Friday, January 17, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 6

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 6


பேரரசின் மன்னனாக ஜூலியன் வந்த பிறகு கிறித்தவம் தடை செய்ய பட்டது.இவ்வளவு காலம் அரசின் ஆதரவோடு இயங்கி வந்த கிறித்தவம் இப்பொழுது பெரும் சிக்கலை சந்தித்தது.மன்னன் ஜூலியனை "வழிவிலகிய ஜூலியன்(Julian The Apostate)" என்று கிறித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.இதில் ஆச்சரியப்பட வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.இந்த ஜூலியன் இளவயதில் கிறித்தவனாகவே வளர்க்கப்பட்டான். கிறித்தவத்திற்குள் இவனை வழிநடத்தியவர் நிகாமெடியாவின் பிஷப்(Bishop of Nicomedia)  யூசிபியஸ்(Eusibius) ஆவார்.ஆனால் ஓரளவுக்கு விபரம் தெரிந்த பிறகு ஜூலியன் கிறித்தவத்தின் "நகைப்புக்குரிய கருத்துக்களை(Absurd Claims)" அவன் வெறுத்தான். தானாகவே பிளாடோவின்(Plato)-வின் கருத்துக்களை தேடிப்பிடித்து படித்து அறிந்து கொண்டான்.அக்கருத்துக்கள் மீது காதல் கொண்டான்.அதே சமயத்தில் "கதிரவ வழிபாட்டையும்(Sun Worship)" ஆதரித்தான்.பண்டைய வழிபாட்டு முறைகளை மீட்டுக் கொண்டுவரவும் ஆதரவு வழங்கினான்.அவன் தன்னுடைய தகுதிக்கு மீறிய அளவுக்கு "தத்துவ அறிஞனாக" இருந்தான்.அவனுடைய இச்செய்கைக்கு ஆதரவும் இருந்தது.

கிறித்தவ சபைகள் சண்டையிடுவதை இவன் வேடிக்கை மட்டும் பார்த்தான்.இவனுக்கு முந்தைய மன்னர்களை போன்ற அல்லாமல் இவன் அவற்றில் தலையிடவில்லை.நடுவர் என்று எவரும் இல்லாமல் சண்டையிட்டுக் கொள்ள அனுமதித்தான்.இதன் நோக்கம் அவர்களாகவே தங்களுடைய அழிவை தேடிக் கொள்வது ஆகும்.இதிலிருந்து ஒரு செய்தியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.கிறித்தவம் எந்த அளவிற்கு தங்களுடைய பிரச்சினைகளுக்காக மன்னர்களை நம்பியிருந்தது என்பதுதான்.எந்த அளவிற்கு மன்னர்களும் சபைகளுக்குள் முடிவெடுக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர் என்பதையும் கூட நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இப்பொழுது மன்னன் ஜூலியன் கிறித்தவர்களை வெறுத்தது மட்டுமன்றி "தீர்ப்பதற்கு யாருமின்றி அவர்களாகவே சண்டையிட்டு அழிந்து கொள்ள" அனுமதித்தான்.இது ஒரு தந்திரமான செயல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

இவன் கிறித்தவர்களுக்கு எதிராக கலகங்களையும் அனுமதித்தான்.அப்படி ஒன்றில் அலெக்ஸாண்ட்ரியாவின் புது பிஷப் ஜார்ஜ்(George) கொல்லப்பட்டார்.கொல்லப்பட்ட இவருக்கும் முன்னிருந்த பிஷப் அதனாசியசுக்கும்(Athanasius) இடையே வெறுப்பு இருந்தது.உண்மையில் அதனாசியஸின் ஆதரவாளர்களே இவரைக் கொன்றனர் என்றும் கூறுகின்றனர்.எது உண்மை என்று தெரியவில்லை.இந்நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது.

கி.பி.363-ல் நடைபெற்ற ஒரு போரில் மன்னன் ஜூலியன் கொல்லப்பட்டான்.இவனுடைய இறப்பு கிறித்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது,குறிப்பாக அதனாசியசுக்கு.அதனாசியஸ் இச்சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.ஏற்கனவே தன்னுடைய எதிரி ஜார்ஜ்(George) கொல்லப்பட்டதால் இப்பொழுது தனக்கு போட்டியாளர்கள் இல்லை என்ற நிலை இவருக்கு பெரும் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.ஹோமோன்ஸ்-ம் (Homoeans) இப்பொழுது சிதறிப்போயிருந்தனர்.குழப்பங்களும் நீடித்தது.

இப்பொழுதும் கூட அமைதியை ஏற்படுத்துவதற்கென்று ஒரு பிரிவு தோன்றியது.இவர்களை "Semi-Arians" என்று அழைத்தனர். "Homoousios" என்ற வார்த்தையில் இவர்கள்(Semi-Arians) ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தினார்.இவர்கள் பயன்படுத்திய வார்த்தை "Homoiousios" ஆகும்.ஒரு எழுத்து மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறது.ஆனால் பொருள் மாறிவிட்டது.இவர்கள் கூறியது என்னவென்றால்,"The Son and The Father are not same in essence but similer in essence",ஆகும்.தமிழில் இதனை பின்வருமாறு கூறலாம்,
தந்தையும் மகனும் ஒரே பொருளால் (Same) ஆக்கப்பட்டவர்கள் அல்ல, பதிலாக "ஒரே மாதிரியான(Smiler)" பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு எழுத்துதான் மாறியுள்ளது,ஆனால் பொருள் மாறிவிட்டது.இரண்டு பிரிவுகளுக்கும் ஏற்புடையதாக இருக்குமாறு இந்த வார்த்தை இருந்தது.ஆனாலும் ஒரு முழு உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.அதனாசியஸ் இன்னும் "Homoousios"-ஐ விட்டுக் கொடுக்கவில்லை.சிறிது மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் முழு மாற்றம் ஏற்படவில்லை.

ஏரியன்ஸ்(Arians)-ன் தோல்வி கி.பி.378-ல் நிகழ்ந்தது.அது வரையில் சபைகளுக்கிடையே கருத்து மோதல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. கி.பி.381-ல் மன்னன் Theodosius-I (தியோடோஸியஸ்-I) பிஷப்புக்களின் கூட்டத்தை(Council of Bishops) கான்ஸ்டான்டிநோபிளில் கூட்டினான்.தற்போதைய மன்னன் தியோடோஸியஸ்-I ஏரியன்ஸ்-ஐ வெறுத்தான்.கான்ஸ்டான்டிநோபிளில் வைத்து பிஷப்புக்களின் கூட்டம் நடைபெறுவது இதுதான் முதல் முறை.இதே வருடத்தில் உரோமுக்கு பக்கத்தில் இருக்கும் அக்கிலா(Aaquileia) என்ற இடத்தில் மேற்கு பகுதியின் பிஷப்புக்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.இங்கு "Homoeans" கருத்துக்கள் முற்றிலும் தடை செய்யப் பட்டன.

தற்பொழுது கான்ஸ்டான்டிநோபிளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் நடைபெறுகிறது. கான்ஸ்டான்டிநோபிள் எங்கிருக்கிறது என்று காட்டுவதற்காகவே பக்கத்தில் உள்ள படம்.உரோம பேரரசின் மேற்கு பகுதி மற்றும் கிழக்குப் பகுதிகள் மட்டுமல்ல விளிம்புகளில் இருந்த அர்மேனியன்ஸ்(Aarmenians),சிரியன்ஸ் (Syrians) போன்றோரும் இக்கூட்டத்தின் முடிவுகளை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.உரோம பேரரசின் சபைகளில் அப்பம் பிடிக்கப்படும் நிகழ்வின் பொது இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையே வசனித்து அனைவரும் கூறுவர்.இக்கூட்டத்தின் முடிவுகளையே இன்று வரையில் "நைசீன் முடிவுகள்(Creed of Nicene)" என்று தவறுதலாக வழங்கப்பட்டு வருகிறது.கான்ஸ்டான்டிநோபிள் முடிவுகள் கூறுவது என்னவென்றால்,
திரித்துவத்தில்(Trinity),கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்து  என்பவர் "உருவாக்கப்பட்டவர்(Created)" அல்ல,அவர் கடவுளுக்கு இனையானவர்.
மற்ற கருத்துக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. கான்ஸ்டான்டிநோபிளில் எடுக்கப்பட்ட முடிவுகளே கிறித்தவத்தை இனிமேல் ஆளும் கருத்து ஆகும். உரோம பேரரசின் முடிவாகவே இக்கூட்டத்தின் முடிவுகள் அமைந்தது.திரித்துவம் என்ற ஒன்றுக்குள் மூவர் உள்ளனர்.அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இனையானவர்கள்,யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல,என்பதே முடிவான கருத்து.

ஒருவழியாக சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன.திரித்துவம் பற்றிய குழப்பங்கள் தற்காலிகமாக தீர்ந்தன.ஆனால் கேள்விகள் பல எழுவதை யாராலும் தடுக்க முடியவில்லை.இந்த நைசீன் முடிவுகளை பக்கத்தில் உள்ள படத்தில் பார்க்கலாம்.தங்களுடைய கருத்துக்கள் ஏற்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில் ஏரின்ஸ்(Arians) இருந்தாலும் இப்பொழுது அவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.இயேசுவும், தந்தையும் ஒருவருக்கொருவர் இனையானவர்கள் என்று ஒப்புக்கொண்டவர்களில் சிலர் வேறு ஒரு புது குழப்பத்திற்கு வழிவகுத்தனர்.இயேசுவும் தந்தையும் இணையானவர்கள் ஆனால் தூய ஆவி இவர்களுக்கு இனையானவர்  அல்ல, என்று வாதிட்ட ஒரு சிலர் தோன்றியிருந்தனர்.அவர்களையும் கூட கான்ஸ்டான்டிநோபிளில் நடைபெற்ற கூட்டம் தடை செய்தது.தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான வேறுபாடுகளை களைந்த இக்கூட்டம் தங்கள் விவாதங்களை தூய ஆவிக்கு விரிவுபடுத்த வில்லை.அதைப்பற்றி அக்கூட்டம் விவாதிக்கவே இல்லை.


