது புரியாத புதிராகவே இன்னும் உள்ளது.எப்படி இது வந்தது என்பதைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு இக்கட்டுரை.

உரோம பேரரசு கி.பி.250-300 வரை கிறித்தவர்களை  மிக கொடுமைக்களுக்குள்ளாக்கியது.இக்காலம் கிறித்தவர்களுக்கு ஓர் இருண்ட காலமாகும். செல்சஸ்(Celsus), செப்டிமிஸ் செவேர்ஸ் (Septimius Severus),மக்ஸிமினஸ்(Maximinus),ட்ராஜன் டெஸிஸ்(Trajan Decius), வெலேரியன் (Velerian), டியோக்லேசியன்(Diocletian) போன்ற உரோம அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களில் கடைசியாக வரும்  டியோக்லேசியன் மிகக் கடுமையாக நடந்து கொண்டவன்.தேவாலயங்கள் அழிக்கப்பட்டன,பலிகொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்,கிறித்தவ எழுத்துக்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.கி.பி.293-ல் இந்த டியோக்லேசியன் தன்னுடைய பேரரசை நான்கு பகுதிகளாக பிரித்து ஆட்சி செய்தான்.இதில் மேற்கு பகுதியின் மன்னன் கான்ஸ்டான்டியஸ்-I(Constantius-I) என்பவனாவான்.இம்மன்னன் இறந்த பிறகு இவனுடைய மகன் கான்ஸ்டான்டின்(Constantine) கி.பி 306-ல் மேற்குப் பகுதியில் மன்னனாக்கப்படுகிறான்.

டியோக்லேசியன் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகளின் போது, மேற்குப்பகுதியில் மன்னனாக இருந்த கான்ஸ்டான்டியஸ்-I கிறித்தவர்கள் மீது சிறிது இரக்கம் காட்டினான். கிழக்குப்பகுதி மன்னனைப் போல் மிகக்கடுமையாக நடக்க வில்லை. கி.பி.305-ல் டியோக்லேசியன் தன்னுடைய அரச பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு,நான்கு பகுதிகளை ஆண்டு வந்த மன்னர்களிடையே பெரும் போட்டி ஆரம்பமாகியது.தற்போது மேற்கு பகுதியின் மன்னனாக இருக்கும் கான்ஸ்டான்டின் தன்னுடைய எதிரியாக இருக்கும் மற்றொரு பகுதியின் மன்னன் மக்சேன்டியஸ்(Maxentius)  என்பவன் மீது போர் தொடுத்து செல்கிறான்.தற்போதைய கிறித்தவத்தின் ஆரம்பம் இங்குதான் இருக்கிறது.ஆதிகால கிறித்தவம் யூதர்கள் கையிலிருந்து கிரேக்கர்கள் கைக்கு சென்றது ஒரு திருப்புமுனை என்றால்,அக்கிறித்தவம் அடுத்த திருப்புமுனையை இங்குதான் சந்திக்கிறது.

கான்ஸ்டான்டின் தன்னுடைய படைகளை திரட்டி சென்று,உரோம் நோக்கி வந்து கொண்டிருக்கும் மக்சேன்டியஸ்-ஐ  சந்திக்கிறான்.இரு படைகளும் சந்திக்கும் இடம் திபேர்(Tiber)என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மில்வியன்(Milvian) என்ற பாலமாகும். இப்பாலத்தின் தற்போதைய படத்தை பக்கத்தில்  பாருங்கள்.இப்போரின் போது கான்ஸ்டான்டின் ஒரு குறிப்பிட்ட செயலை செய்கிறான்.இச்செயலுக்கான அடித்தளம் இவனுடைய தந்தையிடம் இருக்கிறது.இவர் கிறித்தவர்களிடம் தன்னுடைய சக மன்னர்கள் காட்டிய கடுமையைக் காட்டவில்லை.படைவீரர்கள் பயன்படுத்தும் கேடயங்களில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பொறிக்க செய்கிறான்.அது "☧" என்ற அடையாளமாகும்.இதன் பெயர் "சை ரோ(Chi Rho)" ஆகும்.கிறிஸ்துமஸ் என்பது X-Mas என்றும் அழைக்கப்படுவது நமக்கு தெரியும்.


