மத்தேயுவின் மாபெரும் தவறு
இரா.இருதயராஜ்.
இயேசுவின் வம்ச அட்டவணையை மத்தேயு நமக்கு தரும் பொழுது மிகப்பெரும் பிழையை செய்து விடுகிறார்.இந்த பிழையை நாம் எவ்வாறு எடுத்து கொள்வது?அவர் தெரிந்து இப்பிழையை செய்தாரா?இல்லை தெரியாமல் செய்தாரா?உண்மையில் இது பெரும் தவறுதான் என்று உறுதியாகும் பொழுது அவர் எழுதிய புத்தகத்தை எவ்வாறு நம்ப இயலும்?இப்பொழுது அப்பிழையை நாம் பார்ப்போம்.
மத்:1:11 இவ்வாறு கூறுகிறது,
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
முதல் பிழை என்னவென்றால்,இந்த "யோசியா" என்ற இராஜா பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போக வில்லை.நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது இஸ்ரேல் இரண்டு தேசங்களாக சிதறி போனது.ஒன்று இஸ்ரயேல்(சமாரியா) என்றும் மற்றொன்று யூத தேசம் என்றும் அழைக்கப்பட்டது.இந்த யோசியா யூத தேசத்தின் இராஜாவாக இருந்தான்.இவன் சிறை பிடிக்கப் பட வில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.வசனம் 2இராஜா:22:1,
1. யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.
யோசியா இராஜா எப்பொழுது இறந்தான் என்பதை 2இராஜா:23:29,30-ல் நாம் காணலாம்,
அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்று போட்டான்.
மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.
இப்பொழுது யோசியா இராஜா உயிருடன் இல்லை.அவனுடைய மகன் யோவகாஸ் அவனுக்கு பதிலாக இராஜாவாகிறான்.இந்த யோவகாஸ் எகிப்துக்கு கொண்டுபோகப்பட்டு அங்கே மரணமடைவான்.அவனுக்கு பதிலாக யோசியாவின் மற்றொரு குமாரன் எலியாக்கீம் இராஜாவாகிறான்.வானுடைய பெயரும் மாற்றப்படுகிறது.வசனம் 2இராஜா:23:34,
34. யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.
இந்த யோயாக்கீமின் காலத்தில்தான் பாபிலோன் இராஜா படையெடுத்து வருகிறான்.வசனம் 2இராஜா:24:1,
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்
எனவே மத்தேயுவில் கூறியுள்ளபடி யோசியா இராஜா பாபிலோனுக்கு போக வில்லை. எனவே மத்தேயு கூறியுள்ளதை நாம் நம்ப இயலாது.
அடுத்த மிகப்பெரும் தவறு மத்:1:11-ல் கூறியுள்ளபடி யோசியா எகொனியாவைப் பெற வில்லை.இந்த எகொனியா யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வசனம் 2இராஜா:24:6-ஐ பார்க்கவும்,
யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
மேலும் அவன் பெயர் மாற்றப்பட்டது எப்படி என்று தெரிந்து கொள்ள எரே:22:24-ஐ பார்க்கவும்,
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மேற்கூறிய கூற்றை நிரூபிக்கும் விதமாக 1நாளா:3:15,16,17-யும் பாருங்கள்.எனவே யோசியா எகொனியாவை பெற வில்லை.இது மத்தேயுவின் இரண்டாம் தவறு.மூன்றாம் தவறுதான் மிகப்பெரும் தவறு.இந்த எகொனியாவை கடவுள் சபித்து இருக்கிறார்.இவன் வழியாக மேசியா வருவதற்கு வாய்ப்பு இல்லை.இதற்கு ஆதாரமாக வசனம் எரே:36:30-ஐ பாருங்கள்,
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
எனவே யோயாக்கீம் வழியாக வரும் சந்ததியில் மேசியா வரமுடியாது.மேற்கூறிய வசனத்தின் சாபம் அவன் மேல் உள்ளது.பின் எப்படி மத்தேயு இப்படிப்பட்ட முடிவுக்கு வந்தார்? எரேமியாவின் இந்த தீர்க்கதரிசனம் உடனே நிறைவேறியும் உள்ளது.ஆதாரமாக வசனங்கள் 2இராஜா:24:15,16,17 மற்றும் எரே:37:1.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.
எனவே கடவுளின் சாபம் பலித்து விட்டது.எனவே மேசியா இந்த வம்சத்தில் வர முடியாது.அப்படியென்றால் மத்தேயு என்ன காரணத்திற்காக இப்படி செய்தார்?அவர் எழுதியதாக கூறப்படும் நற்செய்தி புத்தகத்தை எவ்வாறு நம்ப இயலும்?புரிவதற்கு இலகுவாக கீழ்கண்ட படத்தை பாருங்கள்,
யோசியா -------------யோயாக்கீம் -----------------யோயாக்கீன்(எகொனியா)
.
:
:--------------------சிதேக்கியா (எரே:37:1)
நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.உங்கள் கருத்துக்களை பகிருங்கள். ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு என்பவர்களின் கடவுளே உண்மையான கடவுள்.இடையில் சேர்க்கப்பட்ட அனைத்தும் அவரை தொழுது கொள்வதில் இருந்து மக்களை தடுப்பதற்காகவே.
No comments:
Post a Comment