இரா.இருதயராஜ்.

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 5

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 5


இவ்வாறு "மகனான" இயேசுவை கடவுளுக்கு இனையாக்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது.இதை எதிர்த்த ஏரிஸ்(Arius) ஏறத்தாழ கிறித்தவத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். இவை அனைத்தும் நைசியா(Nicaea) நகரத்தில் வைத்து தீர்க்கப்பட்டன. "தந்தையாகிய" கடவுள் எவற்றால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அவற்றாலேயே மகனாகிய இயேசுவும் ஆக்கப்பட்டிருக்கிறார் என்று ஒருவழியாக முடிவெடுக்கப்பட்டாயிற்று.எனவே மகனும் தந்தையும் இனையானவர்கள்தான்.ஒருவர் மற்றவருக்கு உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல.முடிவாக இயேசுவுக்கு கடவுள் தன்மை உண்டு என தீர்க்கப்பட்டது.

ஒரு மத ஆசிரியராக இருந்த ஏரிஸ் சுயமான,சிந்தித்து முடிவெடுக்கும் போக்கை கொண்டிருந்தார்.ஆனால் இப்பொழுதோ பிஷப்புக்கள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்திருந்தனர்.அவர்களை எதிர்த்து செயல் பட முடியாத சூழல் உருவாகியிருந்தது.ஒரு அரசுக்கு இனையான மற்றொரு அரசு போல் சபைகள் செயல்பட ஆரம்பித்தன.பிஷப்புக்கள் மன்னனைப் போல் செயல் பட்டனர்.அதிகாரம் அவர்களிடத்தில் குவிந்தது.

நைசியா கூட்டத்திற்கு பின் "Homoousios(ஒன்று போல்,ஒரே பொருளால் ஆனது ,...)" என்ற வார்த்தை கவனம் பெற்றது.இது கிரேக்க வார்த்தை ஆகும்.மகனும் தந்தையும் ஒருவருக்கொருவர் இனையானவர்கள் என்பதற்கும், இருவரும் பொதுவான ஒன்றையே கொண்டுள்ளனர் என்றும் பொருள் தரும்.இதைக் குறிப்பதற்குத்தான் Homoousios என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.ஏரிஸ்-ஐ எதிர்ப்பதற்காக அனைத்து பிஷப்புக்களும் இனைந்து இவ்வார்த்தை கூறும் பொருளை ஏற்றுக் கொண்டனர்.ஆனால் இவ்வார்த்தையில் ஒரு ஆபத்து மறைந்திருந்ததை பின்னர் கண்டுபிடித்தனர்.இதற்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது.திருமறையில்(The Bible) இவ்வார்த்தை கிடையாது என்பதையே முதலில் எவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் இவ்வார்த்தை ஆரம்ப கால கிறித்தவர்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாகும்.எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள,"மணிக்கேன்ஸ்(Manichaeans)" என்ற ஒரு அமைப்பை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.கி.பி.277-களில்  இந்த அமைப்பு கிறித்தவத்திற்கு கடும் போட்டியாக இருந்தது.கிறித்தவம் எப்படி பரவியது அவ்வாறு இந்த அமைப்பும் பரவியது.இதை தோற்றுவித்தவர் "மணி(Mani)" என்பவர் ஆவார்.இவர் ஈரானை சேர்ந்தவர்.

கிறித்தவர்களால் பெரிதும் போற்றப்படும் அகஸ்டின்(Augustine) இந்த அமைப்பில் 10 வருடங்கள் இருந்துள்ளார் என்பது கவனிக்க வேண்டிய தகவல் ஆகும்.இயேசுவின் "இயல்பை(Nature ) பற்றி இந்த மணிக்கேன்ஸ் குறிப்பிடும் பொழுது பயன்படுத்திய வார்த்தைதான் இந்த "Homoousios".அக்கால கட்டத்தில் கிறித்தவத்திற்கும் மணிக்கேன்ஸ்க்கும் இடையே கடும் விரோதம் நிலவியது.இப்பொழுது ஏரிஸ் இதனை சுட்டிக்காட்டினார்."எந்த மணிக்கேன்ஸ்-ஐ  வெறுத்தீர்களோ அந்த மணிக்கேன்ஸ்-டன் தொடர்புடைய வார்த்தையைத்தானே இப்பொழுது பயன்படுத்தி இருக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.இக்கேள்வி தீயாய் பரவியது.நைசியாவில் இவ்வார்த்தையைக் கொண்டு எடுத்த முடிவு பெரும் குழப்பத்தை விளைவித்தது.அடுத்து வந்த 50 ஆண்டுகள் சபைகளுக்கு பெரும் தலைவலியை இவ்வார்த்தை உண்டாக்கியது.முடிவாக இவ்வார்த்தையை பிஷப்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க ஆரம்பித்தனர்.மறுபடியும் சபைகள் சண்டையிட்டு கொள்ள ஆரம்பித்தன.

நைசியாவில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக காயம்பட்டிருந்த,எரிஸுக்கு ஆதரவாக இருந்த நிகாமிடிசின் பிஷப் யூசிபிஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மன்னன் கான்ஸ்டான்டினுக்கு இதைப்பற்றிய தகவல்களை கொடுக்க ஆரம்பித்தனர்.ஆரம்பத்தில் இவர் மீது வெறுப்பு கொண்டிருந்த மன்னன் பின்னர் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க ஆரம்பித்தான்.அதற்கும் காரணம் இருந்தது.அந்தியோகியா(Antioch ) சபையின் பிஷப் யூஸ்தாதிஸ்(Eustathius) என்பவருடைய ஒழுங்கீனங்களை வெளிப்படுத்தியத்தின் காரணமாக  மன்னன் நிகாமெடியாவின் பிஷப்புக்கு செவிகொடுக்க ஆரம்பித்தான்.இந்த உஸ்தாதிஸ்(Eustathius) நைசியாவின் ஓட்டெடுப்பில் ஏரிஸ் தோற்க முக்கிய காரணமாக அமைந்தவர் ஆவார்.மன்னரின் தற்போதைய ஆதரவு நிலையை  பயன்படுத்தி தன்னுடைய எதிரிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.நிறைய எதிரிகளையும் உருவாக்கிக் கொண்டார்.இதில் முக்கியமானவர் அலெக்ஸாண்ட்ரியா சபையின் பிஷப் அதனாசியஸ்(Athanasius) ஆவார்.நைசியாவில் எடுக்கப்பட்ட முடிவுகளை காப்பாற்ற இவர் தீவிரமாக இருந்தார்.ஆனால் "Homoousios" வார்த்தையை மட்டும் கவனமாக தவிர்த்தார்.ஏரிஸ்-ஐ கடைபிடித்தவர்களை "Arians" என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். ஒரு கட்டத்தில் தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் "arians " என்றே அழைத்தார்.

அதனாசியஸ்-ஐ எதிர்த்தவர்கள் இப்பொழுது ஏரியன்ஸ்( Arians ) பட்டத்தை பெருமையுடன் ஏற்றுக்கொண்டனர்.இந்த ஏரியன்ஸ் ஒரு படி மேலே சென்று "இயேசுவும்(மகனும்),தந்தையும் ஒன்றுபோலானவர்கள் கிடையாது (Unlike),இருவரும் வெவ்வேறானவர்கள்" என்றனர்.இதனை கிரேக்க மொழியில் "Anomoeans" என்றும் லத்தீன் மொழியில் "Dissimilarians" என்றும் அழைத்தனர்.அதாவது தந்தையும் மகனும் "அனோமோன்ஸ் (Anomoeans)".

இந்நிலையில் சண்டையிடும் சபைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு குழு தோன்றியது.இவர்கள் ஒரு குறிப்பிட்ட முடிவை எடுத்தனர்.இரு குழுக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர்.இவர்கள் "Homoeans (ஹோமோன்ஸ்)" என்று அழைக்கப்பட்டனர்.இவ்வாறு அழைக்கப்படுவதற்கு இவர்களின் நிலைப்பாடே  காரணம்.சண்டைக்கு காரணமே "தந்தை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அதனாலேயே மகனும் ஆக்கப்பட்டிருக்கிறார்,எனவே தந்தையும் மகனும் இனையானவர்கள்" என்ற கருத்துதான்.இதற்கு இடையில் இவர்கள் நின்று கொண்டார்கள்.வார்த்தைகளை சற்று மாற்றி "மகன் தந்தையை போன்றே இருக்கிறார்,அதாவது "The Son is Like The Father" என்று மட்டும் கூறினார்கள்.Homoeans என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான Homoios என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.இருவரும் ஒரே பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூற வில்லை.அதாவது இருவரும் "இனையானவர்கள்" என்று கூறுவதற்கு பதிலாக "மகன் தந்தையைப் போலானவர்" என்று மட்டும் கூறினார்கள்.