இந்த "சை ரோ" அடையாளம் கிரேக்க மொழியில் இருந்து வந்தது ஆகும்.கிறித்தவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம் ஆகும்.கிரேக்க மொழியில் "𝐗" என்ற எழுத்து "Ch" என்ற உச்சரிப்பை கொண்டது ஆகும்.நம் தமிழ் மொழியில் "அக்கா" என்ற வார்த்தையில் "க்" என்ற உச்சரிப்புக்கு இணையானது ஆகும்.அடுத்து "Ρ" என்ற எழுத்து.இது "ρ" என்றும் எழுதப்படும்.ஆங்கிலத்தில் "பெரிய எழுத்து", "சிறிய எழுத்து" என்ற அடிப்படையில் முதலாவது பெரிய எழுத்து இரண்டாவது சிறிய எழுத்து ஆகும்.இதன் உச்சரிப்பு "ர்" ஆகும்.அதாவது "சேர்ந்து" என்ற வார்த்தையில் இருக்கும் "ர்" ஆகும்.இப்பொழுது இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து வாசித்தால் நமக்கு கிடைப்பது,க் +ர் = கிர் ஆகும்."கிறிஸ்து(Christ)" என்ற வார்த்தையின் முதல் இரு எழுத்துக்கள் ஆகும்."Christ" என்ற கிரேக்க வார்த்தையின் முதல் இரு எழுத்துக்கள் ஆகும்."χριστός (chrīstós)" என்று கிரேக்க மொழியில் எழுதப்படுகிறது.Christ என்ற வார்த்தையின் முதல் இரு எழுத்துக்களையும் கேடகங்களில் பொறிக்குமாறு உத்தரவிட்டிருந்தான்.இந்த அடையாளத்தைப்பற்றி திருமறையில் எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாத நிலையில் திடீரென்று இது கிறித்தவத்தின் அணைத்து நிலைகளையும் ஊடுருவியது.முக்கியமான ஒரு அடையாளமாக இது பார்க்கப்பட ஆரம்பித்தது.உரோம பேரரசின் அதிகாரப்பூர்வமான அடையாளமாக  பார்க்கப்பட்டது.உரோம பேரரசின் நாணயங்களிலும் பொறிக்கப்பட ஆரம்பித்தது.


இப்போரில் கான்ஸ்டான்டின் மிகப்பெரும் வெற்றியை பெற்றான். இவ்வெற்றிக்கு காரணம் என்னவென்று உரோம பேரரசின் வரலாற்று எழுத்தாளராகிய செசெரியாவின் யுசிபியஸ் (Eusibius  of Caesarea) என்பவரிடம் கூறியிருக்கிறான்.  போரின் போது பிரகாசமான சிலுவை ஒன்றை வானத்தில் கதிரவனுக்கு மேலே தான் பார்த்ததாகவும்,அதில் "இதன் மூலம் வெல்வாய்(Conquer By This)" என்று எழுதப்பட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறான்.அமைதியை போதிக்கும் இயேசு பற்றி இந்த கான்ஸ்டான்டின் முன்னரே அறிந்திருந்தானா என்று நமக்கு தெரியவில்லை.இயேசுவின் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணான ஒரு தரிசனமாக இது இருக்கிறது என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.ஆனால் இதுதான் கிறித்தவத்தை ஆட்கொள்ளப்போகிறது.இப்பொழுது ஆட்கொண்டிருக்கிறது.போரில் லட்சக்கணக்கான வீரர்களை கொல்வதற்கு இயேசு கான்ஸ்டான்டினுக்கு துனை செய்திருக்கிறார் என்றே முடிவு எடுக்க தோன்றுகிறது.கான்ஸ்டான்டினைப் பொறுத்தவரையில் "இயேசு அவனுடைய போருக்கு உதவியிருக்கிறார். இதிலிருந்து கிறித்தவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.கிறித்தவத்தை கான்ஸ்டான்டின் போற்ற ஆரம்பித்தான்.