இந்த நிலைமையில் மன்னன் கான்ஸ்டாண்டின் இறந்து போன பிறகு உரோம பேரரசு மறுபடியும் உள்நாட்டு குழப்பங்களால் பிரிந்தது.மன்னன் கான்ஸ்டேடியஸ் II (Constantius II) மறுபடியும் பேரரசை ஒன்றிணைத்தான்.பேரரசின் மன்னனாக இவனே இருந்தான். Homoeans (ஹோமோன்ஸ்) இவனுடைய ஆதரவைப் பெற்றனர்.பேரரசை ஒன்றிணைத்த பிறகு சபைகளை ஒன்றினைக்க முயற்சிகள் எடுத்தான்.தன் பேரரசின் மேற்குப்பகுதி (உரோம்) மற்றும் கிழக்குப்பகுதி (கான்ஸ்டான்டிநோபிள்) பிஷப்புகளை கூட்டினான்(Council of Bishops).Homoeans (ஹோமோன்ஸ்)-ன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு "அறிவுறுத்தினான்".இது நடந்தது கி.பி.359-ல்.நடந்த இடம் "Ariminum(அறிமினும்)" ஆகும்.ஆனால் இந்த அறிமினும் கூட்ட முடிவுகளும் சபைகளை ஒன்றிணைக்க முடியவில்லை.ஏரியன்ஸின்(Arians) கருத்துக்களையே "அறிமினும் கூட்டம்" ஆதரிப்பதாக கூறி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.பிஷப்புக்கள் மன்னனுக்கு பயந்து கையெழுத்திட்டாலும் "அறிவுறுத்தப்பட்ட ஹோமோன்ஸ்(Homoeans) கருத்துக்கள்" மனதளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மன்னன் கான்ஸ்டான்டியஸ்-II தனது நாற்பதுகளில் இறந்து விட்டான்.ஒருவேளை இம்மன்னன் இறந்து போயிருக்காவிட்டால் இன்றய கிறித்தவம் திரித்துவத்தை கடைபிடித்திருக்க வாய்ப்பில்லை.இவனுக்கு பிறகு இவனுடைய உறவினன் "ஜூலியன்(Julian)" பேரரசின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.அரசின் ஆதரவைப் பெற்றிருந்த கிறித்தவம் திடீரென ஒரு ஆபத்தை "ஜூலியன்" வடிவில் சந்தித்தது.கிறித்தவம் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.சபைகள் அதிர்ந்தன.


இரா.இருதயராஜ் 

Friday, January 10, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 4

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - -பாகம் 4

ஏன்சிரா(Ancyra)-வில் நடைபெற இருந்த பிஷப்புக்களின் ஆலோசனைக் கூட்டம் தடைபட்டவுடன் மன்னன் கான்ஸ்டான்டின் அடுத்த கூட்டத்தை கூட்ட முடிவு செய்கிறான். நைசியா(Nicaea) என்ற நகரம் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுகிறது.இந்நகரம் நிகாமெடியா(Nicomedia)வுக்கு பக்கத்திலேயே இருக்கிறது. தற்போதைய துருக்கியின் இஸ்னிக்(Iznik) நகரம்தான் இந்த நைசியா.நதிக்கரை ஓரம் அமைந்திருக்கும் இந்நகரம் மிகவும் அழகான ஒன்றாகும்.தற்போதும் கூட பழைய உரோம் ஆட்சியின் கோட்டைகள் உள்ளன. நிகாமெடியா நகரம் உரோம் ஆட்சியின் கிழக்குப்பகுதி (Administrative Headquarters)  தலைநகரமாக இருந்தது.ஆலோசனைக் கூட்டத்திற்கு வருபவர்கள் இந்நகரத்தின் அருமையான பருவநிலையை அனுபவிக்கலாம் என்று கான்ஸ்டான்டின் அறிவித்தான்.இம்முறை எதுவும் தவறாக நடந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தான்.நடக்க இருக்கும் கூட்டத்தில் தானும் பங்கெடுத்து விவாதங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்தான்.கிறித்தவத்தின் நீண்ட வரலாற்றில் இது முதல்முறையாக நடந்தது.எந்த பேரரசால் கிறித்தவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்களோ அப்பேரரசின் மன்னன் ஒருவன் தற்போது அவர்கள் தொடர்புடைய கூட்டத்தில் பங்கெடுப்பது என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும்.பேரரசின் ஆட்சி அதிகாரங்களில் கிறித்தவம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்பதற்கு அடையாளமே இது.மேலும் சிறிது சிறிதாக கிறித்தவம் ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டு பின்னர் கைவசப்படுத்தியதற்கு முதல் அடி இங்கேதான் எடுத்துவைக்கப்பட்டது.

கூட்டத்திற்கு தலைமை தங்கியதே கான்ஸ்டான்டின்தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.கிறித்தவம் பற்றிய கருத்துக்களில் கான்ஸ்டான்டினுக்கு ஆலோசகராக இருக்கும் ஸ்பானிய பிஷப் ஓசியஸ்(Hosius) அல்லது கோர்டோபாவின் ஓசியஸ்(Ossius of Cordova) ஒரு புதிய கருத்தை முன்மொழிந்தார்.கிறித்தவ நம்பிக்கையில்(Christian Creed) இது புத்தம் புதிய கருத்தாகும்.அனைவராலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டு கிறித்தவத்தின் "விதிமுறைகளில் ஒன்றாக(A Clause in Christian Creed)" மாற்றப்பட்டது.இவர் முன்மொழிந்த கருத்து "தந்தை எப்படி இருக்கிறாரோ அப்படியே மகனும் இருக்கிறார்".

இதை படிப்பவர்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக நாம் சில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.இவ்வார்த்தைகள் கடவுளுக்கு பொருந்தாது எனினும் புரிதலுக்காக பயன்படுத்தி உள்ளோம்.ஸ்பானிய பிஷப் ஓசியஸ்(Hosius) முன்மொழிந்த கருத்து என்னவென்றால் "தந்தை எதனால் ஆக்கப்பட்டிருக்கிறாரோ அதனாலேயே மகனும் ஆக்கப்பட்டிருக்கிறார்".ஆங்கிலத்தில்,"The Son was of One Substance with The Father" என்று கூறலாம்.இதன் பொருள்,"தந்தையும் மகனும் வெவ்வேறு ஆட்கள் அல்ல,இருவரும் சம அளவு அதிகாரங்கள் உடையவர்கள்,சம அளவு மதிக்கப்படவேண்டியவர்கள்" என்பதே ஆகும்.கிரேக்கத்தில் இதற்காக பயன்படுத்திய வார்த்தை "Homoousius" ஆகும்."Of One Substance" என்பதற்கு உரிய கிரேக்க வார்த்தை "Homoousius" ஆகும்.இருவரும்,அதாவது தந்தையும் மகனும் ஒரே விதமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆகும்.இது கிறித்தவத்திற்கு புதியது ஆகும்.கூட்டத்தின் முடிவில் "அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட" கருத்தாக இது அமைந்தது.மன்னன் கான்ஸ்டான்டின் இன்னும் ஒரு கிறித்தவனாக மாற வில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.கிறித்தவனாக இல்லாத நிலையில் கிறித்தவ கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினான்.

பேரரசின் மன்னரே கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்,அவரின் ஆலோசகர் கருத்து ஒன்றை முன் மொழிந்திருக்கிறார்,ஏற்றுக்கொள்ளாமல் யாரும் இருப்பார்களா?அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.இக்கூட்டத்தின் முடிவை இரு பிஷப்புக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பதியப்பட்டிருக்கிறது."தந்தையும் மகனும் ஒன்று" என்ற கருத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு,மன்னனின் ஆதரவோடு கிறித்தவத்திற்குள் இக்கருத்து இப்பொழுது நுழைந்திருக்கிறது.உரோம பேரரசின் அங்கீகாரமும் கிடைத்து விட்டது.ஆனால் பழைய ஏற்பாடு அல்லது புதிய ஏற்பாடு என்று இரண்டிலும் எங்கும் இக்கருத்து இல்லை.


இக்கூட்டத்தில் மேலும் பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன. பிஷப்புக்கள் மற்றும் பிஷப்புக்களின் கீழ் இருக்கும் போதகர்கள் வட்டிக்கு கடன் கொடுப்பது(Money Lendin),மதம் மாறிய சிறிது காலத்திற்குள் அவசரமாக பதவி உயர்வு கொடுப்பது(Hasty Promotions in Episcopy),முரண்பட்ட கருத்துக்களால் பிரிந்து சென்றவர்களை(Schismatics) மறுபடியும் இனைத்துக் கொள்வது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டன.தானாக முன்வந்து "ஆண்மையை நீக்கிக் கொண்டவர்களை" போதகர்களாக ஆக்குவது தடை செய்யப் பட்டது.

மன்னன் கான்ஸ்டான்டின் இக்கூட்டத்திற்காக காட்டிய அக்கறை பெரும் அளவில் பங்கேற்பாளர்களை கொண்டு வந்தது.அக்கறை என்பதைவிட,தன் பேரரசின் ஒற்றுமைக்கு "சபை சண்டைகள்" இடறலாக இருப்பதை கண்டு அதை ஒழிக்க முடிவு செய்ததின் வெளிப்பாடே மன்னன் காட்டிய அக்கறை.பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர மன்னன் "தீவிரம்" காட்டினான்.மொத்தம் 318 பேர் கந்து கொண்டனர்.பேரரசின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர்.இதற்கு முன்னர் இவ்வளவு பேர் ஆலோசனைக்கு கூட்டத்திற்கு கூடியதில்லை.

கிறித்தவ வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆகும்.இது "பொதுக் கூட்டம்"(General Council) என்று அழைக்கப்படுவதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தது.ஆனால் 1200 வருடங்களுக்கு பின் இந்த நைசியாவில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவாதிக்கப்பட்டன.அதைப்பற்றி வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்.இக்கூட்டத்திற்கு பின்னர் ஏரிஸ்(Arius) பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.மன்னன் கான்ஸ்டான்டினால் மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தும் இவர் தனிமையில் இருந்தார்.கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தில் வயிற்றுப்போக்கினால்  கழிவறையில் வைத்து இறந்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

திரித்துவத்திற்கான அடிக்கல் இங்குதான் நாட்டப்பட்டது.பிரச்சினைகளும் குழப்பங்களும்,அதிகார போட்டிகளும் இக்கூட்டத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை.இதைப்பற்றி அடுத்ததாக கட்டுரையில் பார்க்கலாம்.

Ref:http://www.documentacatholicaomnia.eu/03d/0325-1965,_Concilia_Oecumenica,_Documenta_Omnia,_EN.pdf

இரா.இருதயராஜ்.

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 3

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 3

உரோம்(Rome) மற்றும் அர்லேஸ்(Arles) போன்ற நகரங்களில் நடைபெற்ற பிஷப்புக்களின் ஆலோசனை கூட்டமானது பெரும் வெற்றி பெற்று ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் வேறு ஒரு வகையில் கிறித்தவத்திற்கு உதவி செய்தது.சபைகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கென்று ஒரு வழிமுறையை "பிஷப்புக்களின் ஆலோசனைக் கூட்டம்(Council of Bishops)" தந்தது.அடுத்து வந்த நூற்றாண்டுகளில் இம்முறை ஆழமாக வேரூன்றியது.வலிமை வாய்ந்த உரோம படைகளை வைத்திருக்கும் மன்னனிடம் இருந்து "கடவுளின் படைகளுக்கு" கிடைத்த ஒரு பெரும் சலுகையாக இது பார்க்கப்பட்டது.நாளடைவில் இது நன்றாக வேரூன்றி விட்டது.பின்வந்த காலங்களில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மன்னரை கலந்தாலோசிக்காமலேயே (Independent Authority) முடிவுகள் எடுப்பதற்கு பிஷப்புக்களுக்கு தனி அதிகாரம் இருக்கிறது என்ற பார்வைக்கு,கத்தோலிக்கர்கள் மத்தியிலும் பிற கிறித்தவ அமைப்புக்கள் மத்தியிலும்,இது வித்திட்டது.இது புது அதிகார சிக்கல்களையும் உருவாக்கியது.பின்வந்த ஆட்சியாளர்களுக்கும் பிஷப்புக்களுக்கும் இடையே அதிகார குழப்பங்களையும் இம்முறை உருவாக்கியது.

இப்பொழுது கத்தோலிக்க சபைகள் ஓசையின்றி "பேரரசினுடைய சபைகளாக" மாறியது.கத்தோலிக்க சபைகள் ஆட்சி அதிகாரங்களுக்குள் காலடி எடுத்து வைத்தது இம்முறையால்தான்.மன்னனால் வழங்கப்பட்ட சலுகைகள் கத்தோலிக்க சபைகளை அரசின் ஆட்சி அதிகாரங்களில் மெதுவாக தலையிட செய்தது.உரோமின் படைகள் எப்படி மன்னருக்கு கட்டுப்பட்டு இருந்தனவோ அவ்வாறே சபைகளும் மன்னருடன் தொடர்பில் இருந்தன.படைகளின் முன்னேற்றம் எவ்வாறு மன்னரை சார்ந்து இருந்ததோ அவ்வாறே சபைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் மன்னரை சார்ந்து இருந்தது.பேரரசுக்குள் அடங்கிய அனைத்து பகுதிகளும் உரோம் ஆட்சியை விரும்புகிறது என்று எவ்வாறு கூற இயலாதோ அது போன்று சபைகளின் இப்படிப்பட்ட தொடர்பையும் பலர் விரும்பாமலும் இருந்தனர்.ஆட்சியை யாரெல்லாம் விரும்ப வில்லையோ அவர்கள் சபைகளின் இத்தகைய தொடர்பையும் விரும்பவில்லை.

எகிப்தில் இருந்த அலெக்சாண்ட்ரியாவில் (Alexandria) சபை ஒன்று இருந்தது என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.அது ஒரு புகழ்வாய்ந்த சபையாகவும் இருந்தது.இப்பொழுது ஒரு புது குழப்பத்தை இச்சபை உருவாக்கியது.கிறிஸ்து(Christ) யார் என்பது பற்றிய குழப்பம் நீண்ட காலமாக இருந்து வந்தது.அதாவது இயேசு கிறிஸ்துவின் இயல்பு(Nature),அவருடைய முக்கியத்துவம்(Importance),கடவுளாகிய தந்தை(The Father) மற்றும் அவருடைய மகன்(The Son) என்பவைகளைப் பற்றியது.இதை ஆரம்பித்தது அலெக்சாண்ட்ரியா சபையாகும்.இது மிக நீண்ட கால விவாதமாக இருந்து வந்தது.இக்குழப்பத்தை தீர்ப்பதற்காக கான்ஸ்டான்டின் முடிவு செய்தான்.அடுத்த ஆலோசனைக்கு கூட்டத்தைக் கூட்டினான்.

மிக சுருக்கமாக நடைபெற்று ஒரு முடிவு எட்டப்பட்டது என்ற பெருமை இக்கூட்டத்திற்கும் கிடைக்கவில்லை.ஆனால் முடிவு ஒன்றை நோக்கி பயணித்த கூட்டம் என்று கூறலாம்.கிறிஸ்து பற்றிய நீண்டகால விவாதத்திற்கு ஒரு முடிவு எட்டப்பட்ட கூட்டம் என்றும் இதைக் கூறலாம்.

ஏரிஸ்(Arius) என்ற புகழ்பெற்ற மற்றும் திறமைவாய்ந்த போதகர் ஒருவர் இருந்தார்.கிறித்தவ நம்பிக்கை என்ன என்பது பற்றி மற்றவர்களுக்கு விளக்குவதற்காக ஒரு அறிவார்ந்த அறிக்கையை தயாரிக்கும்  முனைப்பில் இவர் இருந்தார்.இதற்காக இவர் கடவுளைப்பற்றிய "பிளாட்டோவின் தத்துவங்களுடன்" போராட வேண்டியிருந்தது.கடவுள் என்பவர் தொடக்கமும் முடிவும் இல்லாதவர்(Eternal ),அவரை அறிந்து கொள்வது கடினம் (Unknowable) என்பது பிளாட்டோவின் தத்துவம் ஆகும்.இக்கருத்துப்படி பார்த்தோமானால் இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல,காரணம் நற்செய்தி புத்தகங்கள் மூலமாக அவருக்கு பிறப்பு, இறப்பு மற்றும் அவருடைய நடவடிக்கைகள் போன்றவற்றை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம்.இதன் பொருள் என்னவென்றால்,கடவுள் ஒருவராக மட்டும் இருப்பதால்(God is One) இயேசு கிறிஸ்து வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில்தான்(கடவுள் என்ற பாத்திரம் தவிர) வரவேண்டி இருக்கிறது,அவர் கடவுள் அல்ல,தந்தை என்ற பாத்திரத்தில் இயேசு வர முடியாது.இந்த உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அவர் படைக்கப் பட்டிருந்தாலும்(Created) அல்லது பிறப்பிக்கப் பட்டிருந்தாலும்(Begotten) கூட ,அவர் "தந்தை (The Father)" என்ற பாத்திரத்தில் வர முடியாது.மேலும் ஏரிஸ் கூறுகிறார்,தந்தை என்பவர் "பிரிக்கப்பட முடியாதவர்(Indivisible)  என்ற காரணத்தினால் தன்னிலிருந்து இயேசுவை அவர் படைத்திருக்க முடியாது."மகன்(The Son)" என்பவர் இந்த உலகம் மற்றும் இதிலுள்ள அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்னரே உருவாக்கப் பட்டார்(Created Before all Things) என்றால் இயேசு கிறிஸ்து என்பவர் "ஒன்றுமில்லாமையிலிருந்து" உருவாக்கப்பட்டார்(Created out of Nothing) என்றே நாம் முடிவு செய்ய வேண்டியுள்ளது,அதாவது அவரும் உருவாக்கப்பட்டார்(Created) என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது.இக்கருத்துக்காக ஏரிஸ் பின்வருமாறு கேலி செய்யப்பட்டார்."There was When he was not",அதாவது அவர் இல்லாத போது அவர் இருந்தார்.இதற்காக ஏரிஸ் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.

முடிவாக ஏரிஸ் கருத்துப்படி கிறிஸ்து என்பவர் "தந்தைக்கு கீழானவர்(Subordinate or Inferior) அல்லது அவரை விட தாழ்ந்தவர் மற்றும் வெறுமையிலிருந்து படைக்கப் பட்டவர்(Created out of Nothing)" என்பதே ஆகும்.ஓரிகன்(Origen) மற்றும் பல பழங்கால எழுத்தாளர்கள் இதையேதான் கூறுவதற்கு விழைந்தனர்.பலவகைகளில் ஓரிகன்(Origen) என்பவரின் வாரிசு என்பதாகவே  ஏரிஸ்(Arius) பார்க்கப்பட வேண்டிருக்கிறார்.மேலும் அலெக்சாண்ட்ரியா நகரத்தின் தத்துவ அறிஞர்கள் பலர் எவ்வாறு பார்க்கப்பட்டனரோ அவ்வாறே இவரும் பார்க்கப்பட வேண்டியிருக்கிறார்.இந்நகரம் தத்துவ அறிஞர்களுக்கு பெயர்போனது ஆகும்.