இந்நேரத்தில் கிழக்குப்பகுதியின் மன்னனாக இருந்தவன் லிசினியஸ்(Licinius) ஆவான்.இவன் மன்னன் கான்ஸ்டான்டினுக்கு நெருக்கமாக இருந்தான், மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. கிழக்கு பகுதியிலும் இனிமேல் கிறித்தவர்களுக்கு மற்ற மதத்தினருக்குரிய இனையான உரிமைகள் உண்டு, அவர்கள் துன்புறுத்தப் படமாட்டார்கள் என்று கூட்டாக இருவரும் சேர்ந்து அறிக்கை செய்தார்கள்.அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தனர்.ஆனாலும் கிழக்குப்பகுதியில் துன்புறுத்தல் தொடர்ந்தது.கான்ஸ்டான்டின் தன்னுடைய எதிரி மன்னர்களையெல்லாம் தோற்கடித்தான்.தொடர் வெற்றிகள் அவனை மேலும் கிறித்தவத்தை நோக்கி தள்ளியது.கிழக்குப்பகுதியில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கான்ஸ்டான்டின் தன்னுடைய படைவீரர்களிடம்,போரின் போது "கிறித்தவர்களின் கடவுளிடத்தில் விண்ணப்பம் செய்யுமாறு" கட்டளையிட்டிருந்தான்.இந்த அளவிற்கு தற்போது கான்ஸ்டான்டின் கிறித்தவத்தை நோக்கி வந்துவிட்டான்.

இச்சூழ்நிலையில் கிழக்குப்பகுதியின் மன்னன் லிசினியஸ் (Licinius)க்கும் கான்ஸ்டான்டினுக்கும் இடையே பகைமை ஆரம்பித்தது.அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு மோசமாகியது.முடிவில் இருவரும் போரிட்டனர்.கி.பி 324-ல் இருவருக்கும் இடையே நடந்த போரில் லிசினியஸ்(Licinius) தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.கிறித்தவத்திற்கு எதிராக இருந்த கடைசி மன்னனும் தோற்கடிக்கப்பட்டான்.இப்பொழுது கிறித்தவம் நிம்மதி பெருமூச்சு விட்டது.கிறித்தவம் தற்போது பேரரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு மதமாக மாறியது.மன்னரின் அருளும் அதற்கு இருந்தது.கிழக்குப்பகுதியின் கான்ஸடான்டிநோபிளும்(Constantinople) கான்ஸ்டான்டின் கைக்கு வந்து விட்டது.அடுத்து வந்த ஒன்றரை நூற்றாண்டுகளும் கிறித்தவத்திற்கு வேறு சிக்கலை கொண்டு வந்தது.மன்னரின் ஆதரவு கிறித்தவத்தின் எந்த பிரிவுக்கு என்ற சண்டை ஆரம்பித்தது.

கான்ஸ்டான்டின் இன்னும் ஒருபடி மேலே சென்று தினமும் தன்னுடைய அரசவையில் பிரசங்கம் செய்யும் அளவிற்கு வளர்ந்தான்.அவையில் இருப்போர் அவனுடைய செயலை நினைத்து குழம்பிப்போகும் அளவிற்கு தினமும் பிரசங்கம் செய்தான்.தன்னுடைய கலாச்சாரமான கதிரவ வழிபாடு,மற்றும் இன்ன பிற வழிபாடுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கிறித்தவத்திற்கும் கொடுத்தான்.கிறித்தவம் "சூரிய வழிபாட்டுக்கு இனையாக" கருதப்பட்டது.இரண்டுக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இவ்வளவு நாள் தடை செய்யப்பட ஓர் இயக்கம் இப்பொழுது அரசு ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது.பிஷப் யுசிபிஸ்(Eusibius of Caesarea) அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தில் இருந்து 50 புதிய திருமுறைகளை எழுத கட்டளையிட்டு அவற்றை கிறித்தவதிற்கு வழங்கினான்.அவைகளை தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 5000 பசுமாடுகளின் தோல்கள் தேவைப்பட்டிருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.அவைகளில் இரண்டு இன்னும் உள்ளது.அவைகள்,Codex Vaticanus  மற்றும் Codex Sinaiticus ஆகும்.தன்னுடைய அவையில் முக்கிய பொறுப்புகளுக்கு கிறித்தவர்களை தேர்ந்தெடுத்தான்.இறக்கும் முன்னர் திருமுழுக்கு(ஞன ஸ்நானம்) பெரும் அளவிற்கு சென்றான்.

தற்போது கிறித்தவர்களுக்கு தங்கள் மதத்தை பின்பற்ற அனுமதி கிடைத்தது மட்டுமன்றி அரசின் ஆதரவும் கிடைத்துவிட்டது.ஆனால் இப்பொழுது கிறித்தவம் அடுத்த கட்டத்திற்கு தயாராகிறது.அடுத்த பாகத்தில் அதை நாம் காண இருக்கிறோம்.

No comments:

Post a Comment

My Posts