ஏரிஸ் பற்றிய பொதுவான கருத்து என்னவாக இருந்ததென்றால்,அவர் தத்துவத்தின்(Logic) பால் மட்டும் ஈர்ப்பு கொண்டவர் அல்ல.அவர் கிறித்தவர்களுக்கு தங்களின் மீட்பரை ஒரு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்த விரும்பினார்.அதாவது இயேசு என்பவர் தங்களைப் போன்ற ஒருவர்தான்,தங்களைப் போலவே பாடுகள் பட்டார்,அப்பாடுகள் மூலம் அவர் மேன்மையை அடைந்தார் என்று மக்களுக்கு கூற விரும்பினார்.எரிஸின் கிறிஸ்து என்பவர் படைக்கப் பட்டவைகளில் ஒருவராகவே இருந்தார், கடவுளின் ரூபம்(Image of God)  என்பது போன்ற கருத்துக்களை அவர் ஏற்க வில்லை.


தன்னுடைய கருத்துக்களை சிறு பாடல்களாக கற்றுக் கொடுத்தார். இப்பாடல்கள் மூலம் அலெக்சாண்ட்ரியா நகரத்தின் சாதாரண மக்களிடையே பிரபலமும் அடைந்திருந்தார். இவருடைய நோக்கம் என்னவாக இருப்பினும் கி.பி.318-ல் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார். இவருடைய பிஷப்பாகிய அலெக்சாண்டர் கூட கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.எகிப்தின் பிஷப்புக்களால்(Local Council  of Bishops - Synod) ஏரிஸ் கண்டனம் செய்யப்பட்டார்.இதன் காரணமாக ஏரிஸ் தூரத்தில் இருந்த கிறித்தவ சபைகளை தொடர்பு கொண்டார்.குறிப்பாக நிகொமெடியா(Nicomedia)-வின் பிஷப் யூசிபியஸ்(Eusibius)-ன் [வரலாற்று ஆசிரியர் யூசிபியஸ்(Eusibius)-டன் இவரை குழப்பிக் கொள்ளக் கூடாது]   ஆதரவைப் பெற்றார்.இந்த நிகாமெடியாவின் பிஷப் மிகவும் தந்திரம் மற்றும் அரசியல் புத்திக்கூர்மை வாய்ந்தவர்.நிகாமெடியா நகரமானது கான்ஸ்டான்டிநோபிள் என்ற பெருமைவாய்ந்த நகரம் கட்டப்படுவதற்கு முன்னர் உரோமின்(Rome) கிழக்குப்பகுதி தலைநகராக இருந்தது.எரிஸ்க்கு ஆதரவு திரட்டும் அளவுக்கு பலம் வாய்ந்த அரசியல் பின்புலத்தை நிகாமெடியாவின் பிஷப் பெற்றிருந்தார்.அவ்வாறு திரட்டவும் செய்தார்.இப்பொழுது இப்பிரச்சினை மத்தியத்தரைக்கடல் பகுதியின் கிழக்கப்பகுதி முழுவதும் தீயாய் பரவியது.

தனக்கிருந்த ஒரே எதிரியாகிய கிழக்குப்பகுதியின் மன்னன்  லிஸினிஸ்-ஐ(Licinius) தீர்த்துக்கட்டிய பின் தன் அரசை நிலைநிறுத்தும் பணியில் இருந்த மன்னன் கான்ஸ்டான்டினுக்கு இப்பிரச்சினை ஒரு தலைவலியாக இருந்தது.எனவே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் கிறித்தவ அமைப்புகளை ஒன்றினைக்க கான்ஸ்டான்டின் விரும்பினான்.பிஷப்புக்களின் ஆலோசனைக்கு கூட்டத்தை கூட்ட முடிவு செய்தான்(Council of Bishops).பத்து வருடங்களுக்கு முன்னர் ஆர்லெஸ்(Arles) நகரத்தில் தான் கடைபிடித்த அதே முறையை இப்பொழுதும் கையாள விரும்பினான்.முதலாவதாக கி.பி.324-ல் ஏன்சிரா (Ancyra) என்ற நகரத்தில் முடிவு செய்த கூட்டமானது ஏரிஸ்சின் எதிர்ப்பாளர்களால் முறியடிக்கப்பட்டது.எவ்வாறு மன்னரின் கூட்டம் முறியடிக்கப்படும்?

கூட்டம் முடிவு செய்யப்பட காலத்தில் அந்தியோக்(Antioch) நகரத்தினுடைய சபையின் பிஷப் இறந்து விட்டார்.இதனை ஒரு வாய்ப்பாக ஏரிஸின் எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.அந்தியோக் சபை பிஷப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும்,தங்களுடைய ஆதரவாளர்களில் ஒருவரையே புதிய பிஷப்பாக தேர்ந்தெடுக்கவும்,ஏரிஸின் கருத்துக்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர்.மேலும்  "கிறிஸ்துவைப் பற்றி" தாங்கள் கொண்டிருக்கும் கருத்தே மிக சரியானது என்று அங்கு வைத்து அறிவிப்பு வெளியிட்டனர்.பின் வரும் காலங்களில் இதே போன்ற பல அறிவிப்புக்களை வெளியிடுவதற்கு இந்த முதல் அறிவிப்பே காரணமாக இருந்தது. எனவே ஏன்சிரா(Ancyra) நகரத்தில் கூட்டுவதாக இருந்த "பிஷப்புக்களின் கூட்டம்" தடைப்பட்டது.

இவ்வாறாக நடைபெறுவதாக இருந்த "பிஷப்புக்களின் ஆலோசனைக் கூட்டம்" தடைபட்டது.இது கான்ஸ்டான்டினுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

Saturday, January 4, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 2

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 2


உரொமப் பேரரசால் வெறுக்கப்பட்டு கடுமையான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்ட கிறித்தவம் ஒரு மறுமலர்ச்சியை கான்ஸ்டான்டின் ஆட்சிக் காலத்தில் பெற்றது என்பதை நாம் பார்த்தோம்.இயேசு இறந்த பிறகு சபைகள் பல்வேறு இடங்களில் தோன்றின. தொடர்ந்து செல்வதற்கு முன்னர் இச்சபைகள் உரோமப் பேரரசில் எங்கெல்லாம் இருந்தன என்பதை பக்கத்தில் இருக்கும் படத்தில் காணலாம். கிறித்தவத்திற்கு கிடைத்த இந்த பரிசை அது காத்துக் கொண்டதா என்பதையும் எவ்வாறு அது பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுகிறது என்பதையும் தற்போது பார்க்கலாம்.

தங்களுடைய மதம் எதை முக்கியமாக அறிவுறுத்துகிறதோ அதை கேள்விக்குள்ளாக்கும் செயலை நோக்கி கிறித்தவம் செல்கிறது என்பதை கான்ஸ்டான்டின் சீக்கிரமாகவே உணர்ந்து கொண்டான்.கான்ஸ்டான்டினுக்கு முன்னர் இருந்த அரசர்களால் பெரும் துன்புறுத்துதல்களுக்கு(Great Persecution) ஆளான சபைகள் அதிலிருந்து மீண்டெழுவதற்கு சிறிது சிரமம் காட்டியது.ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் இதுவே முதலாவது ஆகும்.உரோம பேரரசுக்கு உட்பட்ட எகிப்தில் புகழ்பெற்ற நகரமாகிய அலெக்சாண்ட்ரியா (Alexandria) இருந்தது.அங்கு பெருமை வாய்ந்த அலெக்சாண்ட்ரியா சபை இருந்தது.அச்சபையின் பிஷப்,பெரும் துன்புறுத்துதல்களில் (Great Persecution) அரசின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கியவர்களை(Labsed) மன்னிக்க தயாராக இருந்தார்.இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.அலெக்சாண்ட்ரியாவுக்கு பக்கத்தில் இருந்த லைகோபோலிசு(Lycopolis) சபையின் பிஷப் மெலிசியஸ்(Melitius) இதனை கடுமையாக எதிர்த்து தனியாக தனக்கு கீழே ஒரு கிளையை உருவாக்கினார்.அலெக்சாண்ட்ரியா ,லைகோபோலிசு போன்ற சபைகள் அனைத்தும் எகிப்தின் வடக்கு பகுதியில் இருந்தன.எகிப்து ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியாகும்.துன்புறுத்தல்களுக்கு பயந்து பின்வாங்கியவர்களை மறுபடியும் சபைகளில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சூழ்நிலையில் ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் கர்தஜ்(Carthage) என்ற இடத்தில வைத்து பிஷப் தேர்தல் நடைபெற்றது (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது).தற்போதைய CSI பிஷப் தேர்தல்கள் போன்று கடுமையான போட்டிகள் இருந்தன. துன்புறுத்தல் காலங்களில் யார் யார் என்னென்ன செய்தார்கள்,மன்னிப்பதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்ற கேள்விகள் மட்டுமன்றி தனிப்பட்ட,யார் பெரியவர் போன்ற போட்டிகளும் இருந்தன.உரோம சபைகளும் மற்றும் பல்வேறு சபைகளும் ஒன்று சேர்ந்து கேசிலியன் (Caecilian) என்பவரை மன்னிப்பதற்கு அதிகாரம் உள்ளவராக தேர்ந்தெடுத்தனர். இப்பதவிக்காக இவர் ஒரு பரிசு கொடுக்க வேண்டியிருந்தது,பின்வாங்கியவர்களை திரும்பவும் சபைகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சண்டையில் கர்தஜ்(Carthage)-ஐ சேர்ந்த பிஷப் சைபிரியன்(Cyprian) என்பவர் கொண்டிருந்த கருத்துக்கு முரண்பட வேண்டியிருந்தது.இவ்வாறு பல சிக்கல்களுக்கு இடையில் கேசிலியன் (Caecilian) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேசிலியன் (Caecilian) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டொனேடஸ்(Donatus) என்ற மற்றொரு பிஷப் தலைமையில் ஒரு புதிய பிரிவு ஏற்பட்டது.இப்பிரிவு வடக்கு ஆப்பிரிக்காவில் பரவியது.இந்த சிக்கல்கள் தீவிரமடைந்தது.பிரச்சினை அரசருக்கு எட்டியது.

டொனேடஸ்(Donatus) இப்பிரச்சினைகளை கான்ஸ்டான்டினுக்கு கொண்டு சென்றார்.தன் பேரரசின் அரசியலமைப்புகளில் மட்டுமே தலையிட்டு வந்த கான்ஸ்டான்டினுக்கு இது புதிய செயலாகும்.மேலும் தன் அறிவுக்கு தொடர்பில்லாத,மேதாவிகள் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த ஒரு பிரச்சினை இப்பொழுது தன் அவைக்கு வருகிறது.தன் பேரரசின் ஒற்றுமைக்கு இது அவசியம் என்று அவர் கருதியிருக்கக்கூடும்.தன்  ஆளுமையை இதில் அவர் காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

கான்ஸ்டான்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை கி.பி.313-ல் எடுத்தான்.தனக்கு முன் இருந்த அரசர்கள் பேரரசின் நீதி விசாரணை முறைகளை பயன்படுத்தி இப்படிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்திருப்பதை அவன் பார்த்திருக்கிறான்.ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் கிறித்தவ சபையின் தலைவர்களை அழைத்து "பிரச்சினைகளுக்கு ஒரு முடிவை எட்டும்படி" செய்வதை கவனித்து இருக்கிறான்.இப்பொழுது தானும் அவ்வாறே செய்ய போகிறான்,ஆனால் ஒரு சிறு மாற்றத்தோடு.வடக்கு ஆப்பிரிக்க சபைகளில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு "ஆலோசனை சங்கம்"(Council of Bishops ) இருப்பதையும் கவனித்திருக்கிறான்.அதையே பயன்படுத்த முடிவு செய்தான்.ஆனால் இப்பொழுது வடக்கு ஆப்பிரிக்க பிஷப்புக்களை மட்டும் அழைப்பதற்கு பதிலாக மத்திய தரைக்கடல் பகுதி முழுவதிலுமிருந்து பிஷப்புக்களை வரவழைப்பது என்று முடிவு செய்து அவ்வாறே அழைப்பும் விடுத்தான்.

இவ்வாறு கான்ஸ்டான்டின் தன்னுடைய முதல் "பிஷப்புக்களின் ஆலோசனைக்கு கூட்டத்தை(First Council of  Bishops)" உரோமில் கி.பி.313-ல் கூட்டினான்.இக்கூட்டத்தை கூட்டுவதற்கு காரணமாக இருந்த டொனேடஸ்(Donatus),கூட்டத்தின் முடிவுகளை ஏற்கவில்லை.எனவே கான்ஸ்டான்டின் மறுபடியும் ஒரு கூட்டத்தை இரண்டாவது முறையாக கூட்டினான்.இம்முறை இன்னும் பல இடங்களில் இருந்து பிஷப்புக்களை வரவழைத்தான்.இந்த இரண்டாவது "பிஷப்புக்களின் ஆலோசனைக்கு கூட்டம்" தற்போதைய பிரான்ஸ் நாட்டின் ஆர்லெஸ்(Arles) என்ற இடத்தில வைத்து நடைபெற்றது.

இந்த இரண்டாவது கூட்டத்தில் டொனேடஸ்(Donatus) மற்றும் அவரது ஆதரவாளர்களை சமரசம் செய்வதற்கு எவ்வளவு முயன்றும் முடியவில்லை.இது அரசன் கான்ஸ்டான்டினை கோபம் கொள்ள செய்தது.முடிவில் வீரர்களைக் கொண்டு வலுக்கட்டாயம் செய்யும் நிகழ்வு வரை சென்றது.சபைகள் பேரரசால் அங்கீகரிக்கப்பட்டு ஓரிரு ஆண்டுகளில் கிறித்தவர்களே கிறித்தவர்களை துன்புறுத்தும் நிலைமைக்கு சென்றது.டொனேடஸ்(Donatus) மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய தாய் கிளைக்கு (Mainstream) திரும்பும் படி உத்தரவிடப்பட்டனர்.ஆனால் இதன் விளைவு எதிர்பார்த்தபடி இல்லை.டொனேடஸ்(Donatus) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மென்மேலும் ஒதுங்கி சென்றனர்.மற்ற வடக்கு ஆப்பிரிக்க சபைகள் அனைத்தும் உரோமுக்கு இனங்கி சென்றன.இவர்கள் ஏறத்தாழ ஒதுக்கப்பட்டன.ஒருகட்டத்தில் இவர்கள் மறைந்தே போய்விட்டனர்.

மேற்கூறிய இரண்டு கூட்டங்களிலும் இருந்து பெரிய தத்துவ முடிவுகள் எட்டப்படவில்லை என்றாலும்,ஒரு புதிய வழிமுறை ஒன்று உருவாவதற்கு வித்திட்டது.கிறித்தவ சபைகளில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு "பிஷப்புக்களின் ஆலோனைக் கூட்டம்" என்ற வழிமுறை கிடைத்திருக்கிறது.இதுதான் கிறித்தவத்தை மேலும் புரட்டிப்போட்ட இருக்கிறது.அடுத்த பாகத்தில் அதனை காணலாம்.

Friday, January 3, 2020

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 1

திரித்துவத்தின்(Trinity) சுருக்கமான வரலாறு - பாகம் 1


திரித்துவம் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கை. கிறித்தவர் யாராவது ஒருவர் இந்த நம்பிக்கையை கேள்வி கேட்டால் அவர் கிறித்தவராக இருக்க முடியாது.இந்த நம்பிக்கைதான் ஒருவர் கிறித்தவர் ஆவதற்கு அடிப்படை.ஆதிகாலத்தில்,அதாவது இயேசு இறந்தவுடன் அவருடைய சீடர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை கொண்டிருந்தார்களா என்றால், இல்லை என்று மிக உறுதியாக கூறமுடியும். இக்கூற்றுக்கான ஆதாரம் திருத்தூதர்ப் பணிகளில் (அப்போஸ்தலர் நடவடிக்கைகள்) உள்ளது. இப்புத்தகத்தை படித்துப் பார்த்தால் இயேசுவின் சீடர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கை எது ஒன்றையும் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகும்.இந்நம்பிக்கை கி.பி.320-களில்தான் உருவாகிறது.திருமறையில் எங்கு தேடிப்பார்த்தால் தென்படாத ஒரு கருத்து எப்படி உள்ளே வந்தது என்பது மிகவும் ஆச்சரியமே.புரிந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் இக்கருத்து ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அது மிகப்பெரும் தவறாக முடிந்து விடும்.காரணம் "புரிதல்" என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும்.தன்னுடைய போதனையில் எங்கும் இயேசுவோ,பவுலோ,பேதுருவோ,யோவானோ வெறும் எந்த ஆதிகால சீடர்களும் குறிப்பிடாத ஒன்று எப்படி அறிமுகமானது என்பது புரியாத புதிராகவே இன்னும் உள்ளது.எப்படி இது வந்தது என்பதைப்பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு இக்கட்டுரை.

உரோம பேரரசு கி.பி.250-300 வரை கிறித்தவர்களை  மிக கொடுமைக்களுக்குள்ளாக்கியது.இக்காலம் கிறித்தவர்களுக்கு ஓர் இருண்ட காலமாகும். செல்சஸ்(Celsus), செப்டிமிஸ் செவேர்ஸ் (Septimius Severus),மக்ஸிமினஸ்(Maximinus),ட்ராஜன் டெஸிஸ்(Trajan Decius), வெலேரியன் (Velerian), டியோக்லேசியன்(Diocletian) போன்ற உரோம அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.இவர்களில் கடைசியாக வரும்  டியோக்லேசியன் மிகக் கடுமையாக நடந்து கொண்டவன்.தேவாலயங்கள் அழிக்கப்பட்டன,பலிகொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்,கிறித்தவ எழுத்துக்கள் மற்றும் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.கி.பி.293-ல் இந்த டியோக்லேசியன் தன்னுடைய பேரரசை நான்கு பகுதிகளாக பிரித்து ஆட்சி செய்தான்.இதில் மேற்கு பகுதியின் மன்னன் கான்ஸ்டான்டியஸ்-I(Constantius-I) என்பவனாவான்.இம்மன்னன் இறந்த பிறகு இவனுடைய மகன் கான்ஸ்டான்டின்(Constantine) கி.பி 306-ல் மேற்குப் பகுதியில் மன்னனாக்கப்படுகிறான்.

டியோக்லேசியன் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகளின் போது, மேற்குப்பகுதியில் மன்னனாக இருந்த கான்ஸ்டான்டியஸ்-I கிறித்தவர்கள் மீது சிறிது இரக்கம் காட்டினான். கிழக்குப்பகுதி மன்னனைப் போல் மிகக்கடுமையாக நடக்க வில்லை. கி.பி.305-ல் டியோக்லேசியன் தன்னுடைய அரச பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு,நான்கு பகுதிகளை ஆண்டு வந்த மன்னர்களிடையே பெரும் போட்டி ஆரம்பமாகியது.தற்போது மேற்கு பகுதியின் மன்னனாக இருக்கும் கான்ஸ்டான்டின் தன்னுடைய எதிரியாக இருக்கும் மற்றொரு பகுதியின் மன்னன் மக்சேன்டியஸ்(Maxentius)  என்பவன் மீது போர் தொடுத்து செல்கிறான்.தற்போதைய கிறித்தவத்தின் ஆரம்பம் இங்குதான் இருக்கிறது.ஆதிகால கிறித்தவம் யூதர்கள் கையிலிருந்து கிரேக்கர்கள் கைக்கு சென்றது ஒரு திருப்புமுனை என்றால்,அக்கிறித்தவம் அடுத்த திருப்புமுனையை இங்குதான் சந்திக்கிறது.

கான்ஸ்டான்டின் தன்னுடைய படைகளை திரட்டி சென்று,உரோம் நோக்கி வந்து கொண்டிருக்கும் மக்சேன்டியஸ்-ஐ  சந்திக்கிறான்.இரு படைகளும் சந்திக்கும் இடம் திபேர்(Tiber)என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மில்வியன்(Milvian) என்ற பாலமாகும். இப்பாலத்தின் தற்போதைய படத்தை பக்கத்தில்  பாருங்கள்.இப்போரின் போது கான்ஸ்டான்டின் ஒரு குறிப்பிட்ட செயலை செய்கிறான்.இச்செயலுக்கான அடித்தளம் இவனுடைய தந்தையிடம் இருக்கிறது.இவர் கிறித்தவர்களிடம் தன்னுடைய சக மன்னர்கள் காட்டிய கடுமையைக் காட்டவில்லை.படைவீரர்கள் பயன்படுத்தும் கேடயங்களில் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பொறிக்க செய்கிறான்.அது "☧" என்ற அடையாளமாகும்.இதன் பெயர் "சை ரோ(Chi Rho)" ஆகும்.கிறிஸ்துமஸ் என்பது X-Mas என்றும் அழைக்கப்படுவது நமக்கு தெரியும்.


இந்த "சை ரோ" அடையாளம் கிரேக்க மொழியில் இருந்து வந்தது ஆகும்.கிறித்தவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அடையாளம் ஆகும்.கிரேக்க மொழியில் "𝐗" என்ற எழுத்து "Ch" என்ற உச்சரிப்பை கொண்டது ஆகும்.நம் தமிழ் மொழியில் "அக்கா" என்ற வார்த்தையில் "க்" என்ற உச்சரிப்புக்கு இணையானது ஆகும்.அடுத்து "Ρ" என்ற எழுத்து.இது "ρ" என்றும் எழுதப்படும்.ஆங்கிலத்தில் "பெரிய எழுத்து", "சிறிய எழுத்து" என்ற அடிப்படையில் முதலாவது பெரிய எழுத்து இரண்டாவது சிறிய எழுத்து ஆகும்.இதன் உச்சரிப்பு "ர்" ஆகும்.அதாவது "சேர்ந்து" என்ற வார்த்தையில் இருக்கும் "ர்" ஆகும்.இப்பொழுது இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து வாசித்தால் நமக்கு கிடைப்பது,க் +ர் = கிர் ஆகும்."கிறிஸ்து(Christ)" என்ற வார்த்தையின் முதல் இரு எழுத்துக்கள் ஆகும்."Christ" என்ற கிரேக்க வார்த்தையின் முதல் இரு எழுத்துக்கள் ஆகும்."χριστός (chrīstós)" என்று கிரேக்க மொழியில் எழுதப்படுகிறது.Christ என்ற வார்த்தையின் முதல் இரு எழுத்துக்களையும் கேடகங்களில் பொறிக்குமாறு உத்தரவிட்டிருந்தான்.இந்த அடையாளத்தைப்பற்றி திருமறையில் எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாத நிலையில் திடீரென்று இது கிறித்தவத்தின் அணைத்து நிலைகளையும் ஊடுருவியது.முக்கியமான ஒரு அடையாளமாக இது பார்க்கப்பட ஆரம்பித்தது.உரோம பேரரசின் அதிகாரப்பூர்வமான அடையாளமாக  பார்க்கப்பட்டது.உரோம பேரரசின் நாணயங்களிலும் பொறிக்கப்பட ஆரம்பித்தது.


இப்போரில் கான்ஸ்டான்டின் மிகப்பெரும் வெற்றியை பெற்றான். இவ்வெற்றிக்கு காரணம் என்னவென்று உரோம பேரரசின் வரலாற்று எழுத்தாளராகிய செசெரியாவின் யுசிபியஸ் (Eusibius  of Caesarea) என்பவரிடம் கூறியிருக்கிறான்.  போரின் போது பிரகாசமான சிலுவை ஒன்றை வானத்தில் கதிரவனுக்கு மேலே தான் பார்த்ததாகவும்,அதில் "இதன் மூலம் வெல்வாய்(Conquer By This)" என்று எழுதப்பட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறான்.அமைதியை போதிக்கும் இயேசு பற்றி இந்த கான்ஸ்டான்டின் முன்னரே அறிந்திருந்தானா என்று நமக்கு தெரியவில்லை.இயேசுவின் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணான ஒரு தரிசனமாக இது இருக்கிறது என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.ஆனால் இதுதான் கிறித்தவத்தை ஆட்கொள்ளப்போகிறது.இப்பொழுது ஆட்கொண்டிருக்கிறது.போரில் லட்சக்கணக்கான வீரர்களை கொல்வதற்கு இயேசு கான்ஸ்டான்டினுக்கு துனை செய்திருக்கிறார் என்றே முடிவு எடுக்க தோன்றுகிறது.கான்ஸ்டான்டினைப் பொறுத்தவரையில் "இயேசு அவனுடைய போருக்கு உதவியிருக்கிறார். இதிலிருந்து கிறித்தவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.கிறித்தவத்தை கான்ஸ்டான்டின் போற்ற ஆரம்பித்தான்.

இந்நேரத்தில் கிழக்குப்பகுதியின் மன்னனாக இருந்தவன் லிசினியஸ்(Licinius) ஆவான்.இவன் மன்னன் கான்ஸ்டான்டினுக்கு நெருக்கமாக இருந்தான், மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. கிழக்கு பகுதியிலும் இனிமேல் கிறித்தவர்களுக்கு மற்ற மதத்தினருக்குரிய இனையான உரிமைகள் உண்டு, அவர்கள் துன்புறுத்தப் படமாட்டார்கள் என்று கூட்டாக இருவரும் சேர்ந்து அறிக்கை செய்தார்கள்.அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தனர்.ஆனாலும் கிழக்குப்பகுதியில் துன்புறுத்தல் தொடர்ந்தது.கான்ஸ்டான்டின் தன்னுடைய எதிரி மன்னர்களையெல்லாம் தோற்கடித்தான்.தொடர் வெற்றிகள் அவனை மேலும் கிறித்தவத்தை நோக்கி தள்ளியது.கிழக்குப்பகுதியில் கிறித்தவர்கள் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கான்ஸ்டான்டின் தன்னுடைய படைவீரர்களிடம்,போரின் போது "கிறித்தவர்களின் கடவுளிடத்தில் விண்ணப்பம் செய்யுமாறு" கட்டளையிட்டிருந்தான்.இந்த அளவிற்கு தற்போது கான்ஸ்டான்டின் கிறித்தவத்தை நோக்கி வந்துவிட்டான்.

இச்சூழ்நிலையில் கிழக்குப்பகுதியின் மன்னன் லிசினியஸ் (Licinius)க்கும் கான்ஸ்டான்டினுக்கும் இடையே பகைமை ஆரம்பித்தது.அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு மோசமாகியது.முடிவில் இருவரும் போரிட்டனர்.கி.பி 324-ல் இருவருக்கும் இடையே நடந்த போரில் லிசினியஸ்(Licinius) தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.கிறித்தவத்திற்கு எதிராக இருந்த கடைசி மன்னனும் தோற்கடிக்கப்பட்டான்.இப்பொழுது கிறித்தவம் நிம்மதி பெருமூச்சு விட்டது.கிறித்தவம் தற்போது பேரரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு மதமாக மாறியது.மன்னரின் அருளும் அதற்கு இருந்தது.கிழக்குப்பகுதியின் கான்ஸடான்டிநோபிளும்(Constantinople) கான்ஸ்டான்டின் கைக்கு வந்து விட்டது.அடுத்து வந்த ஒன்றரை நூற்றாண்டுகளும் கிறித்தவத்திற்கு வேறு சிக்கலை கொண்டு வந்தது.மன்னரின் ஆதரவு கிறித்தவத்தின் எந்த பிரிவுக்கு என்ற சண்டை ஆரம்பித்தது.

கான்ஸ்டான்டின் இன்னும் ஒருபடி மேலே சென்று தினமும் தன்னுடைய அரசவையில் பிரசங்கம் செய்யும் அளவிற்கு வளர்ந்தான்.அவையில் இருப்போர் அவனுடைய செயலை நினைத்து குழம்பிப்போகும் அளவிற்கு தினமும் பிரசங்கம் செய்தான்.தன்னுடைய கலாச்சாரமான கதிரவ வழிபாடு,மற்றும் இன்ன பிற வழிபாடுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை கிறித்தவத்திற்கும் கொடுத்தான்.கிறித்தவம் "சூரிய வழிபாட்டுக்கு இனையாக" கருதப்பட்டது.இரண்டுக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இவ்வளவு நாள் தடை செய்யப்பட ஓர் இயக்கம் இப்பொழுது அரசு ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது.பிஷப் யுசிபிஸ்(Eusibius of Caesarea) அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தில் இருந்து 50 புதிய திருமுறைகளை எழுத கட்டளையிட்டு அவற்றை கிறித்தவதிற்கு வழங்கினான்.அவைகளை தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 5000 பசுமாடுகளின் தோல்கள் தேவைப்பட்டிருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது.அவைகளில் இரண்டு இன்னும் உள்ளது.அவைகள்,Codex Vaticanus  மற்றும் Codex Sinaiticus ஆகும்.தன்னுடைய அவையில் முக்கிய பொறுப்புகளுக்கு கிறித்தவர்களை தேர்ந்தெடுத்தான்.இறக்கும் முன்னர் திருமுழுக்கு(ஞன ஸ்நானம்) பெரும் அளவிற்கு சென்றான்.

தற்போது கிறித்தவர்களுக்கு தங்கள் மதத்தை பின்பற்ற அனுமதி கிடைத்தது மட்டுமன்றி அரசின் ஆதரவும் கிடைத்துவிட்டது.ஆனால் இப்பொழுது கிறித்தவம் அடுத்த கட்டத்திற்கு தயாராகிறது.அடுத்த பாகத்தில் அதை நாம் காண இருக்கிறோம்.

இயேசுவின் ஆவி

அப்போஸ்தலர் 16:7(திருத்தூதர் பணிகள் 16:7)-மொழிபெயர்ப்பு குழப்பங்கள் 

புதிய ஏற்பாடு என்பது ஒரே நேரத்தில் ஒருவரால் எழுதப்பட்ட நூல் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.பல பேர் எழுதி தொகுக்கப்பட்ட ஒரு தொகுதி மட்டுமே.பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது என்று கிறித்தவர்களால் நம்பப்படுகிறது.இவ்வாறு எழுதப்பட்டால் அதில் முரண்பாடுகள் இருக்கக்கூடாது என்பது நியாயமான எண்ணமே.அப்போஸ்தலர் புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்கியம் பலவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மட்டுமன்றி அவ்வாக்கியத்தில் புதுமையான ஒரு கருத்தும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இப்புதிய கருத்து எந்த அளவுக்கு கிறித்தவர்களால் உள்வாங்கப்பட்டுள்ளது என்று அறியமுடியவில்லை.தற்போது நாம் நம்பிக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்தேதும் இருக்குமாயின்,பொதுவாக அதை நாம் விரும்ப மாட்டோம்.இப்புதிய கருத்து என்ன என்பதை பார்ப்பதற்கு கீழ்கண்ட வாக்கியங்களை பாருங்கள்.
6 பின்பு ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே, அவர்கள் பிரிகிய, கலாத்தியப் பகுதிகளைக் கடந்து சென்றனர்.
7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.
8 எனவே அவாகள் மீசியா வழியாகச் சென்று துரொவா நகரை அடைந்தனர்.
6. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
8. அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். 
மேற்கண்ட வாக்கியங்கள் கூறுவது என்னவென்றால்,பவுலும் தீமோத்தியுவும் ஆசியாவுக்கு செல்வத்தைப்பற்றி கூறுகிறது.இறைவார்த்தையை அறிவிப்பதற்காக அவர்கள் சென்ற இடங்களைப்பற்றி கூறுகிறது.மேலே கண்ட வாக்கியங்களில் 7-வது வாக்கியத்தை கவனித்தால் இங்கு ஒரு முரண்பாட்டை காணலாம்.
7 அவர்கள் மீசியா அருகே வந்து பித்தினியாவுக்குச் செல்ல முயன்றபோது இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடவில்லை.
இங்கு என்ன புதுமை உள்ளது? அப்புதுமை "இயேசுவின் ஆவி" ஆகும்.இதில் என்ன புதுமை உள்ளது என்று குழப்பம் ஏற்பட்டால், சிறிது நிதானமாக எண்ணிப்பாருங்கள்."இயேசுவின் ஆவியார்" என்று ஒரு வார்த்தை உள்ளது.யார் இந்த இயேசுவின் ஆவியார்?
  • இயேசுவின் ஆவி என்பது என்ன?
  • இயேசுவின் ஆவியார் என்பவர் யார்?
  • இயேசுவின் ஆவி என்பது பரிசுத்த ஆவியா?
  • பரிசுத்த ஆவி என்பது இயேசுவிடம் இருந்து வருகிறதா அல்லது பிதாவிடம்(தந்தை) இருந்து வருகிறதா?
  • இயேசுவின் ஆவியும் பரிசுத்த ஆவியும் ஒன்றா?
  • திரித்துவ தத்துவத்தின் அடிப்படையில் ,இயேசுவின் ஆவியும் இயேசுவும் வெவ்வேறு ஆட்கள் ஆனால் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர் என்று நாம் எண்ணலாமா?
  • மூன்று ஆள் தத்துவத்தின் படி இவ்வாக்கியம் "இரு ஆள்" தத்துவம் என்று எண்ணப்படலாமல்லவா?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் தற்போதைய கிறித்தவர்கள் கையில் இருக்கும் புதிய ஏற்பாட்டில் இருக்காது.இவர்கள் கையில் இருக்கும் புதிய ஏற்பாடு என்பது பல திருத்தங்களுக்கு பிறகு வந்தது ஆகும்.புதிய ஏற்பாட்டின் மூல எழுத்துக்கள் எங்கு இருக்கின்றன என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.முதன் முதலாக எழுதப்பட்ட எழுத்துக்களை பலமுறை பிரதி எடுத்து அவற்றின் பிரதிகளைத்தான் இன்று நாம் கையில் வைத்திருக்கிறோம்.அவற்றிலும் ஆயிரக்கணக்கான முரண்பாடுகள் மற்றும் தவறுகள்.

நிலைமை இவ்வாறிருக்க,இவ்வாக்கியத்தின் மற்றொரு மொழிபெயர்ப்பை நாம் காண்போம்.புரொட்டஸ்டண்டுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வாறு உள்ளது எனக் காணலாம்.
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
இங்கு "இயேசுவின் ஆவி" இல்லை.வெறும் "ஆவியானவர்" மட்டுமே இருக்கிறார்.ஏன்?இந்த இரண்டு குழுக்களும் வெவ்வேறு மூலப்பிரதிகளை  கொண்டிருக்கின்றனவா? இரண்டு மூலப்பிரதிகள் இருக்க முடியுமா?அக்குறிப்பிட்ட புத்தகத்தை,அதாவது திருத்தூதர் பணிகள்(அப்போஸ்தலர்) புத்தகம்,ஒருவரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்? அதிலிருந்து மொழிபெயர்க்கும் பொழுது ஏன் இந்த வேறுபாடு?

எது உண்மையான மொழிபெயர்ப்பு?மேற்கண்ட இரண்டு மொழிபெயர்ப்புகளில் எது உண்மை?புரொட்டஸ்டண்டுகளின் பல்வேறு மொழிபெயர்ப்புக்களிடையே பல வித்தியாசமான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.அவைகள் அக்குறிப்பிட்ட வசனத்தை எவ்வாறு மொழிபெயர்த்திருக்கின்றன என்று பார்க்கலாம்.
When they came to the border of Mysia, they tried to enter Bithynia, but the Spirit of Jesus would not allow them to.
மேற்கொண்டது NIV மொழிபெயர்ப்பு ஆகும்.இதில் இயேசுவின் ஆவி என்று உள்ளது.
When they came to the frontier of Mysia, they tried to go into Bithynia; but the Spirit of Yeshua would not let them. 
இது CJB மொழிபெயர்ப்பு ஆகும். இங்கும் "இயேசுவின் ஆவி" உள்ளது.
After they were come to Mysia, they assayed to go into Bithynia: but the Spirit suffered them not.
இது KJV மொழிபெயர்ப்பு ஆகும்.இங்கு "இயேசுவின் ஆவி" இல்லை. ஏன்?
When they came to Mysia, they tried to go into Bithynia, but the Spirit of Jesus did not allow them.
இது HCSB மொழிபெயர்ப்பு ஆகும். இங்கு "இயேசுவின் ஆவி" உள்ளது.

மேற்கண்ட பல்வேறு மொழிபெயர்ப்புகளில் ஒன்றில் மட்டுமே "இயேசுவின் ஆவி" என்று மொழிபெயர்க்கப்படவில்லை.அது KJV ஆகும்.KJV மட்டும் ஏன் இவ்வாறு மொழிபெயர்த்துள்ளது?எந்த மூலப்பிரதியைப் பார்த்து KJV இவ்வாறு செய்துள்ளது?அனைவருக்கும் ஒரு மூலப்பிரதிதானே இருக்க வேண்டும்?

இயேசுவின் ஆவி என்று மொழிபெயர்ப்பதில் பல தத்துவ சிக்கல்கள் ஏற்படும் என்று நினைத்து அவ்வார்த்தையை நீக்கிவிட்டதா என்ற கேள்வி இப்பொழுது எழுகிறது.

எப்படியாயினும் இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை.காரணம் மூலப்பிரதி என்று ஒன்று இருந்தால்தானே சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.அதுதான் இல்லையே.இயேசுவின் ஆவி தன்னிச்சையானதா? அது யாருக்கு கட்டுப்படும்?அவர் நினைத்தோர்க்கு அவரால் அதை அனுப்ப முடியும் என்றால் தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் அது வருமா?இக்கேள்விகளுக்கு எப்போது விடை கிடைக்கும்?

இரா.இருதயராஜ்.
இக்கட்டுரையை பதிவிறக்கம் செய்ய:
இங்கே👈

My Posts